தி.மு.க-வுக்கும் காங்கிரஸுக்கும் உள்ள உறவை பத்திரிகைகள்தான் கெடுக்கின்றன’ என்கிறாரே கலைஞர்?''
''ஆமாம், குற்றப் பத்திரிகைகள்!''
- தாமு, தஞ்சாவூர்.
'' 'முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டினாலும், தமிழகத்துக்குத் தண்ணீர் தருவோம்’ என்கிறதே கேரளா?'
''கச்சத் தீவு தாரைவார்க்கப்பட்டபோதுகூட, 'தமிழக மீனவர்கள், கச்சத் தீவில் மீன் பிடிக்க எந்தத் தடையும் இல்லை’ என்றுதான் இலங்கையும் சொன்னது!''
- அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.
''உலகின் மிகச் சிறந்த காதலி யார்?''
''ஜென்னி மார்க்ஸ். வசதியான குடும்பத்தில் பிறந்து, கார்ல் மார்க்ஸைத் திருமணம் செய்து, ஏராளமான துயரங்களைச் சந்தித்தவர். வறுமை யின் காரணமாக, அடுத்தடுத்து தன் குழந்தைகளைப் பறிகொடுத்தார். கார்ல் மார்க்ஸின் நடவடிக்கை களுக்காக, பெல்ஜியம் அரசாங்கத்தால் 'விபசார வழக்கில்’ கைது செய்யப்பட்டார் ஜென்னி. மார்க்ஸின் தோழர்கள் சிறையை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். பிறகு, நீதிமன்றத்தில் ஜென்னி நிறுத்தப்பட்டபோது, 'ஏன் குழந்தைகளையும் கைது செய்யவில்லை?’ என்று போலீஸைக் 'கண்டித்தார்’ நீதிபதி. கார்ல் மார்க்ஸ் ஒவ்வொரு நாட்டைவிட்டுத் துரத்தப்பட்டபோதும், எண்ணில்லாத நெருக்கடிகளைச் சந்தித்தார். லண்டனில் அழுத தன் பச்சிளம் குழந்தைக்குப் பால் கொடுக்க முடியாமல், ஜென்னியின் மார்புகளில் ரத்தம் வழிந்தது. பால் இன்றி இறந்துபோன குழந்தையை அடக்கம் செய்யவும் வசதி இல்லை. 'குழந்தை பிறந்தபோது தொட்டில் வாங்கக் காசு இல்லை; அவன் இறந்தபோது, சவப்பெட்டி வாங்க காசு இல்லை’ என்னும் ஜென்னியின் புகழ்பெற்ற கடித வரிகளில் இப்போதும் ரத்தம் கொட்டும். உலக வரலாற்றிலும் இலக்கியங்களிலும் லைலா, அமராவதி, ஜூலியட் என்று ஏராளமான காதலிகள் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் காதலையும் காதலனையும் மட்டுமே நேசித்தவர்கள். ஆனால், ஜென்னி மட்டும்தான் தன் காதலனின் லட்சியங்களையும், அதற்காகக் கொடுக்கப்பட்ட விலைகளையும் நேசித்தவர். மார்க்ஸைப் பிரியும்போது வழக்கமாக ஜென்னி சொல்லும் வார்த்தைகள் இவை..
'நீ என்னருகில் இல்லை என்றஉணர்வில்
நான் என்னிடம் இல்லை என்பதை
உணரக்கூட முடிவது இல்லை!’ ''
- ஆ.நங்கை, திருச்சி.
''ஜூலை 23-ம் தேதி கோவையில் தி.மு.க. செயற் குழு, பொதுக் குழு கூடுகிறதாமே, என்ன முடிவு எடுப்பார்கள்?''
''வேறு என்ன? நீண்ட நேரம் 'விவாதித்து’, 'காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்’ என்று முடிவு எடுப்பார்கள்!''
- பா.அமுதா, மதுரை.
''கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆவதற்கு உதாரணம்?''
''கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது எவ்வளவு விமர்சனங்கள் இருந்தபோதும், ஏழை எளிய மக்களுக்காகவும் பெண்களுக்காகவும் போராடுபவர்கள் என, அரசியலைத் தாண்டி எல்லோருக்கும் அந்தக் கட்சிகள் மீது மதிப்பு உண்டு. ஆனால், கேரளாவில் ஒரு ப்ளஸ் டூ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், கேரள சி.பி.எம். கட்சியினர் சிலர் கைது செய்யப்படுவதைப் பார்க்கும்போது, 'தோழர்களே, இழப்பதற்கு இனி எதுவுமே இல்லை. கடைசியாக மக்கள் உங்கள் மீது வைத்திருந்த மரியாதை உட்பட’ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது!''
- மணிமொழி, சேலம்
No comments:
Post a Comment