Wednesday, July 6, 2011

மிஸ்டர் கழுகு: ''எங்களை மாற்ற நினைத்தால் கட்சி அழிந்துவிடும்!''

மிஸ்டர் கழுகு: ''எங்களை மாற்ற நினைத்தால் கட்சி அழிந்துவிடும்!''

ழுகார் உள்ளே நுழைந்ததும், தனது இறக்கையில் இருந்து துண்டுத் தாள் ஒன்றை எடுத்து, அதை மனதுக்குள் வாசித்துக்கொண்டார். 'என்ன ரகசியம் அது?’ என்று எட்டிப் பார்த்தோம்... அமைச்சர்களின் இலாகா பட்டியல்!
''என்ன செய்வது? யார் எப்போது எந்த இலாகாவில் இருக்கிறார்கள் என்பதை அடிக்கடி எடுத்துப் பார்த்துக்கொள்ள வேண்டிய நிலைமை. மியூசிக்கல் சேரில்கூட, கூடுதலாகக் கொஞ்ச நேரம் இருக்கலாம். அதிகாரிகளுக்கு டிரான்ஸ்ஃபர் போடும் வேகத்தில், அமைச்சர்களுக்கு டிரான்ஸ்ஃபர் போடுகிறார்!'' என்ற கழுகாரிடம்,
''துறைகளை மாற்றுவது ஒரு முதலமைச்சரின் தனிப்பட்ட விருப்பம். ஆனால், தவறு செய்துள்​ளார்கள் என்று தெரிந்த பிறகும் பதவியில் வைத்திருக்கக் கூடாது அல்லவா?'' என்று கேட்டோம்.
''சட்ட அமைச்சராக இருந்த இசக்கி சுப்பையா, தனக்கு இவ்வளவு சீக்கிரம் வேட்டுவைக்கப்​படும் என்பதை எதிர்பார்க்கவே இல்லை. அவரைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று உட்கட்சியைச் சேர்ந்தவர்களே பகீரத வேலைகளில் ஈடுபட... மனிதர் அதிக ஜாக்கிர​தையாக இருந்ததாகவே சொல்கிறார்கள். ஆனால், அவர் செய்ததாகப் பல்வேறு தவறுகளை அடுக்குகிறார்கள்.
நெல்லை மாவட்டத்தில் சுப்பையாவின் பெயரை சொல்லிக்​கொண்டு கட்சியினர் சிலர் நடத்திய தில்லாலங்கடி வேலைகள், ஜெயலலிதாவின் கவனத்துக்குப் போனது. அமைச்சரின் ஆதர​வாளர் என்றபடி, அரசு அலுவலகங்களில் நுழைந்து அதிகாரிகளை மிரட்டி இருக்கிறார்கள். கான்ட்ராக்ட்கள் தங்களுக்கே கொடுக்கப்பட வேண்டும் என சிலர் நெருக்கடி தந்தனர். ஒயின் ஷாப் பார்களை ஏலம் எடுத்தவர்கள், நாள்தோறும் 1,500 தங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று சொன்னதுடன்... சில பார்களை தி.மு.க-வினருக்குக் கை மாற்றி உள்ளனர். அரசு வக்கீல்களை நியமிப்பதிலும் எக்கச்சக்கப் பணம் கை மாறியதாம்.''
''நீர் சொல்வதைப் பார்த்தால், ஏதோ  இசக்கி சுப்பையா மட்டும்தான் இப்படிச் செய்கிறார் என்பதைப்​போல இருக்கிறதே? பலரும் இதற்கு விதிவிலக்கு அல்லவே?''
''பதவியைப் பறிக்கும் அளவுக்குப் போனதற்கு என்ன அடிப்படைக் காரணம் தெரியுமா? பாசன வசதிக்காக சில கால்வாய்களைத் திறந்துவிட உத்தர​விட்டார் முதல்வர். நெல்லைப் பகுதியிலும் கால்வாய்கள் திறக்கப்பட்டன. 'தண்ணீர் திறந்து​விட்டால், ஆற்றில் மணல் அள்ள முடியாதே’ என்று சிலர் படபடப்பாகி அமைச்சரைக் கேட்டதாகவும், அவர் உடனே கால்வாயை மூடச் சொன்னதாகவும் ஒரு தகவல் ஜெயலலிதாவின் கவனத்துக்கு வந்ததாகச் சொல்கிறார்கள். 'அணையை நான் திறக்கச் சொன்னால், மூடச் சொல்வதற்கு அவர் யார்?’ என்று கொந்தளித்த முதல்வர், இசக்கியின் பதவியைப் பறித்தாராம்.
நெல்லை மாநகர அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் 'பாப்புலர்’ முத்தையாவின் பதவி, சில நாட்களுக்கு முன்னால் பறிக்கப்பட்டது. 'பாளையம் கால்வாய்ப் பகுதியில் பல லட்சங்களுக்கு மணல் அள்ளியதற்கான விவகாரம்தான் பதவிப் பறிப்புக்குக் காரணம்’ என்பார்கள். இதிலும், இசக்கி தலையிட்டு அதிகாரி ஒருவரை மிரட்டும் தொனியில் பேசியதாகச் சொல்லப்படுகிறது.''
''ஓஹோ!''
''இசக்கி சுப்பையாவுக்கு அமைச்சர் பதவி கிடைத்த பிறகு, ஜெயலலிதாவுக்கு வந்த எந்தச் செய்தியும் நல்ல செய்தியாக இல்லை. 'சுப்பையாவின் தங்கை மகள், வேறு ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவரைக் காதலித்​தார். அதை அமைச்சர் கடுமையாக எதிர்த்தார். பெற்றோரின் எதிர்ப்பை மீறி அந்த ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்து திருமணம் செய்துகொண்டுவிட்டதாம். திருவொற்றியூர் பகுதிக்குள் அடைக்கலம் புகுந்தது ஜோடி. இவர்களுக்கு ஆதரவாக நடிகர் சரத்குமார் கட்சிப் பிரமுகர் ஒருவர் வந்தார். இதனால், அமைச்சருக்கும் அந்தப் பிரமுகருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸ் படையைப் பயன்படுத்தி, அந்த ஜோடியைப் பிரிக்க அமைச்சர் முயற்சித்​தார். ஆனால், விஷயம் சரத்குமார் மூலமாகத் தோட்டத்துக்குச் சென்றது. இசக்கி சுப்பையாவைக் கண்டித்த முதல்வர், திருமணமும் செய்துவைக்க உத்தரவிட்டார். அந்த ஜோடிக்கு சென்னையில் திருமண வரவேற்பும் நடந்து முடிந்துவிட்டது’ என்றும் சொல்கிறார்கள். ஜெயலலிதாவின் கோபத்துக்கு இதுவும் ஒரு காரணமாம். இதில் என்ன சோகம் என்றால்...''
''அதையும் சொல்லும்!''
''இசக்கி சுப்பையா சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் வருவார். மதுரையில் இருந்து காரில் புறப்பட்டு, ஸ்ரீவில்லிபுத்து£ர் ஆண்டாள் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டுவிட்டு நெல்லை செல்வதே வழக்கம். கடந்த ஜூலை 3-ம் தேதியும் இதேபோல், ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தார். அப்போது, அவரது உதவியாளரின் செல்போன் அலறியது... 'பதவி காலியாகப்போகிறது’ என்றதாம் அந்தக் குரல். அவரிடம் தகவல் சொல்லத் தயங்கிய உதவியாளர்கள் அமைதி காத்தனர். சாமி தரிசனம் முடித்து ஆண்டாள் கோயிலைவிட்டு வெளியேறிய இசக்கி சுப்பையாவின் காதில் உதவியாளர் இந்த விஷயத்தைக் கிசுகிசுத்தார். அதிர்ச்சி அடைந்த இசக்கி சுப்பையா, அவசரமாக காரில் ஏறி ஊருக்குப் பறந்தார்.''
''மற்ற சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாறி இருக்கின்​றனவே?''
''வணிக வரித் துறை மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்​சராக இருந்த கோகுல இந்திராவிடம் இருந்து, அந்தத் துறைகள் பறிக்கப்​பட்டு உள்ளன. அவரது உதவியாளர்களில் ஒருவர் சில ஹோட்டல்களில் வசூல் பண்ணியதாகத் தோட்டத்துக்குத் தகவல். துறைக்குப் பொறுப்பேற்றதுமே, பல அதிகாரிகளை அதிரடியாக டிரான்ஸ்ஃபர் செய்ததாகவும், அதன் மூலமாக 'பசை’யை எதிர்பார்த்ததாகவும் சொல்கிறார்கள். உணவுத் துறை அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு, முதல்வர் போட்ட ஒரே கட்டளை - முந்தைய உணவுத் துறை அமைச்சர் எ.வ.வேலு செய்துள்ள முறைகேடுகளை எடுத்து ஃபைல் பண்ணித் தருவதுதான். ஆனால், அதில் சுணக்கம் காட்டினாராம் அக்ரி. வேலு காலத்தில் அவருடன் இருந்த நபர் ஒருவரே, இப்போது அக்ரியுடனும் இருக்கிறாராம். இதுவும் முதல்வரின் கோபத்துக்குக் காரணம் என்கிறார்கள்!'' என்ற கழுகார்... அமைச்சரவை லிஸ்ட்டை தனது இறக்கைக்குள் செருகிவிட்டு, தி.மு.க. சப்ஜெக்ட்டுக்குத் தாவினார்!
''மாவட்டச் செயலாளர்கள் பதவியைக் காலி செய்துவிட்டு, தி.மு.க-வில் நாடாளுமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்களை நியமிக்கப்போகிறார்கள் என்றும், அது மாவட்டச் செயலாளர்களாக இன்று கோ​லோச்சிக்​கொண்டு இருப்பவர்களுக்கு வைக்கப்படும் செக் என்றும் நான் முன்பே உமக்குச் சொல்லி இருந்தேன்!''
''உண்மை!''
''வீரபாண்டி ஆறுமுகம், கே.என்.நேரு, பொன்முடி, ஐ. பெரியசாமி, தூத்துக்குடி பெரியசாமி, சுரேஷ்ராஜன், எ.வ.வேலு, சாத்தூர் ராமச்சந்திரன், கருப்பசாமிப் பாண்டியன், தென் சென்னை ஜெ.அன்பழகன், பழனி மாணிக்கம் உள்ளிட்ட மாவட்டச் செயலாளர்களை கொந்தளிக்கவைத்தது, கருணாநிதியின் இந்த அறிவிப்பு. இவர்களின் பிரதிநிதியாய் அவரிடம் விளாசிவிட்டு வந்தாராம் வீரபாண்டி ஆறுமுகம். தன்னுடைய வருத்தங்களை பொதுச் செயலாளர் அன்பழகனிடம் சொல்லப் போனாராம் வீரபாண்டி. 'எதுவாக இருந்தாலும் தலைவரிடம் பேசுங்கள்’ என்று அன்பழகன், வழக்கம்போல கோபாலபுரத்தை நோக்கிக் கையைக் காட்ட... இவர் இங்கு வந்து குதித்துள்ளார்.
'எம்.ஜி.ஆர். காலத்து அடக்குமுறையைப் எதிர்த்து கட்சியை வளர்த்த எங்களையே மாற்றிவிடத் துடிக்கும் சக்தி யார்? எங்களை எடுத்துவிட்டுக் கட்சியை நடத்த முடியுமா? மாவட்டச் செயலாளர்கள் இல்லை என்றால், கட்சியே அழிந்துவிடும்’ என்று எகிறிக்குதித்த வீரபாண்டியாரை சமாதானப்படுத்தும் வண்ணம் கருணாநிதியால் எதுவும் சொல்ல முடியவில்லையாம்!
'சமீப காலமாகவே எதுவும் சரியா இல்லை. அ.தி.மு.க-வில் இருந்து வந்தவங்களை வைத்துக் கட்சியை நடத்திடலாம்னு நினைக்கிறீங்களா?’ என்ற வீரபாண்டியாரிடம், 'நாடாளுமன்றக் குழு போடலாமானு கருத்துதானே கேட்டு இருக்கிறோம்’ என்றாராம் கருணாநிதி. 'தப்பான கருத்துக்கு எதுக்கு கணிப்பு நடத்தணும்?’ என்று கேட்டாராம் வீரபாண்டி. அவரது கொந்தளிப்பு மற்ற மாவட்டச் செயலாளர்கள் கவனத்துக்குச் சென்று, அவர்களும் வீரபாண்டி கரத்துக்கு வலு சேர்க்க ஆரம்பித்து உள்ளார்களாம். இதற்கிடையில், இன்னோர் சமாசாரமும் மாவட்டச் செயலாளர்களைக் கோபம்கொள்ள வைத்துள்ளது...''
''அது என்ன?''
''3-ம் தேதி அன்று, தி.மு.க. பேச்சாளர்களின் வீட்டு முகவரிகளைக் கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா பகிரங்கமாக அறிவித்தார். 'முரசொலி’யில் முழுப் பக்கத்துக்கு இது வந்துள்ளது. இனிமேல், மாவட்டச் செயலாளர்கள் அனுமதி இல்லாமல் நேரடியாகப் பேச்சாளருக்குக் கடிதம் எழுதி, தங்கள் ஊருக்கு அழைத்துக் கூட்டம் போடலாம் என்று கதவைத் திறந்துவிட்டு இருக்கிறார் கருணாநிதி. மா.செ-க்கள் தங்களது அதிகாரம் மறைமுகமாகப் பறிபோவதாக நினைக்கிறார்கள். இதை எதிர்த்தும் முணுமுணுப்பு கிளம்பி உள்ளது. தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன், பொருளாளர் ஸ்டாலினிடம் தனது வருத்தங்களைச் சொன்னார். 'இப்படியே போனால், அழகிரி ஆட்கள் அதிகாரத்தைக் கைப்பற்றத்தான் வழி பிறக்கும்’ என்றாராம் ஜெ.அன்பழகன். தீராத திகிலில் உறைந்துபோய் இருக்கிறார் ஸ்டாலின்!'' என்ற கழுகார்...
''அழகிரி, மதுரையில் போட்டுள்ள உத்தரவைப் பார்த்தீரா? அண்ணா, கலைஞர் படம் மட்டுமே போடணும். விரும்பினால் என் படத்தைப் போடலாம். மற்றபடி என் குடும்பத்தினர் யார் படத்தையும் போஸ்டரில் போடக் கூடாது’ என்று சொல்லி இருக்கிறார். அதாவது, ஸ்டாலின் படத்தைப் போடக்கூடாது என்பது இதன் உட்பொருள். அடுத்து, என்ன ரியாக்ஷன்ஸ் என்பதையும் உன்னிப்பாகக் கவனியும்!'' என்று உத்தரவு போட்டுவிட்டு, வானத்தில் மிதந்தார் கழுகார்!
படம்: சு.குமரேசன்
சி.டி. விநியோகித்த வைகோ!
'சிங்கள அரசின் தமிழ் இனக் கொலை’ என்ற குறுந்தகட்டை வைகோ வெளியிட்டுள்ளார். திங்கள் கிழமை காலையில் காரில் கிளம்பிய வைகோ, சென்னை மாநிலக் கல்லூரி முன் வண்டியை நிறுத்தினார். கல்லூரிக்குள் சென்ற மாணவர்களுக்கு அந்த சி.டி-யைக் கொடுக்க ஆரம்பித்தார். ஆர்வமான மாணவர்கள், 'காலேஜுக்கு உள்ளே வந்து கொடுங்க தலைவரே!’ என்று சொல்ல... 'கல்லூரிக்குள் வருவது சரியானது அல்ல!’ என்று இவர் சொல்லி இருக்கிறார். 'நீங்க எங்க காலேஜ் ஓல்டு ஸ்டூடண்ட்தானே’ என்று சொல்லி அழைத்துள்ளார்கள். ஆனாலும் மறுத்த வைகோ, சுமார் 1,000 சி.டி-க்களை மாணவர்களிடம் கொடுத்துள்ளார். தனது பிரத்யேக போட்டோகிராபரைக்கூட படம் எடுக்கக் கூடாது என்று சொல்லிவிட்டாராம். 'இது பப்ளிசிட்டிக்காகப் பண்ணலை. இளைய தலைமுறைக்கு இந்த விஷயங்கள் போய்ச் சேர வேண்டும் என்பதற்காக செய்கிறேன்’ என்றவர், தமிழகத்தின் அனைத்துக் கல்லூரிகள் முன்பாகவும் திடீர் பிரசன்னமாகி விநியோகம் செய்யப்போகிறாராம்!

[ Top ]

No comments:

Post a Comment