Friday, July 1, 2011

மிஸ்டர் கழுகு: மகிழ்ந்த மு.க. வருந்திய ஜெ.!

ழுகார் உள்ளே நுழையும்​போது, மணி சரியாக 6.
''மிக நீண்ட இடை​வேளைக்குப் பிறகு, கடந்த புதன்கிழமை மாலை கவலை மறந்த மனிதராக இருந்தார் கருணாநிதி!''
''நல்ல விஷயம். என்ன விசேஷம்?''
''கலைஞர் டி.வி-யில் ரசிகன் என்ற நிகழ்ச்சி கருணாநிதியைப்பற்றி வருகிறது அல்லவா? இதுவரை 18 வாரங்கள் வந்துள்ள அந்த நிகழ்ச்சியில், கடைசி இரண்டு வாரங்கள் கருணாநிதியின் நேரடிப் பேட்டியை ஒளிபரப்பு​கிறார்கள். 'ரசிகன்’ நிகழ்ச்சியின் இயக்குநரான மணிவண்ணன் என்ற இளைஞர் 25-க்கும் மேற்பட்ட கேள்விகளைக்  கொடுத்து​விட்டுக் கிளம்பத் தயாராக, 'இப்பவே கேளேன்யா’ என்றாராம் கருணாநிதி. உணர்ச்சிவசப்பட்ட உரையாடல் ஒரு மணி நேரம் தொடர்ந்ததாம். 'தலைவர் சந்தோஷமா சிரிச்சுப் பேசிட்டு இருக்கிறதைப் பார்த்தே எத்தனை நாளாச்சு!’ என்று குடும்பத்தினர் கமென்ட் அடிக்கும் அளவுக்குப் பழங்கதைகள் பேசி மகிழ்ந்தாராம்!''
''அரசியல் கமென்ட்கள் உண்டா?''
''அரசியல் இல்லாத இந்தப் பேட்டியில் திருவாரூரைப்​​பற்றிச் சொல்லும்போது கண் கலங்கிச் சொன்னாராம்... 'தமிழ்நாடே என்னைத் தோற்​கடித்தாலும், திருவாரூர் என்னை 50 ஆயிரம் வாக்​குகள் வித்தியாசத்தில் ஜெயிக்கவைத்தது. அந்த ஊருக்குத்தான் நான் நன்றிக்கடன் பட்டவன்’ என்று உருகினாராம்.''
''பொதுக் குழுவுக்குத் தயாராகிவிட்டாரா கருணாநிதி?''
''ஜூலை 23, 24 தேதிகளில் கோவையில் பொதுக் குழு. அதில்தான் பொருமல் அதிகமாக இருக்கும் என்று நினைத்தால், அதற்குள் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் முகத்தில் அதிக உஷ்ணத்தைப் பார்க்க முடிகிறது. தி.மு.க-வில் அதிகாரம் வாய்ந்த பதவி, மாவட்டச் செயலாளர் பதவிதான். மந்திரிகளைக்கூட மதிக்க மாட்டார்கள். மாவட்டம் என்றால், எழுந்து நிற்பார்கள். அந்தப் பதவியில் இருப்பவர்களின் அதிகாரத்தைப் பறித்து டம்மி ஆக்கும் காரியத்தைத் தொடங்கிவிட்டார் கருணாநிதி. இதற்கான தூபம் போட்டவர் ஸ்டாலின்.''
''அப்படியா?''
''சேலம் என்றால், வீரபாண்டியார்; விழுப்புரத்துக்கு பொன்முடி; தூத்துக்குடிக்கு பெரியசாமி; திருச்சிக்கு நேரு என்று அசைக்க முடியாத மனிதர்களாக இவர்கள் உட்கார்ந்துகொண்டு, தன்னைத் தாண்டி மற்றவர்கள் வளர்ந்துவிடாமல் தடுத்துவிட்டார்கள் என்ற எண்ணம் ஸ்டாலினுக்கு. 'சேலத்துக்கும் தஞ்சாவூருக்கும் விசாரணைக் குழு அனுப்பினீங்க. அவங்களும் வந்து அறிக்கை கொடுத்தாங்க. ஆனா, நீங்க என்ன நடவடிக்கை எடுத்தீங்க?’ என்று கருணாநிதியிடமே அவர் கொந்தளித்ததாக ஒரு தகவல். 'வீரபாண்டியார், பழனி மாணிக்கம் எல்லாமே மாவட்டச் செயலாளர்யா... நினைச்ச நேரத்துல அவங்களை தூக்க முடியாதுய்யா!’ என்று கருணாநிதி இழுத்தாராம். 'அப்படின்னா, மாவட்டச் செயலாளர் பதவி எதுக்கு? அவங்களை டம்மி பண்ணி, புதிய ஆட்களைக் கொண்டுவாங்க. இல்லைன்னா, கட்சி கரைஞ்சே போயிடும்’ என்று கர்ஜித்தாராம் ஸ்டாலின். அதற்கான முன்னோட்டமாகத்தான் மாவட்டக் கழகங்களைக் கலைத்துவிட்டு, ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் ஒரு குழுவை அமைப்பது என்று முடிவு. அதற்குக் கீழ் சட்டமன்றக் குழுக்கள் இயங்குமாம். இதை கோவைப் பொதுக் குழுவில் அறிவிக்கப்போகிறார்களாம்!''
''வீரபாண்டியார், பொன்முடி வகையறா இதை விரும்பாதே?''
''இந்த மாதிரியான குட்டி சம்ஸ்தானங்களைக் காலி செய்யத்​தானே ஸ்டாலின் இதனைச் செய்யப்​போகிறார். ஏற்கெனவே இது மாதிரி மண்டலப் பொறுப்​பாளர்கள் என்ற முறையைத் தி.மு.க. கொண்டு​வந்தது. அது வொர்க்-அவுட் ஆகவில்லை. மீண்டும் மாவட்டக் கழகங்களை நோக்கியே திரும்பினார்கள். 'எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்?’ என்ற நிலைமையில் தி.மு.க. இருப்பது தெரிகிறது.''
''ஸ்பெக்ட்ரம் தொடர்பாக நடக்​கும் பொதுக் கணக்குக் குழுவில் காங்கிரஸும் தி.மு.க-வும் எதிரெதிராக மல்லுக்​கட்டியதாகச் சொல்​கிறார்களே?''
''நடந்த விஷயமே வேறு! பொதுக் கணக்குக் குழு, ஸ்பெக்ட்ரம் விவகாரம் பற்றி விசாரித்து வருகிறது. அதன் தலைவராக இருக்கும் முரளி மனோகர் ஜோஷி, ஒரு அறிக்கையை வெளியிட்டுவிட்டார். அது சர்ச்சைக்கு உள்ளானது. அதே அறிக்கையை கடந்த 28-ம் தேதி கூட்டத்திலும் அவர் தாக்கல் செய்தார். அப்போது தி.மு.க. சார்பில் குழுவில் இருந்த கடலூர் எம்.பி. ஆதிசங்கர், தெரியாத்தனமாய் விட்ட ஒரு வார்த்தைதான் கருணாநிதியை டென்ஷன் ஆக்கியது. 'இந்த அறிக்கை, முழுமையான அறிக்கை அல்ல. தொலைத்தொடர்புத் துறையின் முன்னாள் அமைச்சர்களையும் இதில் விசாரித்து முழுமையான அறிக்கையாக வெளியிட வேண்டும்’ என்ற தொனியில் சொல்லிவிட்டாராம். இதற்கு என்ன அர்த்தம்?
தயாநிதி மாறனையும் சேர்த்து விசாரிக்க வேண்​டும் என்பது அல்லவா? இது கருணாநிதி காதுக்கு வந்தது. ஆதிசங்கரைத் திட்டித் தீர்த்துவிட்டாராம். அதன் பிறகுதான், ஆதிசங்கர் ஒரு விளக்க அறிக்கையும் வெளியிட்டு சைலன்ட் ஆகிவிட்டார்!'' என்ற கழுகார், அடுத்த சப்ஜெக்ட்டை ஆரம்பித்தார்.
''முதல்வர் ஜெயலலிதாவும் வருத்தத்தில் இருக்கிறார். காரணம், பெங்​களூ​ருவில் நடக்கும் சொத்துக் குவிப்பு வழக்கு கொஞ்சம் சிக்கலாகிக்​கொண்டே இருக்கிறது.  'ஆட்சி மாறிவிட்​டதால், வழக்கின் போக்கிலும் மாற்றங்கள் நிகழ்ந்து, ஒரு வழியாக ஊத்தி மூடிவிடு​வார்கள்’ என்று சொல்லிவந்த  தி.மு.க-வினருக்கே ஆச்சர்யம் ஏற்படும் அளவுக்கு பெங்களூரு தகவல்கள் இருக்கின்றன. தமிழ்நாடு ஊழல் தடுப்பு டி.எஸ்.பி. சம்பந்தம், ஸ்பெஷல் கோர்ட் நீதிபதிக்குக் கடிதம் அனுப்ப, அதை அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா கொந்தளிப்புடன் நீதிபதியிடம் புகார் தர அதன் தொடர்ச்சியாக... இன்னும் நிறைய நடக்க ஆரம்பித்துள்ளன. வழக்கை விரைந்து முடித்துவிடுவார்களோ
என்ற சந்தேகத்தை ஜெ. தரப்புக்கு இது விதைத்து உள்ளது. அதனால், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் ஒரு மனு போடப்பட்டது.''
''என்னவாம்?''
''ஏற்கெனவே விசாரித்த சாட்சிகளை மறுபடி விசாரிக்க வேண்டும் என்பதுதான் அதன் சாராம்சம். இப்படியே போனால் சிந்துபாத் கதையாக மாறிவிடும் என்று நினைத்த அரசு வக்கீல் ஆச்சார்யா, 'மறு விசாரணைக்கு உத்தரவு இடக்கூடாது. அப்படி உத்தரவிட்டால், சென்னையில் நடந்த இந்த வழக்கை என்ன நோக்கத்துக்காக உச்ச நீதிமன்றம் பெங்களூருக்கு மாற்றியதோ... அந்த நோக்கமே சீரழிந்துவிடும்’ என்று சொன்னார். உடனே நீதிபதி, கேசவ நாராயண், சசிகலாவின் மனுவைத் தள்ளுபடி செய்தார். ஜெ., சசி தரப்பு இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
குற்றம் சாட்டப்பட்டவர்களை நேரில் அழைத்துக் கூண்டில் ஏற்றி விசாரிக்கும் படலத்தை விரைவில் பெங்களூரு கோர்ட் செய்யப்​போகிறது. இதில் அரசு வக்கீல் ஆச்சார்யா ரொம்பவே சீரியஸாக இருக்கிறார். 'ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஆஜராகும் அதிரடிக் காட்சிகளைப் பார்க்கப்போகிறோம்’ என்கிறார்கள், கர்நாடகப் பத்திரிகையாளர்கள். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்!'' என்ற கழுகாருக்கு கொஞ்சம் இஞ்சி டீ கொடுத்தோம்!
குடித்து நிமிர்ந்தவர், லேசாகச் சிரித்துவிட்டுத் தொடர்ந்தார்... ''மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவதற்கான டெண்டரை தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. அதில் சிலருக்கு மூக்கு வேர்த்துவிட்டது. சட்டதிட்டங்களை மீறி பெங்களூருவைச் சேர்ந்த  ஒரு நிறுவனத்திடம் லேப்டாப் சப்ளை செய்வதற்கு பேசி முடித்து​விட்டார்​களாம். 'தரம் எப்படி இருந்தாலும் பரவாயில்லை. விலை மிகக் குறைவாக இருக்க வேண்டும்’ என ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட லேப்டாப்பை வாங்கினால், அதிகபட்சம் ஆறு மாதங்களுக்குள் பிரச்னை வந்துவிடும். ஒட்டுமொத்த மாணவர்களும் லேப்டாப்பை தூக்கிக்கொண்டு சர்வீஸ் சென்டருக்கு வரும்போதுதான் பிரளயம் வெடிக்கும் என்கிறார்கள் சோர்ஸுகள்.''
''முதல்வர் கவனத்துக்கு இது போனதா?''
''தெரியவில்லை! மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் விஷயத்திலும்  ஒரு சிக்கலைச் சொல்கிறார்கள். அதையும் சொல்லிவிடுகிறேன். இதற்கான பிளக்கில் இரண்டு பின் இருந்தால் போதும் என தமிழக அரசு டெண்டர் சொல்கிறதாம். மூன்று பின்கள் கொண்ட  பிளக் இருந்தால்தான்,  ஷாக் அடிக்காது. ஆனால், தமிழக அரசு கொடுக்கப்போகும் மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் போன்றவற்றில் இரண்டு பின் பிளக் பயன்படுத்தப்பட்டால், ஷாக் அடிக்க வாய்ப்பு இருப்பதாக எலெக்ட்ரீஷியன்கள் எச்சரிக்கிறார்கள். மூன்று பின் பிளக் பயன்படுத்தினால், கூடுதலாக 30 ரூபாய் செலவாகும். இதைக் குறைக்கத் திட்டம் போட்டு மக்கள் உயிரோடு விளையாட வேண்டுமா என்பதே என் எச்சரிக்கைக் கேள்வி!'' என்ற கழுகார்,
''இதுவும் எச்சரிக்கை செய்யும் தகவல்தான்! தோட்டத்தின் அதிகார மையங்களில்  வலம் வருகிறார் அவர். அதிகாரத் துஷ்பிரயோகங்களை அதிகமாகவே செய்கிறார். அந்தக் கதைகளை நான் அப்புறம் உமக்கு விலாவாரியாகச் சொல்கிறேன். இதை சில புரோக்கர்கள் பயன்படுத்திக்கொண்டு, இந்த நபரின் மகனைத் தவறான வழிகளில் ஈடுபடுத்த ஆரம்பித்துள்ளார்கள். 'பணம் முக்கியமா மகனின் ஆரோக்கியம் முக்கியமா’ என்பதை அந்த நபர் புரிந்து செயல்பட வேண்டும்!'' என்று தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்திவிட்டுக் கிளம்பினார்!
அறிஞர்களை வெறுக்கவைத்த அமைச்சர்!
துறை வாரியாக அமைச்சர்கள்,ஐ.ஏ.எஸ். அதிகாரி​களுடன் கோட்டையில்  ஆலோசனை நடத்தி வருகிறார் முதல்வர். இதற்கு முன்பாக, ஒவ்வொரு அமைச்சரும் அவர்களாகவே துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்கள். 29-ம் தேதியன்று, தமிழ் வளர்ச்சித் துறையினருடன் ஆலோசனை நடத்தப்பட்டது.தமிழ்த் துறைக்கு அறநிலையத் துறை அமைச்சர் சண்முக​நாதன்தான் பொறுப்பு என்பதால், அறநிலையத் துறை அதிகாரிகளுடன் தமிழ்த் துறை அதிகாரிகளும் ஒன்றாக அமைச்சர் அறையில் உட்காரவைக்கப்பட்டனர். முற்பகல் 11.30 மணிக்கு தொடங்கிய அறநிலையத் துறை ஆலோசனை, மதியம் வரை ஓடியது. தமிழ்த் துறையினருக்கு மதியம் 2.30 மணிக்கு எனச் சொன்னதும் அவர்கள் கோட்டையிலேயே இருந்திருக்கிறார்கள். தமிழ்த் துறைபற்றிப் பேசப்போனவர்களை சும்மா உட்காரவைத்து, 'கோயிலில் என்ன சுண்டல், எவ்வளவு கொடுக்கிறீங்க?’ என்கிற விவரங்களைப்பற்றி அமைச்சர் கேட்க, அறநிலையத் துறை ஆணையர் சின்சியராக பதில் சொல்லி இருக்கிறார். வெறுத்துப்போன தமிழ்த் துறை அதிகாரிகள், 'கடந்த ஆட்சியில், முதல்வரே தமிழ் வளர்ச்சித் துறையை வைத்துக்கொண்டார். இப்போது அப்படிச் செய்யாவிட்டாலும் கல்வித் துறையுடனாவது இணைத்து, தமிழ் வளர்ச்சியைக் கவனிக்கலாமே...’ என்று ஆதங்கப்படுகிறார்கள்.


மணி.சுதந்திரகுமார், சென்னை.112.
கழுகாரின் உள்ளம் கவர்ந்த பிரதமர் யார்?
ஜவஹர்லால் நேரு!
'நான் செய்வதில் தவறு ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்!’ என்று காந்தி சொன்னது இவரைப் பார்த்து மட்டும்தான். பிரதமர் நாற்காலியில் அதிக நாட்கள் இருந்தவர். அனுபவங்களின் காரணமாக நிலைத்தவர். நேருவின் 'கண்டுணர்ந்த இந்தியா’ படித்தால், அவரின் உலக ஞானத்தை உணரலாம். 'இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள்’ தத்துவ தரிசனம். சுய சரிதையில் நேரு என்ற மனிதனைப் பார்க்கலாம். அப்படி ஒரு மேதைமை நேருவுக்குப் பிறகு எவரிடமும் இல்லை. அவரே சொன்னது மாதிரி, 'பைத்தியக்காரத்தனமான உலகத்தில் சுமாரான நல்லறிவுடன் இருந்தார்.’
இத்தாலி சென்ற நேருவை பார்க்க முசோலினி அழைத்தார். 'ரத்தக் கறை படிந்த கையைத் தொட மாட்டேன்!’ என்று நேரு மறுத்தார்.
நேரு அறிவித்த ஒரு வேட்பாளரை ஊழல்வாதி என்று பொதுமக்கள் எதிர்த்தார்கள். 'அவருக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டாம்’ என்று சொல்லிவிட்டு, மேடையைவிட்டு இறங்கி​யவர் நேரு. 'முதலாளித்துவமும் ஏகாதிபத்தியமும் என்னுடைய இரண்டு எதிரிகள்’ என்று அறிவித்து, அணி சேரா நாடுகளை ஐக்கியப்படுத்தியவர். காந்தி அளவுக்கு காரல் மார்க்ஸையும் விரும்​பியவர்.
பிரச்னை என்னவெனில், கம்யூனிஸ்ட்களிடம் இருந்த வன்முறையும் பிடிக்கவில்லை. காந்தியத்தில் இருந்த அகிம்சையும் பிடிக்கவில்லை. அப்படி ஒரு விநோத மனிதர் நேரு!
 எஸ்.பவதாரணி, ஆலத்தம்பாடி.
ஒரு தமிழன் பிரதமராக வாய்ப்பு உண்டா?
தகுதியால் அந்த வாய்ப்பு காமராஜருக்கு வந்தது. அவர் மறுத்தார். அதிர்ஷ்டத்தால்,
ஜி.கே.மூப்பனாருக்குக் கிடைக்க இருந்தது. ஒரு 'தமிழனே’ தடுத்தார். இன்றும், மன்மோகனுக்கு அடுத்தபடியாக ப.சிதம்பரத்தை சோனியா தேர்வு செய்துவிடுவாரோ என்ற நம்பிக்கை சிலருக்கு இருக்கிறது. அதைத் தடுக்கவே ப.சி. மீதான அவதூறுகளை பி.ஜே.பி. அள்ளித் தெளிக்கிறது. கொஞ்சம் தொலைநோக்கிப் பார்த்தால்கூட, அப்படி ஒரு வாய்ப்பு தமிழனுக்குத் தெரிய​வில்லை!
 டி.ஜெய்சிங், கோவை.
உலகத்திலேயே மோசமான சர்வாதிகாரி இறந்துவிட்டாரா... உயிருடன் இருக்கிறாரா?
இறக்கவில்லை. உயிருடன்தான் இருக்கிறார்கள்! ஒருவர் அல்ல; பலராகப் பெருகிவிட்டார்கள்.
இலங்கை ராஜபக்ஷே, எகிப்து முபாரக், லிபியாவின் கடாஃபி ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கிறார்கள். மன்னர் ஆட்சிக்கு எதிராக வளைகுடா நாடுகளில் ஏற்படும் கொந்தளிப்புகள் எல்லாமே இந்த சர்வாதிகாரிகளுக்கு எதிரான போராட்டங்கள்தான்!
பி.எம்.சூர்யா பழனியப்பன், புதுக்கோட்டை.
அரசு வழக்கறிஞர்களாக ஆளும் கட்சியினர்தான் இருக்க வேண்டுமா?
இல்லை! அரசு வழக்கறிஞர் என்பது கௌரவப் பதவி அல்ல; அரசாங்கத்தின் கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டிய பதவி. அதில், தகுதியானவர்களையே நியமிக்க வேண்டும். அதைச் செய்யத் தவறினால், கஷ்டங்களை அனுபவிக்கப்போவது ஆளும் கட்சியாகத்தான் இருக்கும்.
சமச்சீர் கல்வி வழக்கில் தடுமாறிய பிறகாவது, ஜெயலலிதா இதை உணர்ந்தாரா எனத் தெரியவில்லை. எத்தனையோ கட்சிக்காரர்கள் இருக்க, கெட்டிக்காரர் ஒருவரைத்தான் கருணாநிதி தனது காலத்தில் வைத்திருந்தார் என்பதை ஜெ. உணர வேண்டும்!
 சத்தியச்சந்திரன், காஞ்சிபுரம்.
ஜூன் 26-ம் தேதி சென்னைக் கடற்கரையில் நடந்த ஈழத் தமிழர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். புதிய இளைஞர்கள் நிறைய வந்திருந்தார்கள். இவர்களைப்பற்றி என்ன நினைக்​கிறீர்கள்?
இப்போது செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றுதான்!
'நாம் செய்ய வேண்டிய பெரிய கடமை என்ன தெரியுமா? மிக உயர்ந்த எண்ணங்​களைக்கொண்ட சில அரைகுறைப் படிப்​பாளிகளை முறையாக வழிநடத்திச் செல்ல வேண்டியதுதான்’ என்று கார்ல் மார்க்ஸுக்கு எழுதிய கடிதத்தில் எங்​கெல்ஸ் சொன்னார். இந்த இளைஞர்கள் சரியான முறையில் வழிநடத்தப்பட வேண்டியவர்கள்!
 கண்ணபிரான், சிதம்பரம்.
நியாயம் என்பது எப்படிப்பட்டதாக இருக்க​வேண்டும்?
மகாபாரதத்தில் தர்மன் கேட்டது போன்று, கொஞ்சமும் சுயநலம் இல்லாமல் இருக்க வேண்டும். யட்சனின் தடாகத்தில் இறந்துகிடந்த நான்கு தம்பியரில் ஒருவனை மட்டும் உயிர்ப்பிக்க முடியும் என்ற நிலையில் நகுலனைக் கேட்கிறான் தர்மன். 'அர்ஜுனன் அல்லது பீமன் இல்லாமல், நீ வெற்றிபெற முடியாதே’ என்று யட்சன் எடுத்துச் சொன்ன பிறகும்... 'எனக்கு வெற்றி முக்கியம் இல்லை. என் தாய் குந்திக்கு நான் பிள்ளையாக உயிருடன் இருக்கிறேன். அதுபோல் தாய் மாத்ரி பெற்ற பிள்ளைகளில் ஒருவனான நகுலன் உயிருடன் இருக்க வேண்டும்’ என்கிறான். இதுதான் சிறந்த நியாயம்!
 வண்ணை கணேசன், சென்னை-110.
கேப்டன் இனி நடிப்பாரா மாட்டாரா?
சட்டசபையில் நடிக்காமல் இருந்தால் போதும்!
 விஜயா ஜெயராம், மதுரை-14.
பணக்கார தி.மு.க., அ.தி.மு.க. தொண்டனுக்கும் ஏழை தி.மு.க., அ.தி.மு.க. தொண்டனுக்கும் என்ன வித்தியாசம்?
கறுப்பும் சிவப்பும் கலந்த கொள்கைகள் மட்டுமே ஏழை தி.மு.க. தொண்டனின் இன்றைய கையிருப்பு. எம்.ஜி.ஆரின் நிழல் மட்டுமே ஏழை அ.தி.மு.க. தொண்டனின் குடியிருப்பு!
ஆனால், இந்தக் கட்சிகளின் பணக்காரத் தொண்டர்​களிடம் கறுப்புப் பணம் இருக்கிறது. சிவப்பு விளக்கு காரும் இருக்கும்.
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஏழைத் தொண்டனுக்கு ஏக்கம் இல்லை. ஆனால் பணக்காரத் தொண்டன், எதையோ பறிகொடுத்ததுபோல காணப்படுவான்!
 ச.ராஜசேகர், செய்யாறு.
இலவச திட்டங்களுக்கு பதில் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை கொடுத்தால் நல்லா இருக்குமே?
உங்களுக்கு நல்லா இருக்கும்! ஆனால், டெண்டர் விடமுடியாது. கமிஷன் வாங்க முடியாது. பணம் சேர்க்க முடியாது. எனவேதான் எந்தக் கட்சியாக இருந்தாலும் இலவசத்திட்டங்களில் மும்முரமாக இருக்கின்றன. வேலை உருவாக்கும் திட்டங்களை மறந்தும் உருவாக்குவது இல்லை!
 அ.ராஜா ரஹ்மான், கம்பம்.
கருணாநிதி தன் மகன் ஸ்டாலினுக்குத் தர முடியாத ஒன்று எது?
வாய் சாமர்த்தியம்!


No comments:

Post a Comment