Thursday, July 14, 2011

அமைச்சர் எங்களைத் தூங்க வைத்துள்ளார்: வருமான வரித்துறை அதிகாரிகள் வேதனை

அமைச்சர் எங்களைத் தூங்க வைத்துள்ளார்: வருமான வரித்துறை அதிகாரிகள் வேதனை " மயக்க மருந்தோ அல்லது தூக்க மத்திரையோ கொடுத்து, அமைச்சர் எங்களைத் தூங்க வைத்துள்ளார்" என வருமானவரித்துறையில் உள்ள நேர்மையான அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த விசாரணை நேர்மையாக நடக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் விரும்பினால், தமிழகத்தில் உள்ள வருமான வரித் துறை, மாற்றி அமைக்கப்பட வேண்டும். தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் பதவி விலக வற்புறுத்த வேண்டும் அல்லது பிரதமர் மன்மோகன் சிங், அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அப்போது தான், உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய முடியும். ஊழல் செய்தவர்களிடம் இருந்து, பணத்தை மீட்க முடியும்' என்ற கருத்து வருமானவரித்துறையிலேயே பரவலாக எழுந்துள்ளது. மத்திய அமைச்சரவையில் பணம் புரளும், தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்து, தொலை தொடர்பு, தகவல் ஒலிபரப்பு, உரம் ஆகிய இலாகாக்களை வெற்றிகரமாக தி.மு.க., கேட்டுப் பெற்றது. பணம் சம்பாதிப்பதற்கும், அரசு கருவூலத்தை கொள்ளையடிப்பதற்கும் தான், இதுபோன்ற பணம் கொழிக்கும் இலாகாக்களை அவர்கள் கேட்டுப் பெற்றுள்ளனர். மக்களுக்கு சேவை செய்வதைப் பற்றி, அவர்கள் கவலைப்படவில்லை என்றும், வருமானவரித்துறை முக்கிய அதிகாரிகள் கின்றனர். நிதித் துறையும் எப்போதும், தி.மு.க.,வின் விருப்ப பட்டியலில் இருக்கும். "எதிர்க்கட்சியான அ.தி.மு.க., வையும், அதன் நிர்வாகிகளையும் பழி வாங்குவதற்காகவே, நிதித் துறையை தி.மு.க.,வினர், கேட்டுப் பெறுகின்றனர் ' என, பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், முறையற்ற வழிகளில் சம்பாதிக்கும் பணத்தை, முறைப்படுத்துவதற்காகவும், கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றி, வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது, அதில் குளறுபடி எதுவும் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்வதற்காகவுமே, நிதித் துறையை அவர்கள் கேட்டுப் பெறுகின்றனர் என்பது, சமீப கால தி.மு.க., நடவடிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது, எனவும், வருமானவரித்துறையின் முக்கிய அதிகாரிகள் கூறுகின்றனர். வருமானவரித்துறையின் முக்கிய அதிகாரிகள் கூறியதாவது: தற்போது மத்திய நிதித் துறையின், முக்கிய பொறுப்பைப் பெற்றுள்ள தி.மு.க., அமைச்சர், உண்மையில், தி.மு.க., மற்றும் அந்த கட்சியை சேர்ந்தவர்களின் கறுப்பு பணத்தை, வெள்ளையாக மாற்றுவதற்கான அமைச்சராக செயல்படுகிறார் என, சி.பி.ஐ.,யே சந்தேகப்படுகிறது; இந்த சந்தேகத்திற்கு காரணம் இல்லாமல் இல்லை. அமைச்சர் மூலம், தமிழகத்தில் நியமிக்கப்படும் வருமானவரித்துறை அதிகாரிகள், தி.மு.க., வினர் மற்றும் அவர்களின் நிதி மோசடி நடவடிக்கைகளை பாதுகாக்கும் பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தாக்கல் செய்த சொத்துப் பட்டியலை, ஆய்வு செய்வதற்காக, இந்திய தேர்தல் ஆணையம், தமிழகத்தில், வருமானவரித் துறை அதிகாரிகளுக்கு அவற்றை அனுப்பியிருந்தது. மாஜி மத்திய அமைச்சர் தயாநிதி பற்றி விசாரணை நடத்திய வருமானவரித்துறை இன்ஸ்பெக்டர், அவருக்கு விருப்பம் இல்லாத தொலை தூர ஊருக்கு மாற்றிவிடுவோம் என்ற மிரட்டலுக்கு ஆளானார். தன் பணியை நேர்மையாக செய்ததற்காக, அந்த அதிகாரிக்கு இந்த நிலைமை ஏற்பட்டது. தேர்தலின் போது, நேர்மையாக கடைமைச் செய்த அதிகாரிகள் தொந்தரவுக்கு ஆளாயினர். அவர்கள், வட கிழக்கு மாநிலங்களுக்கும், மிகவும் தொலைவில் உள்ள ஊர்களுக்கும் தூக்கியடிக்கப்பட்டனர். மத்திய நிதி பொறுப்பில் உள்ள அமைச்சருக்கு பணியாத அதிகாரிகள், இந்த நிலைமைக்கு ஆளாயினர். நிர்வாக ரீதியான காரணத்தை காட்டி, அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவு, டில்லியில் உள்ள அந்த அமைச்சர் அலுவலகத்தில் இருந்து பிறப்பிக்கப்பட்டது. பொதுவாக, வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், தங்களின் வர்த்தக நடவடிக்கைகளுக்காக, கடன் பெறுவர். இந்த நிதிப் பரிமாற்றம், நேர்மையாக நடந்துள்ளதா என, துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவது வழக்கம். ஆனால், கலைஞர் "டிவி'க்கு, வந்த 200 கோடி ரூபாய் குறித்து, மத்தியில் உள்ள அந்த அமைச்சரின் தலையீட்டால், ஒருபோதும் விசாரணை நடத்தப்படவில்லை. சுப்ரீம் கோர்ட் இந்த விவகாரத்தில் தலையிட்ட பின்பே, விசாரணை நடத்தப்பட்டது. கலைஞர் "டிவி' யின் நிதிப் பரிமாற்றம் சரியாக இருந்தது என்ற ரீதியில் விசாரணை நடத்தி, நற்சான்றிதழ் அளிக்கும்படி, அதிகாரிகளுக்கு, அந்த அமைச்சகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இவ்வாறு நற்சான்றிதழ் கிடைத்து விட்டால், சட்டத்திலிருந்து தப்பிப்பதற்காக, அதை, சம்பந்தபட்ட "டிவி'சேனல் பயன்படுத்தலாம் என்பது தான் நோக்கம். துரதிர்ஷ்டவசமாக, பிரதமர் அலுவலகம் இதில் தலையிட்டு விட்டது. இந்த விசாரணையை சுப்ரீம் கோர்ட் கண்காணிக்கிறது என, சம்பந்தபட்ட அமைச்சர் எச்சரிக்கப்பட்டார். கறுப்பு பணத்தை பாதுகாப்பதற்காக பணியில் ஈடுபடுத்தப்பட்டவர், கடந்த ஏழு ஆண்டு பதவி காலத்தில், பல ஆயிரம் கோடி ரூபாய்களை சம்பாதித்துள்ளார் என குற்றம்சாட்டப்படுகிறது. அப்படியென்றால், மற்ற இலகாக்களை வகிக்கும் அமைச்சர்கள் எந்த அளவுக்கு சம்பாதித்திருப்பர்? இப்படிப்பட்ட அமைச்சர்களை வைத்துக் கொண்டிருக்கும் பிரதமர், கறுப்பு பணத்தை ஒழிக்க எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? மத்திய அமைச்சரவையின் முக்கியமான துறையை, தி.மு.க., வைத்துக்கொண்டிருக்கும்போது, "2ஜி' ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்த விசாரணையில், சி.பி.ஐ., மற்றும் அமலாக்க பிரிவு இயக்குனரகம் ஆகியவற்றுடன் வருமான வரித் துறை ஒருங்கிணைந்து செயல்பட்டு, எப்படி நேர்மையான விசாரணை நடத்த முடியும்? "2ஜி' ஒதுக்கீடு தொடர்பாக நிதி அமைச்சகம் தீவிர விசாரணை மேற்கொள்ளவில்லை என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது. ஆனால், கறுப்பு பணத்தை பாதுகாப்பதில் ஆர்வமாக உள்ள அமைச்சர் இருக்கிறார் என்பதையும், ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடையவர்கள் இருக்கின்றனர் என்பதையும், கோர்ட்டுக்கு யார் தெரிவிப்பது எனத் தெரியவில்லை. "வருமான வரித் துறை தூங்குகிறது என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் கூறியபோது, அத்துறையின் நேர்மையான அதிகாரிகள் மிகவும் வருத்தப்பட்டோம். "ஆனால், எங்களுக்கு மயக்க மருந்தோ அல்லது தூக்க மத்திரையோ கொடுத்து, அமைச்சர் எங்களைத் தூங்க வைத்துள்ளார் என்பதை நாங்கள் எப்படி கூற முடியும்?' என்ற கவலையில் உள்ளோம் என்கின்றனர், வருமானவரித்துறையில் உள்ள நேர்மையான அதிகாரிகள். அமைச்சர்களிடம், "நல்ல' பெயர் எடுத்துள்ள வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு, நல்ல பதவிகள் வழங்கப்படுகின்றன. அவர்களின் சேவைகள், "2ஜி' ஊழலில் தொடர்புடையவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக பயன்படுத்தப்படுகிறது. எனவே, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த விசாரணை நேர்மையாக நடக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் விரும்பினால், தமிழகத்தில் உள்ள வருமான வரித் துறை, மாற்றி அமைக்கப்பட வேண்டும். தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் அல்லது அவர்களை பிரதமர் மன்மோகன் சிங் பதவி நீக்கம் செய்ய வேண்டும். அப்போது தான், உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய முடியும். ஊழல் செய்தவர்களிடம் இருந்து, பணத்தை மீட்க முடியும் என, நேர்மையான வருமானவரித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த செய்தி, சுப்ரீம் கோர்ட் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்பதே, நேர்மையான அதிகாரிகளின் விருப்பமாக உள்ளது. நேர்மையான ஐ.பி., அதிகாரிகள் இந்த விஷயத்தை டில்லி வரை கொண்டு செல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம். நமது சிறப்பு நிருபர்

No comments:

Post a Comment