தில்சனை சுட்டது ராணுவ அதிகாரியா? பாதுகாவலரா?
திகில் கிளப்பும் மரணம்
கண் எதிரே கொலையாளி இருந்தும், அந்த நபரைப் பிடிக்காமல், 'விசாரணை நடத்தி வருகிறோம்' என்கிற வழக்கமான பதிலைச் சொல்லி போலீஸ் சொதப்பிக்கொண்டு இருக்கவே... சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு சிறுவன் தில்சன் கொலை வழக்கை மாற்றி இருக்கிறது தமிழக அரசு!
சென்னை தீவுத் திடல் அருகே கொடி மரச் சாலையில் ராணுவ அதிகாரிகள் குடியிருப்பு உள்ளது. இந்தக் குடியிருப்பைச் சுற்றிலும் ஆறு அடிக்கு மதிலும், அதற்கு மேல் கம்பி வேலியும் உள்ளது. இந்தக் குடியிருப்புக்கு அருகே காந்தி நகர், எஸ்.எம்.நகர் குடிசைப் பகுதிகள் இருக்கின்றன. இங்கு உள்ளவர்கள், ராணுவக் குடியிருப்புப் பகுதிகளுக்குள் சிறு சிறு வேலைகள் செய்து தர, அழைப்பின் பேரில் செல்வார்கள். ராணுவக் குடியிருப்புவாசிகளின் குழந்தைகளும் வெளியில் உள்ள பள்ளிகளில் படிக்கின்றனர். எனவே, இரு தரப்பினரும் நல்லுறவுடன்தான் வாழ்ந்து வந்தனர். சில நேரங்களில் குடிசைப் பகுதிச் சிறுவர்கள், ராணுவக் குடியிருப்பின் சுவர் ஏறிக் குதித்து மாங்காய் பறிப்பது, வாதாம் மரக் கொட்டைகளை பொறுக்கிச் செல்வது வழக்கம். காவல் காக்கும் ராணுவ வீரர்களிடம் சிறுவர்கள் எப்போதாவது மாட்டிக்கொள்வதும், அவர்களை எச்சரித்து அனுப்புவதும் வழக்கமாக நடக்கும் விஷயம்தான்.
ஆனால், கடந்த ஜூலை 3-ம் தேதி நடந்தது அதிர்ச்சி. அன்று மதியம், 13 வயதுச் சிறுவன் தில்சன் மற்றும் இரு சிறுவர்கள் ராணுவக் குடியிருப்பின் சுவரில் ஏறி இருக்கிறார்கள். அப்போது திடீரென பாய்ந்து வந்த துப்பாக்கிக் குண்டு ஒன்று, தில்சனின் தலையில் பாய்ந்து, சரிந்து விழுந்தான். ரத்தம் அதிகம் வெளியேறிய நிலையில், அவனை ராணுவக் குடியிருப்புவாசிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை. மற்ற சிறுவர்கள் ஓடிப் போய் குடிசைவாசிகளை அழைத்து வந்து, ஆட்டோவில் தூக்கிப்போட்டு, ஆஸ்பத்திரிக்கு விரைந்தும், தில்சனைக் காப்பாற்ற முடியவில்லை.
மாநகர போலீஸார் விசாரணையில் இறங்கிய பிறகு, ''சுட்டது யார் என்று உறுதியானதும், ராணுவ அதிகாரிகள் கொடுக்கும் அறிக்கை அடிப்படையில், அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்படும்!'' என்று கூறினார்கள். ஆனால், முதல்வர் ஜெயலலிதா, தில்சனை சுட்ட நபரைக் கடுமையாகச் சாடி அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதோடு, அந்த நபரை உடனே போலீஸிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக தலைமைச் செயலாளர் மூலம் தமிழக ராணுவ உயர் அதிகாரிக்குக் கோரிக்கையும் வைத்தார்.
ராணுவ அதிகாரி ஒருவரிடம் இதுபற்றி விசாரித்தபோது, ''இது குடியிருப்புப் பகுதி என்பதால், இங்கு காவலுக்கு இருக்கும் வீரர்கள் கைகளில் துப்பாக்கிவைத்து இருப்பது இல்லை. எனவே, சுட்டது யார் என்று விசாரித்து வருகிறோம்...'' என்றார்.
இந்த வழக்கை முதலில் விசாரித்து வந்த போலீஸ் அதிகாரிகளிடம் பேசினோம். ''சிறுவர்கள் தவறு செய்து இருந்தால், அவர்களைப் பிடித்து எங்களிடம் ஒப்படைத்து இருக்கலாம். 'தில்சனை துப்பாக்கியால் சுடப்பட்டது குறித்து எதுவுமே தெரியாது’ என்று சாதித்தனர் அந்தக் குடியிருப்புவாசிகள். உள்ளே நாலு வீடுகள் இருக்கின்றன. அதில் ஒன்றில், லெப்டினென்ட் கர்னல் ஒருவர் நான்கு நாட்களுக்கு முன்பு குடியேறி உள்ளார். அந்தக் குடியிருப்புப் பகுதிகளில் புகுந்து, சந்தேக நபரையும் துப்பாக்கியையும் நாங்கள் தேட ஆரம்பித்தபோது, எங்களுக்கு நிறைய க்ளூக்கள் கிடைத்தன. யாரோ குடிபோதையில் இருந்த ஒருவர்தான் இந்தக் காரியத்தை செய்து இருக்கலாம். சுடப் பயன்படுத்தியது, ராணுவத்தினர் பயன்படுத்தும் பெரிய ரகத் துப்பாக்கி அல்ல... சாதாரணக் கைத்துப்பாக்கி என்றும் முதல்கட்டமாக தெரிய வந்தது. சுட்டவர் ஒரு அதிகாரியாக இருக்கலாம் என்பதும் எங்கள் சந்தேகம். ஆனால், அதற்குள் திடீரென என்ன நடந்ததோ, தெரியவில்லை. இந்த வழக்கை சென்னை போலீஸிடம் இருந்து சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றிவிட்டார்கள்!'' என்றனர்.
ஒரு காக்காயைச் சுடுவது போன்று சிறுவனை சுட்டுக் கொன்ற நபரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது சி.பி.சி.ஐ.டி-யின் கடமை!
- சூர்யா, படங்கள்: என்.விவேக்
No comments:
Post a Comment