வாழ்க வளமுடன்! - வேதாத்திரி மகரிஷி
சந்தோஷ சூட்சுமம்!
பயணங்கள் சுகமானவை. எத்தனை முறை சென்றாலும் ரயில் பயணம் எவருக்கும் அலுப்பதே இல்லை. ஓடும் ரயிலின் சீரான தடதட சத்தமும், இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் லேசாக அசைந்து, அன்பான அம்மா போல நம்மைத் தாலாட்டி ஆட வைத்து அழைத்துச் செல்லும் பாங்கும் மிக ரசனையானவை.
பேருந்துப் பயணம் மட்டும் என்ன... ஜன்னலோரத்தில் அமர்ந்துகொண்டால், காற்று விறுவிறுவென ஜன்னலுக்குள் புகுந்து, நம் தலையைக் கோதிவிடுவதில் இருக்கிற சுகம், அலாதியானது; ஈடு இணையே இல்லாதது!
வாழ்வில், இப்படியான இனிமைப் பயணங்கள் நிறையவே உண்டு. இன்னும் சொல்லப் போனால், இந்த வாழ்க்கை என்பதே பெரும் பயணம்தான், இல்லையா? இந்தப் பயணமும் ஒருவிதத்தில் சுகமானதுதான். என்ன ஒன்று... ரயிலிலும் பேருந்திலும் அதன் வேகமும் அடிக்கிற காற்றும் நம் பயணத்தை சுவாரஸ்யமாக்கும். ஆனால், வாழ்க்கைப் பயணத்தில், நாம் சுவாசிக்கும் காற்றில்தான், சந்தோஷத்துக்கான சூட்சுமமே அடங்கியிருக்கிறது.
மனவளக் கலைப் பயிற்சிக்கு வரும் அன்பர்களிடம், பொதுவாகச் சொல்வேன்... ''மனவளக் கலையில் நிறையவே பயிற்சிகள் உண்டு. எல்லாமே எளிமையானவை; மிகச் சுலபமாகப் புத்தியில் வாங்கிக்கொண்டு செயல்படுத்தக்கூடியவை. அதில், சுவாசப் பயிற்சியின்போது, ரொம்பவும் கவனம் எடுத்துக்கொண்டு கற்றுக் கொள்ளுங்கள். அதன் அவசியத்தை உணர்ந்து, அறிந்து, புரிந்துகொண்டு செயலாற்றுங்கள்'' என்பேன்.
ஒருமுறை அன்பர் ஒருவர், ''என்ன சுவாமி... மனவளக் கலைப் பயிற்சியின்போது, நீங்கள் கூடவே இருக்கிறீர்கள். போதாக்குறைக்கு, நம் அமைப்பைச் சேர்ந்த அன்பர்கள், சுற்றிச் சுற்றி வந்து ஆலோசனை சொல்கிறார்கள்; 'கைகளை இப்படி வைத்துக் கொள்ளுங்கள்; பாதங்களைத் தொடையின் மீது வைத்துக் கொண்டு, இந்த இரண்டு விரல்களாலும் மெள்ள அழுத்துங்கள்’ என்று சரிசெய்கின்றனர். எந்த விரல்களால், எந்த இடத்தில் இருந்து அழுத்தவேண்டும் என்று தெளிவாகச் சொல்லித் தருகின்றனர். அப்படியிருக்கும்போது, சுவாசப் பயிற்சியையும் அவர்களே பார்த்து சரிசெய்துவிடுவார்களே சுவாமிஜி! நீங்கள் இதற்கு இத்தனை கவலைப்படுவானேன்?'' என்று கேட்டார்.
கால்களைக் கைகளால் அழுத்துவது பற்றி அருகில் இருப்பவர்கள் எடுத்துச் சொல்வார்கள்; சரி செய்வார்கள். வஜ்ராசனம் எப்படி அமரவேண்டும் என்றும், அப்போது முதுகையும் கழுத்தையும் எப்படி வைத்துக் கொள்ளவேண்டும் என்றும் திருத்துவார்கள். ஆனால், மூச்சுப் பயிற்சியில், 'இப்படி அமர்ந்து கொள்ளுங்கள்; முதுகை நேராக்கிக் கொள்ளுங்கள்; மூச்சை நன்றாக உள்ளிழுங்கள்’ என்று சொல்வது மட்டும்தான் எங்களின் வேலை. அந்த மூச்சை எப்படித் துவங்கி, எங்கே முடிக்கவேண்டும்; அது எங்கே முடிகிறது என, மெள்ள மூச்சை இழுத்துக் கொள்வதும் பிறகு விடுவதுமாக இருக்கிற சூட்சுமத்தை நீங்களேதான் அறியமுடியும். காற்று எனும் பந்து, மூக்கின் வழியே நுழைந்து, நெஞ்சின் எந்த இடத்தில் போய் இடிபட்டு நிற்கிறது என்பதை உங்களால்தான் உணரமுடியும். ஆகவே, சொல்லும்போது கவனமாகக் கேட்பதும், செய்யும்போது அந்த மூச்சுப் பந்தினூடே நீங்கள் பயணம் செய்வதும் அவசியம்'' என்பதை விளக்கினேன்.
சரி... மூச்சுப் பயிற்சிக்கு வருவோம்.
சுவாசப் பயிற்சியில் மொத்தம் ஏழு நிலைகள் இருக்கின்றன. இந்த ஏழு நிலைகளையும் எவர் ஒருவர் சரியாகச் செய்கிறாரோ, அவர்களின் மூச்சுக் குழாய் சுத்தமாகும்; சைனஸ் போன்ற பிரச்னைகளில் இருந்து அவர்கள் நிவாரணம் பெறுவார்கள் என்பது மருத்துவர்கள் பலரே வியந்து சொன்ன உண்மை! ஆகவே, ஆழ்ந்த ஈடுபாட்டுடன் மூச்சுப் பயிற்சியைக் கற்றுக் கொள்ளுங்கள்; அருமையான, நிம்மதியான வாழ்க்கையை வாழ்வீர்கள் என்பது உறுதி!
வலது கையைத் தொப்புள் பகுதியிலும், இடது கையை வலது காதிலும் வைத்துக்கொண்டு, அடுத்து, இடது கையை தொப்புள் பகுதியிலும் வலது கையை இடது காதிலும் வைத்துக்கொண்டு... எனப் பயிற்சி செய்தீர்கள், அல்லவா?! இப்போது, வழக்கம்போல் சுகாசனத்தில் அமர்ந்துகொண்டு, வலது உள்ளங்கையால் இடது காதையும், இடது உள்ளங்கையால் வலது காதையும் பொத்திக் கொள்ளுங்கள். கண்களை மூடியபடி, மூச்சை உள்ளிழுத்து வெளியே விடுங்கள். அவசரமே வேண்டாம்; நிதானம்தான் இங்கே முக்கியம். இதேபோல் ஐந்து முறை செய்யும்போது, உங்கள் நுரையீரலின் பின்பகுதி முழுவதும் நன்கு விரிவடைவதை உங்களால் உணரமுடியும். இதையடுத்து, வலது உள்ளங்கையால் வலது காதையும், இடது உள்ளங்கையால் இடது காதையும் மூடிக் கொள்ளுங்கள். அப்போது, உங்களின் இரண்டு கைகளும் மடங்கினாற்போல் நெஞ்சினில் இருக்காமல், உங்களின் தோள்பகுதியைப் பார்த்தபடி இருக்கட்டும். கிட்டத்தட்ட, உங்களின் இரண்டு கை விரல்களும் பின்னந்தலையில் வந்து சேரும்படி இருக்கட்டும். இந்த நிலையில் இருந்தபடி, மூச்சை ஆழ்ந்து, நிதானமாக ஐந்து முறை இழுத்து, வெளியே விடுங்கள். இந்தப் பயிற்சியால், நுரையீரலின் முன்பகுதியும் கீழ்ப் பகுதியும் மிக அருமையாக விரிவடையும். கொஞ்சம் பொறுமையுடனும் ஈடுபாட்டுடனும் பயிற்சி செய்தால், உங்களால் நுரையீரலில் ஏற்படும் மாற்றங்களைத் தெளிவாக உணரமுடியும். நுரையீரல் சீராகிவிட்டதென்றால், மூச்சுக் குழாயின் வழியே வருகிற காற்று, தங்குதடையின்றி வரத்துவங்கிவிட்டது என்று அர்த்தம். மூச்சில் தடையேதுமின்றி இருந்தால், செயலிலும் தடைகள் இருக்காது; தடுமாற்றங்கள் நிகழாது. தடுமாற்றம் இல்லாத செயல்பாடுகள் எல்லாமே வெற்றியைத்தான் தரும் என்று நான் சொல்லவேண்டுமா, என்ன?
இன்னொரு விஷயம்... இந்த ஏழு நிலைப் பயிற்சிகளிலும், மூச்சை உள்ளிழுக்கலாம்; வெளியேற்றலாம். ஆனால், மூச்சை நிறுத்திவைக்க வேண்டிய அவசியமில்லை. யோகாசன முறையில், அப்படி மூச்சடக்குவதை கும்பகம் என்பார்கள். மனவளக் கலை உடற்பயிற்சியில், இந்தக் கும்பக முறை, எந்த இடத்திலும் இல்லை என்பதை அன்பர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
மூச்சுப் பயிற்சியின் ஏழாவது நிலையையும், ஏழு பயிற்சிகளால் நமக்குக் கிடைக்கிற நன்மைகள் என்னென்ன என்பதையும் உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.
அதற்கு முன், 'அப்பாடா...’ என்று ஒருமுறை மூச்சைத் தளர்த்திக்கொண்டு, ரிலாக்ஸ் செய்யுங்களேன்!
No comments:
Post a Comment