Thursday, June 30, 2011

நினைவு நாடாக்கள் ஒரு Rewind...

நினைவு நாடாக்கள் ஒரு Rewind...

வாலி
ஓவியம் : மணி, படம்: கே.ராஜசேகரன்
மெல்லிசை மன்னன்!
என்னை -
எங்கே
எப்போது பார்த்தாலும் -
'எப்படி யிருக்கிறார்?’ என்று...
அவர் பற்றி
அவர்கள் கேட்பார்கள்;
அவர்பால்
அவர்களுக்கு அவ்வளவு மரியாதை;
அதற்குக் காரணம்
அவரது -
விசும்பை விஞ்சி நின்ற
வித்துவத்துவம்;
அவரைக் காணாவிடத்தும்
அவர் மாட்டுக் கனிந்திருந்தது -
அவர்கள்
அனைவர்க்கும்...
ஓர்
ஓவாக் காதல்!
'அதுசரி;
அவர் யார்? அவர்கள் யார்?
சொல்லவில்லையே!’ என்று
சொல்கிறீர்களா? சொல்கிறேன்!
'பூ மழை
பொழிகிறது’ -
இது விஜயகாந்த் நடித்த படம்;
இசை R.D. பர்மன்!
'ரகசிய
போலீஸ்’ -
இது சரத்குமார் நடித்த படம்;
இசை லட்சுமிகாந்த் பியாரிலால்!
'தாய் வீடு’ -
இது ரஜினிகாந்த் நடித்த படம்;
இசை பப்பி லஹரி!
'தர்மம்’ -
இது சத்யராஜ் நடித்த படம்;
இசை உஷா கன்னா!
நான்கு படங்களும், நான் பாடல்கள் எழுதிய படங்கள்; இந்தப் படங்களின் இசையமைப்பாளர்களாகிய -
நால்வரைத்தான் -
நான் குறிப்பிட்டேன் 'அவர்கள்’ என்று; அந் நால்வரும் நலம் விசாரித்த -
அந்த 'அவர்’
ஆரெனச் சொல்கிறேன்; அதற்கு முன்பு, நான் கொஞ்சம் - என் சொந்த ஊரான ஸ்ரீரங்கம் வரை போக வேண்டியிருக்கிறது!
ன் ஊரில் -
என் தெருவில் -
என் வீட்டிற்கு நான்கு வீடுகள் தள்ளி, அதே வரிசையில்...
'சம்பத்’ என்றொரு சினேகிதன்; அவனுடைய சகோதரியின் கணவர் பெயர் திரு.ரங்கனாதன்.
அந்த ரங்கனாதன், திருச்சியிலிருந்து திருவரங்கத்திற்குத் தன் மாமனார் வீட்டிற்கு வரும்போதெல்லாம் -
'டேய்! உங்க அத்திம்பேர்கிட்ட என்னை அறிமுகம் பண்ணி வைடா!’ என்று நான் சம்பத்தை நச்சரிப்பேன்.
அதற்குக் காரணம் -
திரு.ரங்கனாதன் திரையுலகத்தோடு தொடர்பு உடையவர்!
சினேகிதன் சம்பத் வீட்டில் ஒரு GRAMO PHONE இருந்தது; H.M.V. கம்பெனி தயாரித்தது.
சாவி கொடுத்து இசைத் தட்டு மேல் ஊசியை உட்கார்த்தினால் -
'செந்தமிழ்த் தேன் மொழியாள்’ - கேட்கலாம்; 'பிறக்கும் போதும் அழுகின்றாய். இறக்கும் போதும் அழுகின்றாய்’ - கேட்கலாம்.
முன்னது டி.ஆர்.மகாலிங்கம்; பின்னது சந்திரபாபு!
இந்த
இசைத் தட்டுகளை - திரு.ரங்கனாதன் கையோடு கொண்டுவருவார், நான் 'சோறு தண்ணி’ இல்லாமல் கேட்பேன்.
ஒருமுறை திரு.ரங்கனாதனிடம் 'திராவிடப் பொன்னாடே’ போடச் சொல்லி   வேண்டினேன்.
'வாலி! நான் ஒரு கேள்வி கேட்பேன்; அதுக்கு கரெக்டா பதில் சொல்லிட்டா - எத்தனெ தடவெ வேணும்னாலும் அந்தப் பாட்டெ நான் போடுவேன்!’ என்றார்அவர்; 'கேளுங்க சார்!’ என்றேன் நான்.
'H.M.V. கம்பெனியின் LOGO வாக  - ஒரு MEGA PHONE முன்னாடி உட்கார்ந்திண்டு இருக்கிறதே - ஒரு நாய்...
அது - ஆண் நாயா? பெண் நாயா?’
- இப்படி ரங்கனாதன் கேட்டதும், சற்றும் யோசிக்காமல் நான் -
'சார்! அது ஆண் நாய்!’ என்றேன்.
'எப்படி?’ என வினவினார் ரங்கனாதன்.
'H.M.V. என்றால் - HIS MASTER'S VOICE என்று அர்த்தம்; தன் எஜமானனின் குரலைச் செவிமடுக்கும் அந்த நாய், பெண் நாயாயிருந்தால் -
H.M.V. என்பதை - HER MASTER'S VOICE என்று குறிப்பிட்டிருப்பார்கள்’ என்றேன்.
ரங்கனாதன் மகிழ்ந்தார்; உடனே, நான் இதுதான் தருணமென்று -
'சார்! நான் விஸ்வநாதன் ராமமூர்த்தியோட பரம ரசிகன். ஒரு தடவை நீங்க மெட்ராஸ் போறச்சே - என்னையும் அழைச்சுண்டு போய் அறிமுகப்படுத்திவெக்கணும் சார்!’ என இறைஞ்சினேன்.
ஏன் அவரிடம் அப்படிக் கேட்டேன் என்றால் -
கண்ணதாசன் தயாரித்த 'மாலையிட்ட மங்கை’; 'கவலையில்லாத மனிதன்’ - இந்தப் படங்களுக்கெல்லாம் பண உதவி செய்தவர் திரு.ரங்கனாதன்.
கண்ணதாசனின் ஆருயிர் நண்பர்; இவரைப்பற்றி கண்ணதாசன் 'வனவாச’த்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
திரு.ரங்கனாதனை, சினிமா வட்டாரத்தில் 'அம்பி’ என்றுதான் அழைப்பார்கள்!
ன் இதை இவ்வளவு விரிவாக எழுதினேன் எனில் -
எம்.எஸ்.விஸ்வநாதனிடம் ஒரு பாட்டா வது எழுதினால்தான், எனக்கு ஜன்ம சாபல்யம் என -
ஸ்ரீரங்கநாதரை வேண்டிக்கொண்டே இருந்தேன் நான்.
பிரார்த்தனை வீண் போகவில்லை; பெருமாள் திருக்கண் மலர்ந்தருளினார்.
விஸ்வநாத அண்ணனிடம் - 1963-ல் ஆரம்பித்து,
நாளது வரை நாலாயிரம் பாடல்கள் எழுதிவிட்டேன்.
நாலாயிரமும் நாலாயிரம்தான்; திவ்யப் பிரபந்தம் போல் திரைப் பிரபந்தம்!
ரண்டாயிரம் ஆண்டுகள் ஆனாலும், இறவாத பாடல்களை -
ஈங்கு விசுவநாதனின் ஆர்மோனியம்தான் ஈன்றது. எம்.ஜி.ஆர்; சிவாஜி - இவ் இருவரின் உதடுகளிலும் விசுவநாதனின் உன்னத மெட்டுகள் உட்கார்ந்ததால் தான்,
உலகத்தார் உள்ளங்களில் அவர்கள் போய் அமர முடிந்தது!
சாதா வார்த்தைகள், அவரது சங்கீதத்தில் தோய்த்தெடுத்த பின் - சாகாவார்த்தை கள் ஆகும்!
பின்னைக்கும் பின்னையாய்; முன்னைக்கும் முன்னையாய் -
பிறங்கும் பரம் பொருள் போல், விஸ்வநாதனின் வித்வத்வம் -
பிராசீனத்திற்கும் பிராசீனமாய்; நவீனத் திற்கும் நவீனமாய், விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது எனலாம்.
'லலிதாங்கி’யையும், 'ஆபோகி’யையும் லகுவாகக் கையாள்வார்; அதே, லலிதத் தோடும் லாகவத்தோடும் -
WALTZ;
JAZZ;
- இன்ன பிற மேலை நாட்டு இசை வகைகளையும், PIANO-வில் பிலிற்றுவார்.
விஸ்வநாதனின் வித்தகம் பற்றி, ஒற்றை வரியில் ஓதுவதாயின் -
விரலிலும் குரலிலும் கலைமகள் கடாட்சம் விரவி நிற்கும் புண்ணியவான் அவர்!
அற்றை நாளில், அவரது பாடல்களில் ACCORDION அழகுற இசைக்கப்படுவதைக் காணலாம்; மற்றும் CELLO; DOUBLE-BASS-  எனப்படும் VIOLIN குடும்ப வாத்தியங்களை யும், அவற்றின் தனித்தன்மை துல்லியமாகத் துலங்குமாறு பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.
VIOLIN-களில் - CHROMARIC; மற்றும் PIZZICATO பாணிகளை இடமறிந்து இடம் பெறச் செய்வார், தான் இசைக்கும் பாடல்களின் பின்னணியில்; அவர் அறியாத மேலை நாட்டுச் சங்கீதமே இல்லை.
ஆயினும், அவ் அறிவை அளவோடு பயன்படுத்துவார்; சந்தனம் நிறைய இருக்கிறதே என்று - புட்டத்தில் பூசிக்கொள்ள மாட்டார்.
என் வாழ்வும் வளமும் அவரிட்ட பிச்சை;  WHAT I AM TODAY I OWE HIM!
ட நாட்டு இசையமைப்பாளர்கள், மிகுந்த மரியாதையோடு -
'எப்படியிருக்கிறார்?’ என நலம் விசாரித்தது -
அண்ணன் விஸ்வநாதனைப் பற்றித்தான்!
ஹோட்டல் கன்னிமாராவில் -
சில ஆண்டுகள் முன்னம்,
'சந்திரமுகி’ படம், கேஸட் வெளியீட்டு விழா நடந்தது; நான்தான் வெளியிட்டேன் - திருமதி.ஆஷா போன்ஸ்லே பெற்றுக்கொண்டார்.
சிவாஜி அவர்களின் புதல்வர்கள், திரு.ராம்குமார்; திரு.பிரபு இருவரும் -
அந்த விழாவில் விஸ்வநாத அண்ணனைக் கௌரவித்தார்கள்; அப்போது நான் விஸ்வநாத அண்ணனைப்பற்றி ஒரு கவிதை வாசித்தேன்.
ரஜினி, அந்தக் கவிதையைக் கேட்டுவிட்டுக் கண்ணீர் மல்க - 'அண்ணா! இந்தக் கவிதையை அப்படியே நான் பாலசந்தர் சாரைப் பார்த்து பாடணும்னு தோணுது’ என்றார்.
அந்தக் கவிதையின் சில வரிகளே நினைவில் உள்ளன; அவை இதோ!
'அண்ணனே! மெல்லிசை -
மன்னனே! - உன்னை
சந்திக்கு முன் - எனக்கு
சோற்றுக்கே வக்கில்லை; உன்னை -
சந்தித்த பின் - எனக்கு
சோறு தின்னவே நேரமில்லை!

வெறும்
விறகு; நான் -
வீணையானேன் - உன்
விரல்பட்ட பிறகு!

பலரிடம் நான்
பாட்டு எழுதியிருக்கிறேன்; என்
வரிக்கெல்லாம்
வருமானம் வந்தது;
உன்னிடம் பாட்டெழுத
உட்கார்ந்த பின்புதான் - என்
வருமானத் திற்கெல்லாம்
வரி வந்தது!’
- இப்படிப் போகும் அந்தக் கவிதை; நான் சொல்ல வருவது யாதெனில்...
'இசையே! எனக்கு
இசை!’ என -
இசையைத் தனக்கு
இசைய வைத்து - அன்னணம்
இசைந்த
இசையை -
இசைத்து
இசைத்து - அதன்
இசையைப் பெருக்கிய
இசையமைப்பாளர் -
எம்.எஸ்.வி. அவர்களுக்கு 'ஏன் பத்மா விருதுகள் வழங்கப்பட வில்லை?’ எனப் பலர் கேட்கலாம்.
அதற்கு அடியேன் சொல்லும் பதில் இதுதான்:
'விஸ்வநாதன் சாதனையை - அளப்பது
விருதா?
விருது
வரா விடில் -
விஸ்வநாதன் சாதனைகள் - ஆகுமோ
விருதா?’
- சுழலும்...

No comments:

Post a Comment