Tuesday, July 12, 2011
''ஸ்டாலின் தலையணைக்குக் கீழ் ரூ 100 கோடி!''
''ஸ்டாலின் தலையணைக்குக் கீழ் ரூ 100 கோடி!''
மீண்டும் தலை காட்டும் 'ரைஸ் புல்லிங்' கும்பல்
''சார்... 'ரைஸ் புல்லிங்’னு சொல்லி ஒரு கூட்டம், லட்சம் லட்சமா ஆட்டையப் போடுது. இந்த கும்பலிடம் பணத்தைப் பறிகொடுத்த பலர் பித்துப் பிடிச்சு அலையறாங்க. இதை அம்பலப்படுத்தக் கூடாதா?'' - கோவை ஏரியாவைச் சேர்ந்த வாசகர் ஒருவர் ஆதங்கப்பட்டார்.
'ரைஸ் புல்லிங்’ என்ற பெயரில் நடக்கும் மோசடிகள் குறித்து அவ்வப்போது செய்திகள் கிளம்பும். ''கோபுரக் கலசங்களில் இடி தாக்கக் கூடாது என்பதற்காக விலை மதிப்புமிக்க உலோகமான இரிடியம் பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கலசத்துக்குப் பக்கத்தில் அரிசியைக் கொண்டுபோனால், அது மெரூன் கலராகி ஒட்டிக்கொள்ளும். டார்ச் லைட்டைக் கொண்டுபோனால், பல்ப் ஃப்யூஸ் ஆகிடும். கலசத்துக்கு மேல் ஊசியைப் போட்டால், அது அந்தரத்தில் நிற்கும்...'' என்றெல்லாம் அள்ளிவிடுவார்கள். நமக்குத் தகவல் கொடுத்த கந்தசாமியும் (பெயரை மாற்றப்பட்டுள்ளது) கலச மோசடிக் கும்பலிடம் 8 லட்சம் வரை இழந்திருக்கிறார்.
''நடிகர் வடிவேலு, தன்னோட சொந்த ஊர்ப் பக்கத்தில் இது மாதிரி ஒரு கலசம் இருக்கிறதை விஜயகாந்த்துக்கு சொன்னார். பல கோடி பெறுமானம் உள்ள அதை வடிவேலுக்குத் தெரியாமல் பேரம் பேசி வாங்கிய விஜயகாந்த், அவருக்கு 20 லட்சத்தை மட்டும் கொடுத்தார். இதில் பிரச்னை வந்துதான் ரெண்டு பேரும் முட்டிக்கிட்டாங்க!’னு தத்ரூபமா ஒரு கதையைச் சொல்லி என்னை ஏமாத்தினாங்க...'' என்று ஆரம்பித்தார் கந்தசாமி.
''முதன் முதலா எம்.ஜி.ஆர்-தான் இரிடியம் பிசினஸை ஆரம்பிச்சாராம். போன ஆட்சியில், கொடைக்கானல் பஸ் ஸ்டாண்ட் திறந்துவைக்க வந்த ஸ்டாலின், ஒரு கலசத்தை வாங்கிட்டுப் போனார்னு கதைகளா சொன்னாங்க.
கலசத்தில் இரிடியம் இருக்குதான்னு சோதனை பண்றதுக்கு, சேலத்தில் தாஸ், கோவையில் ரமேஷ், மதுரையில் சரவண பிரகாஷ்னு ஏரியாவுக்கு ஒருத்தன் இருக்கான். இவங்க எல்லாம் விஞ்ஞானிகளாம். சரவண பிரகாஷ், ஒரு ரிட்டயர்டு போலீஸ்காரர். இவங்களுக்கு ஒரு நாளைக்கு 20 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரைக்கும் ஃபீஸ். நாங்களும் பணம் கட்டி, சரவண பிரகாஷைக் கொடைக்கானலுக்குக் கூட்டிட்டுப் போனோம். 'அட்வான்ஸ் பணத்தைக் காட்டினாத்தான், பொருளைக் காட்டுவோம்’னு சொன்னாங்க. நாங்களும் 10 கோடியைக் காட்டினோம். நாங்க ஒரு குரூப்பாகப் போனதால், எதை எதையோ சொல்லி இழுத்தடிச்சு, கடைசி வரை பொருளைக் கண்ணில் காட்டவே இல்லை. அதனால், டெஸ்ட்டுக்குக் கட்டின பணம் வேஸ்ட்டாகிப் போச்சு.
உடுமலைப்பேட்டை பாலுதான் இந்தக் கும்பலுக்கு குரு மாதிரி. இவன் ஆளுங்கதான் இப்ப தமிழ்நாடு முழுக்க இந்த வேலையில் இறங்கி இருக்காங்க. இரிடியம் கலந்த கலசங்கள் இருப்பதாகச் சொல்லி நம்பவெச்சு, பார்ட்டிகளை வரவைக்கிறாங்க. இந்தக் கூட்டத்துக்கு போலீஸும் கூட்டு. பார்ட்டிகள் ஏமாளியாக இருந்தால், பணத்தைப் பிடுங்கிட்டு விரட்டுவாங்க. வெயிட்டான ஆளுங்களா இருந்தால், போலீஸை வரவைப்பாங்க. பெரும்பாலும் பிளாக் மணி வெச்சிருக்கவங்கதான் இதுக்கு வர்றதால், போலீஸ் வந்ததுமே பணத்தைப் போட்டுட்டு எஸ்கேப் ஆகிருவாங்க. அப்புறமா, சொற்பமான ஒரு தொகையைக் கைப்பற்றினதா கணக்குக் காட்டி, கேஸை முடிச்சிரும் போலீஸ். இதுக்கு பெர்சன்டேஜும் உண்டு.
பொருளைப் பார்த்தே தீரணும்னு யாராச்சும் அடம் பிடிச்சா, அதுக்காகவே டுபாக்கூர் கலசங்களை, மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் பழனின்னு ஒருத்தன் தயாரிக்கிறான்....'' கந்தசாமி சொல்லி முடிக்க... அவரது நண்பர் காரைக்குடி சொக்கலிங்கம் தொடர்ந்தார்,
'' 'ட்ரை குளோரைடு இரிடியம்’னு சொல்லி ஒரு பெட்டி, ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் கிடைக்கிறது. 25 கிலோ எடைகொண்ட இந்த 'கன் மெட்டல்’ பெட்டிக்குள், இரிடியம்னு சொல்லி மெட்டல் தூளை பக்காவாக பேக் பண்ணுவார்கள். கண்ணாடி வழியாகப் பாத்தால், இரிடியம் ஏழு கலரில் தெரியும். இதே மாதிரி நாகரத்தினக் கல், வெள்ளை ஆந்தை, ஆறு விரல் ஆமை, லிபியா காயின், மண்ணுளிப் பாம்புகளை வைச்சும் இந்தக் கும்பல் மோசடி செய்கிறது. கொடைக்கானலில் எங்கள் கண் முன்னாடியே ஒரு பாம்பைக் கொண்டுவந்து, கோதுமை சைஸில் ஒரு கல்லைக் கக்கவைத்து, 'இதுதான் பாஸ் நாகரத்தினக் கல்... இதோட மதிப்பு 100 கோடி. ஸ்டாலின் இதை தினமும் தனது தலையணைக்கு கீழ் வைச்சுத்தான் தூங்குவார்’னு கூசாமக் கதைவிட்டாங்க...'' என்றார்.
''இரிடியம் கதைகள் உண்மைதானா?'' காரைக்குடியில் உள்ள மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சிக் கழகத்தின் (CECRI) சீனியர் பிரின்சிபல் விஞ்ஞானி கே.சுப்பிரமணியனிடம் கேட்டோம். ''இரிடியம் ரொம்ப காஸ்ட்லியான உலோகம். இது, எரிமலைக் குழம்புகளில் இருந்து உருவாகிறது. இந்தியாவில் உற்பத்தி இல்லை. நமக்குத் தேவையான இரிடியத்தை அமெரிக்கா, ஜெர்மன் கம்பெனிகள்தான் சப்ளை செய்கின்றன. இன்றைய தேதியில், ஒரு கிராம் இரிடியம் 2,400. வெளி மார்க்கெட்டில் 6,000. சுமார் 2,700 டிகிரி வெப்பத்தைத் தாங்கக்கூடிய இரிடியம் விண்வெளி ஆராய்ச்சியில் அதிகமாகப் பயன்படுகிறது. ஆள் இல்லாத விண்கலங்களில் புளூட்டோனியத்தை வைத்துத்தான் மின்சாரம் உருவாக்குகிறார்கள். அப்போது உண்டாகும் சுமார் 2,000 டிகிரி வெப்பத்தைத் தாங்குவதற்காக இரிடியம் கண்டெய்னர்களில் புளூட்டோனியத்தை வைத்திருப்பார்கள். இரிடியம் அரிமானத்தைத் தடுக்கக்கூடியதால், ராக்கெட்டுகளில் கோட்டிங் மெட்டீரியலாகப் பயன்படுத்துகிறார்கள். கோபுரக் கலசங்களிலும் கோட்டிங் கொடுத்து இருக்கலாம். மற்றபடி, இந்தக் கும்பல் சொல்வதுபோல், இரிடியத்துக்கு எந்த விதமான விசேஷக் குணமும் கிடையாது. எல்லாம் சுத்த ஹம்பக்!'' என்றார்.
புரிஞ்சா சரி!
- குள.சண்முகசுந்தரம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment