ஸ்டெர்லிங்’ சிவசங்கரன் வசம் இருந்த ஏர்செல் நிறுவனத்தை, மலேசியாவைச் சேர்ந்த அனந்தகிருஷ்ணனின் மேக்சிஸ் நிறுவனம் வாங்கியதை மையம்கொண்டு 2ஜி விவகாரத்தில் புதிய புயல் வீசுகிறது. அதை வாங்கியது அனந்தகிருஷ்ணன்; விற்றது சிவசங்கரன். விற்கச் சொல்லி அழுத்தம் கொடுத்ததாக, அன்றைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் மீது குற்றச்சாட்டு!
'எட்டுத் திக்கும் கத்தி சுத்தும் ஜெகதலப் பிரதாபன் என்று வர்ணிக்கப்படும் சிவசங்கரனிடம் இருந்து, கத்தி இன்றி ரத்தம் இன்றி அவரது நிறுவனத்தைப் பறிக்கும் அளவுக்கு அனந்தகிருஷ்ணன் அத்தனை பெரிய கில்லாடியா!’ என்று ஒரு சிலர் புருவம் உயர்த்தக்கூடும். யார் இந்த அனந்தகிருஷ்ணன்?
மலேசியாவில் இருக்கும் பணக்காரர்களைத் தர வரிசை இட்ட அமெரிக்காவின் ஃபோக்ஸ் நிறுவனம், தனது பட்டியலில் இரண்டாவது இடத்தை அனந்தகிருஷ்ணனுக்குக் கொடுத்து இருக்கிறது. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் 100 பேரில் அனந்தகிருஷ்ணனும் ஒருவர்!
ஆங்கிலேயர்களிடம் குமாஸ்தா வேலை செய்ய... இலங்கையில் இருந்து மலேசியா சென்ற தமிழர்களுக்கு, செங்கல் சூளை அமைந்திருக்கும் பகுதியில்தான் தங்க இடம் கிடைத்தது. அங்குதான் அனந்தகிருஷ்ணனின் அப்பா, தன் குடும்பத்தோடு தங்கி இருந்தார். அனந்தகிருஷ்ணன் பிறந்ததும் அங்குதான். விவேகானந்தா பள்ளியிலும், விக்டோரியா கல்லூரியிலும் படித்தார். இலங்கையில் இருந்து மலேசியாவுக்குப் புலம்பெயர்ந்த யாழ்ப்பாணத் தமிழர்கள், படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். பி.ஏ., (ஹானர்ஸ்) எம்.பி.ஏ. முடித்த அனந்தகிருஷ்ணன், ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பைத் தொடர்ந்தார்.
படித்து முடித்து மலேசியா திரும்பிய அனந்தகிருஷ்ணனின் எண்ணம் எப்போதும் ஊடகத்தைச் சுற்றித்தான் இருந்தது. படிக்கும் காலத்திலேயே ரேடியோ மற்றும் நாளிதழ்களில் பகுதி நேரப் பத்திரிகையாளராகப் பணி ஆற்றியவர். இருந்தாலும், பூமியைப் பிளந்துகொண்டு பணம் கொட்டும் என்பதால், பெட்ரோல் துறையில்தான் முதல் அடி எடுத்துவைத்தார். முதல் இடமே அவரை வான் அளவுக்கு உயர்த்தியது!
மலேசியா என்றதும் நினைவுக்கு வருவது கோலாலம்பூரில் இருக்கும் 88 மாடிகளைக்கொண்ட பெட்ரோனாஸ் கோபுரம். இந்தக் கோபுரத்தைக் கட்டுவதற்கு மூல விதைகளாக இருந்தவர்களில் அனந்த கிருஷ்ணனும் ஒருவர். குதிரைப் பந்தயத்தில் இருந்து, ஆன்லைன் லாட்டரி வரை பணம் கறக்கும் காமதேனுக்களும், செல்வம் கொழிக்கும் கற்பக விருட்சம் மாதிரியான நிறுவனங்களும், அவரிடம் ஏராளமாக இருக்கின்றன. மலேசியாவில் மட்டும் இவருக்கு 100-க்கும் மேற்பட்ட சினிமா தியேட்டர்கள் இருக்கின்றன. அரபு நாடுகள் மற்றும் ஆசியாவில் 13 மின் உற்பத்தி நிலையங்கள் இவருக்குச் சொந்தம்.
ஜெர்மனிக்கு அருகில் இருக்கும் ஒரு தீவை சுற்றுலா சொர்க்கமாக மாற்றி நடத்தி வரும் அனந்தகிருஷ்ணனுக்கு சொந்தமாக ஒரு விமானம் இருக்கிறது. ஆனால், மூன்று செயற்கைக்கோள்களை தனது சொந்தப் பயன்பாட்டுக்காகச் சுற்றவிட்டு இருக்கிறார். எதற்கு செயற்கைக்கோள் என்று கேட்காதீர்கள். அவை இல்லாவிட்டால், பிறகு எப்படி எண்ணிக்கையில் அடங்காத அளவுக்கு டி.வி. சேனல்களையும் செல்போன் நிறுவனங்களையும் நடத்துவது?
பங்கு வர்த்தகத்திலும் கரை கண்ட அனந்தகிருஷ்ணனுக்கு, அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட உலகின் பல இடங்களில் பங்களாக்கள் இருக்கின்றன. பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல ஓவியங்கள் இவருக்கு சொந்தமான கலைக்கூடத்தை அலங்கரிக்கின்றன. இளம் வயதில் அவர் படித்து ரசித்த இங்கிலாந்து பத்திரிகைகளை (பத்திரிகை நிறுவனங்களை) எல்லாம் விலைக்கு வாங்குவதுதான் அனந்தகிருஷ்ணனுக்கு இப்போதைய பொழுதுபோக்கு. நம் ஊர் 'கலைமாமணி’ மாதிரி மலேசியாவில் ஆயிரம் விருதுகள் இருக்கின்றன. ஆனால், இதுபோன்ற பட்டங்கள் எதிலும் ஆர்வம் காட்டாதவர் அனந்தகிருஷ்ணன். இவருக்கு மூன்று வாரிசுகள். இதில் ஒருவர் துறவறம் பூண்டுவிட்டாராம்!
73 வயதாகும் அனந்தகிருஷ்ணனுக்கு, சுய விளம்பரம் பிடிக்காத ஒன்று. எத்தனை பெரிய டி.வி-யாக இருந்தாலும் அவரிடம் பேட்டி வாங்கவே முடியாது. இருந்தாலும், டி.வி. என்றால் அனந்தகிருஷ்ணனுக்கு அபார ஈடுபாடு. மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, இலங்கை போன்ற நாடுகளில் பிரதானமான டி.வி. சேனல்களை நடத்துவது இவர்தான். நம் ஊர் மெகா சீரியல்களில் இருந்து சினிமாக்கள் வரை அத்தனையும் தென் கிழக்கு ஆசிய நாட்டில் இருக்கும் தமிழர்களைச் சென்றடைவது இவரது ஆஸ்ட்ரோ டி.வி. மூலமாகத்தான். இவருடைய மேக்சிஸ் நிறுவனம்தான், மலேசியாவின் மிகப் பெரிய செல்போன் நிறுவனம். இதற்கு, அந்த நாட்டில் மட்டும் ஒரு கோடி வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த மேக்சிஸ் நிறுவனத்தின் கணிசமான பங்குகளை பல கோடிகள் கொடுத்து வாங்குவார். அதில் கொஞ்சத்தை அரபு நாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கு விற்பார். இன்னொரு பக்கம், பொதுமக்களிடம் இருந்து தனது நிறுவனத்துக்குப் பணம் திரட்டுவார். இருந்தாலும் மேக்சிஸ் நிறுவனத்தைத் தனது இரும்புப் பிடிக்குள் தொடர்ந்து வைத்து இருப்பார்.
ஆக மொத்தம், சிவசங்கரன் கில்லாடி என்றால், அனந்தகிருஷ்ணன் கில்லாடிக்குக் கில்லாடி!
- பி.ஆரோக்கியவேல்
No comments:
Post a Comment