Thursday, June 30, 2011

மகனை இயக்கும் மாணவன்!

டந்த வாரம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இனிதே நடந்து முடிந்தது விஜய் டி.வி-யின் விருது வழங்கும் விழா. அதன் சுவாரஸ்யத் துளிகள் இங்கே...
  விழாவின் முதல் நிகழ்ச்சியாக 'தமிழ் சினிமாவின் பெருமைக்குரிய தருணம்’ என்று தேசிய விருது பெற்ற 14 கலைஞர்களையும் மேடைஏற்றியது அழகு!
 ''நம் வேர்களை நோக்கிப் பயணப்பட்டு படங்கள் பண்ணினால், எல்லாப் படங்களும் தவறு செய்யாத தரமான படங்களாக அமையும்'' என்ற வெற்றிமாறன் கருத்துக்கு அமோக அப்ளாஸ்!
 சிறந்த ஸ்டன்ட் மாஸ்டருக்கான விருதை 'நான் மகான் அல்ல’ படத்தின் அனல் அரசுவுக்கு வழங்கிய தனுஷிடம், ''தேசிய விருது தகவல் கேட்டு எப்படி ஃபீல் பண்ணீங்க?'' என்றார் கோபிநாத். ' 'இவன் எல்லாம் எந்த தைரியத்துல நடிக்க வந்துட்டான்?’னு என் காதுபடவே சிலர் பேசி இருக்காங்க. நம்மளை எல்லாம் நடிகனா ஏத்துக்கிட்டதே பெரிய விஷயங்க. தமிழ்நாட்டு மக்களோட தாராள மனசைத்தான் பாராட்டணும்!'' என்று கலகலக்கவைத்தார். 
 'கள்ளிக்காட்டில் பிறந்த தாயே’ - வைரமுத்து, 'அவள் அப்படி ஒன்றும் அழகில்லை’ - நா.முத்துக்குமார், 'மன்னிப்பாயா’ - தாமரை, 'மைனா மைனா நெஞ்சுக்குள்ளே’ - யுகபாரதி, 'இதுவரை இல்லாத உணர்விது...’ - கங்கை அமரன் எனச் சிறந்த பாடலாசிரியருக்கான விருதுக்குத்தான் ஏகப்பட்ட போட்டி. அந்த விருதை அறிவிக்க வந்த பார்த்திபன், 'இது வாசிக்கப்படும் பெயரே அல்ல. உலகத் தமிழர்களால் நேசிக்கப்படும் பெயர். இவர் தன்னைப் பற்றி எழுத மாட்டாரா என காதல் ஒத்தக் காலில் நிற்கிறது’ என்று சஸ்பென்ஸ் வைக்க, 'வைரமுத்து... வைரமுத்து’ என்று அதிர்ந்தது ஆடிட்டோரியம். புன்சிரிப்போடு விருதைப் பெற்றுக்கொண்டார் கவிஞர்.
 ''தோழர்களே... கேட்பதற்கு, பாடுவதற்கு என்று இருந்த பாடல், இன்று ஆடுவதற்கு என்றாகிவிட்டது. இயக்குநர்களுக்கு ஒரு வேண்டு கோள். ஒரு படத்தில் ஓரிரு பாடல்களையாவது, இசை, மொழியைச் சிதைக்காதவையாகப் பார்த்துக்கொள்ளுங்கள்'' - இது வைரமுத்துவின் ஏற்புரை வேண்டுகோள்.
 'மன்னிப்பாயா’ பாடலுக்காகச் சிறந்த பெண் பாடகி விருது பெற வந்த ஸ்ரேயா கோஷலை அறிமுகப்படுத்திய தொகுப்பாளர் சிவகார்த்திகேயன், ''இளம் வயதிலேயே நாலு முறை தேசிய விருது பெற்றவர். தன்யவாத் ஜி (வணக்கம்)'' என்றார். உடனே கோபிநாத், ''டேய்... தனியா வா!ன்னு சொல்ற மாதிரி இருக்கு'' என்றதும் அதிர்ந்து சிரித்தார்கள் இருவரும். 
 'ஜில்லா விட்டு...’ பாடலுக்காகச் சிறந்த நடன இயக்குநர் விருது பெற்றார் டான்ஸ் மாஸ்டர் தினேஷ். '' 'டான்ஸ் ஆட டான்ஸ் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. லுங்கி கட்டியிருந்தால் போதும்!’ என மெய்ப்பித்த தினேஷ் மாஸ்டருக்கு நன்றி'' என்று ஈசன் டான்ஸை நினைவுபடுத்திக் கலகலக்கவைத்தார் சிவகார்த்திகேயன்.
 ''திருக்குறளில் அறத்துப் பால், பொருட்பால், காமத்துப் பால் என முப்பால் தெரியும். ஆனால், இப்போது வந்து ஆடப்போவது அமலா பால்'' என்ற சிவகார்த்திகேயன் கமென்ட்டைத் தொடர்ந்து, ''ஏ ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கி போட்டு...'' எனத் தொடங்கி மிக்சர் மசாலாவுக்கு செம குத்தாட்டம் போட்டுச் சென்றார் அமலா பால். 
 'சிறந்த சப்போர்ட்டிங் ஆக்டர்’ விருது பெற வந்த தம்பி ராமையா, ''வெற்றியின் பார்வை என் மீது திரும்பாதா என ஏங்கிக் கிடந்த எனக்கு 40 வயதுக்கு மேல் ஒளி வெள்ளம் கிடைச்சிருக்கு. அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, பெரியம்மா, சித்தப்பா...'' எனக் கடகடவென 40, 50 உறவு முறைகளைச் சொல்லிவிட்டு, ''எல்லோரையும் லவ் பண்ணுங்க பாஸ்... லைஃப் நல்லா இருக்கும்'' என்று சரவெடி கொளுத்தினார். ''ஓ... சப்போர்ட்டிங் ஆக்டரும் பஞ்ச் டயலாக் பேசலாமோ?'' என்ற கோபிநாத்தின் கமென்ட்டுக்கு செம ரெஸ்பான்ஸ்.
 'கான்ட்ரிபியூஷன் டு தமிழ் சினிமா’ விருது வழங்கப்பட்டதும் ரொம்பவே சுவாரஸ்யம். சுந்தரம் மாஸ்டர் பற்றிய திரையிடப்பட்ட வீடியோ காட்சியில் கே.பி., கமல், அமலா எனப் பலரும் பேசினார்கள். விருதைப் பெற வந்த சுந்தரம் மாஸ்டர், ''எனக்குப் பேசத் தெரியாது. ஆடத்தான் தெரியும். ஆனால், இங்கு நான் பேசியே ஆகணும். கே.பி. சார் மீது எனக்கு வருத்தம் உண்டு. நானும் அவரும் 'நீர்க் குமிழி’ மூலம்தான் அறிமுகமானோம். இது அவர் தந்த வாய்ப்பு. எல்லா மேடைகளிலும் ரஜினி, கமல் என ஸ்டார்களைப் பற்றி மட்டுமே பேசுகிறாரே தவிர, என்னைப்பற்றிப் பேசியதே இல்லை'' என வருந்திப்பேச... ''என் கண்ணுக்கு எதிரே உள்ளவங்களைப் பற்றி பேசியிருப்பேன். கடவுளைப்பற்றி யாராவது தினமும் பேசுவாங்களாய்யா? நீயும் எனக்கு அப்படித் தான். ஹாட்ஸ் ஆஃப் யூயா'' என்று கே.பி. சொன்னதும்தான் சமாதானம் ஆனார். 
 சிறந்த பொழுதுபோக்குப் பட இயக்குநர் விருதை ஷங்கருக்குக் கொடுத்த எஸ்.ஏ.சி., ''என் மாணவன், இப்போது என் மகனை இயக்குகிறார் என்பது பெருமை'' என்று பூரித்தார்!
 சிறந்த வில்லன் விருதை ரஜினிக்காக தனுஷ் பெற்றுக்கொண்டார். அவர் போனில் சொன்ன வாழ்த்துச் செய்தியை மைக்கில் படித்தார். ''எனக்கு ராமனைவிட ராவணனைத்தான் பிடிக்கும். அர்ச்சுனனைவிட துரியோதனனைப் பிடிக்கும். ஹீரோவைவிட வில்லனை பிடிக்கும். அந்த வகையில், இந்த விருதும் எனக்குப் பிடிக்கும். என்னை வாழவைக்கும் தமிழ் நெஞ்சங்களுக்கு நன்றி. நான் இன்று உயிர் பிழைத்து இருப்பது உங்களின் பிரார்த்தனைகளால் மட்டுமே!'' என்று ரஜினியின் வாழ்த்தை தனுஷ் படித்து முடித்ததும்... அரங்கில் நெகிழ்ச்சி கலந்த நிசப்தம்!

No comments:

Post a Comment