Thursday, July 14, 2011
அழகுக்கு அழகு சேர்ப்பதை அலட்சியப்படுத்தாதீர்:
ஆண்களையும், பெண்களையும் வேறுபடுத்திக் காட்டுவதில், தலைமுடிக்கு முக்கிய பங்கு உண்டு. தலைமுடி, பெண்களின் அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பவை. ஒவ்வொரு பெண்ணுக்கும், அவரவர் தலைமுடியை, நீளமாகவும், அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும், வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக, சந்தைக்கு வரும் புதுப்புது பொருட்களை வாங்கி பயன்படுத்துவர். அவற்றை பயன்படுத்துவது தவறல்ல. அதற்கு முன், நம் தலைமுடிக்கும், தோலுக்கும் அவை ஏற்றதாக இருக்குமா என்பதை பரிசோதிக்க வேண்டும்.
சிலருக்கு, தலை எண்ணெய் பசை கொண்டதாகவும், முடி உலர்ந்தும் இருக்கும். சிலருக்கு எண்ணெய் பசை கொண்ட முடியும், உலர்ந்த தலையும் இருக்கும். இவற்றிற்கு தகுந்தாற்போல், பொருட்களை பயன்படுத்த வேண்டும். முடியை பராமரிக்க, "ஷாம்பூ' மற்றும் "கண்டிஷனர்' பயன்படுத்தலாம். சுருட்டை முடி மற்றும் உலர்ந்த முடிக்கும், "கண்டிஷனர்' உபயோகிக்கலாம். மாதத்திற்கு, ஒன்று அல்லது இரண்டு முறை கண்டிஷனர் போடுங்கள். முட்டையின் வெள்ளைப் பகுதியையும் பயன்படுத்தலாம்.தலைக்கு குளிக்கும் போது, ஷாம்பூவில் கொஞ்சம் தண்ணீர் கலந்து, தலையில் நன்கு மசாஜ் செய்து, தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்துவிட வேண்டும். இறுதியாக, கண்டிஷனரை தடவி சுத்தம் செய்ய வேண்டும். முக்கியமாக கண்டிஷனரை, முடியின் வேர் காலில் தடவவே கூடாது. தடவிய பின் நீண்ட நேரமும் தேய்க்கக்கூடாது. முடி கொட்டும் பிரச்னை அதிகம் இருந்தால், தலைமுடி சிகிச்சை நிபுணரிடம் செல்வது நல்லது. மேலும், மருத்துவரின் ஆலோசனைப்படி, "தைராய்டு' பரிசோதனை செய்து கொள்வதும் நல்லது.ஆரோக்கியமான தலைமுடிக்கு என்னென்ன உணவுகளை சாப்பிடலாம் என்று பார்ப்போம்: நீங்கள் போதுமான அளவு புரத உணவை சாப்பிட்டாலே, முடி கொட்டுவதை தவிர்க்கலாம். மேலும், உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்வதன் மூலம், உடல் முழுவதும், ஆக்சிஜன் சென்று, ரத்த ஓட்டத்தை சீராக வைக்கும்.
நல்ல பளபளப்பான, ஆரோக்கியமான முடிக்கு, ரத்த ஓட்டம் நன்றாக இருப்பது அவசியம்.நார்ச்சத்து அதிகம் அடங்கியுள்ள, காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மற்றும் கொட்டை வகைகளை சாப்பிட வேண்டும்.வைட்டமின் "ஏ' மற்றும் பி-காம்ப்ளக்ஸ், முடிக்கு மிகவும் நல்லது. பையோடின், வைட்டமின் "பி7' போன்றவை முடியை வலுப்படுத்த உதவும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment