தமிழக சட்டசபையில் 25 ஆண்டுகளாகப் பளிச்சிட்டு வந்தவர் கலைஞர் கருணாநிதி. தி.மு.கழக கொறடா வாக, எதிர்க் கட்சித் துணைத் தலைவராக, முதல்வராக, எதிர்க் கட்சித் தலைவராக... பல விதங்களில் சட்டசபையில் பரபரப்பாகச் செயல்பட்டவர். இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசின் மெத்தனத்தை எதிர்த்து சட்டமன்ற உறுப்பினர் பதவியைக் கலைஞரும் பேராசிரியர் அன்பழகனும் ராஜினாமா செய்தனர். அதற்கு பிறகு, முதல் தடவையாக சட்டசபை 24-ம் தேதி கூடுகிறது. கலைஞர் இல்லாத சட்டசபைக் கூட்டம் இது.
சட்டசபையில் அமைச்சர்களுக்கு எதிர் வரிசையில் முதல்வருக்கு நேர் எதிரான ஆசனத்தில் ரிலாக்ஸ்டாக அமர்ந்திருப்பது, கலைஞரின் பாணி. அவரது கறுப்புக் கண்ணாடி வழியாக, அவர் கண்கள் சுறுசுறுப்பாக அலை பாய்வது தெரியும். முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் கறுப்புக் கண்ணாடியைப்போல அல்லாமல், கலைஞரின் கண்களை முழுமையாக மறைக்காத கூலிங் கிளாஸ் அது. அமைச்சர்களின் பதில் சரி இல்லை என்றால், கலைஞரது கேலிச் சிரிப்புதான் மண்டபத்தை முதலில் நிறைக்கும்.
சட்டசபையில் பரபரப்பான கட்டம் வரும்போதெல்லாம், ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்கள் கலைஞரை உற்று கவனித்தவாறு இருப்பது வழக்கம். ஏன்? ஓர் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. கூறினார்... ''சூடான விவாதம் வரும்போது கலைஞரை உற்றுப் பார்ப்பேன். அவர் தலையில் கைவைத்தவாறு இருப்பார். ஒரு விரலால் தலையை அவர் தட்டியவாறு இருந்தால், உடனே துரைமுருகன் எழுந்திருப்பார்... இரண்டு விரலால் தலையைத் தட்டிக் காண்பித்தால், ரகுமான்கான் எழுந்திருப்பார். இப்படி ஒரு சைகை சிஸ்டமே உண்டு.''
இதைக் கேட்டுக்கொண்டு இருந்த இன்னொரு தி.மு.கழக எம்.எல்.ஏ. ஒருவர், கலகலவென்று சிரித்தார்: ''ஆமாம்! அவர் இரண்டு கையாலும் தலையில் தட்டிக் கொள்ளும்போது வாக்-அவுட் செய்வோம்'' என்றார் தமாஷாக!
பத்திரிகை நிருபர்களைப் பொறுத்த வரையில், கலைஞர் இல்லாத சட்டசபை 'டல்’தான். கலைஞர் இல்லாத சட்டசபையில் தி.மு.கழக எம்.எல்.ஏ-க்கள் எப்படிச் செயல்படப்போகிறார்கள் என்பது அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் நிகழ்ச்சி.
கலைஞர் இல்லாத சட்டசபை எப்படி இருக்கும் என்று சில எம்.எல்.ஏ-க்களிடம் கருத்துக் கேட்டபோது...
முசிறிப்புத்தன், எம்.எல்.ஏ. (அண்ணா தி.மு.க): ''நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, சபையில் நடந்த குழப்பங்களை எல்லாம் திராவிட முன்னேற்றக் கழகம் திட்டமிட்டே செய்து வந்தது. அவர் சபையில் இருந்தபோதே, கட்டுப்படுத்த முடியாத நிலைமை இருந்தது. சில நேரங்களில் அப்படிப்பட்ட நிலைமை கலைஞரது ஆசையின் வெளிப்பாடாகவும் இருந்தது. இப்போது அவர் இல்லாத வேளையில், இன்னும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். பேராசிரியர் அன்பழகன் இல்லாததுதான் ஒரு குறையாக இருக்கிறது.
உணர்ச்சிவசப்படாமல் கருத்தைச் சொல்பவர் பேராசிரியர். எதிர்க் கட்சியைச் சார்ந்தவர் என்ற கண்ணோட்டம் இன்றி, சொல்ல நினைத்ததைத் தெளிவாக எடுத்துச் சொல்வார். ஆனால், கலைஞர் அப்படி அல்ல. கலைஞரின் அணுகுமுறைகள் - நடவடிக்கைகள் எந்த நேரமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை அவதூறுக்கு ஆளாக்குகிற பாணி(பணி?)யாகவே இருந்தது. எதை எடுத்தாலும் குறுகிய கண்ணோட்டத்துடன், சொந்த லாபங்களைத் கருதியே செயல்பட்டவர். கருணாநிதி இருந்தபோதே, சபையின் கண்ணியத்தைக் குறைக்கக்கூடிய அளவுக்கு நடந்துகொண்ட அந்தக் கட்சி உறுப்பினர்கள், அவர் இல்லாத நிலையில் சட்டசபையில் திட்டமிட்ட குழப்பங்களை அதிகமாகவே செய்வார்கள். அண்ணா தி.மு.க. அதை உரிய முறையில் சந்திக்கும்.''
துரைமுருகன், எம்.எல்.ஏ. (தி.மு.கழகம்): ''1957-ல் இருந்து 1983 பட்ஜெட் தொடர் கூட்டம் வரை - ஆளும் தரப்பிலே இருந்தாலும், எதிர்க் கட்சியில் இருந்தாலும், குறிப்பிட்ட நேரத்துக்கு வந்துவிடுவார் கலைஞர். முடிகிற வரையில் இருந்து, தான் பேசாவிட்டாலும் மற்றவர்களின் பேச்சைச் செவிமடுத்து மன்றத்துக்குக் கௌரவம் அளிப்பதில் கருத்தாக இருந்தார். இவ்வளவு கடமை தவறாத வீரர் எதிர்க் கட்சித் தலைவராக இருக்கிற காலத்திலேயே, இன்றைய முதல்வர் (எம்.ஜி.ஆர்.) சட்டசபையில் தலை காட்டுவது அபூர்வம். கேள்விகளுக்கு பதில் சொல்வதே கிடையாது. இனி மேல் அந்தக் கடமை வீரர் சட்டசபையில் இல்லை என்ற தைரியத்திலேயே, 'பெர்மனன்ட் ஆப்சென்ட்’ ஆகிவிடுவார். இல்லாவிட்டால், தட்டிக் கேட்க ஆள் இல்லை என்றால் தம்பி சண்டப் பிரசண்டன் ஆவதுபோல, சபைக்கு வந்து சண்டமாருதம் செய்தாலும் செய்யலாம்.
தனிப்பட்ட முறையில் எவ்வளவு தாக்கினாலும், பொறுப்பில் இருக்கிறவர் நிதானம் தவறக் கூடாது. இதற்கு, கலைஞரே சிறந்த உதாரணம். கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் சேலம் சட்டமன்ற உறுப்பினர், கலைஞரின் திருச்செந்தூர் நெடிய பயணத்தைக் கொச்சைப்படுத்தும் நோக்கத்தோடு, 'எதிர்க் கட்சித் தலைவர் நீதி கேட்டு நெடிய பயணம் போனார். இவர் வருவதைத் தெரிந்தவுடன் திருச்செந்தூர் முருகன், ஆலயத்தில் இருந்து பெயர்ந்து எங்கள் புரட்சித் தலைவரின் ராமாவரம் தோட்டத்துக்கு வந்துவிட்டார்’ எனக் குறிப்பிட்டார். நாங்கள் எல்லாம் ஆத்திரத்தோடு பதில் சொல்ல எழுந்தபோது, கலைஞர் தன் அறையில் இருந்து வேகமாக சபையினுள் நுழைந்து, 'தலைவர் அவர்களே! இதுவரை திருச்செந்தூர் உண்டியல் உடைக்கப்பட்டுக் களவாடப்பட்டது என்ற செய்திதான் தெரியும். இப்போது திருச்செந்தூர் முருகன் சிலையும் இல்லை என்ற விஷயத்தை ஆளும் கட்சி உறுப்பினர் வெளிப்படுத்தியதற்கு நன்றி’ என்றார். சபையில் சிரிப்பு அடங்கச் சிறிது நேரம் பிடித்தது. கட்சி வித்தியாசம் இல்லாமல் ஆளும் கட்சியினரும் சேர்ந்து கலைஞரின் சாதுரியத்தை ரசித்தனர். இதுபோன்ற சூடான நேரத்திலும் சுவையான வாதத்தால் அனைவரையும் தன் வயப்படுத்தும் திறமை உள்ள கலைஞர் இல்லாத சட்டமன்றம் வெறிச்சோடித்தான் இருக்கும்!''
ப.நெடுமாறன், (த.நா.கா.கா.): ''அரசியலில் மாறுபாடான கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளும்போதுகூட, அதைக் கூர்மையாக்கி எதிரியைத் தாக்குவதில் அவருக்கு நிகர் அவர்தான். ஒரு நல்ல எதிர்க் கட்சித் தலைவராகப் பொறுப்புடன் பணியாற்றினார் என்பது என் கருத்து. சட்டசபையில் அவர் வராமல் இருந்த நாட்கள் மிகக் குறைவு. முதலமைச்சராக நாமே வீற்றிருந்த இந்த சட்டசபையில் எதிர்க் கட்சித் தலைவராக உட்கார வேண்டுமா என்ற எண்ணம் அவருக்கு ஒருபோதும் வந்தது இல்லை.
முதலமைச்சர் பதவி வகித்த காலத்தில் சட்டமன்ற நிகழ்ச்சிகளில் எத்தகைய பொறுப்புடன் கலந்துகொண்டாரோ, அதற்குக் கொஞ்சமும் குறையாத வகையில் எதிர்க் கட்சித் தலைவராக இருந்தபோதும் கலந்துகொண்டார். பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பல தலைவர்கள் சட்டமன்றத்தின் பக்கம் வராமல் இருப்பதையும் பார்த்து இருக்கிறேன். அவர், சட்டமன்றத்தில் இல்லாதது, சட்டமன்றத்துக்கு ஒரு பெரும் குறைதான் என்பது என் கருத்து.
தமிழீழ விடுதலை வீரர்களான குட்டிமணி, ஜகன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது அந்த மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று இலங்கை அரசை வேண்டிக்கொள்வதற்கான ஒரு தீர்மானத்தை சட்டசபையில் நான் கொண்டுவந்தேன். எல்லாக் கட்சித் தலைவர்களும் ஒப்புக்கொண்டால், இதில் ஆட்சேபனை இல்லை என்று மதிப்புக்குரிய சட்டமன்ற சபாநாயகர் ராஜாராம் தெரிவித்தார். இருந்தாலும், சட்ட விதிகளின்படி ஒரு வெளிநாடு சம்பந்தப்பட்ட பிரச்னையை சட்டமன்றத்தில் விவாதிக்க முடியாது. ஆனாலும் சபாநாயகருக்கு இந்தப் பிரச்னையில் மனிதாபிமான அக்கறை இருந்த காரணத்தினால், இந்தத் தீர்மானத்தை அனுமதித்தார். மற்ற கட்சித் தலைவர்களைக் கண்டு பேசும்படி எனக்கு ஆலோசனை கூறினார். அதன்படி எதிர்க் கட்சித் தலைவர் கருணாநிதி அவர்களை சந்தித்துப் பேசினேன். எந்தவிதத் தடையும் சொல்லாமல், 'இந்தத் தீர்மானம் கொண்டுவர வேண்டியதுதான், நான் ஆதரிக்கிறேன். எங்கள் கட்சியும் முழு மனதாக ஆதரவு தரும்’ என்று ஒப்புக்கொண்டார். மற்ற எல்லாக் கட்சித் தலைவர்களையும் சந்தித்துப் பேசிவிட்டு, பிறகு முதலமைச்சரையும் சந்தித்துப் பேசினேன். அவரும் அதற்கு ஆதரவு கொடுப்பதாகச் சொன்னார். இதில் ஒன்றும் பிரச்னை இல்லாமல் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஏகமனதாக இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு நல்ல விளைவு இருக்கும் என்று நான் நம்பினேன். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. இந்தத் தீர்மானத்தின் மீது சட்டமன்றத்தில் வழிமொழிந்து பேசிய எதிர்க் கட்சித் தலைவர் கலைஞர் அவர்கள், பல்வேறு விஷயங்களைக் கூறிவிட்டு இறுதியில் 'தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் விஷயத்திலும் இந்த அரசாங்கம் அக்கறை செலுத்த வேண்டும். அவர்களையும் விடுவிக்க வேண்டும் என்ற பொருள்படச் சொன்னார். உடனே எழுந்த மதிப்புக்குரிய முதலமைச்சர் பேசும்போது, இதற்கு பதில் அளிக்கும் வகையில் குட்டிமணியை முதலில் பிடித்துக் கொடுத்தது கலைஞர் ஆட்சியில்தான் என்றார். ஆனால், அந்த இடத்துக்கு அது தேவையற்ற பிரச்னை. எல்லோரும் ஒன்றுபட்டு அவர்கள் உயிரைக் காப்பாற்றப் போராட வேண்டிய நேரத்தில் முதலமைச்சர் இதைக் குறிப்பிட்டது, ரசக் குறைவாக எங்களுக்குத் தோன்றியது. அந்த நேரத்தில் எதிர்க் கட்சித் தலைவரும் எழுந்து பதிலுக்கு ஏதாவது பேசுவாரோ என்று அச்சம் எனக்கு ஏற்பட்டது. எனவே, அவர் அருகில் சென்று இந்தப் பிரச்னையில் மேலும் பதில் ஏதும் சொல்ல வேண்டாம் என்று சொன்னபோது அவரும் பொறுமையுடன், 'இந்த விஷயம் எல்லோருடைய உணர்வுகளையும் பாதிக்கக்கூடியது. ரொம்ப முக்கியமானது. நான் எதுவும் பேச மாட்டேன்’ என்று வாக்குறுதி கொடுத்தார். தீர்மானமும் ஏகமனதாக நிறைவேறியது. அவர் அப்போது காட்டிய பொறுப்பு உணர்ச்சியை நினைத்துப் பார்க்கிறேன்!''
- நமது நிருபர்
No comments:
Post a Comment