Showing posts with label Vikatan. Show all posts
Showing posts with label Vikatan. Show all posts

Wednesday, June 22, 2011

அழகிரிக்கும் தா.கிருஷ்ணனுக்கும்... ஸ்டாலினுக்கும் அண்ணாநகர் ரமேஷுக்கும்...


அழகிரிக்கும் தா.கிருஷ்ணனுக்கும்... ஸ்டாலினுக்கும் அண்ணாநகர் ரமேஷுக்கும்...

இடி இறக்கும் இளங்கோவன்
விமர்சனம் செய்வது என முடிவு செய்துவிட்டால், அது கருணா​நிதியோ... ஜெயலலிதா​வோ... பிரித்து மேய்ந்துவிடுவார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். இப்போது கருணா​நிதியையும் அவர் குடும்பத்​தாரையும், உண்டு... இல்லை என ஆக்கிக்கொண்டு இருக்கிறார்!
''ஊழலுக்கு எதிராக உண்ணாவிரம் இருக்கும்பாபா ராம்தேவை கடுமையாக விமர்சனம் செய்கி றீர்களே?''
''ஒரு விஷயத்தை நல்லாப் புரிஞ்சுக்கோங்க. ஊழல், திருட்டுத்தனம், சமூக விரோதச் செயல்கள் போன்றவற்றைக் குறைக்கலாமே தவிர, முழுமையாக ஒழிக்க முடியாது. மனித குலம் இருக்கும் வரை இது எல்லாமே நிச்சயமாக இருக்கும். எந்த விஷயத்தைப்பற்றி நாம் பேசுறோமோ... அதுல முதலில் நாம யோக்கியனா இருக்கணும். கறுப்புப் பணத்தைப்பத்தி வாய் கிழியப் பேசும் பாபா ராம்தேவ், தன்னை சந்திக்க வரும் பக்தர்களிடம் ஒரு லட்சம், இரண்டு லட்சம்னு வாங்கிட்டு இருக்காரே... அதுக்கு எல்லாம் முறையான கணக்கு வெச்சிருக்காரா? 'படிக்கிறது ராமாயணம். இடிக்கிறது பெருமாள் கோயில்’னு எங்க ஊர்ப் பக்கம் ஒரு பழமொழி சொல்வாங்க. பாபா ராம்தேவ் பண்றதும் அப்படித்தான். உண்ணாவிரதம் இருப்பதால் உடலுக்கு நல்லது. மத்தபடி, இவங்க நினைக்கிறது எதுவும் நடக்காது.''
''கருணாநிதி சொன்ன 'கூடா நட்பு கேடாய் முடியும்’  என்பது காங்கிரஸைப் பார்த்துதானா?''
''யாரை நினைச்சு சொன்னாரோ, அதை நேரடியா சொல்ல வேண்டியதுதானே?  கருணாநிதிக்கு எதுக்கு இந்தக் கோழைத்தனம்? காங்கிரஸைத் தாக்கணும்னு நினைச்சா, நேரடியாத் தாக்குங்க. மோதணும்னு நினைச்சீங்கன்னா, நேரடியா மோதிப் பாருங்க. உயர் நிலை செயல் திட்டக் குழு, பொதுக்குழுன்னுபூச்சாண்டி காட்டுற வேலை வேண்டாம். காங்கிர​ஸைத் தாக்குவதற்கு ராமதாஸை ஒரு பக்கம் ஏவிவிடுறீங்க. இன்னொரு பக்கம், திருமாவளவனை ஏவிவிடுறீங்க. 'கூட்டணியில் இருந்துகொண்டே மிரட்டி ஸீட் வாங்கிய கட்சிதான் தோல்விக்குக் காரணம் என்று நான் சொல்ல மாட்டேன்...’ என உடன்பிறப்புக்குக் கடிதம் எழுதுறீங்க. இதுக்கு என்ன அர்த்தம்?
'கூடா நட்பு’ என்பது அழகிரிக்கும், கொலை செய்யப்​பட்ட தா.கிருஷ்ணனுக்கும் இருந்ததா? ஸ்டாலினுக்கும், அண்ணாநகர் ரமேஷ§க்கும் இருந்ததா? ராசாவுக்கும், கனிமொழிக்கும் இருந்ததா? ராசாவுக்கும், செத்துப்போன சாதிக்பாட்சாவுக்கும் இருந்ததா? இதைத்தான் கூடா நட்பு என்று கருணாநிதி சொல்கிறாரா? எதைச் செஞ்சாலும், அதை தைரியமா செய்யணும். தைரியமாப் பேசணும். கருணாநிதிக்கு எப்பவுமே தைரியம் கிடையாது!''
''தங்கபாலு ராஜினாமாவைக் காங்கிரஸ் மேலிடம் ஏற்கவில்லையே?''
''தங்கபாலுவின் சேவை தமிழ்நாட்டுக்கு இன்னும் தேவை என காங்கிரஸ் மேலிடம் நினைக்கிறது போலிருக்கிறது. சீக்கிரமே அவரது ராஜினாமாவை ஏற்கும் என எல்லோருமே நம்பிக்கையோடு எதிர்பார்த்துக் காத்து இருக்கிறோம்.''
''அ.தி.மு.க. ஆட்சி பற்றி..?''
''அ.தி.மு.க. ஆட்சியின் ஆரம்பம் மிகவும் நன்றாக இருக்கிறது. பொறுப்புக்கு வந்தஒரு மாதத்தில் சட்டம் - ஒழுங்கை மிகச் சிறப்பாக வைத்திருக்கிறார் ஜெயலலிதா. தமிழகத்தில் குற்றங்கள் வெகுவாகக் குறைந்து இருக்கின்றன. கொலை, கொள்ளைச் செயல்களில் ஈடுபடுபவர்​களும், நிலங்களை அபகரிப்பவர்களும் அடங்கி ஒடுங்கி இருக்கிறார்கள். ஐந்து ஆண்டுகள் முடியும் வரை இதே கட்டுக்கோப்புடன் ஜெயலலிதா ஆட்சி நடத்த வேண்டும். கடந்த முறை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அவரிடம் சில குறைகள் இருந்தன. இப்போது அந்தக் குறைகளை எல்லாம் களைந்துவிட்டுச் சிறப்பான முதல்வராகச் செயல்பட வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். நான் ஜெயலலிதாவுக்கு ஆதரவானவன் என்றோ, எதிர்ப்​பானவன் என்றோ நினைக்க வேண்டாம். யார் நல்லது செய்தாலும் பாராட்டுவேன். யார் தப்பு செய்தாலும் தட்டிக்கேட்பேன். அது என் பிறவிக் குணம்!''
''நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்பெக்ட்ரம் விவ​காரம் காங்கிரஸைப் பாதிக்குமா?''
''ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்கும் காங்கிரஸுக்​கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அப்படி காங்கிரஸ் மீது மக்களுக்கு வெறுப்பு இருந்தால்... அது அஸ்ஸாமிலும், மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும் எதிரொலித்து இருக்குமே!
இது தி.மு.க. செய்த ஊழல்; தி.மு.க-வினால் மட்டுமே செய்ய முடிந்த ஊழல். அது மக்களுக்கு நன்றாகவே தெரிகிறது. நடந்து முடிந்த தேர்தலில் ஓட்டுக்கு 1,000 முதல் 2,000 வரை தி.மு.க. வாரி இறைத்தபோதே, இது ஸ்பெக்ட்ரம் பணம் என்பதை மக்கள் புரிந்துகொண்டார்கள். அதனால்தான் பணத்தை வாங்கினாலும் தி.மு.க-வுக்கு ஓட்டு போடவில்லை. சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வோடு கூட்டணி வேண்டாம் என நானும் ராகுல் காந்தியும் சொல்லிப் பார்த்தோம். தி.மு.க-வுடன் கூட்டணிவைத்த காரணத்தால்தான், தமிழகத்தில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்!''
''தி.மு.க-வுடன் கூட்டணி தொடருமா?''
''தொடராது, தொடரவும் கூடாது என்பது​தான் என் விருப்பமும், தமிழகத்தில் உள்ள உண்மையான காங்கிரஸ் தொண்டர்களின் விருப்பமும். நல்லவர்கள் நினைப்பது நிச்சயமாக நடக்கும். ஆனால் கொஞ்சம் தாமதமாக நடக்கும். அவ்வளவுதான்!''
- கே.ராஜாதிருவேங்கடம்

'நீயே நில்லேன் சசி!'


ழுகார் வந்ததும், ''உமது திருச்சிப் புகைப்படக்காரர் அனுப்பி இருக்கும் புகைப்படங்களை எமக்குக் காட்டும்!'' என்று உத்தரவிட்டார். படங்களை ஒவ்வொன்றாகப் பார்த்தபடி, மனசுக்குள் சிரித்துக்கொண்டார். ''அடுத்த அரங்கேற்றத்துக்குத் தயாராகி​றாராக்கும்!'' என்று பூடகமாகச் சொல்லிவிட்டுப் பேச ஆரம்பித்தார்!
''உடன்பிறவாச் சகோதரி சசிகலா, விரைவில் வெளிச்சத்துக்கு வரப்போகிறார் என்பதே ஜெயல​லிதாவின் திருச்சி விசிட்டில் நாம் உணரவேண்டிய முக்கியமான செய்தி!'' என்றார்.
''சஸ்பென்ஸ் வைக்காமல் சொல்லும்!'' என்றோம்.
''வரிசையாக வருகிறேன்! 19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலையில், திருச்சி விமான நிலையத்தில் இறங்கிய கையோடு நேராக, அரங்கநாதரை சேவிக்க ஸ்ரீரங்கத்துக்கு வந்தார் ஜெயலலிதா. அவருடன் கூடவே சசிகலாவும். இருவரும் கோயிலுக்குள் நுழைந்தபோது, மணி 11. ஜெ-யின் ஆஸ்தான பட்டரான சுந்தர் பட்டர், மாலை மரியாதையுடன் கோயில் வாசலில் வரவேற்பு அளித்தார்.
முதல்வருக்காக சிவப்பு நிற கம்பள வரவேற்பு பிரகாரத்தில் தயாராக இருந்தது. அதை மறுத்தவர், வெயிலில் கருங்கல் தரையில் நடந்தே கோயிலுக்குள் நுழைந்தார். மினரல் வாட்டரை அவர் வரும் வழியில் போலீஸ் அதிகாரிகள் தெளிக்க... ஊழியர்கள் தரையைத் துணியால் துடைத்து வெப்பத்தைத் தணித்தனர். முதலில் கருடாழ்வார் சந்நிதியில் சுவாமி தரிசனம் செய்தவர், அடுத்து அரங்​கநாதரை சேவிக்கச் சென்றார். அதற்கு முன்பாகப் பிரகாரத்தை ஒரு முறை சுற்றினார். அரங்கனை ஆற அமரத் தரிசனம் செய்ததும், சசிகலா, கையோடு கொண்டுவந்த பையில் இருந்து  நோட்டுக் கட்டுகளை எடுத்து ஜெ-விடம் கொடுக்க... அதை வாங்கி உண்டியலில் போட்டார்.
தனது சொந்தப் பணத்தில் வாங்கிய பேட்டரி கார் ஒன்றைக் கோயிலுக்குத் தானமாக அளித்தார். அந்தக் காரில் சசிகலா சகிதம் அமர்ந்து பிரகாரத்தை ஒரு ரவுண்ட் அடிக்கவும் தவறவில்லை.''
''என்ன அடிக்கடி 'சசிகலா, சசிகலா’ என்கிறீர்?''
''அரசியல்ரீதியாக சில முக்கிய முடிவுகளை எடுக்க இருக்கிறார் ஜெயலலிதா. அதாவது, தன்னுடைய அரசியல் வாரிசு யார் என்பதுதான் அது! அந்த ஸ்தானத்தை சசிகலாவுக்குக் கொடுத்து அழகு பார்க்க நினைக்கிறாராம் ஜெயலலிதா. அமைச்சர் மரியம்பிச்சை மரணத்தைத் தொடர்ந்து காலியாக உள்ள திருச்சி மேற்குத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், அ.தி.மு.க. களம் இறக்கும் வேட்பாளர் அநேகமாக சசிகலாவாக இருக்கலாம். 'நீயே நில்லேன் சசி’ என்று ஜெயலலிதாவே சொன்னதாகச் சொல்கிறார்கள் சோர்ஸ்கள்!''
''ஒவ்வொரு தேர்தலின்போதும், இதுபோல் தகவல்கள் கிளம்புவது வழக்கம்தானே?''
''கட்சியின் பொதுக் குழு உறுப்பினராக இருக்கும் சசிகலா, எம்.எல்.ஏ-க்களைத் தேர்ந்தெடுப்பதில் தொடங்கி... யார் யாரை அமைச்சர்களாக, அதிகாரிகளாக நியமிக்கலாம் என்பது வரை ஜெயலலிதாவுக்குக் கணித்துச் சொல்லும் மனுஷியாக இருந்தவர். கடந்த 30 ஆண்டுகளில் ஜெயலலிதாவின் நிழலாக இருந்தவர் என்பதைவிட வேறு என்ன தகுதி வேண்டும்? ஜெயலலிதா ஜெயித்த ஸ்ரீரங்கம் தொகுதியும், இடைத்தேர்தல் நடக்க உள்ள திருச்சி மேற்குத் தொகுதியும் அடுத்தடுத்த தொகுதிகள். இரண்டு தொகுதிகளில் வரும் ஏரியாக்கள் மாறி மாறி வரும். உடன்பிறவாத் தோழிகளுக்கு இதைவிட என்ன பொருத்தம் வேண்டும்?''
''நன்றாகத்தான் இருக்கிறது! திருச்சி மாவட்டத்தின் அரசுப் பதவிகளில் பெரும்பாலானவற்றை பெண்களே இந்த சீஸனில் பெற்றுவிட்டனர்.  கலெக்டர், எஸ்.பி., மேயர், மாவட்டப் பஞ்சாயத்துத் தலைவி, டி.ஆர்.ஓ., ஆர்.டி.ஓ... இந்த வரிசையில் சசிகலாவும் வருவார் போலிருக்கிறதே?''
''அதெல்லாம் அப்புறம்! திருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிட ஸீட் கேட்டு அ.தி.மு.க-வினர் முட்டி மோதுகிறார்கள். அவர்களில், மறைந்த மரியம் பிச்சையின் மகன் மரியம் ஆசிக் மீரா, முதல்வர் ஜெயித்த ஸ்ரீரங்கம் தொகுதியில் தேர்தல் வேலை பார்த்த போலீஸ் பிரமுகர் ஸ்ரீதர், கடந்த சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம் கட்சிக்கு ஸீட் கொடுக்க வேண்டி வந்தபோது, தான் ஒதுங்கி வழிவிட்ட ராமநாதபுர அ.தி.மு.க. பிரமுகர் அன்வர்ராஜா, தொழில் அதிபர் சிராஜுதீன், தாஹிர் உள்ளிட்ட பலரும் வரிந்துகட்டி நின்றனர். இவர்களுக்கு வேறு வகையில் வாய்ப்புகள் கிடைக்கலாம். இப்போதைக்கு சசிகலாவை நிற்கவைக்க, கிட்டதட்ட ஜெ. முடிவு செய்துவிட்டதாகவே தெரிகிறது.''
''தோழி முதல்வராக இருக்கிறார் என்பதைத் தவிர, திருச்சி மேற்குத் தொகுதிக்கும் சசிகலாவுக்கும் என்ன தொடர்பு? இங்கு உள்ள மக்கள் எப்படி ஏற்றுக்​கொள்வார்கள்?''
''நீர் என்ன... விஷயம் புரியாதவராய் இருக்கிறீர்! சசிகலாவுக்கும், அந்தத் தொகுதிக்கும் நெருக்கமான பந்தம் உண்டு. கள்ளர் சமூகத்தவர் சுமார் 35 ஆயிரம் பேர் இங்கே வசிக்கிறார்களாம். தோழியின் அக்கா வனிதாவின் வீடு, கருமண்டபம் ஏரியாவில் இருக்கிறது. கே.கே.நகரில்தான் சசிகலாவின் உறவினர் இன்ஜினீயர் கலியபெருமாள் வீடு. நிறையச் சொந்தங்கள்  வசிப்பது இந்தத் தொகுதியில்தான். இன்னும் சொல்கிறேன்... திருச்சி எல்லையும், தஞ்சாவூர் எல்லையும் சேரும் இடத்துக்கு அருகேதான் சசிகலாவின் புகுந்த வீடு. அதாவது, விளார் கிராமம் எம்.நடராஜன் பிறந்த சொந்தக் கிராமம். அப்படிப் பார்த்தால், மண்ணுக்குச் சொந்தமானவர்தானே!
இதே தொகுதியில்தான் ரிட்டயர்டு போலீஸ் எஸ்.பி-யான கலியமூர்த்தியின் வீடும் இருக்கிறது. சசிகலாவின் நிழல்களில் ஒருவர் இவர். சில நாட்களுக்கு முன்பு போயஸ் கார்டனில் இருந்து அவருக்கு அழைப்பு வந்தது. திருச்சிக்கு ஜெ. வந்தபோதும், விமான நிலையத்திலும் இவர் தென்பட்டார். இவை எல்லாமே  ஒரு காரணமாகத்தான் என்கிறார்கள் விவரமான​வர்கள்!''
''சசிகலா நின்றால், அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் நேரு நிற்பாரா?''
''சந்தேகம்தான்! உள்ளாட்சி மன்றத் தேர்தலோடு இந்த இடைத்தேர்தலும் வந்தால், தி.மு.க. சார்பில் வேட்பாளரை நிறுத்துவார்கள். அப்படி இல்லாமல், இடைத்தேர்தல் மட்டும் தனியாக நடந்தால், அனுதாப அலையில் எதிர் நீச்சல் போட நேரு உட்பட யாரும் தயாராக இல்லையாம்!'' என்ற கழுகார், அடுத்த சப்ஜெக்ட் மாறினார்.
''கனிமொழிக்கு ஜாமீன் தர முடியாது என்று உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டது. காலை 10 மணிக்கே கோபாலபுரம் வீடு தி.மு.க. பிரமுகர்களால் நிரம்பி வழிந்தது. 'இன்னிக்கும் ஜாமீன் கிடைக்காதுய்யா’ என்று கலங்கிய கண்களுடன் சொன்னாராம் கருணாநிதி. ஜாமீன் இல்லை என்ற தகவல் வந்ததுமே, 'என் மகளைப் பார்த்தே ஒரு மாசம் ஆச்சு. இனிமே எப்பத்தான் பார்க்கப்போறேன்னு தெரியலையே’ என்றும் சொல்லிக் கலங்கினாராம். இப்படிக் கருணாநிதி சொல்லிக்கொண்டு இருக்க, ராஜாத்தி அம்மாள் டெல்லியில் இருந்து போன் செய்து கதறியதாகச் சொல்கிறார்கள். 'நாளைக்கே நான் டெல்லிக்கு வர்றேன். நீ அங்கேயும், நான் இங்கேயும் இருக்கோம். ஜெயிலில் போய் கனியைப் பார்க்கணும்போல இருக்கு’ என்று கருணாநிதி சொல்லி இருக்கிறார். அநேகமாக, அவர் இந்நேரம் டெல்லியில் இருப்பார்...''
''ராஜாத்தி அம்மாள் டெல்லியிலேயேதான் இருக்​கிறாரா?''
''பெரும்பாலும் அங்கேதான்! அவரால் தனிமையில் சி.ஐ.டி. காலனி வீட்டில் இருக்க முடியவில்லை என்கிறார்கள். கடந்த வாரத்தில் ஒரே ஒருநாள் வியாழக்கிழமை மட்டும் சென்னைக்கு வந்தார். கருணாநிதி, ஸ்டாலினைச் சந்தித்துவிட்டுத் திரும்பிவிட்டார்...''
''ஸ்டாலினைப் பார்த்ததில் ஏதாவது ஒரு விசேஷம் உண்டா?''
''ஸ்டாலினுக்கு முதுகு வலி. ஒரு சில நாட்களாக ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்தார். ராமச்சந்திரா மருத்து​வமனையில் சிகிச்சையும் நடந்தது. இரண்டு மூன்று நாட்களுக்கு மேலே தங்கினால், ஏதாவது வதந்தி கிளம்பிவிடும் என்பதால், செனடாப் சாலை வீட்டிலேயே ஓய்வு எடுத்துக்கொண்டார். கருணாநிதியே அவரைச் சென்று சந்திக்கும் அளவுக்கு முதுகு வலியால் அவஸ்தைப்பட்டார். இதைத் தெரிந்துகொண்டுதான் ராஜாத்தி பார்க்க வந்தார்.''
''என்னதான் ஆகும் டெல்லியில்?''
''உச்ச நீதிமன்றம் கை விரித்துவிட்ட நிலையில், மீண்டும் ஸ்பெஷல் கோர்ட்டுக்குத்தான் போயாக வேண்டும். கனிமொழி ஜாமீன் வழக்கை விசாரித்திருக்க வேண்டிய நீதிபதிகள் பி.சதாசிவம், ஏ.கே.பட்நாயக் ஆகிய இருவரும் விலகியது, நீதிபதிகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பி.சதாசிவம், தமிழகத்தைச் சேர்ந்தவர். 'இந்த வழக்கில் அவர் எந்த முடிவுகள் எடுத்தாலும் சர்ச்சையாகும்’ என்று சீனியர்கள் சிலர் பேசிக் கொண்டார்கள். இதுபோலவே பட்நாயக்கும் விலகினார். அதன் பிறகே, ஜி.எஸ்.சிங்வியும் பி.எஸ்.சவுகானும் விசாரிக்க வந்தார்கள்!'' என்ற கழுகார்...
''ஜூலை 2-ம் தேதி, மத்திய அமைச்சரவை மாறலாம். அடுத்த இரண்டு நாட்களில் தயாநிதிக்கு சம்மன் வரலாம் என்று சிலர் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள். டைரியில் குறித்துவையும்!'' என்றபடியே பறந்தார்.
அட்டை மற்றும் படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்
'ஜெயலலிதாவுடன் கூட்டுச் சதியா?’
பெங்களூருவில் நடக்கும் சொத்துக் குவிப்பு வழக்கு முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சுற்றிச் சுற்றி அடிக்க ஆரம்பித்துள்ளது. சில நாட்களுக்கு முன்னால் விசாரணைக்கு ஆஜரான ஜெயலலிதாவின் வக்கீலைப் பார்த்து, ''இங்கு நடப்பது எல்லாம் சம்பந்தப்பட்டவருக்குத் தெரியுமா?'' என்றே நீதிபதி மல்லிகார்ஜூனய்யா கேட்டாராம். இப்போது அடுத்த கிடுக்கிப் பிடி ஆரம்பித்துள்ளது!
''சொத்துக்  குவிப்பு வழக்கில் தமிழ்நாடு காவல் துறையின் ஊழல் தடுப்புப் பிரிவும்  ஜெயலலிதாவும்  சேர்ந்து​கொண்டு கூட்டுச் சதி செய்கிறார்கள்!'' என பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் கர்நாடக அரசின் சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா சொல்லி திகிலைக் கிளப்பி இருக்கிறார். ''தமிழ்நாடு ஊழல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி-யான ஜி.சம்பந்தம், அரசு வழக்கறிஞருக்கே தெரியாமல், நீதிபதிக்கு நேரடியாக ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். இது கடும் ஆட்சேபணைக்கு உரியது'' என்று வாதிட்டார் ஆச்சார்யா. இதைக் கேட்ட நீதிபதி மல்லிகார்ஜுனய்யா, ''சட்டத்தின் எந்தப் பிரிவின் கீழ் டி.எஸ்.பி. எனக்குக் கடிதம் அனுப்பினார் என விளக்கம் அளிக்க வேண்டும்!'' என ஊழல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி-க்கு நோட்டீஸ் அனுப்பினார். 'வழக்கை மேலும் புலனாய்வு செய்து வருவதால், நீதிமன்றத்துக்கு நேரடியாக கடிதம் அனுப்பினோம். அந்தக் கடிதத்தை சமர்ப்பித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறோம்’ என டி.எஸ்.பி. தரப்பு விளக்கம் தெரிவித்து உள்ளது. இதை ஏற்றுக்கொள்ளாத நீதிபதி, இது தொடர்பான விசாரணையை வரும் ஜூன் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்து இருக்கிறார்.
சிதம்பரத்தையும் சேருங்கள்!
ஆ.ராசாவுக்கு எதிராக இதுவரை கொம்பு சுழற்றி வந்த சுப்பிரமணியன் சுவாமி, இப்போது ப.சிதம்பரத்துக்கு எதிராக அஸ்திரம் பாய்ச்ச ஆரம்பித்து​விட்டார்!
''ஆ.ராசாவும், ப.சிதம்பரமும் கூட்டாக முடிவு செய்தே ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கினார்கள். ஆ.ராசா குற்றவாளி என்றால், ப.சிதம்பரமும் குற்றவாளி​தான். அவரையும் கைது செய்ய வேண்டும். வெளி​நாட்டு கம்பெனிகளுக்கு விற்கக் கூடாது என்ற நிபந்தனையை மீறி, ஸ்வான் தன் பங்குகளை விற்றது அனைவரும் அறிந்ததே. இது சிதம்பரத்தின் அனுமதியுடன்தான் நடந்திருக்கிறது. அவரும்ஆதாயம் அடைந்திருக்கிறார். எனவே, ஆகஸ்ட் மாதம் ப.சிதம்​​பரத்துக்கு சிக்கல் வரலாம். அதன் பிறகு, மாதம் ஒரு மத்திய அமைச்சர் உள்ளே போவார்!'' என்று சொல்ல ஆரம்பித்​​துள்ளார்.

Saturday, June 18, 2011

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கோ தானம் எதற்காக... அதன் மகிமைகள் என்ன?
- ஆர்.கலியபெருமாள், பேட்டைவாய்த்தலை
பசு மாட்டில் 14 உலகங்களும் அடங்கியுள்ளன. பசுவை தானம் அளித்தால், அகில உலகையும் தானம் அளித்த பலன் உண்டு. வேள்விக்குத் தேவையான நெய், இறைவனின் அபிஷேகத்துக்கு உகந்த பால், தயிர், நெய், பஞ்சகவ்யம் ஆகியன பசுவிடம் இருந்து கிடைக்கின்றன. பால், தயிர், நெய், கோமியம், சாணி ஆகிய ஐந்தின் கலவை பஞ்சகவ்யம் ஆகும். பஞ்ச என்றால் ஐந்து; கவ்யம் என்றால் பசுவிடம் இருந்து வந்தது என்று பொருள். இது, நமது எலும்பு மற்றும் தொடு புலனோடு இணைந்த பாபத்தை அழிக்கவல்லது என்கிறது சாஸ்திரம் (யத்வகஸ்திகதம்பாபம...).

கோமூத்திரம் வெள்ளைப்பாண்டை அறவே அகற்றும்; பஞ்ச கவ்யகிருதம் மனநோயைக் குணப்படுத்தும் என்கிறது ஆயுர்வேதம். பசுவின் பால் முழு உணவு. உடல் மற்றும் உள்ளத்தைத் தூய்மையாக்குவதுடன், சுகாதாரத்தையும் பேணிக்காப்பது பசுவின் பால். நெய்யானது, ஜீரண சக்தியை வலுப்படுத்தி உடலுக்கு வலுவூட்டும். மருத்துவ குணமுடைய பொருள்களை மற்றவர்களுக்கு அளிப்பதால் உண்டாகும் பெருமை சொல்லில் அடங்காது. ஆறறிவு இல்லாதது, ஆறறிவு பெற்றவர்களை வாழ வைக்கிறது. பசுவின் பாலுக்கும் நெய்க்கும் ஈடான மற்றொரு பொருள் இல்லை. அதன் இழப்பை, தற்காலச் சூழலில் வாழும் ஆறறிவு பெற்றவர்களிடம் காணமுடிகிறது. தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்குத் தாய்ப்பாலாகச் செயல்படுவது பசும்பால்தான். இயற்கையின் படைப்பை கடைச் சரக்காக மாற்றக்கூடாது என்பதால், தானமாக (இனாமாக) அளிக்கச் சொன்னது தர்மசாஸ்திரம். பால் கொடுப்பது பசு; பணம் பெறுவது மற்றொருவர் என்று இருக்கக்கூடாது என்பதால், பசுவை தானமாக அளிக்கப் பரிந்துரைத்தது தர்மசாஸ்திரம். வேள்விக்குத் தேவையான நெய்யை அளிப்பதால், வேள்வி அரசன் கண்ணன், பசுக்களைப் பாதுகாக்கும் கோபாலனாகத் தோன்றினான்.
அரிசி மாவால் கோலமிடுவது புண்ணியம் என்பார்கள். ஆனால், அந்த அரிசி மாவை தின்ன வரும் எறும்புகள், நம்மையும் அறியாமல் காலில் மிதிபட்டு இறந்தால், பாபம் சேராதா?
- மாலதி, புதுவை
அனுதினமும் மருந்தடித்துக் கொசுக்களைக் கொன்று குவிக்கிறோம். அது பாபம் இல்லையா? அதேபோல், நடக்கும் போது நமது செருப்புகளுக்கு அடியில் அகப்பட்டு ஈ- எறும்பு போன்றவை மடிகின்றனவே?! வெண்டைக்காயை நறுக்கும் போது, சில நேரம் எதிர்பாராதவிதமாக உள்ளிருக்கும் புழுக்களும் அறுபட்டுவிடுமே! மாவரைக்கும்போதும், அம்மியில் அரைக்கும் வேளையிலும் மிகச்சிறிய உயிரினங்கள் குழவியில் அடிபட்டு மடிந்துபோகலாம்; வரட்டி, விறகுகளில் ஒளிந்திருக்கும் உயிரினங்கள், அடுப்பு நெருப்பில் மடிய நேரிடுகிறதே? தேனுக்காக தேனீக்களைத் தெரிந்தே அழிக்கிறோமே?! வரையறை இல்லாத அஹிம்சையை ஏற்றால், பல நன்மைகளை இழக்க நேரிடும். எறும்பு வராமல் இருக்க, தெரிந்தே நாம் எறும்புப் பொடியை உபயோகிப்போம்.
விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளோ, 'லக்ஷ்மண ரேகையை’ (சாக்பீஸ் கோடு போன்று) அறிமுகம் செய்து, எறும்புகளை அழிக்க வழி சொல்கிறது.
உங்கள் கவனத்துக்கு ஒரு விஷயம்... எறும்புக்கு உணவளிப்பதற்காக மாக்கோலம் போடுவதில்லை. தரையைச் சுத்தம் செய்து, கோலம் போட்டு, சுப காரியங்களை நிறைவேற்றும்படி பரிந்துரைக்கிறது தர்மசாஸ்திரம் (ரங்க வல்யாத்யலம் கிருதம்). கோலம் போட்டு அதில் விளக்கை வைப்போம். கோலத்தின் மீது கும்பம் வைப்பதும் உண்டு. கோலமிட்டு அதன்மீது தட்டு வைத்து, விருந்தினரின் கால்களை அலம்பிப் பணிவிடை செய்வோம். அக்னி குண்டத்துக்குக் கோலம் போட்டு அழகுபடுத்துவோம்.
மற்றபடி, எறும்புக்கு உணவளிக்கவே கோலம் பயன்படும் எனும் கூற்று, சாஸ்திரத்துக்குப் புறம்பானது. எறும்புகள் கோலத்தைத் தாறுமாறாக்கினால், வேறு கோலம் வரைந்து சரிசெய்ய வேண்டும். கோலத்தை அழிப்பது அபசாரம். ஈரம் காயும் வரை, நாமே கோலத்தை மிதித்து அழித்துவிடாமல் இருக்கக் கண்காணிப்போம் இல்லையா?!
அரிசி மாவால் கோலமிடுதல் என்பது, எறும்புகளுக்கு உணவளிக்கும் எண்ணத்தில் எழவில்லை. அரிசியில் விச்வே தேவர்கள் குடியிருக்கிறார்கள். கோலத்தில் நிரம்பியிருக்கும் அவர்களது சாந்நித்தியம், செய்யும் சடங்கின் நிறைவுக்குத் துணை புரியும் (தண்டுலா:வைச்வதேவத்யா:). ஆக, கோலத்தில் எறும்புகள் வராமல் பார்த்துக்கொண்டு, அதில் சடங்குகளை நிறைவேற்ற வேண்டும். கோலத்தைக் காலால் மிதிக்கக்கூடாது. அதில் கவனம் வேண்டும். சடங்கு முடியும் வரை கோலம் இருக்க வேண்டும். கஷ்டப்பட்டுக் கோலம் போட்டுத்தான் எறும்புகளுக்கு உணவளித்து மகிழவேண்டும் என்பதில்லை; அரிசியை ஒரு மூலையில் கொட்டி வைத்தால் போதும்; எறும்புகள் எடுத்துக்கொள்ளும்; கால்களில் மிதிபட்டு மடியாமலும் இருக்கும்.
எங்கள் மகன், மகள் இருவருமே கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள். எங்கள் அந்திம காலத்துக்குப் பிறகு, எங்களுக்கு இவர்கள் கர்ம காரியங்கள் செய்யலாமா? கூடாது எனில், வேறு யார் மூலம் செய்யலாம்?
- எஸ்.குருமூர்த்தி, சென்னை-88
  பண்பு, சம்பிரதாயம், மரபு ஆகியவற்றை ஒதுக்கி, தன்னிச்சையாகக் கலப்புத் திருமணத்தைச் சந்தித்த பிறகு, மீண்டும் சம்பிரதாயத்தை எட்டிப் பார்ப்பது சரியல்ல. தற்காலச் சூழலில், விருப்பப்படி திருமணம் செய்யலாம் என்று வந்த பிறகு, பழைய சடங்குகளை நிறைவேற்ற நினைப்பது பொருளற்றது. கலப்புத் திருமணத்தை ஏற்காதவர்களுக்கு, மரபுப்படி செயல்படுவது சிறப்பான விஷயம். அதன் சட்டதிட்டங்கள் அப்படித்தான் வகுக்கப்பட்டிருக்கின்றன. கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்றிருக்கக்கூடாது. மரபை மீறியவனுக்கு அந்தச் சட்டதிட்டங்கள் பொருந்தாது; விருப்பப்படி செயல்படலாம்.
தங்கள் பங்காளிகளில் எவரேனும் முன்வந்தால், அவர்கள் உங்களுக்கானதை நிறைவேற்றலாம். அவர்கள் மரபோடு இணைந் தவராக இருக்கவேண்டும். நாம் விருப்பப்படி செயல்படுவோம்; தர்ம சாஸ்திரம் அதை ஏற்கவேண்டும் என நினைக்கக்கூடாது. வரம்பு மீறிய செயலுக்கு என்றைக்கும் தகுதி இழப்பு உண்டு. கலப்பு மணத்தில் மற்றொருவரின் மரபுப்படி செயல்படலாம். கலப்பில் இரண்டுக்கும் சம அந்தஸ்துதான். ஆகையால், ஒன்று இல்லையெனில் மற்றொன்றைப் பின்பற்றலாம்!
நவக்கிரகங்களை எந்தெந்த திசையை நோக்கிப் பிரதிஷ்டை செய்ய வேண்டும்?
- அனந்தநாராயணன்
சூரியன் கிழக்கு முகமாக இருக்கலாம். சந்திரன்- மேற்கு; செவ்வாய்- தெற்கு; புதன்- வடக்கு; குரு- வடக்கு; சுக்கிரன்- கிழக்கு; சனி- மேற்கு; ராகு- தெற்கு; கேது- தெற்கு... இந்த முறையில் பிரதிஷ்டை செய்யவேண்டும் என பரிந்துரைக்கிறது, ஸம்ஸ்கார ரத்னமாலை எனும் நூல். அத்துடன், மற்ற எல்லா கிரகங்களையும் சூரியனை நோக்கி பிரதிஷ்டை செய்வதும் சிறப்பு என்றும் சொல்கிறது.
விண்வெளியில் இருக்கும் கிரக வரிசைப்படியும் பிரதிஷ்டை செய்யலாம். கோள வடிவில்... சந்திரன், புதன், சுக்கிரன், சூரியன், செவ்வாய், குரு, சனி என்கிற ஏழு கிரகங்கள் வரிசையாக இருக்கும். இவற்றுடன் சேர்த்து ராகு- கேதுவையும்  பிரதிஷ்டை செய்யலாம். கிரகங்கள் காலத்துடன் இணைந்திருக்கும்; காலம், எப்போதும் நம்முடன் இணைந்திருக்கும். ஒவ்வொரு சுப காரியத்திலும் கிரக வழிபாடும் இணைந்திருப்பதால், நவக்கிரகங்களுக்கென தனி வழிபாட்டு முறை தலை தூக்காத காலம் இருந்தது. தினமும் நீராடியதும், கை நிறைய தண்ணீரை அள்ளி 3 முறை கிரகங்களுக்குத் தர்ப்பணம் செய்யும் நடைமுறையை, வேத காலத்திலி ருந்தே வேதம் ஓதுபவர்கள் கடைப்பிடிப்பது உண்டு.
பிற்காலத்தில் வந்த சிந்தனையாளர்கள், நவக்கிரகங் களை ஆலயப் பிரவேசம் செய்வித்து, பிரதிஷ்டை செய்யும் முறையையும் பரிந்துரைத்தனர். இன்றும் பல கோயில்களில் நவக்கிரக சந்நிதி இருக்காது. ஆலயத்தில் உறைந்திருக்கும் (மூலவர்) திருவுருத்திலேயே நவக்கிரக சாந்நித்தியம் இருப்பதாகச் சொல்வார்கள். இந்தக் கோயில் ராகு ஸ்தலம், இது கேது ஸ்தலம் என்று சுட்டிக் காட்டுவதும் உண்டு. தற்போது பக்தர்களின் விருப்பம், பொருளாதாரம் ஆகியவற்றை முன் வைத்து, மற்ற மூர்த்தங்களுடன் சேர்த்து, நவக்கிரகங்களும் கோயிலில் இடம் பெற்றுள்ளனர்.
முன்பு கோயிலைத் தேடிச் சென்று பக்தன் வழிபடுவான். இப்போதெல்லாம் பக்தனுக்கு வசதியான இடங்களில் கோயில் வந்துவிடுகிறது. தனித்தன்மை மாறி, வியாபார ஸ்தலமாகக் காட்சியளிக்கும் கோயில்களும் உண்டு. இந்த மாதிரியான சிக்கலைத் தவிர்க்க, நவக்கிரகங்களை பிரதிஷ்டை செய்ய  முனையவில்லை முன்னோர்கள்.
எதிலுமே ஒரு புதுமை- ஒரு வித்தியாசம் இருந்தால், மக்களுக்கு ஈடுபாடு ஏற்படும். அதை அறிந்த அறிஞர்கள், புதுமையாகத் தோற்றுவித்ததே நவக்கிரக பிரதிஷ்டை. அதன் பிறகு, குறிப்பிட்ட திசைகள்வாரியாக அவர்களை பிரதிஷ்டை செய்யும் முறை பிரபலமானது.
வடநாட்டில், பெரியவர்களை வணங்கும்போது தலையில் முக்காடு போட்டுக் கொண்டிருக்கிறார்களே, ஏன்? அதேபோல், நம் கோயில்களில் நைவேத்தியம் செய்த பிறகே ஆரத்தி காட்டுகிறோம்; ஆனால், அங்கெல்லாம் ஆரத்திக்குப் பிறகே நைவேத் தியம் சமர்ப்பிக்கிறார்கள். ஏன் அப்படி?
- விஜயலட்சுமி, டில்லி
தேசத்துக்கு தேசம் நடைமுறையில் மாறுபாடு தென்படும். இதை தேசசாரம்... அதாவது, நாட்டு நடப்பு அல்லது சம்பிரதாயம் என்பார்கள். சாஸ்திர சட்டதிட்டங்களுக்குக் குந்தகம் விளைவிக் காதவற்றை சம்பிரதாயம் என்று ஏற்று, நடைமுறைப்படுத்துவார்கள்.
திருமணத்தில், மாப்பிள்ளை அழைப்பு- ஜானுவாசம் என்றொரு சம்பிரதாயம் உண்டு. அதேநேரம், மணப்பெண் அழைப்பு எனும் சம்பிரதாயமும் கடைப்பிடிக்கப்படும். மாமன் மகள்- அத்தை மகன் இவர்களின் திருமணம் நடந்தேறும்; முறைப்பெண் என்று அதைக் கடைப்பிடிப்பார்கள். தலையில் முக்காடு இடுவது, வடநாட்டு சம்பிரதாயம். பிற பெண்களைக் கூர்ந்து கவனிக்கக் கூடாது. அதற்கு உகந்த வகையில் முக்காடு பயன்படும். ஸ்ரீராமனுடன் வனவாசம் செல்லும்போது, முக்காடு போட்டுக் கொண்டிருந்தாள் சீதை. 'மக்கள் உன் முகத்தைப் பார்க்க விரும்புகிறார்கள். அதை நிறைவேற்ற வேண்டும்; முக்காடை அகற்றி, முகத்தைக் காட்டு’ என சீதைக்கு ஸ்ரீராமன் கட்டளையிட்டதாகத் தகவல் உண்டு.
சம்பிரதாயம் என்றால், எல்லோரும் கடைப் பிடிக்க வேண்டிய ஒன்று அல்ல. நைவேத்தியத் துக்குப் பிறகு ஆரத்தியும், ஆரத்திக்குப் பிறகு நைவேத்தியமும் சம்பிரதாயத்தில் விளைந்தது. கோயிலுக்கு பெரிய மனிதர்கள் விஜயம் செய்யும்போதெல்லாம் ஆரத்தி எடுக்கும் சம்பிரதாயம் தமிழ்நாட்டில் உண்டு. எனவே, சம்பிரதாயங்கள் குறித்த ஆராய்ச்சியைக் கைவிட்டு, வழிபாட்டில் கவனம் செலுத்துவதே நல்லது!