பழசு இன்றும் புதுசு
நேற்றும் நமதே - 23: 4.5.88
போஃபர்ஸ், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஆயுதத் தயாரிப்பு கம்பெனி. இந்திய ராணுவத்துக்கு 400 பீரங்கிகள் வாங்க, நமது பாதுகாப்பு அமைச்சகம், 1986 மார்ச் 24-ம் தேதி இந்த கம்பெனியுடன் 1,700 கோடி மதிப்புள்ள ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டது.
இந்த ஒப்பந்தம் பற்றி ஆரம்பத்தில் ஸ்வீடன் பிரதமர் பா(ல்)மே, நமது பிரதமருடன் பேச்சுவார்த்தைநடத்தினார். ''இந்த பேரத்தில் இடைத் தரகர்கள் யாருமே இருக்கக் கூடாது. இது இந்திய அரசின் கொள்கை!'' என்று திட்டவட்டமாக அவரிடம் பிரதமர் ராஜீவ் காந்தி தெரிவித்தார். போஃபர்ஸும் இதை ஒப்புக்கொண்டது.
ஒப்பந்தம் 1986 மார்ச் மாதம்கையெழுத் தாவதற்கு முன்பு - பிப்ரவரி மாதம் ஸ்வீடன் பிரதமர் பா(ல்)மே நள்ளிரவில் கொலை செய்யப்பட்டார்! இந்தக் கொலையை விசாரித்த ஓர் அதிகாரியும் மர்மமான முறையில் இறந்தார். இந்தக் கொலைகளின் மர்மம் நீடிக்கிறது!
இந்திய ஒப்பந்தம் கிடைப்பதற்கு முன், போஃபர்ஸ் கம்பெனி நொடித்துப்போன நிலையில் இருந்தது. 1,000 பேரை வேலைநீக்கம் செய்யவிருந்த அந்த கம்பெனி, ஒப்பந்தம் கிடைத்த மாத்திரத்தில், 3,000 பேரைப் புதிதாக வேலைக்கு எடுத்தது!
எல்லாம் 'நல்லபடியாக’ நடந்துகொண்டு இருந்தபோது, 1987-ம் வருடம் ஏப்ரல் மாதத்தில் ஸ்வீடன் ரேடியோ ஒரு வெடிகுண்டைத் தூக்கிப் போட்டது. இந்த (சுதந்திரமான!) ரேடியோ, ஏற்கெனவே போஃபர்ஸ் நிறுவனம் ஆயுத விற்பனை சம்பந்தமாகச் செய்து வந்த பல தில்லுமுல்லுகளை வெளியிட்டு வந்தது. இப்போது, 'இந்தியாவுடன் ஒப்பந்தம் நிறைவேற, போஃபர்ஸ் சில இடைத் தரர்களுக்குக் கோடிக்கணக்கில் பணம் கொடுத்தது. இந்தத் தரகர்கள், இந்திய அரசியல்வாதிகளாகக்கூட இருக்கலாம்’ என்றது.
அவ்வளவுதான்! இந்திய நாடாளுமன்றத்திலும், பத்திரிகைகளிலும், மக்கள் மத்தியிலும் கொதிப்பு ஏற்பட்டது!
''இந்திய அரசியல் ஸ்திரத்தன்மையையே குலைக்கும் முயற்சி இது. இடைத்தரகர்கள் என இதில் யாரும்கிடையாது!'' என்று இந்திய அரசு மறுத்துப் பார்த்தது. போஃபர்ஸ் நிறுவன அதிகாரிகளும், ''யாருக்கும் கமிஷன் தரவில்லை!'' என்றார்கள்.
மத்திய அரசின் பாதுகாப்புத் துறை ராஜாங்க அமைச்சர் அருண்சிங், ''அப்படிப் பணம் தரப்பட்டு இருந்தால்... எதற்கு, எப்போது, எங்கு, யாருக்கு என்பதை நிச்சயம் கண்டுபிடித்தே தீருவோம்!'' என்று ராஜ்யசபையில் உறுதி அளித்தார். அமைச்சர் சூளுரைத்தது, ஏப்ரல் 21-ம் தேதி. என்ன நடந்ததோ - ஜூலை 18-ம் தேதி தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார். ''சொந்தக் காரணங்களுக்காக விலகுகிறேன்!'' என்று சொன்னார் அமைச்சர்.
இதற்கிடையில், ஜூன் 1-ம் தேதி ஸ்வீடன் தேசியத் தணிக்கைக்குழுவின் (ஆடிட் பீரோ), 'கமிஷனாகக் கொடுக்கப்படவில்லை. சிலர் செய்த சேவைக்காக, 34 கோடியில் இருந்து 50 கோடி வரை Winding Up Charge தரப்பட்டது’ என்ற அறிவிப்பு குறிப்பிடத்தக்கது.
ஸ்வீடனிலும் உண்மை வெளிவர, கூக்குரல்கள் கிளம்பின. 'சேவைக்காகப் பணம் செலுத்தப்பட்டதை’ ஒப்புக்கொண்ட போஃபர்ஸ், வியாபார ரகசியம் என்று காரணம் காட்டி. சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை வெளியிட மறுத்துப் பிடிவாதம் பிடித்தது. பின்னர் பலத்த எதிர்ப்பின் காரணமாக, மூன்று கம்பெனிகளின் பெயர்களை வெளியிட்டது போஃபர்ஸ்!
இந்த மூன்று கம்பெனிகளுக்கும் சேர்த்து, சர்வீஸ் சார்ஜாக 64 கோடி ஸ்விஸ் வங்கியில் 'லோட்டஸ்’ என்கிற சங்கேதப் பெயரில் போடப்பட்டதாக ஆதாரங்கள் வந்தன. 'லோட்டஸ்’ (தாமரை) என்பது, ராஜீவ் காந்தியைக் குறிக்கும் என்று இங்கே குற்றச்சாட்டு எழும்பியது. 'ராஜீவ் என்ற சம்ஸ்கிருத வார்த்தைக்குத் தாமரை என அர்த்தம்’ என்று விளக்கம் சொன்னார்கள்.
1987 ஆகஸ்ட் மாதத்தில், இந்தக் குற்றச்சாட்டுகளை ஆராய, நாடாளுமன்ற கமிட்டி ஒன்று அமைத்தது இந்திய அரசு. இதில் பங்குபெற எதிர்க் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்களோ, நிபந்தனை விதித்தனர். ''நாங்கள் சுதந்திரமாகச் செயல்பட தடை இருக்கக் கூடாது. ஸ்விஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்கள் சிலரை, தேவைப்பட்டால் விசாரணைக்கு அழைப்போம். அவசியம் ஏற்பட்டால், மத்திய அமைச்சர்கள்... ஏன் பிரதமரையேகூட விசாரணைக்கு அழைப்போம்!'' என்றன எதிர்க் கட்சிகள். இதை ஏற்க மறுத்தது இந்திய அரசு. ஆகவே, எதிர்க் கட்சிகள் கமிட்டியில் சேர மறுத்துவிட்டன.
ஆளும் கட்சியும், அதன் தோழமைக் கட்சிகளும்கொண்ட 30 லோக் சபா - ராஜ்ய சபா உறுப்பினர்கள் அடங்கிய கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. அன்று காங்கிரஸுக்குத் தோழமைக் கட்சியாக இருந்த அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரும் இதில் இடம் பெற்றனர்.
ராஜீவ் காந்திக்கு மிகவும் விசுவாசமானவர், கர்நாடகத்தைச் சேர்ந்த சங்கரானந்த். இவர் அப்போது மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சராக இருந்தார். தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்த கமிட்டிக்குத் தலைவரானார்.
இந்த கமிட்டிதான், ஏப்ரல் 26-ம் தேதி நாடாளுமன்றத்தில் தனது 400 பக்க அறிக்கையைத் தாக்கல் செய்தது. 'பீரங்கி பேரத்தில் இடைத் தரகர்களே கிடையாது. எந்த இந்தியருக்கும் - இந்திய நிறுவனத்துக்கும் பணம் கொடுக்கப்படவில்லை. இதில், ஊழல் என்பதே இல்லை. போஃபர்ஸ் கூறியதுபோல, வைண்டிங்-அப் சார்ஜ்தான் தரப்பட்டு இருக்கிறது’ என்று ஞான ஸ்நானம் செய்து, ஆளும் கட்சியின் பாவக் கறைகளைத் துடைத்தது இந்த கமிட்டி!
எதிர்க் கட்சிகள், 'இந்த கமிட்டி அறிக்கை வெறும் கண்துடைப்பு’ என்று கருத்துத் தெரிவித்தன.
எதிர்பாராத ஒரு திருப்பம் நிகழ்ந்தது. இந்த கமிட்டியின் உறுப்பினரும் - அ.தி.மு.க-வின் ஜானகி அணியைச் சேர்ந்தவருமான ஆலடி அருணா பரபரப்பு ஏற்படுத்தினார். ''கமிட்டியின் கருத்துகளுடன் நான் உடன்படவில்லை. என் ஆட்சேபனைகளையும் கமிட்டி தன் அறிக்கையுடன் வெளியிட வேண்டும்!'' என்று கமிட்டியிலேயே போர்க் குரல் எழுப்பினார். ''அது முடியாது!'' என்று மறுத்தார் சங்கரானந்த்!
ஆனால், நாடாளுமன்றத் தலைவர் பல்ராம் ஜாக்கர், ஆட்சேபனைகளைத் தெரிவிக்கலாம் என்று அனுமதி கொடுத்தார்.
''கமிட்டி நேர்மையான முறையில் செயல்படவில்லை!'' என்று ஆலடி அருணா 38 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இந்த கமிட்டி விசாரணை செய்த விதங்கள் தமாஷானவை! உண்மைகளைத் தயவுதாட்சண்யம் இன்றிக் கண்டுபிடிக்கும் நோக்கம் அதற்கு இருந்ததா என்பதே கேள்விக்குறியாகிவிட்டது.
கமிட்டி உறுப்பினர்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சுதந்திரமாகச் செயல்பட முடியாத அளவுக்குத் தடைகள்.
போஃபர்ஸ் கம்பெனியிடம் இருந்து வைண்டிங்-அப் சார்ஜாகப் பணம் பெற்ற மூன்று நிறுவனங்களை ஆராய சி.பி.ஐ., புலனாய்வுத் துறை அதிகாரிகள், 1987-ம் ஆண்டு இறுதியில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் சென்றபோது சுவாரஸ்யமான செய்திகள் கிடைத்தன.
மூன்று கம்பெனிகளில் ஒன்றான ஷிஸ்மீஸீsளீணீ நிறுவனம் முழுமையாகப் பெண்களால் நிர்வகிக்கப்படும் கம்பெனி. கடந்த இரண்டு வருடங்களாக அந்த நிறுவனத்துக்கும் போஃபர்ஸுக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை.
மற்றொரு கம்பெனியான Moineau - வின் பின்னணிக் கதை இன்னும் சுவாரஸ்யமானது. அது உண்மையான கம்பெனியே அல்ல! Moresco என்ற கம்பெனிக்காக, தன் பெயரை இரவல் கொடுத்திருக்கும் ஒரு பொய் நிறுவனம். இந்த 'மொரெஸ்கோ’ நிறுவனத்துக்கு இன்னொரு பெயரும் உண்டு. அது Pitco. ஆனால், இதில் வேடிக்கை என்ன என்றால், அந்த கம்பெனிகள் எதுவுமே ஸ்விட்சர்லாந்தில் குறிப்பிட்ட அந்த விலாசத்தில் செயல்படவே இல்லை!
மூன்றாவதாக, A & E Services Ltd. 1985 ஆண்டு முதல்தான் போஃபர்ஸின் ஏஜென்டாகப் பணிபுரிய ஆரம்பித்தது. இது போஃபர்ஸுக்காக, இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் பேச்சுவார்த்தை நடத்தும். இந்திய அரசு 'இடைத் தரகர்கள் கூடாது’ என்றவுடன், இந்த கம்பெனியுடன் போஃபர்ஸ் செய்துகொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்தது.
இதைத் தவிர, போஃபர்ஸ் குறிப்பிட்ட இன்னொரு நிறுவனம் அனட்ரானிக் ஜெனரல் கார்ப்பரேஷன். இதன் உரிமையாளர் வின்சத்தா. இவர் போஃபர்ஸின் இந்திய ஏஜென்ட். இந்த ஒப்பந்தத்துக்கு முன்பாகவே, இந்தியாவில் போஃபர்ஸுக்காக செய்த சில சின்ன வேலைகளுக்காக போஃபர்ஸ் இவருக்குப் பணம் கொடுத்திருக்கிறது. பிரச்னைகள் பூதாகார வடிவம் எடுத்தவுடன், இவர் அமெரிக்காவுக்கு ஓடிவிட்டார். இவரைத் தேடிப் போனது புலனாய்வுத் துறை!
மற்ற மூன்று நிறுவனங்களைக் கண்டுபிடிக்கும் வேலையைவிட, வின்சத்தாவை இந்தியாவுக்குக் கொண்டுவரும் வேலைதான் அதிகாரிகளுக்குப் பெரும்பாடாக இருந்தது. ஏராளமான நிபந்தனைகளுடன் இந்தியாவுக்கு வர ஒப்புக்கொண்டார் வின்சத்தா. சந்தேகத்துக்குரிய இவரின் நிபந்தனைகளுக்கு எல்லாம் அடிபணிந்தது அரசு.
வின்சத்தாவும் கமிஷன் முன்பு சாட்சி சொன்னார். அதுவும் கண்துடைப்பாகவே போயிற்று. கமிட்டி தனது அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு 'இந்து’ பத்திரிகை எரி ஈட்டியை வீசிற்று.
'இந்த விவகாரத்தில் அடிபட்ட கம்பெனிகளாக மொரெஸ்கோ - பிட்கோ எல்லாமே போலிப் பெயர்கள். இவற்றுக்குப் பின்னால் செயல்பட்டது - 'இந்துஜா’க்களின் 'சங்கம் லிமிடெட் கம்பெனி’தான். 64 கோடி கமிஷனில் ஒரு பகுதி, இவர்களுக்குத்தான் சென்றிருக்கிறது’ என்று ஆதாரத்துடன் வெளியிட்டது 'இந்து’ பத்திரிகை.
ஆரம்பத்திலேயே 'இந்துஜா’வின் பெயர் இதோடு சம்பந்தப்படுத்தப்பட்டு - பிறகு அவர்களால் மறுக்கப்பட்டது. 'இந்துஜா’க்கள். இந்தியாவிலேயே பணக்காரக் குடும்பத்தினர்.
பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக பிரதமரும், ஆளும் கட்சியினரும் கருதுகின்றனர். ஆனால், கமிட்டி விசாரணை போதுமானது என்று மக்கள் கருதவில்லை. கமிட்டி நடந்த விதத்தை அறிந்த பிறகு, 'ஊழலே இல்லை’ என்று மக்களால் கருத முடியவில்லை!
இந்த கமிட்டியின் துணைத் தலைவர் ஆண்டர்ஸ் ஜோர்க், ''எனக்குக் கிடைத்த ரகசிய தஸ்தாவேஜுகளை வைத்துப்பார்க்கும்போது, போஃபர்ஸ் கம்பெனிக்கும் ராஜீவ் காந்தி குடும்பத்துக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பு இருப்பதாகத்தான் தெரிகிறது!'' என்று கூறி இருக்கிறார். ஆனால், போஃபர்ஸும் இந்திய அரசும் இதற்கு மறுப்பு கூறுகிறது. ஊஹும்... பிரச்னை முடிந்துவிடவில்லை!
- நமது அரசியல் நிருபர்
No comments:
Post a Comment