Thursday, July 14, 2011

இது உங்கள் இடம்

நிதி போதுமா... இன்னும் வேண்டுமா? வி.எஸ்.மோகன், மதுரையிலிருந்து எழுதுகிறார்: நடந்த முடிந்த தமிழக தேர்தலில், எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பிடிக்க முடியாத நிலை, தி.மு.க.,வுக்கு ஏன் ஏற்பட்டது என்பது, இப்போது மக்களுக்கு புரிய ஆரம்பித்திருக்கிறது. தேர்தல் நேரத்தில், ஆளும் கட்சியின் ஊழல் குறித்து விலாவாரியாக புகார் வெளியானது அனைவரும் அறிந்ததே. ஊழல் எந்த அளவுக்கு நடந்துள்ளது என்பதை அறியாதவர், இன்று புரிந்து கொண்டிருப்பர். "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் தான், கடந்த தி.மு.க., அரசின் பெயரை கெடுத்தது. இப்போது தி.மு.க.,வின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டுள்ளது. இதில் அகப்பட்டவர்களின் மானம், மரியாதை, தண்ணீரில் கரையும் அஸ்தியைப் போல காணாமல் போய் விட்டது. முதலில் ராஜா, அடுத்து கனிமொழி. இருவரும், தற்போது திகார் சிறையில். இதை அறிந்த பொது ஜனம், இப்படியும் இருக்கின்றனரே எனக் கூற ஆரம்பித்து விட்டனர். இப்போது, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதியும், அதே ஊழலில் சிக்கி, தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவரின் வரவை, திகார் சிறை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் தயாநிதி அகப்பட, மற்றொரு பக்கம், கலாநிதி மீது, நித்யானந்தா ஆசிரமம், புகார் மேல் புகார் கூறி இருப்பதும், முன்னாள் முதல்வரின் குடும்ப மானம் காற்றில் பறக்க ஆரம்பித்துவிட்டது. நிதியை தங்கள் பெயரிலேயே வைத்துக் கொண்டு, கோடி கோடியாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையே, இவர்களின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துவிட்டது. இன்னும் எத்தனை நிதிகள் மாட்டப் போகின்றனரோ? தயவு செய்து சிந்தியுங்கள்! வே.முத்துக்குமாரசாமி, சிவகாசியிலிருந்து எழுதுகிறார்: இரண்டு போலீஸ் அதிகாரிகள், குடித்துவிட்டு, வீதியில் சண்டை போட்டுள்ளனர். ஒரு போலீஸ் அதிகாரி, குடிபோதையில் ஒரு பெண்ணை கடத்தினார். போதையில் இருந்த ஒரு தந்தை, தன் மகளை கெடுத்துள்ளார். இன்னும், இதுபோன்ற எத்தனையோ விஷயங்கள் நடந்து வருகின்றன. இதையெல்லாம் படிக்கும்போது, நமக்கு அருவருப்பாக உள்ளது. ஒழுக்கமாக நடந்துகொள்ள வேண்டிய காவல் துறையினரும், தெய்வமாக மதிக்கப்படக்கூடிய தந்தை குலமும், இப்படி கேவலமாக நடந்துகொள்ள வேண்டிய சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்தது யார்? மது வை தாராளமாக கிடைக்கச் செய்து, மதுவிலக்கை ரத்து செய்த நமது அரசு தானே இதற்கெல்லாம் காரணம்! தீயவற்றில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டிய அரசு, தன் வருமானத்திற்காக, தீயது என தெரிந்தும், "குடி குடியைக் கெடுக்கும்' என்ற அறிவிப்புடன், குடி பொருட்களை விற்பது, எவ்வளவு பெரிய தவறான செயல் என்பதை சிந்திக்க வேண்டும். மதுவை நாடுவோரின் குடும்பத்தினர், பிச்சைக் காரர்களாகவும், சமூகக் குற்றம் புரிபவர்களாகவும் மாற வேண்டிய சூழ்நிலை உருவாகி, நாடே கெட்டொழியும் நிலை ஏற்படும். இதையெல்லாம் சிந்தித்து, மதுக்கடைகளை அரசு படிப்படியாக மூடவும், போதை ஒழிப்புக்காக, தொண்டு நிறுவனங்கள் விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும். திருந்த வேண்டியது யார்? மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து எழுதுகிறார்: "இந்தியாவில், மீடியாக்களின் ஆட்சி நடக்கிறது. மீடியாக்கள் நினைத்தால், யாரை வேண்டுமானாலும் இழிவுபடுத்த முடியும். அதற்கு தயாநிதியும் விதிவிலக்கு அல்ல' என, கருணாநிதி விடுத்திருக்கும் ஸ்டேட்மென்ட், அவரது மன உளைச்சலின் உச்சக்கட்ட வெளிப்பாடாகவே தெரிகிறது. பத்திரிகைகள் மீது பாயும் கருணாநிதி, ஊழலை மட்டும் மறைக்க முயற்சிப்பது தர்மமா? ஏற்கனவே, "பத்திரிகைகள் எங்களது ஆட்சி பற்றி குறைகள் சொல்லி, அவை நீதிபதிகளாகவும் தீர்ப்பு சொல்லி விடுகின்றன' என, மன்மோகன்சிங் மனம் நொந்து சொன்னது, நினைவுக்கு வருகிறது. எமர்ஜென்சியின் போது, பத்திரிகை சுதந்திரத்துக்கு நிறைய கட்டுப்பாடுகள் விதித்தார் இந்திரா; ஆனால், பத்திரிகைகள் இதற்காக பயப்படவில்லை. ஒரு சுதந்திரப் போராட்டதையே நடத்தின. அதன் பயனாக, லோக்சபா தேர்தலில், இந்திராவின் காங்கிரஸ் படுதோல்வி கண்டது. பின்பு, போபர்ஸ் ஊழலை பகிரங்கப்படுத்தியது, பத்திரிகைகள் தான். ஜனநாயகத்தை காக்க வேண்டியது பத்திரிகை களின் கடமை. ஊழலை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவது பத்திரிகைகளின் குற்றமல்ல. அரசியல்வாதிகளின் அயோக்கியத்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் பத்திரிகைகள், சிவபெருமானை எதிர்த்த நக்கீரன் போல், அஞ்சாமல் செயல்படுகின்றன. திருந்த வேண்டியது பத்திரிகைகள் அல்ல; அரசியல்வாதிகள்! இரண்டு ரூபாய் தருவதே இல்லை...: ஆர்.டி.கோவிந்தன், கொடைக்கானலிலிருந்து எழுதுகிறார்: சில்லறை பஞ்சத்தால், ஏழை, எளிய மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு, அவதிப்பட்டு வருகின்றனர். இப்போது, ஒரு பைசா முதல், 25 காசு வரை புழக்கத்தில் இல்லை. 50 காசு நாணயமும் ஒழிந்து வருகிறது. ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நாணயங்களும் குறைந்து வருகின்றன. தற்போது, 10, 50, 100, 500, 1000 ரூபாய் நோட்டுகள் தான், அதிகளவில் புழக்கத்தில் உள்ளன. கொடைக்கானல் மலை பஸ்களில், சில்லறை தட்டுப்பாடு மிகவும் அதிகம். கொடைக்கானல் - பூம்பாறை பஸ் கட்டணம், எட்டு ரூபாய். பயணிகள் பத்து ரூபாய் நோட்டு கொடுத்தால், மீதி இரண்டு ரூபாயை நடத்துனர் கொடுப்பதே இல்லை. கொடைக்கானல், பூம்பாறை, கவுஞ்சி, கிளாவரை என்ற ஊர்கள் வரை, தினமும், 10 - 12 அரசு பஸ்களும், தனியார் பஸ்களும் ஓடுகின்றன. ஆனால், மீதி சில்லறை கொடுப்பதே இல்லை. கொடைக்கானல் மலை மேல் செல்லும் எந்த பஸ்களிலும், சில்லறை கொடுப்பதே இல்லை. பூம்பாறை - வத்தலக்குண்டு பஸ் கட்டணம், 28 ரூபாய்; ஆனால், 30 ரூபாய் கொடுத்தால், இரண்டு ரூபாய் கொடுப்பதே இல்லை. ஒரு பஸ், வத்தலக்குண்டு - பூம்பாறைக்கு, இரண்டு முறை வந்து செல்கிறது. ஒரு முறைக்கு இந்த பஸ்சில், 80 முதல், 100 பேர் வரை, பயணிக்கின்றனர். மீதி சில்லறை கொடுக்காததன் மூலம், இந்த பஸ் நடத்துனருக்கு, தினமும், 500 ரூபாய்க்கு மேல் கிடைக்கிறது. கடைகளிலும் சில்லறை கிடைப்பதில்லை; பஸ்களிலும் சில்லறை கிடைப்பதில்லை. நாடு எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது; எல்லா வகையிலும் கொள்ளை நடக்கிறது. இது ஒரு புதிய கலாசாரம்.

அழகுக்கு அழகு சேர்ப்பதை அலட்சியப்படுத்தாதீர்:

ஆண்களையும், பெண்களையும் வேறுபடுத்திக் காட்டுவதில், தலைமுடிக்கு முக்கிய பங்கு உண்டு. தலைமுடி, பெண்களின் அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பவை. ஒவ்வொரு பெண்ணுக்கும், அவரவர் தலைமுடியை, நீளமாகவும், அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும், வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக, சந்தைக்கு வரும் புதுப்புது பொருட்களை வாங்கி பயன்படுத்துவர். அவற்றை பயன்படுத்துவது தவறல்ல. அதற்கு முன், நம் தலைமுடிக்கும், தோலுக்கும் அவை ஏற்றதாக இருக்குமா என்பதை பரிசோதிக்க வேண்டும். சிலருக்கு, தலை எண்ணெய் பசை கொண்டதாகவும், முடி உலர்ந்தும் இருக்கும். சிலருக்கு எண்ணெய் பசை கொண்ட முடியும், உலர்ந்த தலையும் இருக்கும். இவற்றிற்கு தகுந்தாற்போல், பொருட்களை பயன்படுத்த வேண்டும். முடியை பராமரிக்க, "ஷாம்பூ' மற்றும் "கண்டிஷனர்' பயன்படுத்தலாம். சுருட்டை முடி மற்றும் உலர்ந்த முடிக்கும், "கண்டிஷனர்' உபயோகிக்கலாம். மாதத்திற்கு, ஒன்று அல்லது இரண்டு முறை கண்டிஷனர் போடுங்கள். முட்டையின் வெள்ளைப் பகுதியையும் பயன்படுத்தலாம்.தலைக்கு குளிக்கும் போது, ஷாம்பூவில் கொஞ்சம் தண்ணீர் கலந்து, தலையில் நன்கு மசாஜ் செய்து, தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்துவிட வேண்டும். இறுதியாக, கண்டிஷனரை தடவி சுத்தம் செய்ய வேண்டும். முக்கியமாக கண்டிஷனரை, முடியின் வேர் காலில் தடவவே கூடாது. தடவிய பின் நீண்ட நேரமும் தேய்க்கக்கூடாது. முடி கொட்டும் பிரச்னை அதிகம் இருந்தால், தலைமுடி சிகிச்சை நிபுணரிடம் செல்வது நல்லது. மேலும், மருத்துவரின் ஆலோசனைப்படி, "தைராய்டு' பரிசோதனை செய்து கொள்வதும் நல்லது.­­ஆரோக்கியமான தலைமுடிக்கு என்னென்ன உணவுகளை சாப்பிடலாம் என்று பார்ப்போம்: நீங்கள் போதுமான அளவு புரத உணவை சாப்பிட்டாலே, முடி கொட்டுவதை தவிர்க்கலாம். மேலும், உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்வதன் மூலம், உடல் முழுவதும், ஆக்சிஜன் சென்று, ரத்த ஓட்டத்தை சீராக வைக்கும். நல்ல பளபளப்பான, ஆரோக்கியமான முடிக்கு, ரத்த ஓட்டம் நன்றாக இருப்பது அவசியம்.நார்ச்சத்து அதிகம் அடங்கியுள்ள, காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மற்றும் கொட்டை வகைகளை சாப்பிட வேண்டும்.வைட்டமின் "ஏ' மற்றும் பி-காம்ப்ளக்ஸ், முடிக்கு மிகவும் நல்லது. பையோடின், வைட்டமின் "பி7' போன்றவை முடியை வலுப்படுத்த உதவும்.

தியான பீடம் மீதான தாக்குதல் மத ரீதியானது: நித்யானந்தா பேட்டி

சென்னை: ""நில அபகரிப்பில் ஈடுபடும் நோக்கில், "மார்பிங்' முறை வீடியோவை ஒளிபரப்பி, என் மீது, சன்,"டிவி'யினர் பழி சுமத்தினர். அவர்கள் ராட்சதர்கள். தியான பீடங்கள் மீது நடந்த தாக்குதல், தனிப்பட்ட தாக்குதல் அல்ல; மத ரீதியான தாக்குதல். ராட்சதர்கள் மீது, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது,'' என, நித்யானந்தா கூறினார். நித்யானந்தா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சன், "டிவி'யில் வெளியான வீடியோ காட்சிகளில் இருப்பது நான் அல்ல. அது உண்மையானது அல்ல. முற்றிலும், "மார்பிங்' முறையில் சித்தரிக்கப்பட்ட காட்சிகள் தான். தினகரன் மதுரை அலுவலக எரிப்பு சம்பவத்தில், சன், "டிவி' எடுத்த காட்சிகள் கொண்ட வீடியோவை சி.பி.ஐ., கோர்ட்டில் தாக்கல் செய்தது. அந்த வீடியோவையே, கோர்ட் தூக்கி வீசிவிட்டது. தயாரித்ததும், ஒளிபரப்பியதும் தான் குற்றம். இது தவிர, எந்த குற்றமும் அதில் இல்லை. அது ஒரு சதி வேலைதான். சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் அதிலிருந்து தப்பிக்க, தங்களைக் காப்பாற்றிக் கொள்ள, மக்களை திசை திரும்பும் வகையில், மீடியாக்களை ஆயுதமாக பயன்படுத்தி, என் மீது பழியைச் சுமத்தினர். அந்த நேரத்தில், மிகவும் சமூகப் பொறுப்போடு, ஆழ்ந்த, தெளிந்த நிலையில், "தினமலர்' போன்ற நாளிதழ்கள், "டிவி'க்கள் செயல்பட்டன. பழித்தவர்களைப் பார்த்து, சில, "டிவி'க்கள் தங்கள், "ரேட்டிங்'கை கூட்டும் விதமாக செயல்பட்டன. அவ்வாறு பழித்தவர்கள் மீதும் தவறில்லை. அழிக்க நினைத்தவர்கள் சன், "டிவி' ராட்சதர்கள். வீடியோ காட்சிகளை ஒளிபரப்பக் கூடாது என, ஐகோர்ட் தடை போட்டும், அதன் பெஞ்ச் அதை உறுதி செய்தும், அதைப் பற்றி கவலைப்படாமல், வீடியோ காட்சிகளை வெளியிட்டனர். வீடியோ காட்சிகளை வெப்சைட் மூலம் விற்று, பிழைப்பு நடத்துகின்றனர். ஊடகங்களுக்கு இருக்கும் மரியாதையை அழிக்கின்ற இவர்கள், மீடியாக்கள் அல்ல. வீடியோவை வெளியிடாமல் இருக்க, சன், "டிவி' தரப்பில் 100 கோடி ரூபாய் கேட்டனர். பின், 60 கோடி ரூபாய் கேட்டு மிரட்டினர். வார இதழ் ஒன்றின் மீடியேட்டராக சுரேஷ் வந்து மிரட்டினார். சன், "டிவி' சக்சேனாவின் சார்பில், அவரது உதவியாளர் அய்யப்பனும் பணம் கேட்டு மிரட்டினார்; சக்சேனாவும் போனில் பேசினார். என் ஆசிரம நிர்வாகிகள் அதற்கு அடிபணியாததால், "மார்பிங்' முறையில் சித்தரிக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்டனர். அதன் பின்பும் என் பக்தர்களை மிரட்டி, பணம் பிடுங்கிக் கொண்டனர். அப்போது, தியான பீட நிர்வாகிகள் போலீசில் புகார் செய்தனர்; புகார்கள் ஏற்கப்படவில்லை. தமிழகத்தில் 120 தியான பீடங்களை ரவுடிகள், கூலிப்படையினரை வைத்து, அடித்து நொறுக்கினர். அங்குள்ள இந்து விக்ரகங்களை நொறுக்கினர். இது எங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல; மத ரீதியான தாக்குதல். அமெரிக்காவில் உள்ள,"இந்து பெடரேஷன்' வீடியோ காட்சிகளை, மத அமைப்புகளுக்கான கூட்டமைப்பிடம் ஒப்படைத்துள்ளது. இதை ஆய்வு செய்த கூட்டமைப்பு, வீடியோ காட்சிகள், உயர்தர யுக்திகள் கையாண்டு, "மார்பிங்' முறையில், சித்தரிக்கப்பட்ட காட்சிகள் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதனடிப்படையில், கூட்டமைப்பின் மூத்த வழக்கறிஞர்,"இந்த புகார்கள் மீதான குற்றப்பத்திரிகை நகல்களை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்' என, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். 17 இடங்களில் பெண் சன்யாசிகளின் புடவைகளை உருவியுள்ளனர். ஏழு இடங்களில் கொலைவெறித் தாக்குதல் நடந்தது. அதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது. எங்கள் ஆசிரமத்தில் மூன்று சன்யாசிகளை ஒரு அறையில் வைத்து பூட்டி, பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். மற்றொரு புறமாக வந்த பக்தர்கள், கதவை உடைத்து அவர்களை மீட்டுள்ளனர். பெங்களூரில் நடந்த சம்பவத்திற்கு, சென்னை, எழும்பூர் போலீஸ் நிலையத்தில், என் மீது எப்.ஐ.ஆர்., போட்டனர். சம்பந்தப்பட்டவர் பெயர் இல்லாமல் போடப்பட்ட இந்தியாவின் முதல் எப்.ஐ.ஆர்., அதுவாகத் தான் இருக்கும். எங்களிடம் பலவற்றை பறிக்க முயற்சி நடந்தது. நாங்கள் பறி கொடுக்கவில்லை. நீதித்துறை மீதும், தமிழக முதல்வர் மீதும், பத்திரிகைகள் மீதும் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. புகார்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன். ஆளும் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க நேரம் கேட்பேன். அழைப்பு வந்தால் சூழ்நிலைகளைப் பார்த்து முடிவு செய்வேன். முதல்வர் மீது முழு நம்பிக்கை உள்ளது. இவ்வாறு நித்யானந்தா கூறினார். நாய் கடித்தால்...? : ஆசிரம், தியான பீடம் மீதான தாக்குதல் குறித்து குறிப்பிட்ட நித்யானந்தா, "என் ஆசிரமம், தியான பீடங்கள் மீது நடந்த தாக்குதலால், என் பக்தர்கள் எந்த அளவுக்கு வேதனைப்பட்டிருப்பர். அவர்கள் உங்கள் சிலைகளை ஆசிரமம் முன் வைத்து, செருப்பால் அடிக்க வேண்டும் என்று துடித்தனர். நான் தான், "நாய் கடித்தால் வைத்தியம் செய்து கொள்ள வேண்டும். திருப்பி கடிக்கக் கூடாது என்று, அவர்களை சமாதானப்படுத்தினேன்' என்றார். கண்டுகொள்ளாத மாஜி முதல்வர்? : அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு எழுதிய கடிதம் குறித்து நித்யானந்தா கூறியதாவது: கடந்த ஆண்டு டிச.,29ல், அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதினேன். தியான பீடங்கள் மீதான தாக்குதல் குறித்த நடவடிக்கை எடுக்கக் கோரியும், உணர்வளவில் மிகவும் காயப்பட்டு, தமிழக மக்கள் இழந்த மத சுதந்திரத்தையும், மனித உரிமைகளையும் மீட்டுத் தர வேண்டுமென, 60 ஆயிரம் பக்தர்கள் ரத்தக் கையெழுத்துடன், நீதிகேட்டு சந்திக்க வாய்ப்பு கேட்டிருந்தேன். ஆனால், எந்த பதிலும் இல்லை. பின், தேர்தல் பிரசாரத்தின் போது,"நான் ஆன்மிகவாதிகளுக்கு எதிரி அல்ல. நடந்த சம்பவத்திற்கும், எங்களுக்கும் தொடர்பில்லை' என்று பேசியுள்ளார். இவ்வாறு நித்யானந்தா கூறினார். ரூ.35 கோடி கேட்டு மிரட்டிய பிரசன்னா? : நித்யானந்தா தனது பேட்டியின் இடையே பணம் கேட்டு மிரட்டியது தொடர்பாக, ஆடியோ உரையாடல் ஒன்றை நிருபர்களுக்கு போட்டுக் காட்டினார். அதில், லெனின் கருப்பனின் உதவியாளர் பிரசன்னா, ஆசிரம நிர்வாகியுடன் போனில் பேசுகிறார். "டேபிளில் 25 கோடி ரூபாயை தூக்கிப் போட்டால் போதும். அதில் எல்லாவற்றையும் மூட்டை கட்டி தூக்கிப் போட்டு விடுகிறேன். அவர்கள் எல்லாம் சாதாரணமானவர்கள் அல்ல. மற்ற செலவுகள் எல்லாம் சேர்த்து 35 கோடியைக் கொடுங்கள்' என்கிற ரீதியில் பேச்சு தொடர்கிறது. ஒன்பதா...? : பேட்டியின் போது, வார இதழ் ஒன்றின் நிருபர், நித்யானந்தரைப் பார்த்து, "ஒன்பது' என்று கூறி, சைகை காட்டினார். இதைப் பார்த்து சிரித்த நித்யானந்தா, "ஆம்' என்று கூறிவிட்டு தொடர்ந்தார்."ஆன்மிகத்தில் இருக்கும் எனக்கு பேச வாயும், ஆசிர்வதிக்க கையும் செயல்பட்டால் போதும். நான் ஆண், பெண், அலி, குழந்தை நிலைகளைக் கடந்து, ஆன்மிக மார்க்கத்தில் வாழ்பவன். அதனால் அவர், "ஒன்பது' என்று சொன்னதால் வருத்தப்படவில்லை. ஆனால், அவர், பாலியல் சிறுபான்மை இனத்தை(அரவாணிகளை) இழிவுபடுத்தியதை ஏற்க முடியாது' என்றார். நான் அவள் இல்லை...! : "வீடியோவில் இருப்பது நான் இல்லை' என நித்யானந்தா கூறியதும், "அதில் இருப்பது ரஞ்சிதாவும் இல்லையா?' என நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த ரஞ்சிதா, "வீடியோ காட்சியில் உள்ளது நான் இல்லை என்று, திரும்பத் திரும்ப பலமுறை கூறிவிட்டேன். எத்தனை முறைதான் இதை கேட்பீர்கள். கும்பிடுகிற கடவுளுடன், என்னைச் சேர்த்து கொச்சைப்படுத்தினால் எனக்கு எப்படிப்பட்ட நிலை இருக்கும்' என்றார்.

அமைச்சர் எங்களைத் தூங்க வைத்துள்ளார்: வருமான வரித்துறை அதிகாரிகள் வேதனை

அமைச்சர் எங்களைத் தூங்க வைத்துள்ளார்: வருமான வரித்துறை அதிகாரிகள் வேதனை " மயக்க மருந்தோ அல்லது தூக்க மத்திரையோ கொடுத்து, அமைச்சர் எங்களைத் தூங்க வைத்துள்ளார்" என வருமானவரித்துறையில் உள்ள நேர்மையான அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த விசாரணை நேர்மையாக நடக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் விரும்பினால், தமிழகத்தில் உள்ள வருமான வரித் துறை, மாற்றி அமைக்கப்பட வேண்டும். தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் பதவி விலக வற்புறுத்த வேண்டும் அல்லது பிரதமர் மன்மோகன் சிங், அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அப்போது தான், உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய முடியும். ஊழல் செய்தவர்களிடம் இருந்து, பணத்தை மீட்க முடியும்' என்ற கருத்து வருமானவரித்துறையிலேயே பரவலாக எழுந்துள்ளது. மத்திய அமைச்சரவையில் பணம் புரளும், தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்து, தொலை தொடர்பு, தகவல் ஒலிபரப்பு, உரம் ஆகிய இலாகாக்களை வெற்றிகரமாக தி.மு.க., கேட்டுப் பெற்றது. பணம் சம்பாதிப்பதற்கும், அரசு கருவூலத்தை கொள்ளையடிப்பதற்கும் தான், இதுபோன்ற பணம் கொழிக்கும் இலாகாக்களை அவர்கள் கேட்டுப் பெற்றுள்ளனர். மக்களுக்கு சேவை செய்வதைப் பற்றி, அவர்கள் கவலைப்படவில்லை என்றும், வருமானவரித்துறை முக்கிய அதிகாரிகள் கின்றனர். நிதித் துறையும் எப்போதும், தி.மு.க.,வின் விருப்ப பட்டியலில் இருக்கும். "எதிர்க்கட்சியான அ.தி.மு.க., வையும், அதன் நிர்வாகிகளையும் பழி வாங்குவதற்காகவே, நிதித் துறையை தி.மு.க.,வினர், கேட்டுப் பெறுகின்றனர் ' என, பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், முறையற்ற வழிகளில் சம்பாதிக்கும் பணத்தை, முறைப்படுத்துவதற்காகவும், கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றி, வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது, அதில் குளறுபடி எதுவும் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்வதற்காகவுமே, நிதித் துறையை அவர்கள் கேட்டுப் பெறுகின்றனர் என்பது, சமீப கால தி.மு.க., நடவடிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது, எனவும், வருமானவரித்துறையின் முக்கிய அதிகாரிகள் கூறுகின்றனர். வருமானவரித்துறையின் முக்கிய அதிகாரிகள் கூறியதாவது: தற்போது மத்திய நிதித் துறையின், முக்கிய பொறுப்பைப் பெற்றுள்ள தி.மு.க., அமைச்சர், உண்மையில், தி.மு.க., மற்றும் அந்த கட்சியை சேர்ந்தவர்களின் கறுப்பு பணத்தை, வெள்ளையாக மாற்றுவதற்கான அமைச்சராக செயல்படுகிறார் என, சி.பி.ஐ.,யே சந்தேகப்படுகிறது; இந்த சந்தேகத்திற்கு காரணம் இல்லாமல் இல்லை. அமைச்சர் மூலம், தமிழகத்தில் நியமிக்கப்படும் வருமானவரித்துறை அதிகாரிகள், தி.மு.க., வினர் மற்றும் அவர்களின் நிதி மோசடி நடவடிக்கைகளை பாதுகாக்கும் பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தாக்கல் செய்த சொத்துப் பட்டியலை, ஆய்வு செய்வதற்காக, இந்திய தேர்தல் ஆணையம், தமிழகத்தில், வருமானவரித் துறை அதிகாரிகளுக்கு அவற்றை அனுப்பியிருந்தது. மாஜி மத்திய அமைச்சர் தயாநிதி பற்றி விசாரணை நடத்திய வருமானவரித்துறை இன்ஸ்பெக்டர், அவருக்கு விருப்பம் இல்லாத தொலை தூர ஊருக்கு மாற்றிவிடுவோம் என்ற மிரட்டலுக்கு ஆளானார். தன் பணியை நேர்மையாக செய்ததற்காக, அந்த அதிகாரிக்கு இந்த நிலைமை ஏற்பட்டது. தேர்தலின் போது, நேர்மையாக கடைமைச் செய்த அதிகாரிகள் தொந்தரவுக்கு ஆளாயினர். அவர்கள், வட கிழக்கு மாநிலங்களுக்கும், மிகவும் தொலைவில் உள்ள ஊர்களுக்கும் தூக்கியடிக்கப்பட்டனர். மத்திய நிதி பொறுப்பில் உள்ள அமைச்சருக்கு பணியாத அதிகாரிகள், இந்த நிலைமைக்கு ஆளாயினர். நிர்வாக ரீதியான காரணத்தை காட்டி, அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவு, டில்லியில் உள்ள அந்த அமைச்சர் அலுவலகத்தில் இருந்து பிறப்பிக்கப்பட்டது. பொதுவாக, வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், தங்களின் வர்த்தக நடவடிக்கைகளுக்காக, கடன் பெறுவர். இந்த நிதிப் பரிமாற்றம், நேர்மையாக நடந்துள்ளதா என, துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவது வழக்கம். ஆனால், கலைஞர் "டிவி'க்கு, வந்த 200 கோடி ரூபாய் குறித்து, மத்தியில் உள்ள அந்த அமைச்சரின் தலையீட்டால், ஒருபோதும் விசாரணை நடத்தப்படவில்லை. சுப்ரீம் கோர்ட் இந்த விவகாரத்தில் தலையிட்ட பின்பே, விசாரணை நடத்தப்பட்டது. கலைஞர் "டிவி' யின் நிதிப் பரிமாற்றம் சரியாக இருந்தது என்ற ரீதியில் விசாரணை நடத்தி, நற்சான்றிதழ் அளிக்கும்படி, அதிகாரிகளுக்கு, அந்த அமைச்சகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இவ்வாறு நற்சான்றிதழ் கிடைத்து விட்டால், சட்டத்திலிருந்து தப்பிப்பதற்காக, அதை, சம்பந்தபட்ட "டிவி'சேனல் பயன்படுத்தலாம் என்பது தான் நோக்கம். துரதிர்ஷ்டவசமாக, பிரதமர் அலுவலகம் இதில் தலையிட்டு விட்டது. இந்த விசாரணையை சுப்ரீம் கோர்ட் கண்காணிக்கிறது என, சம்பந்தபட்ட அமைச்சர் எச்சரிக்கப்பட்டார். கறுப்பு பணத்தை பாதுகாப்பதற்காக பணியில் ஈடுபடுத்தப்பட்டவர், கடந்த ஏழு ஆண்டு பதவி காலத்தில், பல ஆயிரம் கோடி ரூபாய்களை சம்பாதித்துள்ளார் என குற்றம்சாட்டப்படுகிறது. அப்படியென்றால், மற்ற இலகாக்களை வகிக்கும் அமைச்சர்கள் எந்த அளவுக்கு சம்பாதித்திருப்பர்? இப்படிப்பட்ட அமைச்சர்களை வைத்துக் கொண்டிருக்கும் பிரதமர், கறுப்பு பணத்தை ஒழிக்க எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? மத்திய அமைச்சரவையின் முக்கியமான துறையை, தி.மு.க., வைத்துக்கொண்டிருக்கும்போது, "2ஜி' ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்த விசாரணையில், சி.பி.ஐ., மற்றும் அமலாக்க பிரிவு இயக்குனரகம் ஆகியவற்றுடன் வருமான வரித் துறை ஒருங்கிணைந்து செயல்பட்டு, எப்படி நேர்மையான விசாரணை நடத்த முடியும்? "2ஜி' ஒதுக்கீடு தொடர்பாக நிதி அமைச்சகம் தீவிர விசாரணை மேற்கொள்ளவில்லை என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது. ஆனால், கறுப்பு பணத்தை பாதுகாப்பதில் ஆர்வமாக உள்ள அமைச்சர் இருக்கிறார் என்பதையும், ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடையவர்கள் இருக்கின்றனர் என்பதையும், கோர்ட்டுக்கு யார் தெரிவிப்பது எனத் தெரியவில்லை. "வருமான வரித் துறை தூங்குகிறது என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் கூறியபோது, அத்துறையின் நேர்மையான அதிகாரிகள் மிகவும் வருத்தப்பட்டோம். "ஆனால், எங்களுக்கு மயக்க மருந்தோ அல்லது தூக்க மத்திரையோ கொடுத்து, அமைச்சர் எங்களைத் தூங்க வைத்துள்ளார் என்பதை நாங்கள் எப்படி கூற முடியும்?' என்ற கவலையில் உள்ளோம் என்கின்றனர், வருமானவரித்துறையில் உள்ள நேர்மையான அதிகாரிகள். அமைச்சர்களிடம், "நல்ல' பெயர் எடுத்துள்ள வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு, நல்ல பதவிகள் வழங்கப்படுகின்றன. அவர்களின் சேவைகள், "2ஜி' ஊழலில் தொடர்புடையவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக பயன்படுத்தப்படுகிறது. எனவே, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த விசாரணை நேர்மையாக நடக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் விரும்பினால், தமிழகத்தில் உள்ள வருமான வரித் துறை, மாற்றி அமைக்கப்பட வேண்டும். தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் அல்லது அவர்களை பிரதமர் மன்மோகன் சிங் பதவி நீக்கம் செய்ய வேண்டும். அப்போது தான், உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய முடியும். ஊழல் செய்தவர்களிடம் இருந்து, பணத்தை மீட்க முடியும் என, நேர்மையான வருமானவரித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த செய்தி, சுப்ரீம் கோர்ட் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்பதே, நேர்மையான அதிகாரிகளின் விருப்பமாக உள்ளது. நேர்மையான ஐ.பி., அதிகாரிகள் இந்த விஷயத்தை டில்லி வரை கொண்டு செல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம். நமது சிறப்பு நிருபர்

Tuesday, July 12, 2011

பழசு இன்றும் புதுசு

திருச்சி மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு போன்... ''விக்கிரமங்கலம் போலீஸ் ஸ்டேஷன்​தானே..?'' - அந்த ஊரின் முக்கியப் பிரமுகர் பேசினார். ''சொல்லுங்க சார்...'' ''நான் சொன்ன ஆளை ரிலீஸ் பண்ணாம, கேஸ் புக் பண்ணிட்டீங்களாமே?'' ''சார்... அது...'' ''ம்... உங்களை முந்திரிக் காட்டு இன்வெஸ்டி​கேஷனுக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணச் சொல்லிடவா?'' ''ஐயோ... முந்திரிக் காடா..? சார், நான் புள்ளை​குட்டிக்காரன் சார்!'' ஜெயங்கொண்டம் பகுதியில் ஒரு வீட்டு வாசலில் குழந்தை ஒன்று சாப்பிட மறுத்து அழுது​கொண்டு இருந்தது. அதன் பாட்டி, ''அழுகையை நிப்பாட்டிட்டுச் சாப்பிடறியா, இல்லே முந்திரிக் காட்டுல கொண்டுபோய் விட்டுறவா?'' என்று சொல்ல... குழந்தை சட்டென்று அழுகையை நிறுத்திவிட்டு, மடமடவென்று சாப்பிட்டுவிட்டது! - இப்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களிலும் 'முந்திரிக் காடு... முந்திரிக் காடு’ என்ற பெயரையே முணுமுணுக்கிறார்கள். அது என்ன முந்திரிக் காடு?! திருச்சி, தென் ஆற்காடு மாவட்டங்களை இரண்டாகப் பிரிக்கிறது வெள்ளாறு. இந்த ஆற்றின் ஒரு கரையின் நெடுகிலும் பல நூறு ஏக்கர் கரும்புத் தோட்டங்கள். மறு கரையின் நெடுகிலும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களில் மண்டிக்கிடக்கிறது முந்திரிக் காடுகள். தப்பித் தவறி எவராவது அங்கு மாட்டிக்கொண்டால், லேசில் திரும்பி வர முடியாது. காரணம் - சிக்கலான பாதை அமைப்பு மட்டும் அல்ல... 'தனித் தமிழ்நாடு’ பிரிவினை கோரும் தீவிரவாத இயக்கத்தினர் ஆயுதப் புரட்சி செய்ய இதுவே சரியான இடம் என்று தேர்ந்தெடுத்து, இங்கே தங்கி இருப்பதுதான். ஒரு வருடத்துக்கு முன்பு இங்கு நடந்த தமாஷான சம்பவம்... வல்லம் கிராமத்தை ஒட்டிய முந்திரிக் காட்டில் தீவிரவாத இயக்கத் தலைவர்கள் கலந்துகொள்ளும் ரகசியக் கூட்டம், 10-ம் தேதி அதிகாலை நடக்கப்​போவதாக சி.ஐ.டி. போலீஸுக்குத் தகவல் வந்தது. அந்தக் குறிப்பிட்ட நாளுக்கு முதல் நாளன்றே இரவோடு இரவாகப் பெரிய போலீஸ் பட்டாளமே முந்திரிக் காட்டில் நுழைந்தது, அங்குலம் அங்குலமாக முன்னேறியது. ஒரு மரத்தடியில் வாழை இலைகளும், ஆட்டுக் கால்களும் கிடந்தன. அதை எண்ணிப் பார்க்கும்போது, இத்தனை பேர் ரகசியக் கூட்டத்தில் கலந்துகொண்டு விருந்து சாப்பிட்டுவிட்டுப் போய்விட்டனர் என்பதை போலீஸாரால் யூகிக்க முடிந்தது. எவரையும் பிடிக்க முடியவில்லை. காரணம் - தீவிரவாதிகளின் ரகசிய பாஷையில், 10-ம் தேதி என்றால் 1-ம் தேதி என்று அர்த்தம் (இது மாறும்!). ''முந்திரிக் காட்டுக்குள்ளே ஏடா​கூடமாகப் போகாதீங்க... ஏன்னா, தீவிரவாத இயக்கங்களோட முன்னணித் தலைவர்கள் பலரை போலீஸ் பிடிச்சுட்டதால், பயங்கரக் கடுப்புல இருக்காங்க. ஒருவேளை, உங்களையும் பணயக் கைதியாகப் பிடிச்சுவெச்சுக்கிட்டு, அவங்களை விடுவிக்கச் சொன்னாலும் சொல்லலாம்!'' என்று நாம் முந்திரிக் காடுகளில் நுழையும் முன்பு, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் நம்மை எச்சரித்தார்! தென் ஆற்காடு மாவட்ட எல்லையோர ஊரான பெண்ணாடத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவரிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டோம். அவரது குடிசைக்கு நம்மை அழைத்தார். குடிசையில் நிறையப் பொருட்​கள் இல்லை. கம்யூனிஸ புத்தகங்கள் கட்டப்பட்ட ஒரு பண்டல் இருந்தது. அது குறித்து இளைஞரிடம் கேட்டோம். ''எங்க ஊர்ல நூத்துக்கும் அதிகமான பட்டதாரிகள் வேலை இல்லாம இருக்கோம். எங்க பகுதிக்குனு பெரிய தொழிற்சாலை எதுவும் இல்லை. அதனால், கூலி வேலைகள் பார்த்துத்தான் சாப்பிட வேண்டியிருக்கு. படித்துவிட்ட ஒரே காரணத்தால், உலக விஷயங்களைப்பத்தி நிறைய படிச்சுத் தெரிஞ்சுக்க ஆர்வம் இருக்கு. அதனால், தோழர்கள்கிட்ட இருந்து புத்தகங்களை வாங்கிப் படிக்கிறோம். இப்படிப் படிக்கிறதால், எங்களை நக்ஸலைட்னு போலீஸார் முத்திரை குத்திடறாங்க. எங்க ஊர் இளைஞர்களுக்கு, பொண்ணு கொடுக்கக்கூட மத்த ஊர் ஆளுங்க தயங்கறாங்க. முந்திரிக் காடுகள்ல இருக்கிறவங்களைப்பத்தி போலீஸுக்கு உளவு வேலை செய்யணும்னு வற்புறுத்துறாங்க. தெரியாதுன்னா... மிரட்டறாங்க. இந்த நிலைமையில் நாங்க பொறியில் சிக்கிய எலியாத் தவிக்கிறோம்!'' என்றார். நமக்குக் கிடைத்த தகவலின்படி, சைக்கிளில் மட் கார்டு, பெல், பிரேக், டைனமோ இல்லாமல், எவராவது சைக்கிள் ஓட்டிச் சென்றால், அவர் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதை யூகித்துக்கொள்ளலாம் என்று ஒரு தகவல்! அப்படிப்பட்ட அடையாளத்​தோடு இரும்புலிக்குறிச்சி அருகே ஒருவரைப் பார்த்தோம். அவரிடம் பேச்சுக் கொடுத்தோம். அவர் மசியவில்லை. பிறகு கொஞ்ச நேரம் கழித்து, ''அண்டர்கிரவுண்டில் இருக்கிறவங்களை நீங்க சந்திக்க விரும்புற விஷயம் குறித்து டி.சி. (அது என்னவென்றே புரியவில்லை!) கமிட்டி கூடி, முதல்ல விவாதிக்கும். அவங்க அனுமதிச்சா, நீங்க முந்திரிக் காடுகள்ல வந்து தோழர்களை சந்திக்க முடியும். அதற்குப் பொறுமை வேண்டும். இன்னொரு முறை இங்கே வந்தா, அதற்கு ஏற்பாடு செய்வோம்!'' என்று சொல்லிவிட்டு, சைக்கிளை ஓட்டிக்கொண்டு போய்விட்டார். 'இப்படி அண்டர்​கிரவுண்டில் ஓர் இயக்கம் செயல்படுகிறதா?’ என்று நாம் ஆச்சர்யப்பட்டபோது, இன்னொரு தகவலை நம்முடன் வந்திருந்த நிருபர் சொன்னார். அதாவது போலீஸ் விசாரணை ஒன்றின்போது ஒரு தீவிரவாதியை நிருபர் சந்தித்தாராம். அப்போது, அந்தத் தீவிரவாதி சொன்ன தகவல் இது: ''தீவிரவாத இயக்கத்தில் சேர்வதற்குப் பல கட்டத் தேர்வுகள் உண்டு. ஒன்று - உயரமான தென்னை மரத்து உச்சியில் ஏற்றிக் கையில் குடுவைத் தண்ணீர் மட்டும் கொடுத்துவிட்டுப் போய்விடுவார்கள். குறைந்தபட்சம் மறு நாள் வரை அங்கேயே இருக்க வேண்டும். மற்றொன்று - சுடுகாட்டில் நடுராத்திரியில் ரகசியக் கூட்டத்துக்கு வரச் சொல்வார்கள். குடும்பப் பாசம் இருக்கிறதா என்பதைச் சோதிக்க, திடீரென்று அம்மா அப்பா யாராவது இறந்துவிட்டதாகத் தகவல் சொல்வார்கள். நம்முடைய ரியாக்ஷன்களைக் கவனிப்பார்கள். இதுபோல, குடி, பெண்கள் விஷயத்திலும் (வெளிப்படையாகச் சொல்ல முடியாத) பல டெஸ்ட்டுகள் உண்டு. இவற்றில் எல்லாம் தேற ஐந்து வருடங்கள் பிடிக்கும். அதன் பிறகுதான் முழுமை பெற்ற தீவிரவாதியாகக் கருதிப் பொறுப்பைத் தருவார்கள்!’ என்று சொன்னாராம். தனித் தமிழ்நாடு பிரிவினைவாதிகளுக்கு ஆயுத சப்ளை செய்பவர் பெயர் தினேஷ். இவர் மாஜி இலங்கைப் போராளி. இதற்கு முன்பு நடந்த வெடிகுண்டு சம்பவங்களுக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவியது இவர்தான். இவரிடம் இருந்து ஆயுதங்களை விலைக்கு வாங்கி, அதைக்கொண்டு தமிழகத்தில் ஆயுதப் புரட்சி செய்வதே பிரிவினைவாதிகளின் எதிர்காலத் திட்டம் என்று கூறப்படுகிறது. இதன் பொருட்டு, 'தனித் தமிழ்நாடு கோரும் பிரிவினைவாதிகள்’ என்று முத்திரை குத்தப்பட்டு, அந்த வகையில் விரைவில் கைது செய்யப்பட வேண்டியவர்களின் பட்டியலில் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களும் உண்டு! - ஆர்.பாலகிருஷ்ணன் தமிழரசன் இன்னும் சாகவில்லை..?! பொன்பரப்பி வங்கிக் கொள்ளை சம்பவத்தின்போது தமிழரசன் இறந்துவிட்டதாக போலீஸாரால் அறிவிக்கப்பட்டது அல்லவா? ஆனால், முந்திரிக் காடுகளில் தமிழரசன் நடமாட்டம் இருப்பதாகக் கிராமவாசிகள் மத்தியில் ஒரே பேச்சு! தென் ஆற்காடு மாவட்டத்தில் இருக்கும் மதகளிமாணிக்கம் கிராமத்தில் வசிக்கும் தமிழரசனின் தாயார் புதூசம்மாளிடம் பேசினோம்: ''அன்னிக்கு ஜெயங்கொண்டம் ஆஸ்பத்திரிக்குப் பதறி ஓடினேன். கூறு போட்ட உடம்பு ஒண்ணைக் காட்டினாங்க. உருவமே தெரியலை. கை, கால் சூம்பிப் போயிருந்துச்சு. என் பையனுக்கு அப்படி இருக்காது. அதுவும், சின்னப் புள்ளைல மஞ்சக் காமாலை வந்தப்போ, கை புஜத்தில் அறுத்து மருந்து போட்ட வடு இருக்கும்... முகத்துலயும் இன்னொரு வடு இருக்குமேனு தேடினேன். ஒண்ணுமே இல்லை. 'இது என் பிள்ளை இல்லையே!’னு சொன்னேன். போலீஸ்காரங்க என்னைத் தனியா அழைச்சுட்டுப் போய், 'இதான் என் பையன்’னு சொல்லச் சொன்னாங்க. என்னோட உறவுக்காரங்களும் 'கிழவி, உனக்கு வயசாச்சு, வாயை மூடு, இதான் நம்ம தமிழரசன்!’னாங்க. அந்தச் சூழ்நிலையில் என்னால ஒண்ணுமே சொல்ல முடியலை. ஆனா, இப்போதைக்கு என் பையன் உயிரோட இருக்கிறதா, எல்லாரும் பேசிக்கிறாங்க. எப்படி இருந்தாலும், என் பையன் திரும்பி வருவான்!'' என்றார். திருச்சி சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் நம்மிடம், ''தமிழரசன் இறந்தது நிரூபிக்கப்பட்ட ஒன்று. ஆனால், ஒரு சில தினப் பத்திரிகைகள், தமிழரசன் உயிரோடு இருப்பதாகக் கதை விட்டிருக்கின்றன. அப்படி எழுதும் நிருபர்களைப் பிடித்து, நக்ஸலைட் கேஸில் போட்டால்தான் இப்படிப்பட்ட பொய்ச் செய்திகளை எழுத மாட்டார்கள்!'' என்று எரிச்சலோடு சொன்னார்.

மெட்ரிகுலேஷன் பாடத்தில் ஆயிரம் குறைகளைக் காட்டவா?''

மெட்ரிகுலேஷன் பாடத்தில் ஆயிரம் குறைகளைக் காட்டவா?'' கல்வியாளர் வசந்தி தேவி சுரீர்... ''ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களைக் கேவலப்படுத்தி​விட்​டது தமிழக அரசின் சமச்சீர்க் கல்விக்கான ஆய்வுக் குழு!'' - ஆதங்கமும், வேதனையும் ஒருசேரப் பொங்குகிறது மூத்த கல்வியாளரும் முன்னாள் துணை வேந்தருமான வசந்திதேவியின் குரலில்! சமச்சீர்க் கல்வி தொடர்பான விவாதங்கள் நீதிமன்றத்தில் அனல் பறக்கும் நேரத்தில், அவரை சந்தித்தோம். ''நீதிமன்ற விசாரணை நடந்துகொண்டு இருக்கும்போதே, புத்தகங்களை அச்சடித்து நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறது தமிழக அரசு. இப்படி ஓர் அறிக்கையை அரசு நியமித்த குழுவினர் கொடுப்பார்கள் என்று நீதிமன்றமே எதிர்பார்க்கவில்லை. அரசு மீது நம்பிக்கைவைத்து, நீதிமன்றம் அரசையே ஒரு குழு அமைக்கச் சொன்னது. ஆனால், சமச்சீர்க் கல்வித் திட்டத்தை எதிர்த்தவர்களைக்கொண்டே, குழு அமைத்தது அரசு. அதனால்தான், இப்படி ஒரு மோசமான அறிக்கையை அவர்கள் தாக்கல் செய்து இருக்கிறார்கள். 'இந்தப் பாடத் திட்டத்தைக் கற்றுக்கொள்ள முடியாது. நகர்ப்புற, வசதியான மாணவர்களால் மட்டுமே முடியும்...’ என்றெல்லாம் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்கள். இன்று குறைந்த வசதிகளை மட்டுமேகொண்டு, 100 சதவிகிதம் தேர்ச்சி பெறும் கிராமப்புறப் பள்ளிகளை நான் காட்டவா? மொத்தத்தில் இது பாடத் திட்டம் தொடர்பான பிரச்னையே இல்லை. கல்விக் கட்டணக் கொள்ளை அடிக்கும் கும்பலுக்கும் - நியாயமான, சமச்சீரான கல்வி வேண்டும் என்பவர்களுக்குமான போராட்டம் என்பதுதான் உண்மை! மத்திய அரசின் கட்டாயக் கல்வி சட்டம், 'ஒவ்வொரு பள்ளியும் அருகில் இருக்கும் பகுதியைச் சேர்ந்த ஏழை, ஒடுக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய மாணவர்களுக்காக, பள்ளியில் 25 சதவிகிதம் இடஒதுக்கீடு செய்ய வேண்டும்’ என்கிறது. இதைக் கடுமையாக எதிர்க்கின்றன மெட்ரிகுலேஷன் பள்ளிகள். சென்னையில் இருக்கிற ஒரு பள்ளி ஒருபடி மேலேபோய், மிகவும் கண்டனத்துக்குரிய சர்க்குலர் ஒன்றை பெற்றோருக்கு அனுப்பி இருக்கிறது. அதில், 'மத்திய அரசு சட்டத்தின்படி 25 சதவிகிதம், ஏழை, பாமரக் குழந்தைகளுக்கு இடஒதுக்கீடு செய்தால், உங்கள் குழந்தைகளின் கல்வித் கற்கும் திறன் பாதிக்கும். அவர்களோடு இணைந்து உங்கள் குழந்தைகள் படித்தால், உங்கள் குழந்தைகள் பாழாகிவிடுவார்கள். தகுதியற்ற, ஒழுங்கீனமான குழந்தைகளை உங்கள் குழந்தைகளுடன் ஒன்றாகப் படிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால், எங்கள் ஆசிரியர்களின் நேரமும் வீணாகிறது. எனவே, இந்த சட்டத்தை எதிர்த்து நீங்கள் போராட்டம் நடத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டு உள்ளது. இந்தப் பள்ளியின் தாளாளரைத்தான் சமச்சீர்க் கல்வி ஆய்வு கமிட்டியில் தமிழக அரசு நியமித்து உள்ளது. இவர்களிடம் இருந்து நியாயமான அறிக்கையை எப்படி எதிர்பார்க்க முடியும்? முதலில், நீதிமன்றம் இந்தக் குழுவினரிடம் சமச்சீர்க் கல்வித் திட்டம் வேண்டுமா... வேண்டாமா? என்று கேட்கவில்லை. எந்தப் பாடத் திட்டம் தரமானது என்றுதான் கேட்டது. ஆனால் இவர்களாகவே, 'சமச்சீர் கல்வித் திட்டம் வேண்டாம்’ என்கிறார்கள். அதைச் சொல்லவேண்டியது நீதிமன்றம் மட்டுமே! தேசியக் கலைத் திட்டத்தில் உள்ள கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான குழுதான், தேசிய அளவில் பள்ளிக் கல்விக்கான பொதுவான வழிகாட்டுதல்களைக் கொடுக்கிறது. கேரளா மற்றும் இமாசலப் பிரதேசத்தில் இதன் அடிப்படையில் மிகத் தரமான கல்வித் திட்டத்தை போதிக்கிறார்கள். இந்தக் குழுவின் வழிகாட்டுதலைக்கொண்டு சமச்சீர்க் கல்வித் திட்டத்தை உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால், அதில் உப்புச் சப்பு இல்லாத குறைகளைக் கண்டுபிடித்து உள்ளது அரசின் ஆய்வுக் குழு. மெட்ரி​குலேஷன் பாடத் திட்டத்தில் ஆயிரம் குறைகளையும் ஓட்டைகளையும் நான் கண்டுபிடித்து சுட்டிக் காட்டவா? 'சமச்சீர்க் கல்விப் பாடத் திட்டம், குழந்தைகள் மீதான சுமையை அதிகப்படுத்துகிறது. வயதுக்குத் தகுந்த கல்வி இல்லை’ என்று குறிப்பிட்டு உள்ளனர். மெட்ரிகுலேஷன் பள்ளிகள்தான் 'நீயா... நானா?’ என்ற போட்டியில் குழந்தைகள் மீது அதிகமான சுமையை சுமத்துகின்றன. எட்டாம் வகுப்பில் கற்க வேண்டிய கல்வியை, ஐந்தாம் வகுப்பில் சொல்லிக் கொடுக்கிறார்கள். இப்படிச் சொல்லிக் கொடுப்பதுதான், தரமற்ற கல்வி; திணிக்கப்படுகிற கல்வி. நீங்கள்தான் வயதுக்குத் தகுந்த கல்வியைக் கொடுக்காமல் குழந்தைகளின் மூளைத் திறனை மழுங்கடிக்கிறீர்கள். பத்திரிகையாளர் சோ, 'சமச்சீர்க் கல்வித்திட்டத்தை மாட்டு வண்டியுடன் ஒப்பிட்டு’ எழுதி இருக்கிறார். அனைத்துத் துறை வல்லுநர்கள் இணைந்து உருவாக்கியதுதான் சமச்சீர்க் கல்வி. மெட்ரிகுலேஷன் தேர்வுகளில் சாய்ஸ் நிறைய உண்டு. அதனால், அதைக் கற்பிக்கும் ஆசிரியர்களும், 'குறிப்பிட்ட பகுதியை மட்டும் படி’ என்று மாணவர்களுக்கு அறிவுறுத்துகிறார்கள். அதை மட்டுமே படித்து தேர்வு எழுதுகிறான் மாணவன். ஆனால், சமச்சீர்க் கல்வியில் சாய்ஸ் கிடையாது. முழுப் புத்தகத்தையும் படித்து மெத்த அறிவு பெறுகிறான் மாணவன். இப்போது சொல்லுங்கள், மெட்ரிகுலேஷன் பாடத் திட்டம், மாட்டு வண்டியா? சமச்சீர் கல்வி பாடத் திட்டம், மாட்டு வண்டியா?'' கேள்வியுடன் முடிக்கிறார் வசந்திதேவி. பதிலும் தீர்வும் நீதிமன்றத்தின் தீர்ப்பில் உள்ளது! - டி.எல்.சஞ்சீவிகுமார்

செங்கோட்டையனுக்கு செக் வைக்கிறாரா சசிகலா?

'வேளாண்மைத் துறையில் அறிவிக்கப்​படாத அமைச்​சராக செயல்படுபவர், சசிகலாவின் உறவினர் பொன்​னுச்சாமிதான். டிரான்ஸ்ஃபர் தொடங்கி, போஸ்ட்டிங் வரை எல்லாமே பொன்னுச்சாமியின் கண் அசைவில்​தான் நடக்கிறது’ என்று வேளாண்மைத் துறை வட்டாரத்தில் இருந்து தகவல் கசியவே... விசார​ணையில் இறங்கினோம். யார் இந்தப் பொன்னுச்சாமி? வேளாண்மை விதை சான்று இயக்குநர், வேளாண்​மைக் கூடுதல் இயக்குநர் - பணி மேலாண்மை, வேளாண்மைக் கூடுதல் இயக்குநர் - இயற்கை விவசாயம் என மூன்று பதவிகளை வகித்துக்கொண்டு இருக்கும் ஓர் அதிகாரி. இது எல்லாவற்றையும்விட, சசிகலாவின் சகோதரர் மனைவியான இளவரசிக்கு சொந்தக்காரர் என்பது இவரின் கூடுதல் தகுதி. கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்ற விவசாயி, ''கடந்த வருடம் என்​னோட தோட்டத்துக்குப் போடுறதுக்கு, 'பாஸ்போ பேக்டீரியா’ உரத்தை விவசாய ஆபீஸில் இருந்து வாங்கினேன். அதைப் பிரித்தபோது, உள்ளே சாம்பல்தான் இருந்தது. கோவையில் உள்ள வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு அதைப் பரிசோதனைக்கு அனுப்பினேன். 'அது உயிர் உரமே கிடையாது’ என ரிப்போர்ட் கொடுத்தார்கள். அப்போது வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகத்துக்கு வேண்டப்பட்ட ஒரு நிறுவனம்தான், இப்படி லிக்னைட் பவுடருக்குப் பதிலாக சாம்பலை பாக்கெட் செய்து விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது தெரிய வந்தது. வேளாண்மைத் துறை அதிகாரிகளுக்கு நான் புகார் அனுப்பினேன். என்னுடைய புகாரை விசாரிக்க, திருச்சியில் வேளாண்​மைத் துறை இணை இயக்குநராக இருந்த பொன்னுச்​சாமியை நியமித்தார்கள். ஆனால், என்னிடம் பொன்னுச்சாமி உரிய விசாரணை நடத்தாமலேயே, 'எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது’ என சொல்லி​விட்டார். முன்னாள் அமைச்சர் நேருவுக்கு மிகவும் நெருக்கமானவர், இந்த பொன்னுச்சாமி. மேலும் நேருவின் தம்பி ராமஜெயத்தின் தோட்டத்தை இவர்தான் கவனிக்கிறார் என்பதால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்சி மாறிய பிறகாவது நல்லது நடக்கும் என நினைத்தேன். ஆனால், இந்த ஆட்சியிலும் பொன்னுச்சாமியின் அதிகாரம் குறையவில்லை. ஐ.ஏ.எஸ். அதிகாரி வகித்து வந்த பொறுப்பை, பொன்னுச்சாமிக்குக் கொடுத்து விட்டார்கள். சசிகலா குடும்பத்தைப் பிடித்துப் பெரிய பதவிக்கு வந்துவிட்டார். வேளாண்மைத் துறையில் கடந்த ஆட்சியில் நடந்த ஊழல்களைவிட, இந்த ஆட்சியில் அதிக ஊழல்கள் நடக்கப்போகின்றன. அதனால், உடனடியாக அந்த அதிகாரி மீது முதல்வர் அம்மா நடவடிக்கை எடுக்க வேண்டும்!'' என்று கேட்டுக்கொண்டார். வேளாண்மைத் துறை வட்டாரத்தில் பொன்னுச்சாமி​பற்றி விசாரித்தோம். ''சின்னம்மாவின் தயவில்தான் ஏ.டி-யாக இருந்தவருக்கு பதவி உயர்வு என்ற பெயரில் பல பொறுப்புகளைக் கொடுத்து இருக்கிறார்கள். வேளாண்மைத் துறையில் அனைத்தையும் முடிவெடுக்கும் அதிகாரம் இப்போது பொன்னுச்சாமி கையில்தான் இருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும், தமிழக விவசாயி​களின் மேம்பாட்டுக்காக, உலக வங்கி கோடிக்கணக்கில் நிதி உதவி செய்கிறது. நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த ஆண்டு ஒன்றுக்கு 125 கோடி ஒதுக்குகிறது. தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்துக்காக, 100 கோடி வழங்குகிறது. தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்துக்காக, 50 கோடி கொடுக்கிறது. எண்ணெய் வித்துகள் திட்டத்தில் 25 கோடியும், தேசியப் பருப்பு வகைகள் அபிவிருத்தித் திட்டத்துக்காக 15 கோடியும் ஆண்டுதோறும் கொடுக்கிறது. கடந்த ஐந்து வருடங்களாக இப்படிக் கொடுத்த பணம் எல்லாம் எங்கே போனது? எல்லாம் வெறும் ரசீதுகளாக மட்டுமே கணக்குக் காட்டப்பட்டு ஃபைலில் தூங்குகிறது. இதைப்பற்றி விசாரணை நடத்தவும் முதல்வர் உத்தரவிட வேண்டும். பொன்னுச்சாமியை வைத்துக்கொண்டு, இந்த விசாரணையை முறையாக நடத்த முடியுமா? தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது பொன்னுச்சாமியின் மகளின் திருமணம், திருச்சியில் கோலாகலமாக நடந்தது. அதற்குத் தலைமை தாங்கியதே முன்னாள் அமைச்சர் நேருதான்!'' என்று புகார் படித்தார்கள். சென்னை எழிலகத்தில் உள்ள வேளாண்மைத் துறை அலுவலகத்தில் பொன்னுச்சாமியை சந்தித்தோம். ''சதிஷ்குமார் அனுப்பிய புகாரில் உண்மை கிடையாது. ஏற்கெனவே அதைப்பற்றி முழுமையான விசாரணை நடத்திவிட்டேன். முன்னாள் அமைச்சர் நேருவும் அவர் சகோதரர் ராமஜெயமும், நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே எனக்கு நண்பர்கள். ராமஜெயத்தின் தோட்டத்தை மாதிரிப் பண்ணையாக மாற்றி அமைக்கச் சொல்லிக் கேட்டார்கள், நானும் செய்து கொடுத்தேன். விதிகளை மீறி நான் எதுவுமே செய்யவில்லை. என் மகள் திருமணம் நடந்தபோது, நண்பர் என்ற முறையில் நேருவை அழைத்து இருந்தேன். உறவினர் என்ற முறையில், சசிகலாவையும் அழைத்து இருந்தேன். இரண்டு பேருமே திருமணத்துக்கு வந்தார்கள். இதை நான் எங்கேயும் மறைக்கவில்லை. சொந்தம் என்பதற்காக, சசிகலா எனக்கு எந்த சலுகையும் செய்தது கிடையாது. நானும் என் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வது இல்லை. எந்த விசாரணை கமிஷன் வேண்டுமானாலும் அமைக்கட்டும். நான் தப்பு செய்து இருந்தால்... தாராளமாக நடவடிக்கை எடுக்கட்டும்!'' என்று நிதானமாகச் சொல்லி முடித்தார். சமீபத்தில் வேளாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையனின் உதவியாளர் ஒருவரை, அமைச்சருக்குத் தெரியாமலே மாற்றிவிட்டார் என்றும் பொன்னுச்சாமி மீது ஒரு புகார் சொல்லப்படவே, உளவுத் துறை மூலம் விசாரணை நடக்கிறதாம். அமைச்சரை டம்மி ஆக்க சசிகலா இவரை நியமித்துள்ளார் என்ற சந்தேகமும் கோட்டை வட்டாரத்தில் வலுவாக உள்ளது!