நேற்று... இன்று... நாளை..?
சி.பி.ஐ. ஸ்கேனரில் சிங்கப்பூர் திக்திக்!
ஸ்பெக்ட்ரம் பூதம் தயாநிதி மாறனையும் கவ்விக் கொண்டது!
ஆ.ராசா, கனிமொழி இருவருடன் இது முடிந்துவிடும்... என்று நினைத்து இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, அதிர்ச்சியின் எல்லைக்குத் தள்ளப்பட்டுள்ளார். தயாநிதியின் பெயரை சி.பி.ஐ. தனது அறிக்கையில் தாக்கல் செய்ததுமே டெல்லி காங்கிரஸ் பிரமுகர் அடித்த கமென்ட், 'தி.மு.க-வின் கரன்சி ஆக்ஸிஜன் இதன் மூலம் அடைக்கப்பட்டுவிட்டது!’ என்பதுதான். அந்த அளவுக்கு, சென்னையையும் டெல்லியையும் அதிரவைத்துள்ளது சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள அறிக்கை!
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டு, டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி முன்னால் நிறுத்தப்பட்டு உள்ளனர். இதில் ஆ.ராசா நீங்கலாகக் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஜாமீன் மனுக்களைத் தாக்கல் செய்தனர். யாருக்கும் கிடைக்கவில்லை என்பதால், திகார் சிறையிலேயே இருக்கிறார்கள்.
ஜூன் 3-ம் தேதி பாட்டியாலா நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை தொடங்கி, ஜூலை 4-ம் தேதி மீண்டும் கோர்ட் நடவடிக்கைகள் தொடங்கியது. கடந்த 5-ம் தேதி சி.பி.ஐ-யைப் பார்த்து நீதிபதி சைனி சீறினார் - ''குற்றம் சாட்டப்பட்ட 14 பேரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டு இத்தனை நாட்கள் ஆகியும், ஏன் இன்னும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவில்லை? தொடர்ந்து அவர்கள் சிறையில் இருக்க வேண்டும் என்பது உங்களது விருப்பமா? குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குத் தர வேண்டிய ஆவணங்களை இதுவரை ஏன் தரவில்லை? இனியும் தாமதம் செய்தால், சி.பி.ஐ-க்கு அபராதம் விதிக்க வேண்டி வரும்!'' என்றதும், சி.பி.ஐ. தரப்பு கொஞ்சம் ஆடிப்போனது.
ஆனால், மறு நாள் உச்ச நீதிமன்றத்தில் சிலிர்த்துக் கிளம்பியது சி.பி.ஐ. ''இந்த வழக்கு, இதுவரை கைதான 14 பேருடன் முடியப்போகும் சமாசாரம் அல்ல. இதோ வருகிறது அடுத்த அஸ்திரம்!'' என்று சி.பி.ஐ. வைத்த வெடிகுண்டுதான்... முதல்கட்டமாக தயாநிதி மாறனின் மந்திரி பதவிக்கு வேட்டுவைத்துள்ளது. ஆ.ராசா, மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த காலத்தில் நடந்த விவகாரங்களை மட்டும் அல்ல... அதற்கு முன்னால் தயாநிதி மாறன் பதவியில் இருந்த காலத்தையும் சி.பி.ஐ. தோண்ட ஆரம்பித்து உள்ளது.
தயாநிதி மாறன் அமைச்சராக இருந்தநேரத்தில் நடந்ததாக சில விஷயங்களை, மத்திய அரசு அமைத்த ஒரு நபர் கமிஷன் முன்னால் அருண் ஷோரி வரிசையாக எடுத்து வைத்தார். அவர் அளித்த மனுவை அப்படியே சி.பி.ஐ-க்கு, விசாரணை அதிகாரியான நீதிபதி சிவராஜ் பாட்டீல் அனுப்பிவைத்தார். உடனடியாக, சி.பி.ஐ. இதனை விசாரிக்க ஆரம்பித்தது. இதன் மையப் புள்ளியாக 'ஸ்டெர்லிங்’ சிவசங்கரனை, சி.பி.ஐ. அதிகாரிகள் ரகசியமாக விசாரிக்கத் தொடங்கினார்கள். இதுபற்றி, ஜூன் 8, 15, 16 தேதியிட்ட ஜூ.வி. இதழ்களில் தொடர்ந்து விவரங்கள் வெளியாகின.
இதுதொடர்பான குற்றச்சாட்டை 'பொது நல வழக்கு தொடர்பான சமூக சேவை அமைப்பு’ உச்ச நீதிமன்றத்தில் மனுவாகத் தாக்கல் செய்தது. வக்கீல் பிரசாந்த் பூஷண் நடத்தி வரும் அமைப்பு இது.
சுப்ரீம் கோர்ட் இந்த விஷயத்தைக் கையில் எடுக்கும் என்று தெரிந்ததுமே, சிவசங்கரனை அதிகாரபூர்வமாக அழைத்து ஜூன் 6-ம் தேதி வாக்குமூலம் வாங்கியது சி.பி.ஐ. அவரது வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்துதான், கடந்த 6-ம் தேதி சி.பி.ஐ. ஒரு மனுவைத் தாக்கல் செய்தது.
நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி இருவரும்தான், 2ஜி வழக்கை வைத்துக் கலக்கி வரும் நீதிபதிகள். இவர்களிடம் சி.பி.ஐ. சார்பில் மூடிய கவர் ஒன்றை சி.பி.ஐ. வக்கீல் கே.கே.வேணுகோபால் கொடுத்தார். மொத்தம் 71 பக்கங்களைக்கொண்ட அந்த அறிக்கையின் சாராம்சத்தை வேணுகோபால் சொல்லச் சொல்ல... அதிர்வலைகள் பலமாகின.
இந்த அறிக்கையில் தயாநிதி மாறனின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால், அவர் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த காலகட்டத்தில் நடந்ததாக சில விஷயங்களை அவர் பெயரைச் சொல்லாமல் குறிப்பிட்டார் வேணுகோபால். ''2004 - 2007 காலகட்டத்தில் ஏர்செல் நிறுவனம் தனது சேவையை விரிவாக்கம் செய்ய முயற்சித்தது. ஆனால், கிடைக்கவில்லை. ஏர்செல் நிறுவனத்திடம் தேவை இல்லாத, முக்கியத்துவம் இல்லாத கேள்விகள் கேட்கப்பட்டன. அவசியமற்ற விசாரணைகள் நடத்தப்பட்டன. ஏர்செல்லைப் போலவே வேறு இரண்டு நிறுவனங்களும் இதே போன்று விண்ணப்பம் செய்திருந்தன. அந்த நிறுவனங்களிடம் இது மாதிரியான கெடுபிடிகள் காட்டப்படவில்லை. உடனடியாக அந்த இரண்டு நிறுவனங்களுக்கு லைசென்ஸ் கிடைத்தது.
தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சராக இருந்தவர் ஏதோ ஒரு நிர்பந்தத்தை ஏர்செல் நிறுவனத்துக்குக் கொடுத்திருக்கிறார் என்பது சி.பி.ஐ-யின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் அனந்தகிருஷ்ணன் நிறுவனத்துக்கு ஏர்செல்லின் பங்குகளைத் தர வேண்டும் என்று நிர்பந்தம் செய்துள்ளார்கள். சிவசங்கரன் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். சிவசங்கரன் தனது கம்பெனிப் பங்குகளை விற்பதைத் தவிர வேறு வழி இல்லை. அதன் பிறகு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு அந்த நிறுவனத்துக்குக் கிடைக்கிறது. இந்தப் பரிமாற்றத்தில் என்ன நடந்து இருக்கிறது என்பது குறித்துத்தான் சி.பி.ஐ. இப்போது விசாரித்து வருகிறது. பணப் பரிமாற்றம் குறித்தும் விசாரித்து வருகிறோம்!'' என்று சொன்னார் கே.கே. வேணுகோபால்.
அதாவது, இந்த விவகாரத்தில் இறங்கி சி.பி.ஐ. விசாரிப்பதற்கான அடிப்படை ஆதாரங்கள் இருப்பதாக நீதிபதிகளிடம் சொன்னார் வேணுகோபால். சிவசங்கரன் பற்றிக் குறிப்பிடும்போதும், 'திஸ் ஜென்டில்மேன்’ என்று மட்டும் சொன்னார். ''பணப் பரிமாற்றம் குறித்து சி.பி.ஐ. தனது விசாரணைகளை ஆரம்பித்துவிட்டது. சிங்கப்பூரில் இருக்கும் ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி மூலமாகத்தான் இதற்கான பணப் பரிமாற்றங்கள் நடந்துள்ளன என்று சந்தேகப்படுகிறோம். சிங்கப்பூரில் உள்ள அதன் அதிகாரியை ஜூலை 13-ம் தேதி விசாரணைக்கு வருமாறு அழைத்து உள்ளோம். மேக்சிஸ், ஆஸ்ட்ரோ, சன் டைரக்ட் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு மத்தியிலும் இந்தக் கால கட்டங்களில் நடந்துள்ள டீலிங்குகளை வைத்து, என்ன நடந்துள்ளது என்பதை முழுமையாக அறிய முடியும். அந்த அதிகாரி எங்கள் முன்பு ஆஜராகி விவரங்களை கூறியபிறகு எங்கள் விசாரணை வேகம் பிடிக்கும்!'' என்று சி.பி.ஐ. வட்டாரத்தில் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
''ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான விசாரணை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் முடிந்துவிடும். 2001 முதல் 2008-ம் ஆண்டு வரையிலான லைசென்ஸ் முறைகேடுகள், செப்டம்பர் 30-ம் தேதிக்குள் முடிந்துவிடும்!'' என்று வக்கீல் கே.கே.வேணுகோபால் சொல்லியதை வைத்துப் பார்க்கும்போது, தயாநிதி மாறன் மீது முழுமையான குற்றப் பத்திரிகை செப்டம்பர் மாதத்துக்குள் தாக்கல் ஆகிவிடும் போலிருக்கிறது!'' என்கிறார்கள் டெல்லி நீதித் துறை வட்டாரங்களில்.
''ராசா அமைச்சராக இருந்த காலகட்டத்தில் நடந்தவை குறித்து அனைத்து விசாரணைகளும் முடிந்துவிட்டன. ராசாவின் சொத்துகள் மற்றும் பண முதலீடுகள் குறித்து வெளிநாட்டு வங்கிகளில் தகவல்கள் திரட்டுவது மட்டுமே பாக்கி. அது தொடர்பாக பல குளுகுளு தீவுகளுக்கெல்லாம் கடிதப் பரிமாற்றங்களைத் தொடங்கி உள்ளோம். எங்களில் சில அதிகாரிகளும் நேரடியாகப் போய் அங்குள்ள முதலீடுகள் பற்றி தகவல்கள் சேர்த்துக் கொண்டு வந்துள்ளனர். அந்த வேலைகள் இன்னும் ஒன்றிரண்டு வாரங்களில் முடியும். தயாநிதி மாறன் தொடர்பான விவரங்களுக்குள் இப்போதுதான் நுழைய ஆரம்பித்துள்ளோம். அதில் மேக்சிஸ் நிறுவனம், சன் டைரக்ட் நிறுவனம் ஆகியவற்றையும் இனி மேல்தான் விசாரிக்க வேண்டி உள்ளது. தயாநிதி மாறனை முதல் கட்டமாக விசாரிப்போம். அவரது ஒத்துழைப்பைப் பொறுத்தே, அடுத்த கட்ட நடவடிக்கைகளை முடிவு செய்வோம்!'' என்று சி.பி.ஐ. அதிகாரிகள் சொல்கிறார்கள்.
சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள இந்த அறிக்கை தொடர்பாக எந்தக் கருத்தையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சொல்லவில்லை. ''இந்த அறிக்கை பற்றிய விசாரணை வரும் 11-ம் தேதி நடக்கும்!'' என்று மட்டும் கூறினார்கள். இதனால், 11-ம் தேதிக்குள் சி.பி.ஐ. தன்னுடைய அடுத்த கட்ட நடவடிக்கையைத் தொடங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ''தயாநிதி மாறனை 11-ம் தேதிக்குள் விசாரிக்க வாய்ப்பு இல்லை. 13-ம் தேதி சிங்கப்பூர் வங்கி அதிகாரிகள் சி.பி.ஐ. முன்னால் ஆஜராக இருக்கிறார்கள். அவர்களது வாக்குமூலங்களையும் வாங்கி வைத்துக்கொண்டுதான், சி.பி.ஐ. தயாநிதி மாறனை விசாரணைக்கு அழைக்கும். அதே சமயம், நீதிபதிகள் 11-ம் தேதி என்ன உத்தரவிடுகிறார்கள் என்பதையும் வைத்தே சி.பி.ஐ. செயல்படும்...'' என்று டெல்லியில் ஒரு தரப்பினர் சொல்ல...
''அதற்கு முன்பேகூட சி.பி.ஐ. தன் செயல்பாட்டை தொடங்கிவிடும். அதைப் புரிந்துகொண்டுதான், பிரதமர் தரப்பிலிருந்து தயாநிதி மாறனின் மந்திரி பதவியை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்திருக்கிறார்கள். இதுதொடர்பாக பிரதமர் அலுவலகத்திலிருந்து தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் பேசினார்கள். 'ஆ.ராசா விஷயத்தில் நடந்ததுபோல் இதில் அடம் பிடிக்க வேண்டாம். ராஜினாமாவை ஒத்திப் போடுவது காங்கிரஸ் - தி.மு.க. ஆகிய இரு தரப்புகளுக்குமே மேலும் மேலும் சங்கடங்களை ஏற்படுத்தும் என்று எடுத்துச் சொன்னார்கள். அதைத் தொடர்ந்தே ராஜினாமா கடிதத்தை தயாநிதி மாறன் ஒப்படைத்தார். மந்திரி பதவியிலிருந்து விலகிய பிறகுதான் ஆ.ராசா தொடர்பாக சி.பி.ஐ-யின் நேரடி நடவடிக்கைகள் தொடங்கின. அதுபோலவே இதிலும் ஆக்ஷன்கள் வேகம் பெறும்'' என்றும் கூறப்படுகிறது.''இந்த நிகழ்வுகள் சூடு பிடித்த சமயத்தில் டெல்லியில் இருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா 'பிரதமர் இனியும் சும்மா இருக்கக்கூடாது' என்ற பாணியில் உசுப்பிக் கொண்டே இருந்ததை சுட்டிக் காட்டும் சிலர்,
''மந்திரி பதவியிலிருந்து தயாநிதி மாறன் விலகிய பிறகு தமிழக அரசு தரப்பிலிருந்து சில நடவடிக்கைகளை எடுப்பதே ஜெயலலிதாவின் நோக்கம்!'' என்றும் கூறத் தொடங்கியுள்ளனர்.''தயாநிதி தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் எந்த தொலைத்தொடர்பு நிறுவனமும் சன் டைரக்ட்டில் முதலீடு செய்யவில்லை. ஆஸ்ட்ரோ நிறுவனம், சன் டைரக்டில் முதலீடு செய்தபோது தயாநிதி அமைச்சராகவே இல்லை. இந்த நிறுவனங்களில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை!'' என்று தயாநிதிமாறன் தரப்பு தனது விளக்கமாகச் சொல்ல ஆரம்பித்துள்ளது.
ஜூலை 13க்குப் பிறகு விவகாரம் இன்னும் சூடுபிடிக்கும்!
No comments:
Post a Comment