Wednesday, June 22, 2011

நேருவை நெருங்கும் போலீஸ்?


ஜூ.வி. வாசகர்களுக்குத் தெரிந்த வழக்குதான். ஆனாலும் முன்னோட்டமாக சில விஷ​யங்கள்...
திருச்சியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் வியாபாரப் பிரமுகர் துரைராஜ். அவர் சகோதரர் தங்கவேலும் இதே பிசினஸ்​ தான். சென்னை, புதுச்சேரி, பெங்களூரு மற்றும் திருச்சி சுற்று​வட்டாரங்களில் இடங்கள் வாங்கி விற்பது​தான் துரைராஜின் தொழில். கடந்த 22.1.2007 காலையில், தங்கவேல் மர்மமான முறையில் வயலில் இறந்துகிடந்தார். பூச்சி மருந்தைக் குடித்துத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது. அதே நாள் இரவில், வையம்பட்டி அருகே மர்மமான முறையில் கார் ஒன்று தீப்பற்றி எரிந்தது. அதில் கருகியவர்கள் துரைராஜும் அவரது டிரைவரும். அண்ணனும் தம்பியும் ஒரே நாளில் இறந்துபோனதைக் கேள்விப்பட்டவர்கள், 'இது தற்செயலான மரணங்கள் அல்ல... கொலை!’ என்று குமுறினார்கள்.
கிட்டத்தட்ட நாலரை வருடங்களாக துரைராஜ் கொலை விவகாரத்தை திருச்சி சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரித்து வந்தனர். 'மோட்டிவ் தெரியவில்லை... மெட்டீரியல் எவிடென்ஸ் எதுவும்  சிக்கவில்லை. நாங்கள் சந்தேகப்படும் திருச்சி தி.மு.க. பிரமுகர்களுடனான லிங்க் கிடைக்கவில்லை. எனவே, தொடர்ந்து விசாரிக்கிறோம்!' என்றே  சொல்லி வந்தார்கள். 'தி.மு.க. ஆளும் கட்சியாக இருந்ததால், அவர்களால் சரியான விசாரணை நடத்த முடியவில்லை’ என்று பொதுமக்கள் மத்தியில் புகைச்சல் பரவியது.
இப்போது, தி.மு.க. அரியணையில் இருந்து இறங்கிவிட... அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்துள்ளது. இது வரை நொண்டியடித்த விவகாரம் இப்போது எக்ஸ்பிரஸ் வேகத்தில் பறக்கிறது. 'இந்த விவகாரத்தில் சந்தர்ப்ப சாட்சியங்கள், கொலையானவர்களின் குடும்பத்தினர் யாராவது, சந்தேகப்படும் நபர்களின் பெயர்களைச் சொன்னால், வளைத்துப் பிடித்து விசாரிக்கவும்' என்று போலீஸாரிடம் உயர் அதிகாரிகள் உத்தரவு போட்டு இருக்கிறார்கள்.
முதலில், தி.மு.க-வின் திருச்சி மாவட்ட துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது இந்த இரட்டைக் கொலை வழக்கு போடப்படவில்லை. கஞ்சா வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்ட சேகர் மீது, ஏற்கெனவே கிடப்பில் கிடந்த வேறு சில புகார்களைத் தூசி தட்டி எடுத்து குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டது. சேகரின் தம்பி மீதான பழைய புகார்கள் துருவப்படவே, அவரே நேராக போலீஸிடம் ஆஜர் ஆகிவிட்டார். அடுத்து, 'மர' என்கிற அடைமொழியுடன் கூடிய தி.மு.க. பிரமுகரை வரவழைத்து போலீஸார் அளித்த ஒன்-டே உபசரிப்புகளை கேள்விப்பட்ட தி.மு.க. புள்ளிகள், ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் சிலர் கதிகலங்கிப்போய் இருக்கிறார்கள்.
போலீஸாரின் சந்தேக வளையம் இப்போது முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அவர் சகோதரர் ராமஜெயம் ஆகிய இருவர் மீதும் படிந்துள்ளது. 'போதிய ஆதாரம் இல்லாமல் இவர்களை பிடிக்க மாட்டேன்...' என்று சொல்லி வந்த சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி-யான அர்ச்சனா ராமசுந்தரம், சில நாட்களுக்கு முன்பு வேறு பதவிக்கு மாற்றப்பட்டார். அந்த இடத்துக்குப் புதிதாக வந்துள்ள சேகர், 'போலீஸ் கைகளை இதுவரை கட்டிப்போட்டது எந்த சக்தி? யாரை வேண்டுமானாலும் தூக்கி வந்து விசாரியுங்கள்...' என்று எடுத்த எடுப்பிலேயே சக அதிகாரிகளிடம் சொல்லிவிட்டாராம். எனவே, நேரு மற்றும் அவர் தம்பி ராமஜெயம் ஆகியோர் எப்போது வேண்டுமானாலும் விசாரணை வளையத்தில் சிக்கலாம்!
சமயபுர நில விவகாரம்தான்!
கொலை செய்யப்பட்ட துரைராஜ், குறுகிய காலத்தில் சுமார் 300 நிலங்களை வாங்கியிருக்கிறார். அவற்றில், சமயபுரம் அருகே ஒரு இடத்தைக் கைமாற்றிவிட்டதிலும், குடமுருட்டி ஏரியாவில் 24 வீடுகள்கொண்ட அபார்ட்மென்ட்டைக் கட்டுவதில் ஏற்பட்ட முட்டுக்கட்டையும்தான், இந்தக் கொலைக்குப் பின்னணிக் காரணமாக இருக்கலாம் என்று சொல்கிறது போலீஸ். இதற்கான பேச்சுவார்த்தைகளில் யார் யார் இருந்தார்கள் என்பதை துரைராஜின் அண்ணன் தங்கவேல் அறிவாராம். அதனால் அவரும் அன்றைய தினம் மரணம் அடையும் சூழலுக்குத் தள்ளப்பட்டார் என்கிறார்கள்.
இந்த விவகாரத்தை நன்கு அறிந்த போலீஸ்காரர் ஒருவர், ''முன்னாள் அமைச்சர் நேருவுக்கு வேண்டப்​பட்ட சென்னை நபருடன் நிலம் தொடர்பான பேச்சுவார்த்தையின்போது, அந்த நபரின் சட்டையைப் பிடித்து உலுக்கினாராம் துரைராஜ். உண்மையில் அப்படி நடந்ததா? என்று விசாரிக்கிறோம். திருச்சியின் முக்கிய வி.ஐ.பி-கள் குடியிருக்கும் மத்தியப் பகுதியில்தான் சம்பவம் நடந்த நாளன்று மூன்று மணி நேரத்துக்கு மேலாக ஒரே இடத்தில் துரைராஜ் இருந்துள்ளார். அவரோடு, வி.ஐ.பி. பிரமுகர் ஒருவரும் அதே இடத்தில் இருந்ததை, அவர்கள் இருவரின் செல்போன் டவர் காட்டியது. அங்கேதான் பிரச்னை நடந்து இருக்க வாய்ப்பு இருக்கிறது. எங்களது சந்தேகப் பட்டியலில் உள்ளவர்களில், சமயபுரம் ஏரியாவைச் சேர்ந்த 'தலை'யான நபர், குடமுருட்டி சேகர்போன்ற​​ வர்களின் செல்போன் சிக்னல்​களும், அதே சமயத்தில் மத்தியப் பகுதியில் இருந்த டவரில் பதிவாகி இருக்கிறது. இதற்குச் சரியான விடை கிடைக்கும் வரை, ராமஜெயம் மீதான எங்களது சந்தேகப் பார்வை மாறாது!'' என்றார்.
திருச்சி ஏரியாவில் இடப் பிரச்​னைகள் தொடர்பாக சில புகார்கள் ராமஜெயத்தின் மீது உண்டு. அதைவைத்து, முதலில் அவரையும், தொடர்ந்து நேருவையும் போலீஸ் விசாரணைக்கு அழைக்க இருக்கிறார்களாம்!
சந்தேக மரணங்கள் இரண்டு
சம்பவத்தன்று துரைராஜின் அண்ணன் தங்கவேலின் உடலில் காயம் இருந்ததாக போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் தெரிய வருகிறது. 'யாராவது அவரது வாயில் வலுக்கட்டாயமாக பூச்சி மருந்தை ஊற்றி இருக்கலாமோ?' என்கிற சந்தேகமும் போலீஸுக்கு இருக்கிறது. 'தங்கவேல் இந்நேரம் உயிருடன் இருந்திருந்தால், அவரது தம்பி துரைராஜுக்குக் கடை​சியாக டார்ச்சர் கொடுத்த நபர்கள் யார் என்று வெளியே சொல்லி இருப்பார். அல்லது, சம்பவத்தன்று பேச்சுவார்த்தைக்குப் போகும் முன், தங்கவேலுவிடம் ஏதாவது டிஸ்கஸ் செய்திருப்பார். இந்த இரண்டையும் அவர் வெளியில் சொல்லிவிடுவாரோ என்று கருதி, முதலில் தங்கவேலு, அடுத்து துரைராஜ் என்று இரட்டைக் கொலைகளை அரங்கேற்றி இருப்பார்களோ?’ என்கிற கோணத்திலும் விசாரிக்கிறது போலீஸ்.
அதேபோல், வையம்பட்டி தி.மு.க. பிரமுகர் ராமசாமி, கான்ட்ராக்ட் தொழிலில் குறுகிய காலத்தில் வளர்ந்தவர். ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மனம் ஒடிந்த நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டு, சென்னை ஆஸ்பத்திரியில் அண்மையில் இறந்துவிட்டார். இதே வையம்பட்டி ஏரியாவில்தான் துரைராஜ் கொல்லப்​பட்ட சம்பவம் நடந்தது. 'இந்தக் கொலை தொடர்பாக ஏதாவது விவரங்கள் ராமசாமிக்குத் தெரியுமா? அவர் அதை வெளியே சொல்லக் கூடாது என்று கடுமையாக மிரட்டப்பட்டதன் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தாரா?' என்கிற கோணத்​திலும் விசாரிக்கிறது போலீஸ்.
தலைமறைவான ரவுடி எங்கே?
'துரைராஜ் கொலை விவகாரத்தில் திருச்சியைச் சேர்ந்த கூலிப் படை ஆட்கள் யாராவது சம்பந்தப்பட்டு இருப்பார்களோ?’ என்று போலீஸ் தேடியது. திருச்சியில் தி.மு.க. முத்திரை குத்தப்பட்ட பிரபல ரவுடி ஒருவன் மீதுதான் போலீஸுக்கு முதலில் சந்தேகம். சம்பவத்தன்று இன்னொரு கோஷ்டியினர் அந்தப் பிரபலத்தை அசைன்மென்ட்டுக்காகக் கூப்பிட, 'எனக்கு வேறு வேலை இருக்கிறது' என்று சொல்லி இருக்கிறான். 'அது என்ன வேலை... துரைராஜ் கொலையா?' என விசாரிக்கிறது போலீஸ். பிரபல ரவுடி திண்டுக்கல் பாண்டியின் கோஷ்டியைச் சேர்ந்த ஒருவன் மீதும் போலீஸ் பார்வை விழுந்திருக்கிறது. துரைராஜ் கொலை சம்பவத்துக்கு முன் ஜெயிலில் இருந்து பரோலில் வெளியே வந்தவன், திடீரென்று காணாமல் போய்விட்டானாம். 'அவன் எங்கே போனான்?’ என்று இன்று வரை தெரியவில்லை.
பெட்ரோலை ஊற்றி காரை எரிப்பதற்கு எந்த கூலிப் படையும் தேவை இல்லை என்கிறது போலீஸின் இன்னொரு தரப்பு. காரணம், ரியல் எஸ்டேட் பிசினஸில் இருப்பவர்கள் எப்போதும் தங்களுடனே அடியாட்களை வைத்திருப்பார்கள். அவர்கள்கூட இந்தக் காரியத்தை செய்து இருக்கலாம் என்கிறார்கள்.
வளம் கொழிக்கும் இருவர்
துரைராஜுடன் இருந்த, அரசியல் பிரமுகரும், பிசினஸ் பார்ட்னருமான இன்னொருவரும்கடந்த நாலரை ஆண்டுகளில் செல்வச் செழிப்பில் கொழிப்பதை போலீஸார் உற்று கவனித்து வருகிறார்கள். முதலாவது நபர், மேற்கு மண்டலத்தில் பலவித பிசினஸ் செய்கிறாராம். இரண்டாவது நபர் உள்ளூர் அரசியலில் வாரிக் கொடுக்கும் வள்ளலாக வளர்கிறாராம்.
''ராமஜெயம், கட்சிக்காரர்கள் கொண்டுவரும் சகலப் பிரச்னைகளுக்காகவும் பஞ்சாயத்து செய்வார். திட்டுவார். மிரட்டுவார். ஆனால், கொலை வரை போகக்கூடியவர் அல்ல. சட்டச் சிக்கல் உள்ள இடங்கள், நிலங்களை தேடிப் போய் வாங்குவார் துரைராஜ். அந்த வகையில், அவருக்கு எதிரிகள் நிறைய உண்டு. அவர்களில் யாரோ இந்தக் கொலையை செய்துவிட்டு, பழியை ராமஜெயம் மீது போடப் பார்க்கிறார்கள்!'' என்று ராமஜெயத்தின் நண்பர்கள் சொல்கிறார்கள்.
டெயில்பீஸ்: இந்த விவகாரத்தில் புதிய விசாரணை அதிகாரியாக டி.எஸ்.பி. மலைச்சாமி நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
- ஜூ.வி. க்ரைம் டீம்

No comments:

Post a Comment