Thursday, July 7, 2011

'தம்பி! பிரமாதமா வருவே!’

'தம்பி! பிரமாதமா வருவே!’

பாகவதர் நடித்த படம்.

'சிந்தாமணி’யில், செருகளத்தூர் சாமா ஒரு பாட்டுப் பாடுவார்.

அற்றை நாளில் அது அசுரப் பிரசித்தம். அதிகபட்சமான தத்துவப் பாட்டு, அந்தக் காலத்தில் அதுதான்.

'நாடகமே உலகம்;
நாளை நடப்பதை யாரறிவார்?’

- இப்படித் தொடங்கும் அந்தப் பாட்டு.

வில்லியம் ஷேக்ஸ்பியர் - விவரித்த கருத்துதான்.

நாளை நடப்பது என்ன - அடுத்த நொடி நடப்பதையே அறிவார் ஏது?

'முடியில் நரை விழுவதையும்; முழியில் திரை விழுவதையும்’ - ஒரு தேதி கணித்துத் தெரிவித்தார் உண்டோ?

விதைத்த

விதை - மெல்ல மெல்ல வேர் பிடிக்கலாம்;

நீள் விசும்பு தரும் நீர் குடிக்கலாம்;

ஆயினும், அது - நிலங்கீறி செடியாய்

நிமிருமா என்பது நிச்சயமில்லை!

எந்த விதை விருட்சமாகும்; எந்த விதை விரயமாகும் என்பதையும் -

எந்த விருட்சம் விறகாகும்; எந்த விருட்சம் வீணையாகும் என்பதையும் -

என்னணம் எவராலும் எடுத்தோத ஏலாதோ -

அஃதேபோல் -

இன்னார், பின்னால் இன்னார் ஆவார் - எனச் சொன்னார் இன்னார் எனச் சொலப்போமோ? முடியாதுதான்;

முக்காலத்தையும், கருத்தன் தன் கருத்தில்வைத்திருக்கிறான்!

இருப்பினும் அவ் இறைவன், தன் அளப்பரும் தண்ணளியால் - நல்லது கெட்டதை, சில நிகழ்வுகள் மூலமும்; சில நிமித்தங்கள் மூலமும் சிறு கோடிட்டுக் காட்டுகிறான்.

இதைத்தான் நம் மூத்தோர் நவின்றனர் - 'விளையும் பயிர் முளையிலே’ என்று.

மாட்டுக்குப் பல் பிடித்துப் பார்ப்பதுபோல், பாட்டுக்குச் சொல் பிடித்துப் பார்த்து -

இதைக் காலம் செரிக்காது; கறையான் அரிக்காது என்று கண்டு சொன்ன கவிராயர்களெல்லாம் -

சோழன் திருச்சபையில் இருந்திருக்கிறார்கள் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.

அதுபோல் - என் அனுபவத்தில் -

' இன்னாரிடம் சிறு பொறி இருக்கிறது; இதை ஊதிக் கனல் வளர்த்தால், இது உரிய காலத்தில் வெளிச்சம் உமிழும்!’ என்று நான் உய்த்துணர்ந்து சொல்லிஇருக்கிறேன்.

என் சொல் பலித்ததுமுண்டு; பலிக்காமல் போனதுமுண்டு.

பலித்த ஒருவரைப்பற்றிப் பரவசத்தோடு பேசுகிறேன்; கேளுங்கள்!

நன்றாக ஞாபகம் இருக்கிறது; அது அக்டோபர் மாதம்; 1984.

'பாம்குரோவ்’ ஹோட்டலில் ஒரு பாட்டு கம்போஸிங்.

பொதுவாக.

அற்றை நாளில், படங்களுக்கான பாட்டுகளை எழுதுகையில் -

இசையமைப்பாளர் ஆர்மோனியப் பெட்டியுடன் நடு நாயகமாக வீற்றிருப்பார்.

அவருக்கு எதிரில் அடியேனைப்போன்ற பாடலாசிரியர் அமர்ந்திருப்போம்.

இசையமைப்பாளருக்குப் பக்க துணையாக - தாள வாத்தியக்காரர்களும் தந்தி வாத்தியக்காரர்களும் இருவரோ, நால்வரோ இருப்பர்.

இயக்குநர் பாட்டுக்கான சூழலைச் சொல்வார். கூடவே - கதை வசனகர்த்தாவும், துணை இணை இயக்குநர்களும் இருப்பர்;

இவர்களைத் தவிர -

படாதிபதி மற்றும் அவருக்கு நெருக்கமான நண்பர்கள் -

என ஒரு பட்டாளமே சுற்றியிருக்க -

கும்பலில் சிக்கிக்கொண்ட குழந்தை மாதிரி -

பாட்டெழுதுபவர் பேனாவும் பேப்பருமாய் வீற்றிருக்க -

அனைவர் பார்வையும் அவர் மேல் குவிந்திருக்கும்.

'என்ன எழுதுகிறான்? ஏது எழுதுகிறான்?’ என்று -

ஆர்வம் மீதூர அவர்கள் அடியேனை மொய்ப்பதுண்டு.

கூச்சம்; குளிர் - இவையெல்லாம் விட்டுப் போய் -

பிரபல கவிஞர் எனும் புகழும் போற்றுதலும் -

நம் பிடர் மீது ஏறி அமர்ந்துகொண்டு, பிறர் பார்வை மொத்தமும் நம்மீது படிந்திருக்கிறதே என்பதைச் சிறிதும் சிந்தியாமல் -

நான் -

கும்பகோணம் வெற்றிலையைக் குதப்பிக் கொண்டிருப்பேன்.

எனக்குப் பாட்டு எப்போது வரும் என்று -

சோழி உருட்டிப் பார்க்கும் சோசியனால் கூடச் சொல்ல முடியாது.

இன்னும் கொஞ்ச நேரத்தில் பிரசவம் ஆகிவிடும் என்பதுபோல் ஓர் இறுக்கம் அந்த இடத்தை அப்பிக்கிடக்கும்!

நான் -

தாம்பூலத்தைப் போடுவேன்; துப்புவேன். திரும்பப் போடுவேன்; துப்புவேன்.

பல்லவி லேசில் பிடிபடாது போகும். வர்ண மெட்டை மீண்டும் வாசித்துக் காட்டும்படி இசையமைப்பாளரை வேண்டுவேன்.

வாசிப்பார்; யோசிப்பேன்; பின் வரி வரியாக வந்து விழும் வார்த்தைகள்!

வாங்கி வாங்கி, இசையமைப்பாளர் பாடப் பாட -

சபை கலகலப்பாகும்; சிலர் 'சபாஷ்’ என்பர்; சிலர் சிலாகித்துச் சிரக்கம்பம் செய்வர்.

சிலர் -

'செத்தவன் கையில் வெத்தலை பாக்குக் கொடுத்ததுபோல்’- எந்த REACTION ம் இன்றி, ஆடாது அசையாது அமர்ந்திருந்து-

நமக்கு எரிச்சலை மூட்டி - அடிவயிற்றில் ACIDITY அதிகரிக்க வைப்பர்!

பல வருடங்களாகப் பாட்டு எழுதுவதால் - இவையெல்லாம் எனக்குப் பழகிப் போயிருந்தபோதும் -

அன்று - பாம்குரோவ் ஹோட்டலில், பாட்டு எழுதுகையில் -

ஒரு வித்தியாசமான நபர் என் விழியில் பட்டார்!

இயக்குநர் திரு.மகேந்திரனிடம் உதவி யாளராக இருந்த -

இருவர் முதன்முறையாக இணைந்து அந்தப் படத்தை இயக்குகின்றனர்.

தூய சக்திக்கும் தீய சக்திக்கும் இடையிலான போராட்டத்தில் -

இறை சக்தி வெல்ல வேண்டி, அம்மன் அருளை யாசித்து அடியார்கள் பாடுதல்போல் -

ஓர் ஊழிக் கூத்துக்குரிய, சந்தங்களுடனும் தாளக் கட்டுகளுடனும் அந்தப் பாட்டை -

இயக்குநர்கள் விருப்பத்திற்கேற்ப இசை யமைப்பாளர் வடித்திருந்தார்.

வயலின் வித்தகர் திரு. வி.எஸ்.நரசிம்மன்தான் இசை.

நரசிம்மன் வாசிக்க வாசிக்க நான் பல்லவியை எழுதி முடித்தேன்.

பாட்டு இதுதான்:

'அபிராமியே! உமா மஹேஸ்வரி!
சிவகாமியே! கலா ஜடாதரி!
சாமவேதம் ஓதும் - நீலகண்டன்
வாமபாகம் வாழும் ஈஸ்வரி!
காமகோடி பீடம் - ஆளுகின்ற
நாமம் கோடி போற்றும் சங்கரி!
தீய சக்தி பூதலத்தில் மாய -
தெய்வ சக்தி மாநிலத்தில் வாழ -
வருக! வருக!
வந்து வரம் அருளே!’

- இப்படிப் போகிறது அந்தப் பாட்டின் பல்லவி.

நான் எழுத எழுத - நரசிம்மன் பாடப் பாட -

இன்னொருவர் அதை வாங்கி இசைகெடாது அற்புதமாய் அக்கணமே பாடி என்னை வியப்பில் விழுத்தினார்!

சுதி சுத்தம்; சுர சுத்தம்; லய சுத்தம்; மொழி சுத்தம்!

இளைஞராய் இருந்தார்; சற்றே சுருள் சுருளான கிராப்பு; நெற்றியில் நடு நாயக மாகக் குங்குமப் பொட்டு!

'யார் இந்தத் தம்பி?’ என்று தயாரிப்பாளரைக் கேட்டேன்.

'என்னுடைய பாகஸ்தர்’ என்றார் அவர்; பணம் போட்டுப் படம் எடுக்கும் பலருக்குப் பட்டறிவு இருக்கலாமே தவிர, பாட்டறிவு இருத்தல் மிக மிக அபூர்வம்.

என் பாட்டைப் பாடியவரை அருகே அழைத்து,

'தம்பி! கஷ்டமான சந்தம்; எழுதவே எனக்குக் கொஞ்சம் நேரமாச்சு; நீ-உடனே, லகர, ளகர, ழகர - உச்சரிப்பு கெடாமெ - அந்த ஸ்வரஸ்தானங்களை சரியாப் பிடிச்சுப் பாடிட்டயே அய்யா!

உன்கிட்டே - தமிழும், இசையும் - ஒருசேர இருக்கு; FILM LINEல, ப்ரமாதமா வருவே; என் உள்ளுக்குள்ளே ஒரு பட்சி உக்காந்து சொல்லுது!’ என்று -

தோளணைத்து அன்பு தோயச் சொன்னேன். என் சொல் பலித்தது!

பின்னாளில் - அவர், பெரிய படாதிபதி யானார்; விநியோகஸ்தரானார்.

அவ்வளவு ஏன்? இசையமைப்பாளராகவே ஆனார்.

கமல்ஹாசன்; விஜயகாந்த்; மற்றும் இளைய தலைமுறையினரான சிம்பு; சூர்யா இவர்களை வைத்துப் படம் எடுத்தார்.

சிவாஜி நடித்த கடைசிப் படத்தையும் இவர்தான் தயாரித்தார். ஐஸ்வர்யா ராய்; சிம்ரன் முதலானோருக்கு முகவரி தந்தார்.

திரு.இளையராஜா; திரு.ரஹ்மான்; திரு.ஹாரிஸ் ஜெயராஜ் -

ஆகியோரெல்லாம் இவர் படங்களுக்கு இசையமைத்துள்ளனர்.

தமிழ் மொழியின் மாட்டு, தாளாக் காதல்கொண்டவர். திருமூலர், திருவள்ளுவர், இவருக்கு அத்துப்படி.

அரசியலிலும் இவரது ஆளுமை இருந்தது.

என் - எண்பதாம் பிறந்த நாளைக்கு என்பால் - அதாவது, ஒரு தமிழ்க்கவிஞன் பால் -

அவருக்குள்ள அளப்பரும் காதலை வெளிப்படுத்து முகத்தான் -

என்னை வாழ்த்தி ஏடுகளில் விளம்பரம் தந்த, வண்மை குணம் மிக்கவர்.

சதா புன்னகைக்கும் முகம்; தாய்ப்பால் அனைய பரிசுத்தமான அகம்;

பிரமாண்டமான படங்களை எடுத்த பிறகும் - விண்ணைப் பார்த்து நடக்காமல் மண்ணைப் பார்த்து நடக்கும் எளிமை!

திரைத் துறையின் - நுணுக்கங்கள், வணிகங்கள் -

சர்வத்தையும் கற்றார்;

கர்வத்தை மட்டும் கல்லாதுவிட்டார்!

'பின்னால் பிரமாதமாக வருவாய்’ என்று நான் இறையருளால் சரியாகக் கணித்துச் சொன்ன -

அந்த அன்றைய இளைஞர்தான் - இன்றைய என் எதிர் வீட்டுக்காரரும், என் உள்ளத்தில் எழுந்தருளியிருப்பவருமான -

கலைப்புலி திரு.தாணு அவர்கள்!

- சுழலும்...

No comments:

Post a Comment