Friday, July 1, 2011

தேவைதானா கண்துடைப்பு கமிஷன்கள்?

'பிரச்னை என்றால் கல்லைப் போடு; இல்லைன்னா... கமிஷனைப் போடு’ என்று நையாண்டி செய்யப்படும் சூழலில், ஆட்சிக்கு வந்த​தும் ஜெயலலிதா, 'புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடுகள்’ என முதல் விசாரணை கமிஷன் போட்டு​விட்டார். 'இதுபோன்ற கமிஷன்களால் என்ன நடக்கிறது?’ என்ற நினைவுச் சக்கரத்தை ஓட்டினால் ஏமாற்றம்தான் மிச்சம். தமிழகத்தில் இது வரை போடப்பட்ட விசாரணை கமிஷன்களின் கதியைப் பாருங்கள்!
அ.தி.மு.க. விசாரணை கமிஷன்கள்!
2001-2006 அ.தி.மு.க. ஆட்சியில் 10-க்கும் மேற்பட்ட கமிஷன்கள் அமைக்கப்பட்டன. மேம்பாலங்கள் கட்டியதில் ஊழல் என்று சொல்லி கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்தது அ.தி.மு.க. அரசு. இதற்காக நீதிபதி ராமன் கமிஷனை அமைத்தார் முதல்வர் ஜெயலலிதா. உயர் காக்கி அதிகாரிகள் கமிஷன் முன்பு ஆஜராகி வாக்குமூலம் எல்லாம் கொடுத்தனர். இந்த கமிஷன் விசாரணையை நடத்திக்கொண்டு இருந்தபோதே, ஆட்சி மாற்றம் நடந்துவிட... புதிதாக ஆட்சிக்கு வந்த தி.மு.க., உடனடியாக ராமன் கமிஷனைக் கலைத்துவிட்டது.
அடுத்து, வெங்கடேசப் பண்ணையார் என்​கவுன்ட்டர், நாடார் சமூகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்த... அதுபற்றி விசாரிக்க அதே நீதிபதி ராமன் விசாரணை கமிஷனை அமைத்தனர். அந்த கமிஷனுக்கு எதிராக தடை கேட்டு நீதிமன்றத்துக்குப் போனார்கள் சிலர். அதன் பிறகு, அந்த கமிஷனின் அறிக்கையும் வெளியாகவில்லை.
இது இப்படி என்றால்... விசாரணை கமிஷன் முடிந்து அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்ட பிறகும்கூட, அது வெளியிடப்படாத கொடுமைகளும் உண்டு. தி.மு.க. ஆட்சியின்போது பெரம்பூரில் மேம்பாலம் கட்டும் பணி இடையிலேயே நின்றுபோனது. அடுத்து ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க., 'பெரம்பூர் பாலம் கட்டுவதில் ஊழல் நடந்திருக்கிறது’ என்று ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகம் தலைமையில் 2001-ம் ஆண்டு கமிஷன் போட்டது. விசாரணை முடித்து அவரும் அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்துவிட்டார். 2006-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், பெரம்பூர் பாலம் வந்ததே தவிர... கமிஷன் அறிக்கை ரிலீஸ் ஆகவில்லை!
தி.மு.க. விசாரணை கமிஷன்கள்!
கருணாநிதியின் ஐந்து ஆண்டு ஆட்சியிலும் சில விசாரணை கமிஷன்கள் அமைக்கப்​பட்டன. ஜெயலலிதாவுக்கு எதிராக கே.பி.சிவசுப்பிரமணியன் தலைமையில் சிறுதாவூர் விசாரணை கமிஷன் அமைத்தது தி.மு.க. 'ஜெயலலிதாவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை!’ என்று சொன்னது அந்த கமிஷன்.
சேலம் ஓமலூர் பாத்திமா பள்ளியில் சுகன்யா என்ற மாணவி மர்மமான முறையில் இறக்க... நீதிபதி சாமிதுரை தலைமையில் கமிஷன் போடப்பட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட... விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. நீதிபதிகளை விமர்​சித்து ஆற்காடு வீராசாமி பேசிய பேச்சுகள் பரபரப்பைக் கிளப்பின. கடைசியில், இந்த கமிஷன் செயல்படவே இல்லை.
சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் அரங்கேறிய கலவரத்தின் ஆணி வேரைக் கண்டு​பிடிக்க, 2008-ல் நீதிபதி சண்முகம் கமிஷனும் அமைக்கப்பட்டது. இருந்தும், சட்டக் கல்லூரியில் இது​போன்ற சம்பவங்கள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது.
புஸ்வாணமான பரிந்துரைகள்!
கும்பகோணம் தீ விபத்து பற்றி விசாரித்த நீதிபதி சம்பத் கமிஷன், தீ விபத்துக்குக் காரணமான 24 பேரை அடையாளம் காட்டியது. இதில் 12 பேர் மட்டும் குற்றவாளிக் கூண்டில் உள்ளனர். மற்றவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. 'பாலர் பள்ளிகளை முறைப்படுத்திக் கண்காணிக்க தனி இயக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமாக ஆட்டோ, வேன்களில் மாணவர்களை ஏற்றக் கூடாது’ உட்பட பல பரிந்துரைகள் இன்று வரை நிறைவேறவில்லை.
1999-ம் ஆண்டு நடந்த மத்திய சிறைக் கலவரம் தொடர்பாக அமைக்கப்பட்ட டேவிட் கிறிஸ்டியன் கமிஷன், 'சிறைப் பணியாளர்களிடையே காணப்படும் ஊழலை உறுதியுடன் ஒடுக்கவும், கைதிகளுக்கு மறைமுக ஆதரவளிக்கும் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்க வேண்டும்’ என்றும் சொன்னது.
சென்னை சட்டக் கல்லூரியில் மோதல் தொடர்​பான நீதிபதி சண்முகம் கமிஷன், 'சட்டக் கல்லூரியை மூன்றாகப் பிரித்து தாம்பரம், திருவள்ளூர் உள்​ளிட்ட இடங்களுக்கு மாற்ற வேண்டும்’ என்று பரிந்துரைத்தது. சாதி கலவரங்கள் தொடர்பாக நீதிபதி மோகன் கமிஷன், 'சாதித் தலைவர்கள் சிலைகளை அருங்​காட்சிகத்தில் வைக்க வேண்டும்’ என்று அரசுக்கு அறிவுரை கூறியது.
தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 17 பேர் பலியானது தொடர்பாக 1999-ல் அமைக்கப்பட்ட நீதிபதி மோகன் கமிஷன், 'அரசியல் கட்சி ஊர்வலங்களைத் தடை செய்யப் பொருத்தமான சட்டங்களை இயற்ற வேண்டும்’ என்று குறிப்பிட்டது. இந்த விசாரணை கமிஷன்களின் பரிந்துரைகள் எல்லாம் ஏட்டோடு போய்விட்டன.
கரையும் கரன்சிகள்!
நீதிபதி சம்பளம், படிகள், வீட்டு வாடகை, பயணச் செலவுகள், தொலைபேசி, மின் கட்டணங்கள், சில்லறை செலவுகள், கமிஷன் தொடர்பான விளம்பரக் கட்டணங்கள், வாகனங்களுக்கு பெட்ரோல் மற்றும் பராமரிப்பு, அரசு வழக்கறிஞர் கட்டணம், அலுவலகப் பணியாளர்கள் என்று ஒரு விசாரணை கமிஷனுக்கு லட்சக்கணக்கில் பணம் கரையும். அத்தனையும் மக்கள் வரிப் பணம்.
சாம்பிளுக்கு, சில விசாரணை கமிஷன்களுக்கு செய்யப்பட்ட செலவுகள் இங்கே...
1. சிறுதாவூர் விசாரணை கமிஷன் - 1.38 கோடி
2. கும்பகோணம் பள்ளி தீ விபத்து கமிஷன் -
11 லட்சம்
3. எம்.ஜி.ஆர். நகரில் நெரிசல் மரணம் கமிஷன்-   4.50 லட்சம்
4. கடலூர் குள்ளஞ்சாவடி லாக்அப் மரணம் கமிஷன் - சுமார் 40 லட்சம்
5. சட்டக் கல்லூரி மோதல் விசாரணை கமிஷன் - சுமார் 20 லட்சம்
அது சரி, விசாரணைக் கமிஷன் தேவையா இல்லையா என்பதற்கும் ஒரு விசாரணை கமிஷன் போட்டுவிடுவார்களோ..?!
- எம்.பரக்கத் அலி


[ Top ]

No comments:

Post a Comment