Thursday, June 30, 2011

ஹாய் மதன் கேள்வி - பதில்

ஹாய் மதன் கேள்வி - பதில்

சினிமாவில் ஒரு மழைக்காலம்!
கே.அகஸ்தீஸ்வரன், மயிலாடுதுறை.
 உங்கள் மனம் கவர்ந்த இசையமைப்பாளர் (இந்தியாவில்) யார்? ஏன்?
இந்திய அளவில் என்றால், நௌஷாத்! காரணம், கடைசி மூச்சு வரை அவர் வேறு எந்த மேலை நாட்டு இசையையும் காப்பி அடித்ததே இல்லை. அத்தனை அற்புதமான ட்யூன்களும் அவர் இதயத்தில் இருந்து இந்திய ராகங்களுடன் பிறந்தவை. ஆகவே தான், அவர் சென்னை வந்தபோது, நம்ம இளையராஜா அவருடைய காலைத் தொட்டு வணங்கினார்!
ஜெ.ராமன், திருச்சி.
தமிழ் சினிமாவில் முக்கியமான காட்சிகளில் எல்லாம் ஏன் மழை வருகிறது?
மழை பெய்தால்தானே நனையலாம்?!  சில சோகமான, காதலான, பயங்கரமான காட்சிகளுக்கு மழை என்பது கூடுதல் எஃபெக்ட் தருவது உண்மைதான். சினிமா வில் 'முக்கியமான மழை - தேவை இல்லாத மழை’ என்று இருவித மழைகள் உண்டு. பார்க்கும்போதே உங்களால் கண்டுபிடிக்க முடியும்!
எஸ்.நவீன், திண்டுக்கல்.
வடிவேலு அவ்வளவுதானா?
அவ்வளவுதான் - 'அரசியல் திரை’யில்! தமிழக மக்களுக்கு எப்போதுமே 'காமெடி டிராக்’ பிடிக்கும். வடிவேலு பிரசாரத்தையும் அப்படியே எடுத்துக்கொண்டு ரசித்தார்கள். அதில், அவர் இப்படி மயங்கி இருக்கக் கூடாது. ஆனால், வெள்ளித் திரையில் வடிவேலு 'அவ்வளவுதானா’க வாய்ப்பு இல்லை. காரணம், அவர் திறமையான நகைச்சுவை நடிகர். ரைட் நௌ - தி பெஸ்ட்!
அ.கல்யாணம், பரவாக்கோட்டை.
'ஆரண்ய காண்டம்’ படத்தில் உங்களை அசத்தியவர் யார்?
இல்லாத ஹீரோ! அதாவது, படத்தில் ஹீரோ என்பவரே கிடையாது. எல்லோருமே எதற்காகவோ போராடுகிறார்கள். 'ஆரண்ய காண்டம்’ தமிழில் ஓர் அசாத்திய முயற்சி!
இந்தப் படம் ஒரு திருப்புமுனையாக, ஒரு துடுப்பாக அமைந்தால், தமிழ் சினிமாவில் வேறு ஒரு நல்ல பாதை கிளர்ந்து எழும். அந்தத் துடுப்பை வைத்துக்கொண்டு தமிழ் சினிமா என்னும் படகை பல சர்வதேச சினிமா துறைமுகங்களுக்கு எடுத்துச் செல்லலாம். அந்தத் துடுப்பைத் தூக்கிப் போட்டுவிடாதீர்கள்!
முசிறி தேவன், கோவை.
தமிழ் சினிமாவுக்கு சென்சார் தேவையா?
விகடனுக்கு சென்சார் தேவையா? விகடனேதான் சென்சார்! அதேபோல சினிமாவும் ஆக வேண்டும். இங்கே சென்சார் போர்டில் இருந்தவர்களின், இருக்கிறவர்களின் நீதிபதித்தனத்தையும் சினிமா அறிவையும் ரசனையையும் சோதிக்க, ஒரு 'சென்சார்-சென்சார் குழு’ அமைக்கலாமா? எத்தனை பேர் 'பாஸ்’ பண்ணுவார்கள்?
பெல்ஜியம், டென்மார்க், ஆஸ்திரியா, போர்ச்சுகல் போன்ற பல நாடுகளில் சென்சார் போர்டு கிடையாது. அந்த நாடுகள் 'ப்ளூ ஃபிலிம்’களை மட்டுமேவா எடுத்துக்கொண்டு இருக்கின்றன? படங்களுக்கு என்று 'சர்டிஃபி கேட்’ மட்டுமே போதுமானது. எல்லை மீறினால், ஆபாசத் தடுப்புச் சட்டம்இருக்கவே இருக்கிறது. சென்சாருக்கு அதிக அதிகாரம் தந்தால், என்ன ஆகும் தெரியுமா? சென்சார் சொல்லி ரஷ்யா, இத்தாலி, ஜெர்மனி நாடுகள் (உலகப் போரின்போது) ஒரு படத்துக்குத் தடை விதித்தன. படம்: டிஸ்னியின் 'மிக்கி மவுஸ்’!
செந்தில் ஆனந்தி, திருநெல்வேலி.
உங்களுக்கு டைரக்டர் ஆகும் எண்ணம் உண்டா?
ஆனானப்பட்ட கமல்ஹாசன் என்னிடம் ஒரு முறை கேட்ட கேள்வி இது! 'அந்த ஆசையே கிடையாது. பாதி ஷூட்டிங்கில் டென்ஷன் காரணமாக மயக்கம் போட்டு விழுந்து... என் முகத்தில் தண்ணி தெளிக்க வேண்டியிருக்கும்!’ என்று பதில் சொன்னேன். சில விநாடிகள் என்னையே புன்னகையோடு பார்த்துவிட்டு, 'இவ்வளவு ஓப்பனா சொல்றீங்களே... ஆனால், அது உண்மைதான்!’ என்றார் கமல். (நிஜ) இயக்குநர் ஆக... நீங்கள் ஒரு போராளியாக வேண்டும். எனக்குப் போராளித்தனம் நெற்றியில் இருந்து உச்சி மண்டைக்குள் மட்டும்தான் உண்டு!
எஸ்.சண்முகப்ரியா, குளிக்கரை.
தமிழ் சினிமாவில் மெலடி காலம் முடிந்துவிட்டதா?
மெலடி என்பது மெல்லிய காலடி! அது எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கும். சில சமயம் கூச்சல் பாடல்களினால் அது நம் காதில் விழுவது இல்லை. சொறிகிற பாடல்கள் வேறு, வருடுகிற பாடல்கள் வேறு. ராஜா, ரஹ்மான், ஹாரிஸ், வித்யாசாகர்... போன்ற எல்லோரும் அற்புதமான திறமை யைக் காட்டியிருப்பது மெலடியில்தான் என்பது என் தாழ்மையான கருத்து!

No comments:

Post a Comment