பழசு இன்றும் புதுசு
நேற்றும் நமதே-24: 16.3.88
வருகிற நோயாளிகளை கவனித்துக்கொண்டே நமக்குப் பேட்டியும் கொடுத்தார்.
''வன்னியர் இழிநிலை கண்டு பொறுக்காமல், 20.7.80 அன்று தமிழகம் முழுவதும் இறைந்துகிடந்த 28 வன்னியர் சங்கத்தின் தலைவர்களை அழைத்து என் வீட்டில் கூட்டம் போட்டேன். அன்றே 'வன்னியர் சங்கம்’ உதயமானது. அன்றைக்குத் துவங்கப்பட்ட சங்கம், வன்னியர்களுக்கு சாதியின் அடிப்படையில் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் 20 சதவிகித இட ஒதுக்கீடு கேட்டுப் போராடி வருகிறது.
எங்களுடைய கோரிக்கைகளை வற்புறுத்தி, டிசம்பர் 86-ல் ஒரு நாள் சாலை மறியல் போராட்டம் நடத்தினோம். 50 ஆயிரம் பேர் கைதானார்கள். பிறகு இதே கோரிக்கையை வற்புறுத்தி, இரண்டு நாட்கள் ரயில் நிறுத்தப் போராட்டம் செய்தோம். இதையும் அரசு கண்டுகொள்ளவில்லை. ஆகையால், 17.9.87-ல் இருந்து 23.9.87 வரை ஒரு வார காலம் சாலை மறியல் போரில் ஈடுபட்டோம். அதில் 17 பேர் இறந்தனர். 45 ஆயிரம் பேர் சிறை சென்றனர். இன்று தேர்தல் புறக்கணிப்புப் போராட்டத்துக்குத் தயாராகிக்கொண்டு இருக்கிறோம்.''
''அண்மைக் காலத்தில் சங்கத்தின் இந்த வளர்ச்சிக்கு என்ன காரணம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?''
''தீர்க்கப்படாத எங்களுடைய கோரிக்கைகளும், படித்துவிட்டு வேலை கிடைக்காத இளைஞர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளும்தான் காரணம். வன்னியர் சங்கம், இளைஞர்களின் இயக்கம். இளைஞர்கள் என்னை நம்புவதற்குக் காரணம்... 1980-ல் நான் சங்கத்தை ஆரம்பித்தபோதே, 'எந்தக் காலத்திலும் சட்டசபையையோ, நாடாளுமன்றத்தையோ என்னுடைய கால் மிதிக்காது’ என்று சத்தியம் செய்து கொடுத்ததுதான்!
1952-ல் 'உழைப்பாளர் கட்சி’ என்ற பெயரில் மாணிக்கவேல் என்பவரும், இன்னும் பலர் தனித் தனி வன்னியர் அமைப்புகளை வைத்திருந்தனர். இந்தக் கட்சிகள் அப்போது தேர்தலில் குதித்தபோது, 26 தொகுதிகளில் வெற்றி பெற்றன. வெற்றி பெற்ற வன்னியர்கள், மந்திரி பதவிக்காகக் காமராஜரிடம் விலைபோனார்கள். இது, எங்கள் இளைஞர்களை மனம் நோகச் செய்தது. அதனால், 'நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன்’ என்று சத்தியம் செய்துள்ளேன். இந்த சத்தியம்தான் இளைஞர்களை என்னை நம்பச் சொல்கிறது. மேலும், நான் சங்கத்தில்கூட எந்தப் பொறுப்பிலும் இல்லை. சங்கத்தின் எல்லாக் குழுவிலுமே நான் சிறப்பு அழைப்பாளர் மட்டுமே. ஆனால், சங்கத்தின் உறுப்பினர்கள் என்னை அன்பாக, 'நிறுவனர்’ என்று அழைக்கிறார்கள்!''.
''ஏன் தேர்தலைப் புறக்கணிப்பதாக முடிவெடுத்து இருக்கிறீர்கள்?''
''தமிழ்நாட்டில் Single Largest Community நாங்கள், ஆனால், எந்தத் துறையாகட்டும்... அதில் நாங்கள் ஒதுக்கப்பட்டுத்தான் இருக்கிறோம். அரசியலில் பாருங்கள்... நாங்கள் முதல் மந்திரி ஆனதே இல்லை. கட்சித் தலைவர்களாகக்கூட ஆனது இல்லை. டெல்லியில், குட்டி மந்திரியாகக்கூட ஆனது இல்லை. பொருளாதார ரீதியில் பார்த்தாலும், நாங்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழேயே இருக்கிறோம். வேலைவாய்ப்பு பற்றி சொல்லவே தேவை இல்லை. 'எங்கள் சாதியில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் 10 சதவிகிதம்தான். இப்படி 40 வருட கால ஜனநாயகத்தில், சுதந்திரத்தில் எங்களுக்கு என்ன நன்மை கிடைத்தது? அதனால்தான், இப்போது நாங்கள் எந்தக் கட்சியையும் ஆதரிக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியை 20 ஆண்டு காலம் பார்த்துவிட்டோம். நன்மை இல்லை. தி.மு.க. ஆட்சி செய்தபோது, பண்ருட்டி ராமச்சந்திரன் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது சம்பந்தமாகச் சட்ட ஆலோசனையை திரட்டிக் கொடுத்தார். அப்படி இருந்தும், அந்த ஃபைலை யாரும் சட்டை செய்யவில்லை. அ.தி.மு.க-வும் 10 வருடம் ஆண்டது... நன்மை எதுவும் வரவில்லை. ஆகையால், அரசியல் கட்சி என்றாலே எங்களுக்கு இப்போது வெறுப்பாக இருக்கிறது. அதனால்தான் ஓட்டு போடுவது இல்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம்.''
''உங்கள் சங்கத்தினர் தேர்தலில் போட்டியிடலாமே..?''
''எங்களுடைய சங்கம் அரசியல் சார்பற்றது. எங்களால் தேர்தலில் போட்டியிட முடியாது. சுயேச்சைகளாகத்தான் நிற்க வேண்டும். சுயேச்சைகளாக இருந்தால், இன்றைய அரசியல் சூழ்நிலையில் அவர்கள் சுலபமாக விலை போய்விடுவார்கள். ஆகவே, நாங்கள் எங்களது உரிமைகளை, கோரிக்கைகளைப் போராடிப் பெறத்தான் விரும்புகிறோம்!''
''பாண்டிச்சேரியில் மட்டும் உங்கள் சங்கம் தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்துள்ளீர்களே... அது எப்படி?''
''பாண்டிச்சேரி ஒரு பஞ்சாயத்து யூனியன் பரப்பளவுதான் இருக்கிறது. அங்கே நாங்கள் 70 சதவிகிதம் இருக்கிறோம். ஆகையால், அங்கே நாங்கள் போட்டியிட்டால், உடனே ஆட்சிக்கே வர முடியும். ஆட்சிக்கு வந்த பிறகு, எங்களுக்கு வேண்டிய சதவிகிதத்தை நாங்களே சட்டம் போட்டு எடுத்துக்கொள்வோம். ஆனால், தமிழகத்தில் நாங்கள் போட்டியிட்டால், அதிகபட்சம் 50 ஸீட்டுகள்தான் கிடைக்கும். 50 எம்.எல்.ஏ-க்களை வைத்துக்கொண்டு எங்களால் ஆட்சியையும் பிடிக்க முடியாது; சட்டமும் இயற்ற முடியாது. அதனால்தான், தற்போதைக்கு நாங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை.
எங்களுடைய 20 சதவிகித இட ஒதுக்கீடு கோரிக்கை நிறைவேற்றப்பட்ட பிறகு, வன்னியர் சங்கம் தேர்தலில் குதிக்கும். இப்போது நாங்கள் கேட்கும் இட ஒதுக்கீட்டை, சட்டம் மூலமாகக் கொடுத்தால், வன்னியர் சங்கம் தேர்தலைப் புறக்கணிக்காது. பாட்டாளி கட்சி என்ற எங்கள் சங்கத்தின் 'பொலிடிகல் விங்’கால் ஒரு நன்மையும் உண்டு. வன்னியர் சங்கத்தை சிஷீனீனீuஸீணீறீ என்று தடை செய்வார்களேயானால், 'பாட்டாளி கட்சி’யின் கீழ் எங்களால் தொடர்ந்து செயல்பட முடியும்.''
''நீங்கள் ஒரு வார காலம் சாலை மறியல் போராட்டம் நடத்தினீர்கள். அப்போது, 17 பேர் குண்டடிபட்டு இறந்தார்கள். பிறகு இளைய பெருமாள் தொடர்பாக வதந்தி பரவியபோது, துப்பாக்கி சூடு நடந்தது. இதிலும் நான்கைந்து பேர் பலியானார்கள். ஆக, ஒருவர் பெரிய மனிதர் ஆவதற்காகப் பலர் தங்கள் உயிரை பலி கொடுப்பதுபற்றி என்ன சொல்கிறீர்கள்?''
''நாங்கள் ஒரு வார காலம் நடத்திய சாலை மறியல் போராட்டம் திட்டமிட்டுச் செய்யப்பட்ட ஒன்று. தி.மு.க-வினர் இதில் தலையிட்டதால்தான், தென் ஆற்காடு மாவட்டத்தில் மட்டும் கலவரம் நடந்தது. மற்ற எந்த மாவட்டத்திலும் நடக்கவில்லை. ஆனால், இளைய பெருமாள் இழந்துவிட்ட தனது செல்வாக்கைப் பெற வதந்தியைப் பரவவிட்டுக் கலவரம் ஏற்படுத்தினார். அங்கு நடந்த துப்பாக்கி சூடு இவர் பண்ணிய கூத்தின் விளைவு!''
''இளைய பெருமாள் தாக்கப்படவில்லை என்றாலும், அவர் பெருந்துறை எனும் ஊரில் சுமார் மூன்று மணி நேரம் வன்னியர்களால் மடக்கிவைக்கப்பட்டு இருந்தார் என்பதுதானே உண்மை!''
''ஆம், இருக்கலாம். இந்தச் சம்பவம் நடந்த முதல் தினம் கம்மாபுரம் எனும் ஊரில் இவர் என்னைப்பற்றி அசிங்கமாகப் பேசி இருக்கிறார். ஆகையால், அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று அங்கு இருந்த வன்னியர்கள் கூறி இருக்கிறார்கள். மனித உயிர்களைத் துப்பாக்கி சூட்டுக்கு இரையாக்கி நான் தலைவனாகி வருவதாக மறைமுகமாகக் கூறியுள்ளார்கள். நான் அரிஜன மக்கள் உரிமைக்கும் உடைமைக்கும் சேதம் விளைவித்துப் பெரிய மனிதன் ஆக விரும்பவில்லை. ஏனென்றால், நான் மனிதநேயப் பற்றாளன்!''
''அப்படி என்றால் ஆலப்பாக்கத்தில் ஆயிரம் அரிஜனங்களின் வீடுகள் சாம்பலானதற்கு என்ன சொல்கிறீர்கள்?''
''அதற்கு, அந்த ஊர் அரசியல் பிரமுகர் துரை அன்பரசன்தான் காரணம். அரிஜனங்களுக்குக் கொடுக்கும் இடஒதுக்கீடை 18 சதவிகிதத்தில் இருந்து 20 சதவிகிதமாக உயர்த்தக் கோரும் நாங்கள், அரிஜனங்களின் வீட்டைக் கொளுத்துவோமா?''
''எந்தக் கட்சியுமே வன்னியர்களுக்கு ஆதரவாக இல்லை என்கிறீர்கள். என்றாலும், 'அந்தக் கட்சியைவிட இந்தக் கட்சி ஆட்சிக்கு வருவது பரவாயில்லை’ என்று எந்தக் கட்சியைக் குறிப்பிடுவீர்கள்?''
''எல்லாக் கட்சிகளுமே சனியன்கள்தான்! இதில் எந்த சனியன் தேவலாம் என்றால் எப்படிப் பதில் சொல்வது? இன்றைக்கு உள்ள அரசியல் சூழ்நிலையில், புத்தியுள்ள மக்கள் ஓட்டு சாவடிக்குப் போக மாட்டார்கள்!''
- வேல்ஸ்
No comments:
Post a Comment