Friday, July 1, 2011

ரஜினியை மிரட்டிய 'நீர்'!


'ராணாவாக ரகளை கிளப்ப சீக்கிரமே வருவேன்!’ - நம்பிக்கை​யோடு ரஜினி சொன்னதைக் கேட்டு, தமிழகமே காத்துக்​கிடக்கிறது. 'சிங்கப்பூரில் ஓய்வில் இருக்கும் ரஜினி, இன்னும் 15 நாட்களில் சென்னைக்கு வந்துவிடுவார்!’ என தனுஷ் அறிவிக்கிறார். மருத்துவ உலகமோ, ''இது ரஜினியின் மறு பிறப்பு. அவர் மீண்டு வருவது மருத்துவத்தின் மூலம் நடந்த மாயாஜாலம். அவருக்கு நீண்ட ஓய்வு தேவை!'' என்றே டிஸ்சார்ஜ் காலத்தைச் சொல்லாமல் மிரட்டுகிறது.
காரணம், ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்யப்​​பட்ட​போது, ரஜினியின் உடல்நிலை அப்படி ஒரு சீரியஸ் நிலையில் இருந்ததாம். ரஜினியின் உடல்நிலை உற்சாகத்துக்குத் திரும்பி இருக்கும் இந்த நேரத்தில்தான் ஆரம்ப கட்ட திக்திக் நிகழ்வுகள் வெளியே வரத்தொடங்கி இருக்கின்றன.
''ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, ரஜினிக்கு மூச்சுத் திணறல் மிகுதியாக இருந்தது. வழக்கமான குறுகுறுப்பு மாறி, அவருடைய கண்கள் பார்க்கவே பயம் ஏற்படுத்தும் விதமாக வீங்கி இருந்தன. கை, கால்களிலும் கடுமையான வீக்கம். ஜுரம் அதிகமாகிக்கொண்டே இருந்தது. அதனால், உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தோம். மூச்சுத் திணறல் அதிகமானதால், செயற்கை சுவாசம் மூலமாக சகஜ நிலையை ஏற்படுத்தினோம். நுரையீரலில் கடுமையாக நீர் கோத்து இருந்தது. முதலில் 900 மில்லி அளவு நீரை நீக்கினோம். அப்படியும் சுவாசம் சீராகவில்லை. அடுத்து, 300 மில்லி நீரை அகற்றினோம். இதற்கிடையில் மீடியாக்களில், 'ரஜினிக்கு ஆபத்தான நிலை’ என செய்திகள் வந்துகொண்டே இருந்தன. உண்மை நிலையும் அதுதான். ஆனால், அடுத்தகட்ட சிகிச்சைகளை வழங்குவதற்குள் ரசிகர்கள் தங்கள் கட்டுப்பாட்டை இழந்து விடுவார்களோ என அஞ்சினோம். அதனால், ரஜினி இயல்புநிலைக்குத் திரும்பியதாகச் சொல்லி, அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்குக் கொண்டுவந்தோம். உண்மையில், அந்த வார்டு ஒன்றை ஐ.சி.யூ. போல் நாங்கள் மாற்றிவைத்து இருந்தோம்!'' என சிகிச்சை நிலவரங்களைக் கவனித்த சிலர் சொல்லச் சொல்ல, ரஜினி எத்தகைய அபாயத்தில் இருந்தார் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.
''1,200 மில்லி நீரை நீக்கிய பிறகும், ரஜினிக்கு சுவாசம் சீராகவில்லை. அதனால், நுரையீரலில் இருந்த நிமோனியா கட்டிகளை நீக்கினோம். இதற்கிடையில், அடுத்த கட்ட சிகிச்சைகளை ஏற்கும் அளவுக்கு ரஜினிக்கு உடம்பில் ரத்தம் போதுமான அளவு இல்லை. ரத்தத்திலும் கிருமித் தொற்று இருந்தது. சிறுநீர் பிரிய முடியாத அளவுக்கு சிறுநீரகங்கள் வேலை செய்யும் தன்மையை இழந்தன. இதயத் துடிப்பும் சீராக இல்லை. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்கிற அளவுக்குப் பதற்றம். உடனடியாக டயாலிசிஸ் செய்ய முடிவு செய்து, தொடையில் டியூப் போடப்பட்டது. தொடர்ந்து ஆறு தடவை டயாலிசிஸ் செய்த பிறகுதான், ரஜினியின் நிலைமை கொஞ்சம் நம்பிக்கை கொடுத்தது. முதலில் நுரையீரல், அடுத்து ரத்தம், கடைசியில் கிட்னி எனப் படிப்படியாக சீராக்கினோம். ராமச்சந்திரா மருத்துவமனையிலேயே அபாய கட்டத்தை ரஜினி தாண்டிவிட்டார். வீல் சேரில் அமர்கிற அளவுக்கு அவருடைய உடம்பு சகஜ நிலைக்கு வந்தது. ஆனாலும், சிறுநீரகப் பிரச்னைகளை முழுவதுமாகக் குணமாக்கத்தான் அவரை சிங்கப்பூர் அனுப்பினோம்!'' என்கிறார்​கள் அதே நபர்கள்.
சரி, இப்போது ரஜினி எப்படி இருக்கிறார்?
''90 சதவிகிம் ஆல்ரைட்! ஆனாலும், உடல் பலவீனம் இன்னமும் சரியாகவில்லை. மூச்சு சீராகிவிட்டது. வழக்கமான வேகத்தில் பேச முடியவில்லை. சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்து​வமனையில் மூன்று தடவை ரஜினிக்கு டயாலிசிஸ் செய்யப்​பட்டது. அதன் பிறகு, அவருடைய கிட்னியின் செயல்பாடு சீராகிவிட்டது. மவுன்ட் எலிசபெத் மருத்துவ​மனையில் ரஜினிக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், இப்போதும் அவர் தங்கி இருக்கும் வீட்டுக்கு வந்து பரிசோதிக்கிறார்கள். மிக இயல்பாக எல்லோரிடமும் பேசுகிறார், ரஜினி. அனைத்து உணவுகளையும் ஏற்கிற அளவுக்கு அவர் உடல் சீராகி வருகிறது!'' என்றவர்கள், இப்படியும் சொல்கிறார்கள்.
''மிகக் கொடூரமாக நுரையீரல் மற்றும் சிறுநீரகங்​களில் தாக்கிய கிருமித் தொற்றில் இருந்து ரஜினி மீண்டது, நிச்சயமாக மருத்துவ உலகின் சாதனைதான். ஆன்மிகப் பிடிப்பும் நம்பிக்கையும் அவரைத் தைரிய​மாக வைத்து இருந்தது. நுரையீரலில் மிகச் சிறிய அளவுக்கு நீர் கோத்திருந்த தி.மு.க. பேச்சாளர்வெற்றி​கொண்டானை மருத்துவர்​​களால் காப்​பாற்ற முடிய​வில்லை. ஆனால், லிட்டர் கணக்கில் நுரையீரலில் நீர் கோத்திருந்த ரஜினி, கம்பீரமாக மீண்டுவிட்டார். அதற்குக் காரணம் அவருடைய நம்பிக்​கைதான்!''
- இரா.சரவணன்

No comments:

Post a Comment