Thursday, July 14, 2011
இது உங்கள் இடம்
நிதி போதுமா... இன்னும் வேண்டுமா? வி.எஸ்.மோகன், மதுரையிலிருந்து எழுதுகிறார்: நடந்த முடிந்த தமிழக தேர்தலில், எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பிடிக்க முடியாத நிலை, தி.மு.க.,வுக்கு ஏன் ஏற்பட்டது என்பது, இப்போது மக்களுக்கு புரிய ஆரம்பித்திருக்கிறது. தேர்தல் நேரத்தில், ஆளும் கட்சியின் ஊழல் குறித்து விலாவாரியாக புகார் வெளியானது அனைவரும் அறிந்ததே. ஊழல் எந்த அளவுக்கு நடந்துள்ளது என்பதை அறியாதவர், இன்று புரிந்து கொண்டிருப்பர். "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் தான், கடந்த தி.மு.க., அரசின் பெயரை கெடுத்தது. இப்போது தி.மு.க.,வின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டுள்ளது. இதில் அகப்பட்டவர்களின் மானம், மரியாதை, தண்ணீரில் கரையும் அஸ்தியைப் போல காணாமல் போய் விட்டது. முதலில் ராஜா, அடுத்து கனிமொழி. இருவரும், தற்போது திகார் சிறையில். இதை அறிந்த பொது ஜனம், இப்படியும் இருக்கின்றனரே எனக் கூற ஆரம்பித்து விட்டனர். இப்போது, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதியும், அதே ஊழலில் சிக்கி, தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவரின் வரவை, திகார் சிறை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் தயாநிதி அகப்பட, மற்றொரு பக்கம், கலாநிதி மீது, நித்யானந்தா ஆசிரமம், புகார் மேல் புகார் கூறி இருப்பதும், முன்னாள் முதல்வரின் குடும்ப மானம் காற்றில் பறக்க ஆரம்பித்துவிட்டது. நிதியை தங்கள் பெயரிலேயே வைத்துக் கொண்டு, கோடி கோடியாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையே, இவர்களின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துவிட்டது. இன்னும் எத்தனை நிதிகள் மாட்டப் போகின்றனரோ?
தயவு செய்து சிந்தியுங்கள்! வே.முத்துக்குமாரசாமி, சிவகாசியிலிருந்து எழுதுகிறார்: இரண்டு போலீஸ் அதிகாரிகள், குடித்துவிட்டு, வீதியில் சண்டை போட்டுள்ளனர். ஒரு போலீஸ் அதிகாரி, குடிபோதையில் ஒரு பெண்ணை கடத்தினார். போதையில் இருந்த ஒரு தந்தை, தன் மகளை கெடுத்துள்ளார். இன்னும், இதுபோன்ற எத்தனையோ விஷயங்கள் நடந்து வருகின்றன. இதையெல்லாம் படிக்கும்போது, நமக்கு அருவருப்பாக உள்ளது. ஒழுக்கமாக நடந்துகொள்ள வேண்டிய காவல் துறையினரும், தெய்வமாக மதிக்கப்படக்கூடிய தந்தை குலமும், இப்படி கேவலமாக நடந்துகொள்ள வேண்டிய சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்தது யார்? மது வை தாராளமாக கிடைக்கச் செய்து, மதுவிலக்கை ரத்து செய்த நமது அரசு தானே இதற்கெல்லாம் காரணம்! தீயவற்றில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டிய அரசு, தன் வருமானத்திற்காக, தீயது என தெரிந்தும், "குடி குடியைக் கெடுக்கும்' என்ற அறிவிப்புடன், குடி பொருட்களை விற்பது, எவ்வளவு பெரிய தவறான செயல் என்பதை சிந்திக்க வேண்டும். மதுவை நாடுவோரின் குடும்பத்தினர், பிச்சைக் காரர்களாகவும், சமூகக் குற்றம் புரிபவர்களாகவும் மாற வேண்டிய சூழ்நிலை உருவாகி, நாடே கெட்டொழியும் நிலை ஏற்படும். இதையெல்லாம் சிந்தித்து, மதுக்கடைகளை அரசு படிப்படியாக மூடவும், போதை ஒழிப்புக்காக, தொண்டு நிறுவனங்கள் விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.
திருந்த வேண்டியது யார்? மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து எழுதுகிறார்: "இந்தியாவில், மீடியாக்களின் ஆட்சி நடக்கிறது. மீடியாக்கள் நினைத்தால், யாரை வேண்டுமானாலும் இழிவுபடுத்த முடியும். அதற்கு தயாநிதியும் விதிவிலக்கு அல்ல' என, கருணாநிதி விடுத்திருக்கும் ஸ்டேட்மென்ட், அவரது மன உளைச்சலின் உச்சக்கட்ட வெளிப்பாடாகவே தெரிகிறது. பத்திரிகைகள் மீது பாயும் கருணாநிதி, ஊழலை மட்டும் மறைக்க முயற்சிப்பது தர்மமா? ஏற்கனவே, "பத்திரிகைகள் எங்களது ஆட்சி பற்றி குறைகள் சொல்லி, அவை நீதிபதிகளாகவும் தீர்ப்பு சொல்லி விடுகின்றன' என, மன்மோகன்சிங் மனம் நொந்து சொன்னது, நினைவுக்கு வருகிறது. எமர்ஜென்சியின் போது, பத்திரிகை சுதந்திரத்துக்கு நிறைய கட்டுப்பாடுகள் விதித்தார் இந்திரா; ஆனால், பத்திரிகைகள் இதற்காக பயப்படவில்லை. ஒரு சுதந்திரப் போராட்டதையே நடத்தின. அதன் பயனாக, லோக்சபா தேர்தலில், இந்திராவின் காங்கிரஸ் படுதோல்வி கண்டது. பின்பு, போபர்ஸ் ஊழலை பகிரங்கப்படுத்தியது, பத்திரிகைகள் தான். ஜனநாயகத்தை காக்க வேண்டியது பத்திரிகை களின் கடமை. ஊழலை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவது பத்திரிகைகளின் குற்றமல்ல. அரசியல்வாதிகளின் அயோக்கியத்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் பத்திரிகைகள், சிவபெருமானை எதிர்த்த நக்கீரன் போல், அஞ்சாமல் செயல்படுகின்றன. திருந்த வேண்டியது பத்திரிகைகள் அல்ல; அரசியல்வாதிகள்!
இரண்டு ரூபாய் தருவதே இல்லை...: ஆர்.டி.கோவிந்தன், கொடைக்கானலிலிருந்து எழுதுகிறார்: சில்லறை பஞ்சத்தால், ஏழை, எளிய மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு, அவதிப்பட்டு வருகின்றனர். இப்போது, ஒரு பைசா முதல், 25 காசு வரை புழக்கத்தில் இல்லை. 50 காசு நாணயமும் ஒழிந்து வருகிறது. ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நாணயங்களும் குறைந்து வருகின்றன. தற்போது, 10, 50, 100, 500, 1000 ரூபாய் நோட்டுகள் தான், அதிகளவில் புழக்கத்தில் உள்ளன. கொடைக்கானல் மலை பஸ்களில், சில்லறை தட்டுப்பாடு மிகவும் அதிகம். கொடைக்கானல் - பூம்பாறை பஸ் கட்டணம், எட்டு ரூபாய். பயணிகள் பத்து ரூபாய் நோட்டு கொடுத்தால், மீதி இரண்டு ரூபாயை நடத்துனர் கொடுப்பதே இல்லை. கொடைக்கானல், பூம்பாறை, கவுஞ்சி, கிளாவரை என்ற ஊர்கள் வரை, தினமும், 10 - 12 அரசு பஸ்களும், தனியார் பஸ்களும் ஓடுகின்றன. ஆனால், மீதி சில்லறை கொடுப்பதே இல்லை. கொடைக்கானல் மலை மேல் செல்லும் எந்த பஸ்களிலும், சில்லறை கொடுப்பதே இல்லை. பூம்பாறை - வத்தலக்குண்டு பஸ் கட்டணம், 28 ரூபாய்; ஆனால், 30 ரூபாய் கொடுத்தால், இரண்டு ரூபாய் கொடுப்பதே இல்லை. ஒரு பஸ், வத்தலக்குண்டு - பூம்பாறைக்கு, இரண்டு முறை வந்து செல்கிறது. ஒரு முறைக்கு இந்த பஸ்சில், 80 முதல், 100 பேர் வரை, பயணிக்கின்றனர். மீதி சில்லறை கொடுக்காததன் மூலம், இந்த பஸ் நடத்துனருக்கு, தினமும், 500 ரூபாய்க்கு மேல் கிடைக்கிறது. கடைகளிலும் சில்லறை கிடைப்பதில்லை; பஸ்களிலும் சில்லறை கிடைப்பதில்லை. நாடு எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது; எல்லா வகையிலும் கொள்ளை நடக்கிறது. இது ஒரு புதிய கலாசாரம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment