Wednesday, July 6, 2011

பதவிக்கு வேட்டு வைத்ததா ரூ 6 சி?

பதவிக்கு வேட்டு வைத்ததா ரூ 6 சி?

கிரானைட் பூகம்பம்

கடந்த வாரம், முதல்வர் ஜெயலலிதா திடீரென சில அமைச்சர்களின் துறைகளை மாற்றினார். இந்த அதிரடி மாற்றத்துக்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், குறிப்பிட்ட ஒருவரை மட்டும் தூக்கி அடித்ததற்குப் புதிய பின்னணிஒன்று காரணமாகச் சொல்லப்படுகிறது. 'ஆட்சி மேலிடம், உங்கள் மீது ரொம்ப கோபமாக இருக்கிறது. அவர்களின் கோபத்​தைத் தணிக்க 6 'சி’ முதல் கட்டமாகத் தர வேண்டும்' என்று சிலர் பேசிய விவகாரம்தான், இந்தத் திடீர் மாறுதல்​களுக்குக் காரணம் என்கிறது சென்னைத் தலைமைச் செயலக வட்டாரம்!

உதாரணத்துக்கு, தொழில் துறை அமைச்சாக இருந்த சண்முகவேலுவை, திடீரென ஊரக தொழில் துறை அமைச்சராக மாற்றினார்கள்.

திருப்பூர் மாவட்டத்தில் இருந்து எம்.எல்.ஏ. ஆனவர் இவர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலினின் வலது கரமான வெள்ளக்கோவில் சாமிநாதனை வீழ்த்தியவர். முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் என்பதால், நிர்வாக நுணுக்கம் தெரிந்தவர். அதனால்தான், பணம் கொழிக்கும் 'டாமின்' எனப்படும் தமிழ்நாடு கனிம வள நிறுவனம், சுரங்க மற்றும் புவியியல் துறை ஆகியவற்றை உள்ளடக்கிய தொழில் துறையின் அமைச்சராக அவரை நியமித்தார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், நாட்கள் நகர நகர... 'அமைச்சர் சண்முகவேலு, நேரடியாகத் தொழில் அதிபர்களை சந்தித்துப் பேசுகிறார்’ என்று கோட்டை அதிகாரிகளில் ஒரு தரப்பினர் சொல்ல... அமைச்சரின் பெயரைச் சொல்லி தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளும் ஒரு சிலர், கிரானைட் குவாரி பிசினஸ் நடத்தும் முக்கிய வி.ஐ.பி-களுடன் டீல் பேசுகிறார்கள் என்று இன்னொரு தரப்பினரும் வெளிப்படையாகப் பேசிக்கொண்டனர்.

கடந்த மே மாதம், கனிம வளத் துறை உதவி இயக்குநர்கள் அளவிலான அவசரக் கூட்டத்தை அமைச்சர் சண்முகவேலு சென்னையில் கூட்டினாராம். அதிகாரிகள் லெவல் மீட்டிங் முடிந்ததும், அடுத்த வாரம் முக்கியத் தொழில் பிரமுகர்கள் சிலரை சென்னைக்கு வரச் சொல்லி கோட்டைப் பிரமுகர் சந்தித்துப் பேசினாராம். அதன் பிறகுதான், அடுத்தடுத்த சம்பவங்கள் அரங்கேற ஆரம்பித்தன.

தி.மு.க. அனுதாபிகளான கிரானைட் பிசினஸ் புள்ளிகள் சிலர் நம்மிடம், ''கடந்த தி.மு.க. ஆட்சியில் பொன்முடி இந்தத் துறைக்கு அமைச்சராக இருந்தபோது, எங்கெல்லாம் மாமூல் போனது? யார் யார் மூலம் நடந்தது? சட்ட விரோதமான முறையில் யார் யார் குவாரி பிசினஸ் நடத்துகிறார்கள்? அரசு புறம்போக்கு நிலத்தில் குவாரி எடுத்து, அவற்றை எல்லாம் மறைத்து பட்டா நிலத்தில் எடுத்த மாதிரி போலியாக ஆவணங்கள் தயாரித்து வாகனங்களில் கடத்துவது யார் என அ.தி.மு.க. அனுதாபிகளான அதிகாரிகள் விரிவாக எடுத்துச் சொல்ல... 'குறிப்பிட்ட சில அதிகாரிகள், பிசினஸ் புள்ளிகளிடம் மாமூலை வசூலித்து, ஆட்சி மேலிட வி.வி.ஐ.பி-களுக்கு கொடுத்து வந்தார்களா?’ என்றும்கூட விசாரிக்கப்பட்டதாம். இறுதியில், சட்டத்தை மீறுபவர் யாராக இருந்தாலும், இனி கடுமையான நடவடிக்கை எடுக்கலாம் என்று பச்சைக் கொடி காட்டப்பட்டது...'' என்கிறார்கள்.

கனிம வளத் துறையை நன்றாகத் தெரிந்த பிரமுகர் ஒருவர், ''மதுரை ஏரியாவைச் சேர்ந்த அ.தி.மு.க. அனுதாபியாக தன்னைக் காட்டிக்கொண்ட தொழில் பிரமுகர் ஒருவர்தான் மீடியேட்டர். கிரானைட் பிசினஸ் புள்ளிகள் சிலரை அழைத்து, கோட்டைப் பிரமுகர் பேசினார். தனியாருக்கு கிரானைட் கற்களை வெட்டி எடுக்கும் உரிமத்தை அரசு வழங்கி இருந்தது. அதை முந்தைய ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் மாற்றி, அரசு வசமே வைத்துக்கொண்டது (அரசு புறம்போக்கு சிறு கனிம விதி எண்:39). அதை மீண்டும் தனியாரிடமே தர வேண்டும் என்று கடந்த பல வருடங்களாகப் போராடி வருகிறார்கள். கடந்த தி.மு.க. ஆட்சியில், பொன்முடி அமைச்சராக இருந்த நிலையில் இதைச் சரிசெய்து தருவதாகச் சொல்லியே இந்தத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களிடம் போலி வாக்குறுதி கொடுத்து ஏமாற்றப்பட்டதையும், தங்களை சந்தித்த கோட்டைப் பிரமுகரிடம்பிசினஸ் புள்ளிகள் சொல்லி இருக்கிறார்கள்.

அதற்கு கோட்டைப் பிரமுகர் தரப்பில், ''மீண்டும் உங்களுக்கே லைசென்ஸ் வழங்குவதற்காக கடந்த ஆட்சியில் நீங்கள் 15 'சி’ வரை செலவு செய்தது எங்களுக்குத் தெரியும். அமைச்சர் பொன்முடியின் வாரிசு ஒருவரை நீங்கள் அடிக்கடி சந்தித்ததின் மர்மம் எங்களுக்கும் தெரியும். தி.மு.க-வைச் சேர்ந்த வி.வி.ஐ.பி-களில் சென்னையில் நால்வர் மதுரையில் இருவர் ஆகியோருக்கு டாமின் டெண்டர் விவகாரங்களில் முதல் மரியாதை காட்டப்பட்டதும் தெரியும்!'' என்று சொல்லி அதன் பின்னணியை விரிவாக விசாரித்து இருக்கிறார், அந்தக் கோட்டைப் பிரமுகர்.

''கடந்த ஆட்சியைப்போல் அதிகாரிகள் டீலிங் வேண்டாம். நாம் இருவருமே நேரடியாக டீல் போடுவோம். இப்போதைக்கு முதல் தவணையாக 5 'சி’ அன்பளிப்பாகத் தர வேண்டும். எங்களுக்குத் தனிப்பட்ட முறையில் ஒன்றைச் சேர்த்து 6 'சி’ தேவை. உங்கள் மீது ஆட்சி மேலிடம் ரொம்பக் கோபமாக இருக்கிறது. அவர்களின் கோபத்தைத் தணிக்கத்தான் இந்தத் தொகை. அதன் பிறகு, மற்ற பிரச்னைகளைப் பேசுவோம்' என்றாராம். இது தொடர்பாக, இந்தத் தொழிலில் உள்ள வேறு சிலருடன் ஆலோசித்து முடிவைச் சொல்வதாகச் சொல்லிவிட்டு, பிசினஸ் புள்ளிகள் வெளியில் வந்தார்களாம். அதன்படி, சென்னையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பிரபல ஹோட்டலில் வேறு சில முக்கியஸ்தர்களுடன் ஆலோசனை நடக்க, பணம் தர முடிவு செய்தார்கள். வசூலும் நடந்து முடிந்தது. பணத்துடன் பிரமுகர்கள் சென்னைக்குப் போனார்கள். 'இங்கு வேண்டாம். மதுரையில் கொண்டுவந்து கொடுங்கள்' என்றார்களாம். இவர்கள் டென்ஷன் ஆகிவிட்டார்கள். 'எதற்கு அலையவிடுகிறீர்கள்? மேலிடத்துக்கு நீங்கள் வாங்குவது தெரியுமா... தெரியாதா?' என்று கேட்டு இருக்கிறார்கள். அதற்கு எதிர்த் தரப்பில் பதிலே இல்லையாம்.

அன்று மாலை டி.வி-யில், தொழில் அமைச்சர் சண்முகவேலு வேறு துறைக்கு மாற்றப்பட்டதாக செய்தி வெளியானது. இடையில் ஏதோ நடந்து இருக்கிறது என்பதை அறிந்து, பிசினஸ் புள்ளிகள் தங்கள் வசம் இருந்த பணத்தை யாரிடமும் கொடுக்காமல், சென்னையில் இருந்து கிளம்பிவிட்டார்கள்...'' என்றார் அவர்.

கிரானைட் பிசினஸுக்கு ஏன் இப்படி முட்டி மோதுகிறார்கள்?

உலக அளவில் பிரசித்தி பெற்ற கிரானைட் ரகங்களில், இந்தியாவில் இப்போது கிடைப்பது சுமார் 40 ரகங்கள். இவற்றில், தமிழகத்தில் மட்டும் 14 ரகங்கள் கிடைக்கின்றன. மதுரை, சிவகாசி, நெல்லை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை ஆகிய ஏரியாக்களில்தான் கிரானைட் குவாரிகள் அதிகம். பாரடைஸ்ஸோ, பிளாக், ஜிப்லி, சிவா கோல்டு, பிளாக், காஷ்மீர் ஒயிட், ராக் சில்க் உள்ளிட்ட சில ரகங்களுக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நல்ல மார்க்கெட்.

பல கோடி ரூபாய் புரளும் இந்த குவாரி பிசினஸில் தனியார்கள் பட்டா நிலத்திலும், டாமின் (தமிழக அரசின் கனிம வள நிறுவனம்) அரசு புறம்போக்கு நிலங்களிலும் டெண்டர் முறையில் குவாரி பிசினஸ் செய்கிறது. தமிழகத்தில் சுமார் 500 கிரானைட் குவாரிகள் உள்ளன. இவற்றில், சுமார் 160 குவாரிகளை மறைமுகமாகத் தன் வசம்வைத்து இருப்பவர் பிரபல தென் மாவட்டப் புள்ளி ஒருவர். அவர்தான், அனைத்துக் கட்சியினருக்கும் அன்பளிப்பை வாரி வழங்குகிற வள்ளல்.

இது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் கனிம வளத் துறை பற்றிய விவரங்களைத் தெரிந்த அதிகாரி ஒருவர் கூறும்போது,

''குறைந்த முதலீட்டைப் போட்டு அதிக அளவு லாபம் சம்பாதிக்கும் துறை இது. ஆட்சியில் இருப்பவர்களுக்குப் பணத்தை அள்ளிக்கொடுக்கும் அட்சய பாத்திரம். முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் ஸ்பேர் பார்ட்ஸ் என்ற அடைமொழியை உடைய பிரமுகருக்குதான் முதல் மரியாதை. அதிகார மையத்தில் இருப்பவருக்கு வேண்டப்பட்டவர். ஆனால், தி.மு.க ஆட்சியில் பல்வேறு சேனல்களுக்கு மரியாதை செய்துவிட்டு, லாபம் பார்ப்பதே கஷ்டமாகிவிட்டது. குறிப்பாக, கடந்த தி.மு.க. ஆட்சியில் கோட்டைப் பிரமுகர் ஒருவர், '100 'சி’ வசூலித்துக் கொடுப்பதாக வாக்கு கொடுத்துத்தான், நான் இந்தத் துறைக்கு வந்துள்ளேன்' என்று சொல்லியே கல்லா கட்டினார். பட்டா நிலங்களை வைத்து இருப்பவர்கள் கிரானைட் எடுக்க அனுமதி கேட்டு வரும்போது, முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் ஹெக்டேருக்கு 5 லட்சம் வரை அன்பளிப்பாக வாங்கினார்கள். ஆனால், தி.மு.க. ஆட்சி வந்தும், இந்த அன்பளிப்பு 12 லட்சத்தில் இருந்து 20 லட்சம் வரை வசூலித்தார்கள். அத்துடன் கனிம வள விதி எண் 39-ஐ சரிசெய்து தருவதாகச் சொல்லியே, 15 சி வரை வசூலித்தார்கள். ஆனால், சொன்னதைச் செய்யவில்லை. இப்போது வந்துள்ள அ.தி.மு.க. ஆட்சியில் யாருக்கு முதல் மரியாதை செய்வது என்று இதுவரை அடையாளம் காட்டப்படவில்லை. அதற்காகக் காத்து இருக்கிறோம்...'' என்றார் அந்த அதிகாரி.

இது குறித்து அமைச்சர் சண்முகவேல் தரப்பினரிடம் விசாரித்தபோது,

''தன்னிச்சையாக எந்தத் தொழில் அதிபருடனும் பேச்சுவார்த்தை நடத்தும் அளவுக்கு அமைச்சர் விவரம் தெரியாதவர் அல்ல. அம்மாவின் கண்காணிப்பு, உளவுத் துறை வட்டமிடுதல்... இவற்றைத் தாண்டி, யாரும் எந்தத் தவறும் யாரும் செய்யவே முடியாது. 'தங்களுக்கு சாதகமாக நடக்க மாட்டார். கறார் பேர்வழி' என்று தெரிந்துகொண்ட தி.மு.க. சார்புள்ள சில பிரமுகர்கள்தான், சண்முகவேலுவைப் பற்றி வதந்தியைப் பரப்பிவிடுகிறார்கள். உண்மையில், முன்பு இருந்த தொழில் துறையைவிட, தற்போது மாற்றித் தந்துள்ள ஊரகத் தொழில் துறையானது மிகவும் முக்கியமானது. எங்களைப் பொறுத்த வரையில், இது பதவி உயர்வே தவிர, பதவி இறக்கம் அல்ல!'' என்கிறார்கள்.

ஆனாலும் சந்தேக ரேகைகள் அதிகமாகவே படர்ந்து வருகின்றன!

- நமது நிருபர்கள்

No comments:

Post a Comment