Tuesday, July 12, 2011

1 ராம.நாராயணன் 2 சிவசக்தி பாண்டியன்

1 ராம.நாராயணன் 2 சிவசக்தி பாண்டியன் அடங்காத கோடம்பாக்க அமர்க்களம்! சக்சேனா, அய்யப்பன் கைது​களுக்குப் பிறகு, அடுத்தது யார் என்கிற பரபரப்பு கிளம்பிவிட்டது. போலீஸ் தரப்பும் கோடம்பாக்கப் புள்ளிகளும் ஒரு சேரக் கை நீட்டுவது, தயாரிப்பாளர்கள் ராம.நாராயணன், சிவசக்தி பாண்டியனை நோக்கித்தான்! ''ராம.நாராயணன், சிவசக்தி பாண்டியன் இருவரும் கடந்த ஆட்சியில் திரைத் துறையை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அவர்களின் பஞ்சாயத்துகளால் பாதிக்கப்பட்ட யார் வேண்டுமானாலும் புகார் கொடுங்கள். கைது செய்யச் சொல்லி, மேலிடமே சொல்லிவிட்டது!'' எனத் தயாரிப்பாளர்களுக்கு போன் போட்டு அழைக்கிறது போலீஸ். தயாரிப்பாளர்கள் ஐங்கரன் கருணா, அபிராமி ராமநாதன், தனஞ்செயன், 'ஸ்டுடியோ க்ரீன்’ ஞானவேல், மன்னன், 'மகிழ்ச்சி’ மணிவண்ணன், தயாரிப்பாளர் சகா என அதிருப்திப் புள்ளிகள் பலரையும் வளைத்து புகார்கள் வாங்கும் விறுவிறுப்பில் இருக்கிறது போலீஸ். இயக்குநர்கள் சங்கப் பொதுச் செயலாளராகத் தேர்ந்து எடுக்கப்பட்ட அமீரும் இந்தப் பட்டியலில் அடக்கம். இது குறித்து தயாரிப்பாளர்கள் சிலரிடம் பேசினோம். ''கடந்த ஆட்சியில் ராம.நாராயணன் வைத்ததுதான் சட்டம். சிவசக்தி செய்வதுதான் செயல். சன் டி.வி-க்கு சக்சேனா எப்படியோ, அதேபோல்தான், கலைஞர் டி.வி-க்கு ராம.நாராயணன். சிறு பிரச்னையாக இருந்தாலும், உடனே கவுன்சிலுக்கு வரவழைத்து பஞ்சாயத்துப் பேசுவதாகச் சொல்லி, ஏதாவது ஒரு ஏரியாவுக்கு விநி​யோக உரிமையை வாங்கிக்கொள்வார்கள். கலைஞர் டி.வி-யில் சாட்டிலைட் உரிமைக்காக ஒரு தொகை பேசிவிட்டு, அதில் பாதியை அவர்களே அமுக்கிக்கொண்டு தயாரிப்பாளர்களைத் தவிக்கவிடுவார்கள். ராம.நாராயணன் நினைப்பதைச் செய்துகொடுப்பதுதான் சிவசக்தி பாண்டியனின் வேலை. 'பருத்திவீரன்’, 'ரேனிகுண்டா’, 'மகிழ்ச்சி’, 'வாரணம் ஆயிரம்’, 'வல்லக்கோட்டை’, 'தம்பிக்கோட்டை’ என 50-க்கும் மேற்பட்ட படங்களின் விநியோக உரிமைகளில், இவர்கள் வில்லங்கத்தை உருவாக்கினார்கள். யார் எதிர்த்துக் கேட்டாலும், 'கோபாலபுரத்திலேயே சொல்லிட்டாங்க...’ என்று வாயை அடைத்துவிடுவார்கள். தயாரிப்பாளர்களை மட்டும் அல்ல... சில சேனல்களையே மிரட்டிப் பணம் பறிக்கும் வேலையும் நடந்தது. 'சூரியன் சட்டக் கல்லூரி’ என்ற படத்தை எடுத்த சிவசக்தி பாண்டியன், அதைச் சொல்லியே பல இடங்களில் பணம் கறந்தார். 'அர்ஜுனன் காதலி’ என்ற படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் எடுத்துத் தருவதாகச் சொல்லி, ஐங்கரன் நிறுவனத்திடம் 3 கோடி வாங்கினார். படத்தின் பட்ஜெட் அதிகமாகிவிட்டதாகச் சொல்லி பாண்டியன் கை விரிக்க, அபிமானத் தயாரிப்பாளர் ஒருவரும் இரண்டு எழுத்து சேனல் தரப்பினரும் தலா 50 லட்சத்தை பாண்டியனுக்குக் கொடுத்தார்கள். இன்று வரை கொடுத்த பணத்தையோ, படத்தையோ வாங்க முடியாமல் தவிக்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள். பிரமாண்டத்தில் சாதிக்கக்கூடிய ஒரு தயாரிப்பாளரை கவுன்சிலில் நிறுத்தி மன்னிப்பு கேட்கவைத்தார்கள். 'பருத்திவீரன்’ படத்தில் அமீருக்கும் ஞானவேலுக்கும் பிரச்னை உருவானது. ஆனால், இப்போது இந்த இருவருமே ராம.நாராயணன் மீது புகார் கொடுக்கும் முடிவில் இருக்கிறார்கள். அமீரிடம் இருந்து பஞ்சாயத்து நடத்தி 'பருத்திவீரன்’ படத்தை ஞானவேலுக்கு பிடுங்கிக் கொடுத்த ராம.நாராயணன் அதற்கு நன்றிக்கடனாக சில ஏரியாக்களின் விநியோக உரிமையை வாங்கிக்கொண்டார். அதற்கான பணத்தை ஞானவேலுக்கு சரிவரக் கொடுக்கவில்லை. அதே நேரம் ஞானவேல், அமீருக்கு கொடுக்கவேண்டும் என கவுன்சில் தீர்மானித்த 80 லட்சத்தை அமீருக்கும் வாங்கித் தரவில்லை. பல படங்களுக்கு இதேபோல் பஞ்சாயத்து பேசி இரு தரப்பிலும் ஆதாயத்தைப் பறிக்கும் வேலைகள் தொடர்ந்து நடந்தன. கேபிள் டி.வி-க்கு படத்தின் புரமோஷன் காட்சிகளை வழங்குவதற்கான தொகையை, வருடத்துக்கு ஒரு முறை தயாரிப்பாளர்களுக்கு வழங்குவது வழக்கம். ஆனால், முதல் வருடத்தைத் தவிர, கடந்த நான்கு ஆண்டுகளாக அந்தப் பணத்தை ராம.நாராயணன் வழங்கவில்லை. முதல் புகாரை யார் கொடுப்பது என்கிற தயக்கம்தான் இப்போது நீடிக்கிறது. முதல் புகார் போய்விட்டால், வரிசையாக நூற்றுக்கும் மேற்பட்ட புகார்கள்கூட ராம.நாராயணன், பாண்டியன் இருவர் மீதும் பாயும்!'' என்கிறார்கள் அதிரடியாக. இது குறித்து ராம.நாராயணனிடம் கேட்டால், ''இதுவரைக்கும் என் மீது யாரும் புகார் கொடுக்கவில்லை. புகார் கொடுக்கிற அளவுக்கு நான் நடந்துகொள்பவனும் இல்லை. என் கவனத்துக்கு வந்த பிரச்னைகளை தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்து தீர்த்துவைத்தேனே தவிர, ஆதாயத்துக்காக எதையும் செய்தது கிடையாது!'' என்றார். சிவசக்தி பாண்டியனோ, ''தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு வந்த பஞ்சாயத்துக்களைத்தான் தீர்த்துவைத்தோமே தவிர, நாங்களாக பஞ்சாயத்தை உருவாக்கவில்லை. யாரிடமும் எதைச் சொல்லியும் பணம் பெறவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. மற்றபடி வழக்குவந்தால் சந்திக்கத் தயார்!'' என்கிறார் தெளிவாக. இதற்கிடையில், போலீஸ் அமீரை அணுக, ''அவர்களின் மீது வழக்குப்போட்டுவிட்டு பிறகு வந்து பாருங்கள்... அவர்களைப் பற்றிய அத்தனை விஷயங்களையும் சொல்கிறேன்!'' என்றாராம். அடுத்தபடியாய் உதயநிதியின் வலது கரமாகத் திரைத் துறையைக் கலக்கிய வாசனைப் புள்ளி,, மூன்று எழுத்து சேனலின் பிரதிநிதி எனக் கைதுப் பட்டியலின் நீளம் நீண்டுகொண்டே போகிறது! - இரா.சரவணன்

''ஸ்டாலின் தலையணைக்குக் கீழ் ரூ 100 கோடி!''

''ஸ்டாலின் தலையணைக்குக் கீழ் ரூ 100 கோடி!'' மீண்டும் தலை காட்டும் 'ரைஸ் புல்லிங்' கும்பல் ''சார்... 'ரைஸ் புல்லிங்’னு சொல்லி ஒரு கூட்டம், லட்சம் லட்சமா ஆட்டையப் போடுது. இந்த கும்பலிடம் பணத்தைப் பறிகொடுத்த பலர் பித்துப் பிடிச்சு அலையறாங்க. இதை அம்பலப்படுத்தக் கூடாதா?'' - கோவை ஏரியாவைச் சேர்ந்த வாசகர் ஒருவர் ஆதங்கப்பட்டார். 'ரைஸ் புல்லிங்’ என்ற பெயரில் நடக்கும் மோசடிகள் குறித்து அவ்வப்போது செய்திகள் கிளம்பும். ''கோபுரக் கலசங்களில் இடி தாக்கக் கூடாது என்பதற்காக விலை மதிப்புமிக்க உலோகமான இரிடியம் பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கலசத்துக்குப் பக்கத்தில் அரிசியைக் கொண்டுபோனால், அது மெரூன் கலராகி ஒட்டிக்கொள்ளும். டார்ச் லைட்டைக் கொண்டுபோனால், பல்ப் ஃப்யூஸ் ஆகிடும். கலசத்துக்கு மேல் ஊசியைப் போட்டால், அது அந்தரத்தில் நிற்கும்...'' என்றெல்லாம் அள்ளிவிடுவார்கள். நமக்குத் தகவல் கொடுத்த கந்தசாமியும் (பெயரை மாற்றப்பட்டுள்ளது) கலச மோசடிக் கும்பலிடம் 8 லட்சம் வரை இழந்திருக்கிறார். ''நடிகர் வடிவேலு, தன்னோட சொந்த ஊர்ப் பக்கத்தில் இது மாதிரி ஒரு கலசம் இருக்கிறதை விஜயகாந்த்துக்கு சொன்னார். பல கோடி பெறுமானம் உள்ள அதை வடிவேலுக்குத் தெரியாமல் பேரம் பேசி வாங்கிய விஜயகாந்த், அவருக்கு 20 லட்சத்தை மட்டும் கொடுத்தார். இதில் பிரச்னை வந்துதான் ரெண்டு பேரும் முட்டிக்கிட்டாங்க!’னு தத்ரூபமா ஒரு கதையைச் சொல்லி என்னை ஏமாத்தினாங்க...'' என்று ஆரம்பித்தார் கந்தசாமி. ''முதன் முதலா எம்.ஜி.ஆர்-தான் இரிடியம் பிசினஸை ஆரம்பிச்சாராம். போன ஆட்சியில், கொடைக்கானல் பஸ் ஸ்டாண்ட் திறந்துவைக்க வந்த ஸ்டாலின், ஒரு கலசத்தை வாங்கிட்டுப் போனார்னு கதைகளா சொன்னாங்க. கலசத்தில் இரிடியம் இருக்கு​தான்னு சோதனை பண்றதுக்கு, சேலத்தில் தாஸ், கோவையில் ரமேஷ், மதுரையில் சரவண பிரகாஷ்னு ஏரியாவுக்கு ஒருத்தன் இருக்கான். இவங்க எல்லாம் விஞ்ஞானிகளாம். சரவண பிரகாஷ், ஒரு ரிட்டயர்டு போலீஸ்காரர். இவங்களுக்கு ஒரு நாளைக்கு 20 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரைக்கும் ஃபீஸ். நாங்களும் பணம் கட்டி, சரவண பிரகாஷைக் கொடைக்கானலுக்குக் கூட்டிட்டுப் போனோம். 'அட்வான்ஸ் பணத்தைக் காட்டினாத்தான், பொருளைக் காட்டுவோம்’னு சொன்னாங்க. நாங்களும் 10 கோடியைக் காட்டினோம். நாங்க ஒரு குரூப்பாகப் போனதால், எதை எதையோ சொல்லி இழுத்தடிச்சு, கடைசி வரை பொருளைக் கண்ணில் காட்டவே இல்லை. அதனால், டெஸ்ட்டுக்குக் கட்டின பணம் வேஸ்ட்டாகிப் போச்சு. உடுமலைப்பேட்டை பாலுதான் இந்தக் கும்பலுக்கு குரு மாதிரி. இவன் ஆளுங்கதான் இப்ப தமிழ்நாடு முழுக்க இந்த வேலையில் இறங்கி இருக்காங்க. இரிடியம் கலந்த கலசங்கள் இருப்பதாகச் சொல்லி நம்பவெச்சு, பார்ட்டிகளை வரவைக்கிறாங்க. இந்தக் கூட்டத்துக்கு போலீஸும் கூட்டு. பார்ட்டிகள் ஏமாளியாக இருந்தால், பணத்தைப் பிடுங்கிட்டு விரட்டுவாங்க. வெயிட்டான ஆளுங்களா இருந்தால், போலீஸை வரவைப்பாங்க. பெரும்பாலும் பிளாக் மணி வெச்சிருக்கவங்கதான் இதுக்கு வர்றதால், போலீஸ் வந்ததுமே பணத்தைப் போட்டுட்டு எஸ்கேப் ஆகிருவாங்க. அப்புறமா, சொற்பமான ஒரு தொகையைக் கைப்பற்றினதா கணக்குக் காட்டி, கேஸை முடிச்சிரும் போலீஸ். இதுக்கு பெர்சன்டேஜும் உண்டு. பொருளைப் பார்த்தே தீரணும்னு யாராச்சும் அடம் பிடிச்சா, அதுக்காகவே டுபாக்கூர் கலசங்களை, மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் பழனின்னு ஒருத்தன் தயாரிக்கிறான்....'' கந்தசாமி சொல்லி முடிக்க... அவரது நண்பர் காரைக்குடி சொக்கலிங்கம் தொடர்ந்தார், '' 'ட்ரை குளோரைடு இரிடியம்’னு சொல்லி ஒரு பெட்டி, ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் கிடைக்கிறது. 25 கிலோ எடைகொண்ட இந்த 'கன் மெட்டல்’ பெட்டிக்குள், இரிடியம்னு சொல்லி மெட்டல் தூளை பக்காவாக பேக் பண்ணுவார்கள். கண்ணாடி வழியாகப் பாத்தால், இரிடியம் ஏழு கலரில் தெரியும். இதே மாதிரி நாகரத்தினக் கல், வெள்ளை ஆந்தை, ஆறு விரல் ஆமை, லிபியா காயின், மண்ணுளிப் பாம்புகளை வைச்சும் இந்தக் கும்பல் மோசடி செய்கிறது. கொடைக்கானலில் எங்கள் கண் முன்னாடியே ஒரு பாம்பைக் கொண்டுவந்து, கோதுமை சைஸில் ஒரு கல்லைக் கக்கவைத்து, 'இதுதான் பாஸ் நாகரத்தினக் கல்... இதோட மதிப்பு 100 கோடி. ஸ்டாலின் இதை தினமும் தனது தலையணைக்கு கீழ் வைச்சுத்தான் தூங்குவார்’னு கூசாமக் கதைவிட்டாங்க...'' என்றார். ''இரிடியம் கதைகள் உண்மைதானா?'' காரைக்​குடியில் உள்ள மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சிக் கழகத்தின் (CECRI) சீனியர் பிரின்சிபல் விஞ்ஞானி கே.சுப்பிரமணியனிடம் கேட்டோம். ''இரிடியம் ரொம்ப காஸ்ட்லியான உலோகம். இது, எரிமலைக் குழம்புகளில் இருந்து உருவாகிறது. இந்தியாவில் உற்பத்தி இல்லை. நமக்குத் தேவையான இரிடியத்தை அமெரிக்கா, ஜெர்மன் கம்பெனிகள்தான் சப்ளை செய்கின்றன. இன்றைய தேதியில், ஒரு கிராம் இரிடியம் 2,400. வெளி மார்க்கெட்டில் 6,000. சுமார் 2,700 டிகிரி வெப்பத்தைத் தாங்கக்கூடிய இரிடியம் விண்வெளி ஆராய்ச்சியில் அதிகமாகப் பயன்படுகிறது. ஆள் இல்லாத விண்கலங்களில் புளூட்டோனியத்தை வைத்துத்தான் மின்சாரம் உருவாக்குகிறார்கள். அப்போது உண்டாகும் சுமார் 2,000 டிகிரி வெப்பத்தைத் தாங்குவதற்காக இரிடியம் கண்டெய்னர்களில் புளூட்டோனியத்தை வைத்திருப்பார்கள். இரிடியம் அரிமானத்தைத் தடுக்கக்கூடியதால், ராக்கெட்டுகளில் கோட்டிங் மெட்டீரியலாகப் பயன்படுத்துகிறார்கள். கோபுரக் கலசங்களிலும் கோட்டிங் கொடுத்து இருக்கலாம். மற்றபடி, இந்தக் கும்பல் சொல்வதுபோல், இரிடியத்துக்கு எந்த விதமான விசேஷக் குணமும் கிடையாது. எல்லாம் சுத்த ஹம்பக்!'' என்றார். புரிஞ்சா சரி! - குள.சண்முகசுந்தரம்

மிஸ்டர் கழுகு: பெமா வலையில் கலைஞர் டி.வி.!

மிஸ்டர் கழுகு: பெமா வலையில் கலைஞர் டி.வி.!

செல்போனில் பேசியபடியே வந்தார் கழுகார். நம்மைப் பார்த்ததும், ''நியூஸை கன்ஃபார்ம் செய்ததும், மிஸ்டு கால் கொடுங்கள்!'' என்று போனை கட் பண்ணினார். ''மணல் மேட்டரில் ஒரு க்ளைமாக்ஸ் நடக்கிறது. அதைக் கடைசியில் சொல்கிறேன்...'' என்றவர், மற்ற செய்திகளை ஆரம்பித்தார்!

''தயாநிதி மாறனின் ராஜினாமா காட்சிகள் பற்றி கடந்த இதழில் விரிவாகச் சொல்லி இருந்தேன். கடந்த வியாழன் அன்று இரவே, சென்னைக்குத் திரும்பி வர நினைத்தார். ஆனால், மீடியாக்கள் சூழ்ந்துகொண்டு துளைத்தெடுப்பார்கள் என்பதால், வெள்ளிக்கிழமை இரவுதான் வந்தார்.

நேராக கோபாலபுரம் போய், கருணாநிதியைச் சந்தித்தார். கருணாநிதிதான் அவருக்கு அதிகம் ஆறுதல் சொன்னதாகச் சொல்கிறார்கள். அடுத்த சில நிமிடங்களில் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், துரைமுருகன் போன்றவர்களால் கருணாநிதி வீடு நிரம்பியது. ஒருவிதமான விரக்தி மனோநிலையில், 'இனிமேல் என்னால் பண்றதுக்கு எதுவும் இல்லை. யாராவது ஆலோசனை இருந்தா, சொல்லுங்க’ என்று தனது இயலாமையை வெளிப்படுத்தினாராம் கருணாநிதி.

இந்த நிலையில், மறுநாள் காலை நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்னை வருவதாகவும், கருணாநிதியைச் சந்திக்க இருப்பதாகவும் தகவல் கிடைத்தது. 'என்ன விஷயமாக இருக்கும்?’ என்று கருணாநிதி யோசித்தார். ஆ.ராசா, தயாநிதி ஆகிய இருவரும் பதவி விலகிய நிலையில், 'அந்த இடங்களுக்கு யாரை நியமிக்கலாம்?’ என்று பிரதமர் விசாரிக்கச் சொன்னதற்காகத்தான் பிரணாப் வருவதாகச் சொன்னார்கள்.''

''யாருடைய பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்​டனவாம்?''

''கருணாநிதிக்கு இதுவும் புதுத் தலைவலியாக மாறியது. நாகை ஏ.கே.எஸ்.விஜயனை மத்திய அமைச்சராக்க வேண்டும் என்று ஸ்டாலின் சொல்லி இருக்கிறார். டி.ஆர்.பாலுவையே அமைச்சர் ஆக்குங்கள் என்பது அழகிரியின் பரிந்துரை. ஜெயதுரை அல்லது நாகர்கோவில் ஹெலன் டேவிட்சனை அமைச்சராக்க வேண்டும் என்பது ராஜாத்தி அம்மாள் கோரிக்கை. கனிமொழி உள்ளே இருப்பதால், அவரது ஆதரவு யாருக்கு எனத் தெரியவில்லை. இந்த நிலையில், மண்டையைப் பிய்த்துக்கொண்டாராம் கருணாநிதி. 'யாருமே மந்திரியாக வேண்டாம்! ஒவ்வொருத்தராக ராஜினாமா பண்ணிட்டு வர்றதுக்குதான் மந்திரி ஆகணுமா?’ என்று வருத்தப்பட்ட கருணாநிதி... இதையே பிரணாப் முகர்ஜியிடமும் சொன்னாராம். இதைத் தெரிந்துகொண்ட ஸ்டாலின் கோபம்​கொண்டதாகவும், இதனால் கருணாநிதியைச் சந்திப்​பதைத் தவிர்த்ததாகவும் சொல்கிறார்கள்.''

''பிரணாப்பின் சமாதானம் என்னவாம்?''

''அவர் தி.மு.க-வை சமாதானம் செய்ய வரவில்லை. பிரதமரின் கோபத்தைக் கொட்டுவதற்கே வந்தாராம்!''

''ஆ.ராசாவைக் கைது செய்தாகிவிட்டது. தயாநிதி ராஜினாமா செய்துவிட்டார். இதற்கு மேல் என்னவாம் பிரதமருக்கு?''

''அடுத்த கோபம், அழகிரி மீது திரும்பி உள்ளதாம் டெல்லிக்கு! 'அழகிரி நாடாளுமன்றத்துக்கு வருவதே இல்லை. கேள்விகளுக்குப் பதில் சொல்வதும் இல்லை’ என்ற குற்றச்சாட்டுகள் ஆரம்பத்தில் கிளம்பின. 'தமிழில் பதில் சொல்லலாம்’ என்று சபாநாயகர் மீராகுமார் சொன்ன பிறகும், நாடாளுமன்ற நடவடிக்கைகளில் அழகிரி கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில், உரத் துறை சம்பந்தமான மீட்டிங்குகளிலும் கலந்துகொள்வது இல்லையாம். உர விலைக் குறைப்பு தொடர்பாக இரண்டு வாரங்களுக்கு முன்னால் டெல்லியில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. கேபினெட் அமைச்சர் என்ற முறையில் அழகிரிதான் நடுநாயகமாக இருந்து அதை நடத்தி இருக்க வேண்டும். அவருக்குத் துணையாக தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனியையும் சேர்த்தார்கள். ஆனால், அன்றும் அழகிரி எஸ்கேப்!''

''அப்படியா?''

''கூட்டமே நடக்கவில்லை. 'அழகிரி வராததால் இந்தக் கூட்டம் நடக்கவில்லை’ என்று அம்பிகா சோனி வெளிப்படையாகவே அறிவித்தார். உரங்கள் தொடர்பாக அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து ஒரு தாக்கீது வந்தது. அதற்கும் அழகிரியிடம் இருந்து உரிய பதில் அனுப்பிவைக்கப்படவில்லை. அஸ்ஸாம் முதல்வர், பிரதமரைத் தொடர்புகொண்டு, இது தொடர்பாக மூன்று முறை பேசினார். அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்கள் அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மன்மோகன். அதனால், அந்த மாநிலத்தின் மீது கொஞ்சம் அதிகக் கவனம் அவருக்கு உண்டு. அதிலும், அழகிரி சுணக்கமாக இருந்தார். உச்சக்கட்ட கோபம், சமீபத்தில் நடந்த கேபினெட் கூட்டத்துக்கு அழகிரி வராததுதான்.''

''அவர் மதுரையில் இல்லையே!''

''அவர் மதுரையில் இல்லை என்றால், டெல்லியில்தான் இருப்பாரா என்ன? ஜூலை 4-ம் தேதி பாட்டியாலா கோர்ட் விசாரணைகள் தொடங்கியது அல்லவா? அதையட்டி அழகிரியுடன் முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பெரியகருப்பன் ஆகியோர் டெல்லிக்குச் சென்றார்கள். கனிமொழியைச் சந்தித்தார்கள். அப்படியே சுற்றுலாத் தலமான குலுமணாலி சென்று ஓய்வெடுத்தார்கள். கேபினெட் வியாழக்கிழமை நடக்கும்போது, அழகிரி டெல்லியில் இல்லை. பிரதமர் கோபத்துக்கு இதுதான் காரணம். அந்த வருத்தங்களை பிரணாப் கொட்டியதாகச் சொல்கிறார்கள். 'செயல்படாத ஒருவருக்கு கேபினெட் அந்தஸ்து உள்ள பதவி தேவையா? அவரை பதவி விலகச் சொல்லுங்கள், அல்லது முக்கியத்துவம் இல்லாத இலாகாவை வாங்கிக்கொள்ளச் சொல்லுங்கள்’ என்று காங்கிரஸ் மேலிடம் சொல்லச் சொல்லி இருக்கிறதாம்.''

''என்ன செய்வார் கருணாநிதி?''

''அவரோ, அழகிரியிடம் எதையும் சொல்லும் நிலையில் இல்லை. மன்மோகனிடமும் சொல்ல முடியாது. அநேகமாக, இலாகா மாற்றத்தின்போது அழகிரிக்கு டம்மியான இலாகா தரப்படலாம்!'' என்ற கழுகார்... டெல்லி நியூஸுக்குத் தாவினார்.

''ஜூலை 7-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் ஸ்பெக்ட்ரம் தொடர்பாக சி.பி.ஐ. ஒரு அறிக்கை தாக்கல் செய்து, தயாநிதி மாறனுக்குச் சிக்கல் ஏற்படுத்தியது அல்லவா? இன்றைய தினம், மத்திய அமலாக்கத் துறை தனது அறிக்கையைத் தாக்கல் செய்து, அடுத்த சிக்கலை உண்டாக்கிவிட்டது. அவர்கள் குற்றம் நடந்திருப்பதைச் சொன்னார்கள். இவர்கள் இது நடந்ததால் கைமாறிய பணம் மற்றும் இந்தியாவுக்கு உள்ளே வந்த, வெளியில் சென்ற பணத்தின் மதிப்பைப் பட்டியல் இட்டு மலைப்பை ஏற்படுத்தி உள்ளார்கள். ஃபெமா மற்றும் ஃபெரா சட்டங்களையும், முறைகேடான நிதியில் தொடங்கப்பட்ட நிறுவனங்களை முடக்குவது பற்றிய ஏராளமான சட்டங்களையும் துணைக்கு அழைத்து இந்த அறிக்கையைத் தாக்கல் செய்தனர்.

டிபி ரியாலிட்டி நிறுவனம் லைசென்ஸ் பெறுவதற்காக 200 கோடி பணம் தந்தது. அது குஸேகான் மூலமாக சினியுக் நிறுவனத்துக்கு வந்து, அது கலைஞர் டி.வி-யை ஆரம்பிக்கத் துணை புரிந்ததாகக் கொண்டுவருகிறார்கள். 'எனவே கலைஞர் டி.வி-யை இந்த வழக்கில் சேர்த்து, அந்தச் சொத்தையும் அட்டாச் பண்ணப்போகிறோம்’ என்று அவர்கள் சொல்லி இருப்பதுதான் மாபெரும் அட்டாக்!''

''கலைஞர் டி.வி-யையே மொத்தமாக முடக்கி​விடுவார்​களா?''

''ஃபைன் போடுவது ஒரு வகை. வழக்கு நடந்து முடியும் வரை கணக்குகளைத் தன்னுடைய கண்காணிப்பில் வைப்பது இன்னொரு வகை. மொத்தமாக செயல்படவிடாமல் தடுப்பது மூன்றாவது. இதில் எதைச் செய்யப்போகிறார்களோ? சுமார் 7,000 கோடிக்கும் அதிகமான பணம் இந்த விவகாரத்தில் விதிமுறைகளை மீறி நடமாடி இருக்கிறதாம். சைப்ரஸ், மொரீஷியஸ், சிங்கப்பூர், பிரிட்டீஸ் வெர்ஜின் ஐலண்ட் ஆகிய நாடுகளும், சில தீவுகளும் இந்த வலைப் பின்னல்களுக்குள் வருகின்றனவாம். தகவல்களைத் திரட்டிக் கொண்டுவரக் களத்தில் குதித்துள்ளதாம் அமலாக்கத் துறை. இதில் நிகழ்ந்த மிக முக்கியமான கைமாறுதல் விஷயங்களை, அடுத்தடுத்த அறிக்கைகளில் கொண்டுவந்து, அதிர்ச்சியைக் கூட்டுவார்களாம்!'' என்று சொல்லி முடிக்கவும், கழுகாருக்கு அந்த மிஸ்டு கால் வரவும் சரியாக இருந்தது. புன்னகைத்துவிட்டுப் பேச்சைத் தொடர்ந்தார்!

''மணல் கொள்ளையைப்பற்றி ஏற்கெனவே உமது நிருபர் எழுதி அரசாங்கத்துக்கு எச்சரிக்கை செய்திருந்தார். மதுரை வட்டாரத்துக் கொள்முதல் விஷயங்களைக் கண்காணிக்கும் பொறுப்பு, மன்னார்குடிப் பிரமுகர் கைக்குச் சென்றது. அவரும் மதுரையில் தனக்கு ஓர் ஆளை நியமித்து காரியங்களைப் பார்க்கத் தொடங்கினார். ஆனால், அவரால் இதைச் சமாளிக்க முடியவில்லை. கடந்த தி.மு.க. ஆட்சியில் கொடிகட்டிப் பறந்த 'பைசா’ பிரமுகரிடம் தகவல் சொல்லப்பட்டது. 'நானே அதைச் செய்து கொடுக்கிறேன்’ என்று அவராக முன்வந்தார். இதை மன்னார்குடிப் பிரமுகரும் ஏற்றுக்கொண்டார். சென்னைக்கு 'பைசா’ பிரமுகர் அழைத்து வரப்பட்டு, வி.வி.ஐ.பி-யுடன் சந்திப்பும் நடந்தது. மேட்டர் ஓகே ஆனது. அதாவது, கடந்த ஆட்சியில் யார் மணல் அள்ளினார்களோ, அவர்களின் கைகளுக்கே இந்த ஆட்சியிலும் மணல் சக்சஸாகப் போய்ச் சேர்ந்துள்ளது. இதைவிடச் சோகம் என்னவென்றால், 'இவர்கள் எல்லாம் நம்ம தொழிலுக்கு உடந்தையானவர்கள். அவங்க மேல் வழக்கு ஏதுவும் வராமப் பார்த்துக்கோங்க’ என்று 'பைசா’ பிரமுகர் வாக்குறுதியும் கேட்டு வாங்கினாராம். அவர்களில் பலர் தி.மு.க-வினர்!'' என்றபடி சிறகை விரித்தார் கழுகார்!

வருவாரா டக்ளஸ்?

டெல்லியில் இருந்து இலங்கைக்குச் சென்ற அதிகாரி நிருபமா ராவை, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்தார். ''எனக்கு அவசரமாக ஒரு சிகிச்சை செய்ய வேண்டும். சென்னையில்தான் அதைச் செய்ய வேண்டும். ஆனால், கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக இருக்கும் என்னை, அங்கு வந்தால் தமிழக போலீஸார் கைதுசெய்துவிடுவார்கள். அப்படிக் கைதுசெய்யவிடாமல் தடுக்க வேண்டும்!'' எனக் கேட்டுக்கொண்டாராம். அதற்கு நிருபமா, ''நீங்கள் நீதிமன்றத்தில் சரண் அடைந்துவிட்டு, ஜாமீன் மனு போடுங்கள். அப்போது, எங்கள் தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருக்கிறோம். இதைத்தான் நாங்கள் செய்ய முடியும்!'' என்று சொன்னாராம். இதற்கு ஏற்றபடி அதிகார மட்டத்தில் காரியங்கள் நடந்து வருகின்றனவாம்!

பள்ளிக்கூடங்கள் திறந்தும் பாடம் நடத்த முடியாமல் இருப்பது யார் குற்றம்?

சில நேரங்களில் அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள், கல்வியாளர்கள், நீதிபதிகள் என ஒட்டுமொத்தமாகவே யதார்த்தம் உணராதவர்களாக இருப்பதுதான் காலக் கொடுமை!

மற்ற வகுப்புகளாவது பரவாயில்லை... 10-ம் வகுப்பு பிள்ளைகளுக்காவது, அது சமச்சீர் கல்விப் புத்தகமோ அல்லது சமம் இல்லாத பாடப் புத்தகமோ... ஏதாவது ஒன்றைப் படிக்க ஒப்புதல் தந்து உடனடியாக அறிவிக்க வேண்டும். 10-ம் வகுப்பு மாணவ, மாணவியர் பலரின் மன நலன்கூட இதனால் பாதிக்கப்பட்டு வருகிறது.

குரலற்றவர்களின் குரலாக இதை எடுத்துக்கொள்ள வேண்டும்!

டி.ஜெய்சிங், கோயமுத்தூர்-1.

லட்சக்கணக்கான தமிழர்களின் உயிர்களைப் பறித்த ராஜபக்ஷேவின் செயலைச் சிங்களவர்கள் யாரும் கண்டிக்க முன்வரவில்லையா?

ஏன் இல்லை? ராஜபக்ஷேவின் மனசாட்சியைத் தட்டி, கொட்டி எழுப்ப முயன்றவர் பத்திரிகையாளர் லசந்தா விக்கிரமதுங்க. ''என் மறைவு, சுதந்திரத்தை வீழ்த்தாது. இதற்காகப் போராடுபவர்கள் தொடர்ந்து பணியாற்ற ஊக்கமாக அமையும். தேசப்பற்று என்ற பெயரால் பலர் தங்களது உயிரைத் துறக்கும் உண்மையை ஜனாதிபதி தெரிந்துகொள்ள இது உதவும். எத்தனை ராஜபக்ஷேக்கள் இணைந்தாலும், அதை அழிக்க முடியாது!'' என்று சண்டே லீடர் பத்திரிகைக்குத் தலையங்கம் எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்ற லசந்தா, கொல்லப்பட்டார். கொழும்பு நகரில் நேருக்கு நேராக நின்று பேனா மூலம் சண்டை போட்ட துணிச்சல்காரர். அவரது உணர்ச்சிகளுடன் அவரின் மனைவி இன்றும் போராடி வருகிறார். லசந்தா வழியில் எத்தனையோ சிங்களப் பத்திரிகையாளர்களான (குறிப்பாக 'சுனந்த’!) மனித உரிமைப் போராளிகள் கொழும்புவில் இன்னமும் இருக்கிறார்கள்!

விஜயராகவன், கிருஷ்ணகிரி.

'இந்தியாவில் இப்போது ஊடகங்களின் ஆட்சிதான் நடக்கிறது’ என்று கோபப்படுகிறாரே கருணாநிதி?

இதில் கோபப்படுவதற்கு என்ன இருக்கிறது? 'நானும் ஒரு பத்திரிகையாளன்தான்’ என்று அவ்வப்போது சொல்லிக்கொள்ளும் கருணாநிதி, நிஜமாக இதற்குப் பெருமைப்பட வேண்டும்!

எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

வாரா வாரம் பிரதமர் மன்மோகன்சிங் நடத்தும் பத்திரிகையாளர் சந்திப்புக்கும் முதல்வர் ஜெயலலிதா நடத்தும் பத்திரிகையாளர் சந்திப்புக்கும் என்ன வேறுபாடு?

பத்திரிகை ஆசிரியர்கள், முதலாளிகளை மட்டும் சந்திக்கிறார் பிரதமர். ஆனால், நிருபர்களை சந்திக்கிறார் முதல்வர்!

தான் சொல்ல வேண்டியதை மட்டுமே பிரதமர் கொட்டுகிறார். முதல்வரோ, நிருபர்கள் கேட்பதற்கு பதில் சொல்கிறார்!

நிறைய மாட்டிக்கொண்ட பதற்றம் பிரதமரிடம் தெரிகிறது. இப்போதுதான் வந்திருப்பதால், பயம் இல்லாமல் இருக்கிறார் முதல்வர்!

அவரிடம் தோல்வி பயமும் இவரிடம் வெற்றியின் பெருமிதமும் இப்போது படர்ந்துள்ளன!

அ.இராஜப்பன், கருமத்தம்பட்டி.

ஆன்மிகச் சிந்தனை அதிகரித்தால், இந்தியாவில் குற்றங்கள் குறையுமா?

எந்தக் கோயிலில் கூட்டம் இல்லை? ஆனால், குற்றங்கள் குறையவில்லையே!

இன்று, பக்தி அதிகமாகி உள்ளது. ஆனால், கடவுள் மீதான பயம் குறைந்துவிட்டது!

சுப்ரமணியன், காஞ்சிபுரம்.

அண்ணன், தம்பி உறவு எப்படி இருக்க வேண்டும்?

'என்னுடைய புகைப்படத்தை மட்டும் போடுங்கள், வேறு யாருடைய படமும் போட வேண்டாம்’ என்று தம்பிக்கு மறைமுகத் தடை போடுவதுபோல இருக்கக் கூடாது!

உலகப் புகழ் பெற்ற ஓவிய மேதை வான்காவும் அவர் தம்பி தியோவும்தான் நல்ல உதாரணங்கள். வாழ்ந்த கடைசி நொடி வரை 10 பைசாகூட வருமானம் தராத ஓவியங்களைத் தளராமல் வரைந்து வந்தான் வான்கா. அதுபற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் அண்ணன் மீதான நம்பிக்கையால் பணமும் ஓவியப் பொருட்களையும் வாங்கித் தந்துகொண்டே இருந்தான் தியோ.

வான்காவை ஒரு மன நோயாளியாக உலகம் சித்தரித்தது. ஆனால், தியோ அதை ஏற்கவில்லை. இப்படித்தான் இருக்க வேண்டும் அண்ணன் - தம்பி உறவு. வான்காவின் ஓவியங்கள் உலகப் புகழ் அடைந்ததைக் காண இருவருமே இல்லை என்பதுதான் சோகம்!

போடி.எஸ்.சையது முகமது, சென்னை-93.

'இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணுமாறு தம்மை இந்தியா நிர்ப்பந்தம் செய்யவில்லை’ என்கிறாரே ராஜபக்ஷே?

இது என்ன ராஜபக்ஷே சொல்லித் தெரிய வேண்டிய ரகசியமா?

ஆர்.ஜேஸ்மின் ரமேஷ், கம்பம்.

கருணாநிதியால் ஒரு தலைமுறையே இந்தி படிக்காமல் இருந்து உயர்ந்த நிலையை அடையாமல் போய்விட்டது என்கிறார்களே... உண்மையா?

இந்தி படித்துவிட்டால் உயர்ந்த நிலையை அடையலாம் என்பது தவறான வாதம். சென்னைக்கு வந்து பாருங்கள். கூலி வேலைகளுக்காக நித்தமும் வந்து இறங்கும் பீகாரிகள் சுத்தமான இந்தி பேசுகிறார்கள். அவர்கள் ஏன் உயர் நிலையை அடையாமல் போனார்கள்? இந்தி மட்டும் அல்ல... எந்த மொழியைக் கற்றாலும், அது ஒரு கூடுதல் தகுதிதான். ஆனால், அது மட்டுமே தகுதியாக ஆகிவிடாது.

ஆங்கிலத்தை விட்டுவிட்டு இந்தியை மட்டும் கற்று இருந்தால், இந்தியத் தவளையாக தமிழன் ஆகி இருப்பான்!

வசந்தா, மேலூர்.

காஸ் சிலிண்டர் கெடுபிடிகளைப் பார்த்தீரா? வருடத்துக்கு நான்கு சிலிண்டருக்கு மேல் வாங்கினால், ஒரு சிலிண்டர் 800 ரூபாயாமே?

அரசு நிறுவனம் நஷ்டம் அடையக் கூடாது என்பதில் காட்டும் அக்கறையில் கடுகளவேனும் மக்கள் மீதும் காட்டுபவர்களாக இருந்தால், இப்படி ஒரு யோசனை அவர்கள் மனதில் தோன்றுமா? தமிழகத்தில் மக்கள் நடத்திய மௌனப் புரட்சியை காங்கிரஸ் கவனத்தில்கொள்வது நல்லது. இல்லையென்றால், காந்திஜியின் ஆசைப்படி காங்கிரஸ் நிச்சயம் காணாமல் போய்விடும்!

எம்.சண்முகம், கொங்கணாபுரம்.

செல்போன் நமக்கு வரமா? சாபமா?

வெளியில் இருக்கும் 100 கோடிப் பேருக்கு... வரம்.

உள்ளே இருக்கும் 14 பேருக்கு... சாபம்!

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

ஊழல் எப்போது குறையும்?

பெண்கள் நினைத்தால்தான் குறையும்!

அப்பா, சகோதரன், கணவன், மகன் கொண்டுவரும் 'வருமானத்துக்கு அதிகமான சொத்துகளை’ வீட்டில் இருக்கும் பெண்கள் தடுத்தால்... ஊழல் குறையும்.!

Monday, July 11, 2011

வாழ்க வளமுடன்! - வேதாத்திரி மகரிஷி

வாழ்க வளமுடன்! - வேதாத்திரி மகரிஷி

சந்தோஷ சூட்சுமம்!


பயணங்கள் சுகமானவை. எத்தனை முறை சென்றாலும் ரயில் பயணம் எவருக்கும் அலுப்பதே இல்லை. ஓடும் ரயிலின் சீரான தடதட சத்தமும், இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் லேசாக அசைந்து, அன்பான அம்மா போல நம்மைத் தாலாட்டி ஆட வைத்து அழைத்துச் செல்லும் பாங்கும் மிக ரசனையானவை.

பேருந்துப் பயணம் மட்டும் என்ன... ஜன்னலோரத்தில் அமர்ந்துகொண்டால், காற்று விறுவிறுவென ஜன்னலுக்குள் புகுந்து, நம் தலையைக் கோதிவிடுவதில் இருக்கிற சுகம், அலாதியானது; ஈடு இணையே இல்லாதது!

வாழ்வில், இப்படியான இனிமைப் பயணங்கள் நிறையவே உண்டு. இன்னும் சொல்லப் போனால், இந்த வாழ்க்கை என்பதே பெரும் பயணம்தான், இல்லையா? இந்தப் பயணமும் ஒருவிதத்தில் சுகமானதுதான். என்ன ஒன்று... ரயிலிலும் பேருந்திலும் அதன் வேகமும் அடிக்கிற காற்றும் நம் பயணத்தை சுவாரஸ்யமாக்கும். ஆனால், வாழ்க்கைப் பயணத்தில், நாம் சுவாசிக்கும் காற்றில்தான், சந்தோஷத்துக்கான சூட்சுமமே அடங்கியிருக்கிறது.

மனவளக் கலைப் பயிற்சிக்கு வரும் அன்பர்களிடம், பொதுவாகச் சொல்வேன்... ''மனவளக் கலையில் நிறையவே பயிற்சிகள் உண்டு. எல்லாமே எளிமையானவை; மிகச் சுலபமாகப் புத்தியில் வாங்கிக்கொண்டு செயல்படுத்தக்கூடியவை. அதில், சுவாசப் பயிற்சியின்போது, ரொம்பவும் கவனம் எடுத்துக்கொண்டு கற்றுக் கொள்ளுங்கள். அதன் அவசியத்தை உணர்ந்து, அறிந்து, புரிந்துகொண்டு செயலாற்றுங்கள்'' என்பேன்.

ஒருமுறை அன்பர் ஒருவர், ''என்ன சுவாமி... மனவளக் கலைப் பயிற்சியின்போது, நீங்கள் கூடவே இருக்கிறீர்கள். போதாக்குறைக்கு, நம் அமைப்பைச் சேர்ந்த அன்பர்கள், சுற்றிச் சுற்றி வந்து ஆலோசனை சொல்கிறார்கள்; 'கைகளை இப்படி வைத்துக் கொள்ளுங்கள்; பாதங்களைத் தொடையின் மீது வைத்துக் கொண்டு, இந்த இரண்டு விரல்களாலும் மெள்ள அழுத்துங்கள்’ என்று சரிசெய்கின்றனர். எந்த விரல்களால், எந்த இடத்தில் இருந்து அழுத்தவேண்டும் என்று தெளிவாகச் சொல்லித் தருகின்றனர். அப்படியிருக்கும்போது, சுவாசப் பயிற்சியையும் அவர்களே பார்த்து சரிசெய்துவிடுவார்களே சுவாமிஜி! நீங்கள் இதற்கு இத்தனை கவலைப்படுவானேன்?'' என்று கேட்டார்.

கால்களைக் கைகளால் அழுத்துவது பற்றி அருகில் இருப்பவர்கள் எடுத்துச் சொல்வார்கள்; சரி செய்வார்கள். வஜ்ராசனம் எப்படி அமரவேண்டும் என்றும், அப்போது முதுகையும் கழுத்தையும் எப்படி வைத்துக் கொள்ளவேண்டும் என்றும் திருத்துவார்கள். ஆனால், மூச்சுப் பயிற்சியில், 'இப்படி அமர்ந்து கொள்ளுங்கள்; முதுகை நேராக்கிக் கொள்ளுங்கள்; மூச்சை நன்றாக உள்ளிழுங்கள்’ என்று சொல்வது மட்டும்தான் எங்களின் வேலை. அந்த மூச்சை எப்படித் துவங்கி, எங்கே முடிக்கவேண்டும்; அது எங்கே முடிகிறது என, மெள்ள மூச்சை இழுத்துக் கொள்வதும் பிறகு விடுவதுமாக இருக்கிற சூட்சுமத்தை நீங்களேதான் அறியமுடியும். காற்று எனும் பந்து, மூக்கின் வழியே நுழைந்து, நெஞ்சின் எந்த இடத்தில் போய் இடிபட்டு நிற்கிறது என்பதை உங்களால்தான் உணரமுடியும். ஆகவே, சொல்லும்போது கவனமாகக் கேட்பதும், செய்யும்போது அந்த மூச்சுப் பந்தினூடே நீங்கள் பயணம் செய்வதும் அவசியம்'' என்பதை விளக்கினேன்.

சரி... மூச்சுப் பயிற்சிக்கு வருவோம்.

சுவாசப் பயிற்சியில் மொத்தம் ஏழு நிலைகள் இருக்கின்றன. இந்த ஏழு நிலைகளையும் எவர் ஒருவர் சரியாகச் செய்கிறாரோ, அவர்களின் மூச்சுக் குழாய் சுத்தமாகும்; சைனஸ் போன்ற பிரச்னைகளில் இருந்து அவர்கள் நிவாரணம் பெறுவார்கள் என்பது மருத்துவர்கள் பலரே வியந்து சொன்ன உண்மை! ஆகவே, ஆழ்ந்த ஈடுபாட்டுடன் மூச்சுப் பயிற்சியைக் கற்றுக் கொள்ளுங்கள்; அருமையான, நிம்மதியான வாழ்க்கையை வாழ்வீர்கள் என்பது உறுதி!

வலது கையைத் தொப்புள் பகுதியிலும், இடது கையை வலது காதிலும் வைத்துக்கொண்டு, அடுத்து, இடது கையை தொப்புள் பகுதியிலும் வலது கையை இடது காதிலும் வைத்துக்கொண்டு... எனப் பயிற்சி செய்தீர்கள், அல்லவா?! இப்போது, வழக்கம்போல் சுகாசனத்தில் அமர்ந்துகொண்டு, வலது உள்ளங்கையால் இடது காதையும், இடது உள்ளங்கையால் வலது காதையும் பொத்திக் கொள்ளுங்கள். கண்களை மூடியபடி, மூச்சை உள்ளிழுத்து வெளியே விடுங்கள். அவசரமே வேண்டாம்; நிதானம்தான் இங்கே முக்கியம். இதேபோல் ஐந்து முறை செய்யும்போது, உங்கள் நுரையீரலின் பின்பகுதி முழுவதும் நன்கு விரிவடைவதை உங்களால் உணரமுடியும். இதையடுத்து, வலது உள்ளங்கையால் வலது காதையும், இடது உள்ளங்கையால் இடது காதையும் மூடிக் கொள்ளுங்கள். அப்போது, உங்களின் இரண்டு கைகளும் மடங்கினாற்போல் நெஞ்சினில் இருக்காமல், உங்களின் தோள்பகுதியைப் பார்த்தபடி இருக்கட்டும். கிட்டத்தட்ட, உங்களின் இரண்டு கை விரல்களும் பின்னந்தலையில் வந்து சேரும்படி இருக்கட்டும். இந்த நிலையில் இருந்தபடி, மூச்சை ஆழ்ந்து, நிதானமாக ஐந்து முறை இழுத்து, வெளியே விடுங்கள். இந்தப் பயிற்சியால், நுரையீரலின் முன்பகுதியும் கீழ்ப் பகுதியும் மிக அருமையாக விரிவடையும். கொஞ்சம் பொறுமையுடனும் ஈடுபாட்டுடனும் பயிற்சி செய்தால், உங்களால் நுரையீரலில் ஏற்படும் மாற்றங்களைத் தெளிவாக உணரமுடியும். நுரையீரல் சீராகிவிட்டதென்றால், மூச்சுக் குழாயின் வழியே வருகிற காற்று, தங்குதடையின்றி வரத்துவங்கிவிட்டது என்று அர்த்தம். மூச்சில் தடையேதுமின்றி இருந்தால், செயலிலும் தடைகள் இருக்காது; தடுமாற்றங்கள் நிகழாது. தடுமாற்றம் இல்லாத செயல்பாடுகள் எல்லாமே வெற்றியைத்தான் தரும் என்று நான் சொல்லவேண்டுமா, என்ன?

இன்னொரு விஷயம்... இந்த ஏழு நிலைப் பயிற்சிகளிலும், மூச்சை உள்ளிழுக்கலாம்; வெளியேற்றலாம். ஆனால், மூச்சை நிறுத்திவைக்க வேண்டிய அவசியமில்லை. யோகாசன முறையில், அப்படி மூச்சடக்குவதை கும்பகம் என்பார்கள். மனவளக் கலை உடற்பயிற்சியில், இந்தக் கும்பக முறை, எந்த இடத்திலும் இல்லை என்பதை அன்பர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

மூச்சுப் பயிற்சியின் ஏழாவது நிலையையும், ஏழு பயிற்சிகளால் நமக்குக் கிடைக்கிற நன்மைகள் என்னென்ன என்பதையும் உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.

அதற்கு முன், 'அப்பாடா...’ என்று ஒருமுறை மூச்சைத் தளர்த்திக்கொண்டு, ரிலாக்ஸ் செய்யுங்களேன்!

Saturday, July 9, 2011

பழசு இன்றும் புதுசு

தமிழக சட்டசபையில் 25 ஆண்டுகளாகப் பளிச்சிட்டு வந்த​வர் கலைஞர் கருணாநிதி. தி.மு.கழக கொறடா வாக, எதிர்க் கட்சித் துணைத் தலைவராக, முதல்வராக, எதிர்க் கட்சித் தலைவராக... பல விதங்களில் சட்டசபையில் பரபரப்பாகச் செயல்பட்டவர். இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசின் மெத்தனத்தை எதிர்த்து சட்டமன்ற உறுப்பினர் பதவியைக் கலைஞரும் பேராசிரியர் அன்பழகனும் ராஜினாமா செய்தனர். அதற்கு பிறகு, முதல் தடவையாக சட்டசபை 24-ம் தேதி கூடுகிறது. கலைஞர் இல்லாத சட்டசபைக் கூட்டம் இது.

சட்டசபையில் அமைச்சர்களுக்கு எதிர் வரிசையில் முதல்வருக்கு நேர் எதிரான ஆசனத்தில் ரிலாக்ஸ்டாக அமர்ந்திருப்பது, கலைஞரின் பாணி. அவரது கறுப்புக் கண்ணாடி வழியாக, அவர் கண்கள் சுறுசுறுப்பாக அலை பாய்வது தெரியும். முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் கறுப்புக் கண்ணாடியைப்போல அல்லாமல், கலைஞரின் கண்களை முழுமையாக மறைக்காத கூலிங் கிளாஸ் அது. அமைச்சர்களின் பதில் சரி இல்லை என்றால், கலைஞரது கேலிச் சிரிப்புதான் மண்டபத்தை முதலில் நிறைக்கும்.

சட்டசபையில் பரபரப்பான கட்டம் வரும்போதெல்லாம், ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்கள் கலைஞரை உற்று கவனித்தவாறு இருப்பது வழக்கம். ஏன்? ஓர் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. கூறினார்... ''சூடான விவாதம் வரும்போது கலைஞரை உற்றுப் பார்ப்பேன். அவர் தலையில் கைவைத்தவாறு இருப்பார். ஒரு விரலால் தலையை அவர் தட்டியவாறு இருந்தால், உடனே துரைமுருகன் எழுந்திருப்பார்... இரண்டு விரலால் தலையைத் தட்டிக் காண்பித்தால், ரகுமான்கான் எழுந்திருப்பார். இப்படி ஒரு சைகை சிஸ்டமே உண்டு.''

இதைக் கேட்டுக்கொண்டு இருந்த இன்னொரு தி.மு.கழக எம்.எல்.ஏ. ஒருவர், கலகலவென்று சிரித்தார்: ''ஆமாம்! அவர் இரண்டு கையாலும் தலையில் தட்டிக் கொள்ளும்போது வாக்-அவுட் செய்வோம்'' என்றார் தமாஷாக!

பத்திரிகை நிருபர்களைப் பொறுத்த வரையில், கலைஞர் இல்லாத சட்டசபை 'டல்’தான். கலைஞர் இல்லாத சட்டசபையில் தி.மு.கழக எம்.எல்.ஏ-க்கள் எப்படிச் செயல்படப்போகிறார்கள் என்பது அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் நிகழ்ச்சி.

கலைஞர் இல்லாத சட்டசபை எப்படி இருக்கும் என்று சில எம்.எல்.ஏ-க்களிடம் கருத்துக் கேட்டபோது...

முசிறிப்புத்தன், எம்.எல்.ஏ. (அண்ணா தி.மு.க): ''நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, சபையில் நடந்த குழப்பங்களை எல்லாம் திராவிட முன்னேற்றக் கழகம் திட்டமிட்டே செய்து வந்தது. அவர் சபையில் இருந்தபோதே, கட்டுப்படுத்த முடியாத நிலைமை இருந்தது. சில நேரங்களில் அப்படிப்பட்ட நிலைமை கலைஞரது ஆசையின் வெளிப்பாடாகவும் இருந்தது. இப்போது அவர் இல்லாத வேளையில், இன்னும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். பேராசிரியர் அன்பழகன் இல்லாததுதான் ஒரு குறையாக இருக்கிறது.

உணர்ச்சிவசப்படாமல் கருத்தைச் சொல்பவர் பேராசிரியர். எதிர்க் கட்சியைச் சார்ந்தவர் என்ற கண்ணோட்டம் இன்றி, சொல்ல நினைத்ததைத் தெளிவாக எடுத்துச் சொல்வார். ஆனால், கலைஞர் அப்படி அல்ல. கலைஞரின் அணுகுமுறைகள் - நடவடிக்கைகள் எந்த நேரமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை அவதூறுக்கு ஆளாக்குகிற பாணி(பணி?)யாகவே இருந்தது. எதை எடுத்தாலும் குறுகிய கண்ணோட்டத்துடன், சொந்த லாபங்களைத் கருதியே செயல்பட்டவர். கருணாநிதி இருந்தபோதே, சபையின் கண்ணியத்தைக் குறைக்கக்கூடிய அளவுக்கு நடந்துகொண்ட அந்தக் கட்சி உறுப்பினர்கள், அவர் இல்லாத நிலையில் சட்டசபையில் திட்டமிட்ட குழப்பங்களை அதிகமாகவே செய்வார்கள். அண்ணா தி.மு.க. அதை உரிய முறையில் சந்திக்கும்.''

துரைமுருகன், எம்.எல்.ஏ. (தி.மு.கழகம்): ''1957-ல் இருந்து 1983 பட்ஜெட் தொடர் கூட்டம் வரை - ஆளும் தரப்பிலே இருந்தாலும், எதிர்க் கட்சியில் இருந்தாலும், குறிப்பிட்ட நேரத்துக்கு வந்துவிடுவார் கலைஞர். முடிகிற வரையில் இருந்து, தான் பேசாவிட்டாலும் மற்றவர்களின் பேச்சைச் செவிமடுத்து மன்றத்துக்குக் கௌரவம் அளிப்பதில் கருத்தாக இருந்தார். இவ்வளவு கடமை தவறாத வீரர் எதிர்க் கட்சித் தலைவராக இருக்கிற காலத்திலேயே, இன்றைய முதல்வர் (எம்.ஜி.ஆர்.) சட்டசபையில் தலை காட்டுவது அபூர்வம். கேள்விகளுக்கு பதில் சொல்வதே கிடையாது. இனி மேல் அந்தக் கடமை வீரர் சட்டசபையில் இல்லை என்ற தைரியத்திலேயே, 'பெர்மனன்ட் ஆப்சென்ட்’ ஆகிவிடுவார். இல்லாவிட்டால், தட்டிக் கேட்க ஆள் இல்லை என்றால் தம்பி சண்டப் பிரசண்டன் ஆவதுபோல, சபைக்கு வந்து சண்டமாருதம் செய்தாலும் செய்யலாம்.

தனிப்பட்ட முறையில் எவ்வளவு தாக்கினாலும், பொறுப்பில் இருக்கிறவர் நிதானம் தவறக் கூடாது. இதற்கு, கலைஞரே சிறந்த உதாரணம். கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் சேலம் சட்டமன்ற உறுப்பினர், கலைஞரின் திருச்செந்தூர் நெடிய பயணத்தைக் கொச்சைப்படுத்தும் நோக்கத்தோடு, 'எதிர்க் கட்சித் தலைவர் நீதி கேட்டு நெடிய பயணம் போனார். இவர் வருவதைத் தெரிந்தவுடன் திருச்செந்தூர் முருகன், ஆலயத்தில் இருந்து பெயர்ந்து எங்கள் புரட்சித் தலைவரின் ராமாவரம் தோட்டத்துக்கு வந்துவிட்டார்’ எனக் குறிப்பிட்டார். நாங்கள் எல்லாம் ஆத்திரத்தோடு பதில் சொல்ல எழுந்தபோது, கலைஞர் தன் அறையில் இருந்து வேகமாக சபையினுள் நுழைந்து, 'தலைவர் அவர்களே! இதுவரை திருச்செந்தூர் உண்டியல் உடைக்கப்பட்டுக் களவாடப்​பட்டது என்ற செய்திதான் தெரியும். இப்போது திருச்செந்தூர் முருகன் சிலையும் இல்லை என்ற விஷயத்தை ஆளும் கட்சி உறுப்பினர் வெளிப்படுத்தியதற்கு நன்றி’ என்றார். சபையில் சிரிப்பு அடங்கச் சிறிது நேரம் பிடித்தது. கட்சி வித்தியாசம் இல்லாமல் ஆளும் கட்சியினரும் சேர்ந்து கலைஞரின் சாதுரியத்தை ரசித்தனர். இதுபோன்ற சூடான நேரத்திலும் சுவையான வாதத்தால் அனைவரையும் தன் வயப்படுத்தும் திறமை உள்ள கலைஞர் இல்லாத சட்டமன்றம் வெறிச்சோடித்தான் இருக்கும்!''

ப.நெடுமாறன், (த.நா.கா.கா.): ''அரசியலில் மாறுபாடான கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளும்போதுகூட, அதைக் கூர்மையாக்கி எதிரியைத் தாக்குவதில் அவருக்கு நிகர் அவர்தான். ஒரு நல்ல எதிர்க் கட்சித் தலைவராகப் பொறுப்புடன் பணியாற்றினார் என்பது என் கருத்து. சட்டசபையில் அவர் வராமல் இருந்த நாட்கள் மிகக் குறைவு. முதலமைச்சராக நாமே வீற்றிருந்த இந்த சட்டசபையில் எதிர்க் கட்சித் தலைவராக உட்கார வேண்டுமா என்ற எண்ணம் அவருக்கு ஒருபோதும் வந்தது இல்லை.

முதலமைச்சர் பதவி வகித்த காலத்தில் சட்டமன்ற நிகழ்ச்சிகளில் எத்தகைய பொறுப்புடன் கலந்துகொண்டாரோ, அதற்குக் கொஞ்சமும் குறையாத வகையில் எதிர்க் கட்சித் தலைவராக இருந்தபோதும் கலந்துகொண்டார். பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பல தலைவர்கள் சட்டமன்றத்தின் பக்கம் வராமல் இருப்பதையும் பார்த்து இருக்கிறேன். அவர், சட்டமன்றத்தில் இல்லாதது, சட்டமன்றத்துக்கு ஒரு பெரும் குறைதான் என்பது என் கருத்து.

தமிழீழ விடுதலை வீரர்களான குட்டி​மணி, ஜகன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது அந்த மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று இலங்கை அரசை வேண்டிக்கொள்வதற்கான ஒரு தீர்மானத்தை சட்டசபையில் நான் கொண்டுவந்தேன். எல்லாக் கட்சித் தலைவர்களும் ஒப்புக்​கொண்டால், இதில் ஆட்சேபனை இல்லை என்று மதிப்புக்குரிய சட்டமன்ற சபாநாயகர் ராஜாராம் தெரிவித்தார். இருந்தாலும், சட்ட விதிகளின்படி ஒரு வெளிநாடு சம்பந்தப்பட்ட பிரச்னையை சட்டமன்றத்தில் விவாதிக்க முடியாது. ஆனாலும் சபாநாயகருக்கு இந்தப் பிரச்னையில் மனிதாபிமான அக்கறை இருந்த காரணத்தினால், இந்தத் தீர்மானத்தை அனுமதித்தார். மற்ற கட்சித் தலைவர்களைக் கண்டு பேசும்படி எனக்கு ஆலோசனை கூறினார். அதன்படி எதிர்க் கட்சித் தலைவர் கருணாநிதி அவர்களை சந்தித்துப் பேசினேன். எந்தவிதத் தடையும் சொல்லாமல், 'இந்தத் தீர்மானம் கொண்டுவர வேண்டியதுதான், நான் ஆதரிக்கிறேன். எங்கள் கட்சியும் முழு மனதாக ஆதரவு தரும்’ என்று ஒப்புக்கொண்டார். மற்ற எல்லாக் கட்சித் தலைவர்களையும் சந்தித்துப் பேசிவிட்டு, பிறகு முதலமைச்சரையும் சந்தித்துப் பேசினேன். அவரும் அதற்கு ஆதரவு கொடுப்பதாகச் சொன்னார். இதில் ஒன்றும் பிரச்னை இல்லாமல் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஏகமனதாக இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு நல்ல விளைவு இருக்கும் என்று நான் நம்பினேன். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. இந்தத் தீர்மானத்தின் மீது சட்டமன்றத்தில் வழிமொழிந்து பேசிய எதிர்க் கட்சித் தலைவர் கலைஞர் அவர்கள், பல்வேறு விஷயங்களைக் கூறிவிட்டு இறுதியில் 'தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் விஷயத்திலும் இந்த அரசாங்கம் அக்கறை செலுத்த வேண்டும். அவர்களையும் விடுவிக்க வேண்டும் என்ற பொருள்படச் சொன்னார். உடனே எழுந்த மதிப்புக்குரிய முதலமைச்சர் பேசும்போது, இதற்கு பதில் அளிக்கும் வகையில் குட்டிமணியை முதலில் பிடித்துக் கொடுத்தது கலைஞர் ஆட்சியில்தான் என்றார். ஆனால், அந்த இடத்துக்கு அது தேவையற்ற பிரச்னை. எல்லோரும் ஒன்றுபட்டு அவர்கள் உயிரைக் காப்பாற்றப் போராட வேண்டிய நேரத்தில் முதலமைச்சர் இதைக் குறிப்பிட்டது, ரசக் குறைவாக எங்களுக்குத் தோன்றியது. அந்த நேரத்தில் எதிர்க் கட்சித் தலைவரும் எழுந்து பதிலுக்கு ஏதாவது பேசுவாரோ என்று அச்சம் எனக்கு ஏற்பட்டது. எனவே, அவர் அருகில் சென்று இந்தப் பிரச்னையில் மேலும் பதில் ஏதும் சொல்ல வேண்டாம் என்று சொன்னபோது அவரும் பொறுமையுடன், 'இந்த விஷயம் எல்லோருடைய உணர்வுகளையும் பாதிக்கக்கூடியது. ரொம்ப முக்கியமானது. நான் எதுவும் பேச மாட்டேன்’ என்று வாக்குறுதி கொடுத்தார். தீர்மானமும் ஏகமனதாக நிறைவேறியது. அவர் அப்போது காட்டிய பொறுப்பு உணர்ச்சியை நினைத்துப் பார்க்கிறேன்!''

- நமது நிருபர்

மிஸ்டர் கழுகு: ராஜினாமா! தயங்கிய தயாநிதி

கழுகார் உள்ளே நுழைந்தபோது, ஆங்கில செய்தி சேனல்கள் தயாநிதி மாறன் ராஜினாமாவை அலறிக்கொண்டு இருந்தன. உள்ளே நுழைந்தவர், பார்ம் லிஸ்ட்டை எடுத்துப் பார்த்தார்.

''ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், தயாநிதி மாறன் ராஜினாமா செய்துவிட்டார். இன்னொரு பக்கம், சன் டைரக்ட் தலைமை நிர்வாகி சக்சேனாவை போலீஸ் கைது செய்துவிட்டது. அவரது நண்பர் ஐயப்பனும் இப்போது போலீஸ் வசம். அரசு கேபிள் டி.வி-யை ஆரம்பிக்கும் வேலைகள் மும்முரமாகத் தொடங்கிவிட்டன. மொத்தத்தில் பார்த்தால், சன் குழுமத்தை டார்கெட்டாக வைத்து, சி.பி.ஐ-யும் தமிழக போலீஸும் வலை பின்ன ஆரம்பித்திருப்பது தெரிகிறது. இது எங்கே போய் நிற்குமோ?'' என்ற பீடிகையுடன் டெல்லி இறுதிக் கட்டக் காட்சிகளை விவரிக்க ஆரம்பித்தார்!

''பத்து நாட்களுக்கு முன் கோபாலபுரம் வீட்டுக்கு, தயாநிதி மாறன் கலக்கத்துடன் வந்தார். 'தாத்தா என்னைச் சிக்கவைக்கிறதுக்கு சி.பி.ஐ. முடிவு பண்ணிட்டாங்க தாத்தா...’ என்று கருணாநிதியின் கைகளைப் பற்றிக்கொண்டு, குலுங்கினார். 'என் மேல் வழக்குப் போட்டா... அது கட்சிக்குத்தானே அவமானம்? டி.வி. பிரசாரத்தின் மூலமா எவ்வளவு உழைச்சு இருக்கோம். சி.பி.ஐ. வழக்குப் போட்டால், டி.வி-க்குக்கூட சிக்கல் வரலாம்னு சொல்றாங்க தாத்தா’ என்று தயாநிதி மாறன் சொல்ல... 'அது உங்க டி.வி-ப்பா! அதுக்கும் கட்சிக்கும் என்னப்பா சம்பந்தம்?’ என்று கருணாநிதி திருப்பிக் கேட்டாராம். 'நீங்க சொன்னீங்கன்னா, இப்பவே ராஜினாமா பண்ணிடுறேன்’ என்று தயாநிதி சொல்ல... 'அது உன்னுடைய இஷ்டம்’ என்றாராம், ஒரே வரியில். அந்தக் கண்ணீர்க் காட்சி அப்போதைக்கு முடிந்தது...''

''ம்!''

''சி.பி.ஐ. தனக்கு வலை விரித்து இருப்பதை முழுமையாக உணர்ந்த தயாநிதி, உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை. 'முதல் அமைச்சராக இருந்துகொண்டே சி.பி.ஐ. விசாரணையில் நரேந்திர மோடி பங்கேற்றாரே?’ என்றுகூட தயாநிதி சார்பில் சமாதானம் சொல்லப்பட்டது. ஆனால், பிரதமர் அலுவலகம் இந்த கமென்ட்களை ரசிக்கவில்லை. தயாநிதியைக் குற்றம் சாட்டி சி.பி.ஐ. தரப்பு அறிக்கை கொடுத்ததுமே, தயாநிதியை ராஜினாமா செய்யச் சொல்லி​விட்டதாம் டெல்லி. வியாழக்​கிழமை மதியம் பிரத​மரைச் சந்தித்துத் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். ஆனால், அதற்கு முன்னால் அதிகப்படியான குணச்சித்திரக் காட்சிகள் அரங்கேறியதாம்...''

''அதைச் சொல்லும்!''

''டெல்லித் தகவல் கிடைத்ததுமே, தயாநிதியைத் தொடர்புகொண்டு ராஜினாமா செய்யச் சொன்​னாராம் கருணாநிதி. ஆனால், தயாநிதியிடம் இருந்து பாசிட்டிவாக பதில் வரவில்லையாம். 'ஒரு மாதம் போகட்டும். நிலைமை மாறும். அப்போது பார்க்கலாம்’ என்ற தொனியில் பதில் சொன்னாராம். ஆனால், கருணாநிதி அதை ஏற்காமல் உடனே போனை கட் பண்ணிவிட்டதாகச் சொல்கிறார்கள். இது டி.ஆர்.பாலுவுக்குச் சொல்லப்பட்டது. அவர் தயாநிதியின் வீட்டுக்குச் சென்று, இதே விஷயத்தைச் சொல்லி இருக்கிறார்.

பிரதமர் மன்மோகன் சிங் வீட்டில் அமைச்சரவைக் கூட்டம் நடக்கும் முன்பும் தயாநிதியை அவருடைய வீட்டில் போய்ச் சந்தித்து, கருணாநிதியின் முடிவை வலியுறுத்தினார் பாலு. அப்போதும் தயாநிதி சம்மதிக்கவில்லையாம். அதன் பிறகு அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பிரதமர் வீட்டுக்குக் கிளம்பிப் போனார். அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது 10.30 மணி. உள்ளே போன அரை மணி நேரத்திலேயே, தயாநிதி வெளியே வந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். கூட்டத்தில் கலந்துகொள்ள அங்கே இருந்த அதிகாரிகள் அனுமதிக்கவில்லையாம். அந்த அளவுக்கு யார் பிரஷர் கொடுத்திருப்பார்கள் என்று யோசித்தபடியே வெளியே வந்த தயாநிதி மாறன், நேரே வீடு திரும்பினார். அமைச்சரவைக் கூட்டம் நடந்து முடியும் வரை காத்திருந்தவர், மதியம் 1.30 மணிக்கு பிரதமர் வீட்டுக்குச் சென்று, தன் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். அதாவது, தன் வீட்டுக்குப் போய் கலந்து பேசி ஒரு முடிவு எடுத்துதான் கடிதத்தோடு மீண்டும் வந்திருக்கிறார். பிரதமரிடம் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தபோதும்கூட 'ஒரு மாதம் டைம் கொடுங்கள்’ என்று கேட்டாராம். ஆனால், பிரதமர் எந்த ரியாக்ஷனையும் காட்டவில்லை.''

''அப்படியா?''

''தன்னை நெருக்கும் நிர்ப்பந்தங்களை உணர்ந்ததால், சில நாட்களுக்கு முன்பே தன்னுடைய உதவியாளர்கள் இருவரைத் திருப்பி அனுப்பிவிட்டார் தயாநிதி என்கிறார்கள். இந்த விவகாரத்தின் பின்னணியில் காங்கிரஸின் ரோல் இருக்கிறது. ஆனால், தாங்களாக நிர்ப்பந்தம் கொடுத்து வெளியேற்றியதாக இருக்கக் கூடாது என்று காங்கிரஸ் நினைத்தது. ஆ.ராசா ராஜினாமாவும் இப்படித்தான் அரங்கேறியது. சுப்ரீம் கோர்ட் முடிவில் தலையிட முடியாது என்பதுபோல் ஒரு தோற்றத்தை உருவாக்கி, தயாநிதி மாறனை வெளியேற்றி இருக்கிறார்களாம்.''

''தயாநிதிக்குப் பதிலாக அமைச்சரவையில் யாராவது தி.மு.க. சார்பில் சேர்க்கப்படுவார்களா?''

''டி.ஆர்.பாலு ரொம்ப நப்பாசையுடன் இருக்கிறார். ஆனால், பதவி கிடைக்க ஸ்டாலின் விட மாட்டார் என்கிறது தி.மு.க. வட்டாரம். மேலும், ராசாவின் கோபம் எல்லாம் தயாநிதி மீது என்றால்... தயாநிதியின் கோபம் எல்லாம், பாலுவின் மீதுதான். ஒருவேளை, 'அவர்தான் அமைச்சர்’ என்று அறிவிப்பு வந்தால், அடுத்த இரண்டொரு நாட்களில் பாலுவைப்பற்றிய பழைய பஞ்சாங்கங்களை டெல்லி மீடியாக்களில் பந்திவைக்கவும் சிலர் தயாராகிவருகிறார்கள். 'பாலுவா? வேண்டாம்!’ என்று ஏற்கெனவே பிரதமரே அலறியதை நினைவூட்டுகிறார்கள். பழனி மாணிக்கத்தின் சிக்கலையும் சொல்கிறேன்...''

''அது என்ன?''

''அவரை மத்திய அமைச்சராக வைத்திருக்க, கருணாநிதியும் ஸ்டாலினும் விரும்பவில்லையாம். ஸ்டாலின் குடும்பத்துப் பிரமுகர் ஒருவருக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பி, சமீபத்தில் ஒரு சிக்கல் ஆனது. அது தொடர்பாக கோபாலபுரத்துக்கே வந்து விளக்கம் சொல்லிச் சென்றார் பழனி மாணிக்கம். 'இப்படி ஒரு நோட்டீஸ் அனுப்பிவைக்கப்படுவதே எனக்குத் தெரியாது’ என்றார் அவர். 'இப்படிப்பட்டவரை அமைச்சராக வைத்திருக்க வேண்டுமா?’ என்று ஸ்டாலின் சீறியதாக ஒரு தகவல் உண்டு. எனவே, 'அமைச்சரவை மாற்றம் வந்தால், பழனி மாணிக்கத்தை டிராப் பண்ணுங்கள்’ என்று தி.மு.க. மேலிடம் டெல்லிக்குச் சொன்னதாகச் சொல்கிறார்கள்.''

''அமைச்சரவையில் மாறுதல் இருப்பதுபோலத் தெரியவில்லையே?''

''மாற்றம் செய்யவே பிரதமர் நினைத்தார். இரண்டு நாட்களுக்கு முன்னால் சோனியாவுடன் செய்யப்பட்ட ஆலோசனைப்படி, மாற்றம் என்ற முடிவை ஒத்தி வைத்துள்ளார்!'' என்ற கழுகார்...

''கட்சிக்கு ஸ்டாலின்தான் தலைமை ஏற்கவேண்டும் என்று இளைஞர் அணி அமைப்பாளர் கூட்டத்தில் ஒருவர் சொன்னதாகவும்... 'இதைப் பொதுக் குழுவில் பேசுங்கள்’ என்று ஸ்டாலின் பதில் தந்ததாகவும் கருணாநிதிக்குத் தகவல். ஸ்டாலினை அழைத்துக் கோபப்பட்டாராம் கருணாநிதி!

வீரபாண்டி ஆறுமுகத்தின் கோபத்தை கடந்த முறை உமக்குச் சொன்னேன். பெங்களூரு சென்று கருணாநிதியின் மகள் செல்வியிடம் தனது எண்ணங்களைக் கொட்டச் சென்றுள்ளாராம் ஆறுமுகம். கட்சியில் கொந்தளிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது!'' என்று சொல்லிவிட்டுப் பறந்தார் கழுகார்!

கசப்பைக் காட்டிய கம்யூனிஸ்ட்!

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்களுக்கு சென்னையில் பாராட்டு விழா நடந்தது. இதில் பேச வந்த இந்தியக் கம்யூனிஸ்ட் தா.பாண்டியன், ''அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டு முறை மந்திரிசபை மாற்றப்பட்டு இருக்கிறது. மந்திரிசபை மாற்றம் தவிர, வேறு எதுவும் நடந்துவிடவில்லை'' என்று தனது ஆத்திரத்தைக் கொட்டினார். அப்போது மேடையில் இருந்த அ.தி.மு.க. சிறுபான்மையினர் பிரிவுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அன்வர் ராஜா முகம் மாறியது. பல்வேறு பிரச்னைகளை அடுக்கிய பாண்டியன், ''நாம் சும்மா இருந்தால், எல்லோரும் துதிபாடிகள் என்று கிண்டல் அடிப்பார்கள்'' என்று சொல்லிவிட்டு, இன்னொரு நிகழ்ச்சிக்குக் கிளம்பிப் போனார். அதன்பிறகு அன்வர் ராஜா விலாவாரியாக பதில் சொன்னார்.

நேற்று... இன்று... நாளை..?

நேற்று... இன்று... நாளை..?

சி.பி.ஐ. ஸ்கேனரில் சிங்கப்பூர் திக்திக்!

ஸ்பெக்ட்ரம் பூதம் தயாநிதி மாற​னையும் கவ்விக் கொண்டது!

ஆ.ராசா, கனிமொழி இருவ​ருடன் இது முடிந்துவிடும்... என்று நினைத்து இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, அதிர்ச்சியின் எல்லைக்குத் தள்ளப்​பட்டுள்ளார். தயாநிதியின் பெயரை சி.பி.ஐ. தனது அறிக்கை​யில் தாக்கல் செய்ததுமே டெல்லி காங்கிரஸ் பிரமுகர் அடித்த கமென்ட், 'தி.மு.க-வின் கரன்சி ஆக்ஸிஜன் இதன் மூலம் அடைக்கப்பட்டுவிட்டது!’ என்பதுதான். அந்த அளவுக்கு, சென்னையையும் டெல்லியையும் அதிரவைத்துள்ளது சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள அறிக்கை!

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இதுவரை 14 பேர் கைது செய்யப்​பட்டு, டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி முன்னால் நிறுத்தப்பட்டு உள்ளனர். இதில் ஆ.ராசா நீங்க​லாகக் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஜாமீன் மனுக்களைத் தாக்கல் செய்தனர். யாருக்கும் கிடைக்கவில்லை என்பதால், திகார் சிறையிலேயே இருக்கிறார்கள்.

ஜூன் 3-ம் தேதி பாட்டியாலா நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை தொடங்கி, ஜூலை 4-ம் தேதி மீண்டும் கோர்ட் நடவடிக்கைகள் தொடங்கியது. கடந்த 5-ம் தேதி சி.பி.ஐ-யைப் பார்த்து நீதிபதி சைனி சீறினார் - ''குற்றம் சாட்டப்பட்ட 14 பேரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டு இத்தனை நாட்கள் ஆகியும், ஏன் இன்னும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவில்லை? தொடர்ந்து அவர்கள் சிறையில் இருக்க வேண்டும் என்பது உங்களது விருப்பமா? குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குத் தர வேண்டிய ஆவணங்களை இதுவரை ஏன் தரவில்லை? இனியும் தாமதம் செய்தால், சி.பி.ஐ-க்கு அபராதம் விதிக்க வேண்டி வரும்!'' என்றதும், சி.பி.ஐ. தரப்பு கொஞ்சம் ஆடிப்போனது.

ஆனால், மறு நாள் உச்ச நீதிமன்றத்தில் சிலிர்த்துக் கிளம்பியது சி.பி.ஐ. ''இந்த வழக்கு, இதுவரை கைதான 14 பேருடன் முடியப்போகும் சமாசாரம் அல்ல. இதோ வருகிறது அடுத்த அஸ்திரம்!'' என்று சி.பி.ஐ. வைத்த வெடிகுண்டுதான்... முதல்கட்டமாக தயாநிதி மாறனின் மந்திரி பதவிக்கு வேட்டுவைத்துள்ளது. ஆ.ராசா, மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த காலத்தில் நடந்த விவகாரங்களை மட்டும் அல்ல... அதற்கு முன்னால் தயாநிதி மாறன் பதவியில் இருந்த காலத்தையும் சி.பி.ஐ. தோண்ட ஆரம்பித்து உள்ளது.

தயாநிதி மாறன் அமைச்சராக இருந்தநேரத்தில் நடந்ததாக சில விஷயங்களை, மத்திய அரசு அமைத்த ஒரு நபர் கமிஷன் முன்னால் அருண் ஷோரி வரிசையாக எடுத்து வைத்தார். அவர் அளித்த மனுவை அப்படியே சி.பி.ஐ-க்கு, விசாரணை அதிகாரியான நீதிபதி சிவராஜ் பாட்டீல் அனுப்பி​வைத்தார். உடனடியாக, சி.பி.ஐ. இதனை விசாரிக்க ஆரம்பித்தது. இதன் மையப் புள்ளியாக 'ஸ்டெர்லிங்’ சிவசங்கரனை, சி.பி.ஐ. அதிகாரிகள் ரகசியமாக விசாரிக்கத் தொடங்கினார்கள். இதுபற்றி, ஜூன் 8, 15, 16 தேதியிட்ட ஜூ.வி. இதழ்களில் தொடர்ந்து விவரங்கள் வெளியாகின.

இதுதொடர்பான குற்றச்சாட்டை 'பொது நல வழக்கு தொடர்பான சமூக சேவை அமைப்பு’ உச்ச நீதிமன்றத்தில் மனுவாகத் தாக்கல் செய்தது. வக்கீல் பிரசாந்த் பூஷண் நடத்தி வரும் அமைப்பு இது.

சுப்ரீம் கோர்ட் இந்த விஷயத்தைக் கையில் எடுக்கும் என்று தெரிந்ததுமே, சிவசங்கரனை அதிகாரபூர்வமாக அழைத்து ஜூன் 6-ம் தேதி வாக்குமூலம் வாங்கியது சி.பி.ஐ. அவரது வாக்கு​மூலத்தை அடிப்படையாக வைத்துதான், கடந்த 6-ம் தேதி சி.பி.ஐ. ஒரு மனுவைத் தாக்கல் செய்தது.

நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி இருவரும்​தான், 2ஜி வழக்கை வைத்துக் கலக்கி வரும் நீதிபதிகள். இவர்களிடம் சி.பி.ஐ. சார்பில் மூடிய கவர் ஒன்றை சி.பி.ஐ. வக்கீல் கே.கே.வேணுகோபால் கொடுத்தார். மொத்தம் 71 பக்கங்களைக்கொண்ட அந்த அறிக்கையின் சாராம்சத்தை வேணுகோபால் சொல்லச் சொல்ல... அதிர்வலைகள் பலமாகின.

இந்த அறிக்கையில் தயாநிதி மாறனின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால், அவர் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த காலகட்டத்தில் நடந்ததாக சில விஷயங்களை அவர் பெயரைச் சொல்லாமல் குறிப்பிட்டார் வேணுகோபால். ''2004 - 2007 காலகட்டத்தில் ஏர்செல் நிறுவனம் தனது சேவையை விரிவாக்கம் செய்ய முயற்சித்தது. ஆனால், கிடைக்கவில்லை. ஏர்செல் நிறுவனத்திடம் தேவை இல்லாத, முக்கியத்துவம் இல்லாத கேள்விகள் கேட்கப்பட்டன. அவசியமற்ற விசாரணைகள் நடத்தப்பட்டன. ஏர்செல்லைப் போலவே வேறு இரண்டு நிறுவனங்களும் இதே போன்று விண்ணப்​பம் செய்திருந்தன. அந்த நிறுவனங்களிடம் இது மாதிரியான கெடுபிடிகள் காட்டப்படவில்லை. உடனடியாக அந்த இரண்டு நிறுவனங்களுக்கு லைசென்ஸ் கிடைத்தது.

தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சராக இருந்தவர் ஏதோ ஒரு நிர்பந்தத்தை ஏர்செல் நிறுவனத்​துக்குக் கொடுத்திருக்கிறார் என்பது சி.பி.ஐ-யின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் அனந்தகிருஷ்ணன் நிறுவனத்துக்கு ஏர்செல்லின் பங்குகளைத் தர வேண்டும் என்று நிர்பந்தம் செய்துள்ளார்கள். சிவசங்கரன் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். சிவசங்கரன் தனது கம்பெனிப் பங்குகளை விற்பதைத் தவிர வேறு வழி இல்லை. அதன் பிறகு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு அந்த நிறுவனத்துக்குக் கிடைக்கிறது. இந்தப் பரிமாற்றத்தில் என்ன நடந்து இருக்கிறது என்பது குறித்துத்தான் சி.பி.ஐ. இப்போது விசாரித்து வருகிறது. பணப் பரிமாற்றம் குறித்தும் விசாரித்து வருகிறோம்!'' என்று சொன்னார் கே.கே. வேணுகோபால்.

அதாவது, இந்த விவகாரத்தில் இறங்கி சி.பி.ஐ. விசாரிப்பதற்கான அடிப்படை ஆதாரங்கள் இருப்பதாக நீதிபதிகளிடம் சொன்னார் வேணுகோபால். சிவசங்கரன் பற்றிக் குறிப்பிடும்போதும், 'திஸ் ஜென்டில்மேன்’ என்று மட்டும் சொன்னார். ''பணப் பரிமாற்றம் குறித்து சி.பி.ஐ. தனது விசாரணைகளை ஆரம்பித்துவிட்டது. சிங்கப்பூரில் இருக்கும் ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி மூலமாகத்தான் இதற்கான பணப் பரிமாற்றங்கள் நடந்துள்ளன என்று சந்தேகப்படுகிறோம். சிங்கப்பூரில் உள்ள அதன் அதிகாரியை ஜூலை 13-ம் தேதி விசாரணைக்கு வருமாறு அழைத்து உள்ளோம். மேக்சிஸ், ஆஸ்ட்ரோ, சன் டைரக்ட் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு மத்தியிலும் இந்தக் கால கட்டங்களில் நடந்துள்ள டீலிங்குகளை வைத்து, என்ன நடந்துள்ளது என்பதை முழுமையாக அறிய முடியும். அந்த அதிகாரி எங்கள் முன்பு ஆஜராகி விவரங்களை கூறியபிறகு எங்கள் விசாரணை வேகம் பிடிக்கும்!'' என்று சி.பி.ஐ. வட்டாரத்தில் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

''ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான விசாரணை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் முடிந்துவிடும். 2001 முதல் 2008-ம் ஆண்டு வரையிலான லைசென்ஸ் முறைகேடுகள், செப்டம்பர் 30-ம் தேதிக்குள் முடிந்துவிடும்!'' என்று வக்கீல் கே.கே.வேணுகோபால் சொல்லியதை வைத்துப் பார்க்கும்போது, தயாநிதி மாறன் மீது முழுமையான குற்றப் பத்திரிகை செப்டம்பர் மாதத்துக்குள் தாக்கல் ஆகிவிடும் போலிருக்கிறது!'' என்கிறார்கள் டெல்லி நீதித் துறை வட்டாரங்களில்.

''ராசா அமைச்சராக இருந்த காலகட்டத்தில் நடந்தவை குறித்து அனைத்து விசாரணைகளும் முடிந்துவிட்டன. ராசாவின் சொத்துகள் மற்றும் பண முதலீடுகள் குறித்து வெளிநாட்டு வங்கிகளில் தகவல்கள் திரட்டுவது மட்டுமே பாக்கி. அது தொடர்பாக பல குளுகுளு தீவுகளுக்கெல்லாம் கடிதப் பரிமாற்றங்களைத் தொடங்கி உள்ளோம். எங்களில் சில அதிகாரிகளும் நேரடியாகப் போய் அங்குள்ள முதலீடுகள் பற்றி தகவல்கள் சேர்த்துக் கொண்டு வந்துள்ளனர். அந்த வேலைகள் இன்னும் ஒன்றிரண்டு வாரங்களில் முடியும். தயாநிதி மாறன் தொடர்பான விவரங்களுக்குள் இப்போதுதான் நுழைய ஆரம்பித்துள்ளோம். அதில் மேக்சிஸ் நிறுவனம், சன் டைரக்ட் நிறுவனம் ஆகியவற்றையும் இனி மேல்தான் விசாரிக்க வேண்டி உள்ளது. தயாநிதி மாறனை முதல் கட்டமாக விசாரிப்போம். அவரது ஒத்துழைப்பைப் பொறுத்தே, அடுத்த கட்ட நடவடிக்கைகளை முடிவு செய்வோம்!'' என்று சி.பி.ஐ. அதிகாரிகள் சொல்கிறார்கள்.

சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள இந்த அறிக்கை தொடர்பாக எந்தக் கருத்தையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சொல்லவில்லை. ''இந்த அறிக்கை பற்றிய விசாரணை வரும் 11-ம் தேதி நடக்கும்!'' என்று மட்டும் கூறினார்கள். இதனால், 11-ம் தேதிக்குள் சி.பி.ஐ. தன்னுடைய அடுத்த கட்ட நடவடிக்கையைத் தொடங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ''தயாநிதி மாறனை 11-ம் தேதிக்குள் விசாரிக்க வாய்ப்பு இல்லை. 13-ம் தேதி சிங்கப்பூர் வங்கி அதிகாரிகள் சி.பி.ஐ. முன்னால் ஆஜராக இருக்கிறார்கள். அவர்களது வாக்குமூலங்களையும் வாங்கி வைத்துக்கொண்டுதான், சி.பி.ஐ. தயாநிதி மாறனை விசாரணைக்கு அழைக்கும். அதே சமயம், நீதிபதிகள் 11-ம் தேதி என்ன உத்தரவிடுகிறார்கள் என்பதையும் வைத்தே சி.பி.ஐ. செயல்படும்...'' என்று டெல்லியில் ஒரு தரப்பினர் சொல்ல...

''அதற்கு முன்பேகூட சி.பி.ஐ. தன் செயல்பாட்டை தொடங்கிவிடும். அதைப் புரிந்துகொண்டுதான், பிரதமர் தரப்பிலிருந்து தயாநிதி மாறனின் மந்திரி பதவியை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்திருக்கிறார்கள். இதுதொடர்பாக பிரதமர் அலுவலகத்திலிருந்து தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் பேசினார்கள். 'ஆ.ராசா விஷயத்தில் நடந்ததுபோல் இதில் அடம் பிடிக்க வேண்டாம். ராஜினாமாவை ஒத்திப் போடுவது காங்கிரஸ் - தி.மு.க. ஆகிய இரு தரப்புகளுக்குமே மேலும் மேலும் சங்கடங்களை ஏற்படுத்தும் என்று எடுத்துச் சொன்னார்கள். அதைத் தொடர்ந்தே ராஜினாமா கடிதத்தை தயாநிதி மாறன் ஒப்படைத்தார். மந்திரி பதவியிலிருந்து விலகிய பிறகுதான் ஆ.ராசா தொடர்பாக சி.பி.ஐ-யின் நேரடி நடவடிக்கைகள் தொடங்கின. அதுபோலவே இதிலும் ஆக்ஷன்கள் வேகம் பெறும்'' என்றும் கூறப்படுகிறது.''இந்த நிகழ்வுகள் சூடு பிடித்த சமயத்தில் டெல்லியில் இருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா 'பிரதமர் இனியும் சும்மா இருக்கக்கூடாது' என்ற பாணியில் உசுப்பிக் கொண்டே இருந்ததை சுட்டிக் காட்டும் சிலர்,

''மந்திரி பதவியிலிருந்து தயாநிதி மாறன் விலகிய பிறகு தமிழக அரசு தரப்பிலிருந்து சில நடவடிக்கைகளை எடுப்பதே ஜெயலலிதாவின் நோக்கம்!'' என்றும் கூறத் தொடங்கியுள்ளனர்.''தயாநிதி தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் எந்த தொலைத்தொடர்பு நிறுவனமும் சன் டைரக்ட்டில் முதலீடு செய்யவில்லை. ஆஸ்ட்ரோ நிறுவனம், சன் டைரக்டில் முதலீடு செய்தபோது தயாநிதி அமைச்சராகவே இல்லை. இந்த நிறுவனங்களில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை!'' என்று தயாநிதிமாறன் தரப்பு தனது விளக்கமாகச் சொல்ல ஆரம்பித்துள்ளது.

ஜூலை 13க்குப் பிறகு விவகாரம் இன்னும் சூடுபிடிக்கும்!