Friday, July 1, 2011

'பார்' ஏலம் பலே.. பலே!


நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு விற்றாலே, பணம் கொட்டோ... கொட்டென்று கொட்டும். ஆனால், நாலு மடங்கு விலைக்கு விற்றாலும் யாரும் கேள்வி கேட்பது இல்லை என்பதால், டாஸ்மாக் கடைகளில் பார் நடத்தும் உரிமம் பெறுவதற்குக் கடும் போட்டி. கடந்த ஐந்து ஆண்டுகளாக தி.மு.க-வினரிடம் இருந்த மதுக்கடை பார்கள், இப்போது அ.தி.மு.க-வினர் கைகளுக்கு அதிரடியாக மாற்றப்பட்டு வருகிறது. டெண்டர் விண்ணப்பம் தர இழுத்தடிப்பதில் தொடங்கி, பார் ஒதுக்கீடு வரை பல கேலிக் கூத்துகளை அ.தி.மு.க. அரங்கேற்றி இருக்கிறது.
திருப்பூர் மாவட்ட மதுபானத் தின்பண்ட உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் கார்த்திகேயேனிடம் பேசினோம். ''எந்த மாதத்தில் மது விற்பனை அதிகமாக இருக்கிறதோ, அந்தத் தொகையில் இரண்டரை சதவிகிதத் தொகை, பார் நடத்துவதற்கான மாத வாடகையாக நிர்ணயம் செய்யப்படும். நிர்ணயம் செய்துள்ள தொகையைவிட அதிகமாக யார் கேட்கிறார்களோ, அவர்களுக்கு பார் நடத்தும் உரிமம் வழங்கப்படும். ஆனால், இப்போது டெண்டர் விண்ணப்பமே வாங்க முடியாத அளவுக்கு அ.தி.மு.க-வினர் கெடுபிடி செய்துவிட்டனர்.
திருப்பூரில் நான் பார் நடத்தி வந்த கடைக்கு மீண்டும் விண்ணப்பிக்க, விண்ணப்பம் கேட்டேன். தரவில்லை. எனது வழக்கறிஞரை அனுப்பினேன். பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்ததாக, என் மீதும், வழக்கறிஞர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருப்பூரில் இருக்கும் 250 கடைகளில் 209 கடைகளுக்கு பார் ஒதுக்கீடு முடிந்துவிட்டது. 209 கடைகளுக்கும் வந்த விண்ணப்பங்கள் 620. கடந்த தி.மு.க. ஆட்சியில் 2,039 பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஒரு கடைக்கு மூன்று விண்ணப்பங்கள் மட்டுமே வரும் வகையில் விண்ணப்பங்களை அ.தி.மு.க-வினருக்குக் கொடுத்து இருக்கின்றனர். எல்லோரையும் டெண்டரில் பங்கெடுக்கச் செய்திருந்தால், ஒவ்வொரு கடைக்கும் மாதத்துக்கு 30,000 வரை கூடுதலாக அரசுக்குக் கிடைத்து இருக்கும். விண்ணப்பக் கட்டணம் மூலமும் லட்சக்கணக்கில் வருவாய் வந்திருக்கும். இதே கணக்கை தமிழகம் முழுவதும் உள்ள 6,000 கடைகளுக்குப் போட்டுப் பார்த்தால், கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படும்!'' என்றார் ஆதங்கத்தோடு.
பார் நடத்த உரிமம் கேட்டு விண்ணப்பித்து இருந்த பழனிச்சாமியிடம் பேசினோம். ''நீதிமன்​றத்தில் முறையிட்டு வாங்கிய விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து பெட்டியில் போடப் போனேன். அலுவலகக் கதவை பூட்டி போலீஸை நிறுத்தி இருந்தனர். எவ்வளவோ போராடியும் விண்ணப்பத்தை பெட்டியில் போட விடவில்லை. அ.தி.மு.க-வினருக்கு சாதகமாக அதிகாரிகள் நடக்கிறார்கள். கடந்த முறை டெண்டர் போன தொகையில், 100 மட்டுமே அதிகமாக்கி, பார்களை அ.தி.மு.க-வினர் கபளீகரம் செய்து உள்ளனர்...'' என்றார் ஆவேசமாக.
தமிழகம் முழுவதும் மதுக்கடை பாருக்கான டெண்டர் விண்ணப்பங்களை, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களும் அமைச்சர்களுமே விநியோகம் செய்து இருக்கின்றனர். சில மாவட்டங்களில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பார்களை, ஏற்கெனவே நடத்தும் உடன்பிறப்புகளுக்கே கைமாற்றிவிட்ட ரத்தத்தின் ரத்தங்கள், சில லகரங்களை வாங்கிக்கொண்டு அமைதியாகிவிட்டனர்.
இன்னும் சில மாவட்டங்களில், வியாபாரம் மந்தமாக இருக்கும் கடைகளை தங்களுக்கு தள்ளிவிட்டு​விட்டதாக தே.மு.தி.க-வினரும் கொந்தளிக்கிறார்கள்.
இதற்கிடையே, மதுரையில் உள்ள 11 பார்களுக்கு அ.தி.மு.க-வினர் எடுத்த டெண்டரை நிறுத்திவைத்து இருக்கிறது டாஸ்மாக் நிர்வாகம். இதில், இரண்டு பார்கள் தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஒருவரின் சம்பந்தியின் கட்டுப்பாட்டில் இருப்பவை. இன்னும் இரண்டு, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவருக்கு சொந்தமானது. இன்னொன்று, மதுரை மாநகராட்சியில் கோலோச்சும் தி.மு.க. முக்கியப் புள்ளியின் கட்டுப்பாட்டில் இருப்பது. இந்த பார்களுக்கு விடப்பட்ட டெண்டர்களை எல்லாம் நிறுத்திவிட்டு, ஏற்கெனவே பார் நடத்துபவர்களுக்கே அதிகாரப்பூர்வமாக உரிமம் கொடுக்க டாஸ்மாக் அதிகாரிகள் திட்டம் இடுகிறார்களாம்.
மதுக் கடைகளை நடத்தும் அரசே, இனி பாரையும் ஏற்று நடத்தும் நிலை வந்தாலும் ஆச்சர்யம் இல்லை!

No comments:

Post a Comment