Friday, July 1, 2011

மதுரையில் சி.பி.ஐ.! சித்தூரில் போலீஸ்!

ரு வழியாக, மதுரை தினகரன் பத்திரிகை அலுவலக எரிப்பு வழக்கின் அப்பீல் மனுவை விசாரணைக்கு எடுக்க அனுமதித்துவிட்டது மதுரை உயர் நீதிமன்றம். இதனால், மதுரை மாநகரமே பரபரப்பில் இருக்கிறது.
கடந்த 9.5.2007-ல் மதுரை தினகரன் பத்திரிகை அலுவலகம் பட்டப்பகலில் தாக்கப்பட்டது. இதில் மூன்று ஊழியர்கள் பலியானார்கள். தி.மு.க. பிரமுகரான 'அட்டாக்’ பாண்டி உள்ளிட்ட 17 பேர் இந்த வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு, சி.பி.ஐ-யால் விசாரிக்கப்பட்டனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட போலீஸ் சாட்சிகள் உள்ளிட்ட அனைவரும் பிறழ் சாட்சியம் அளித்தார்கள். இதனால், கடந்த 9.12.09-ல் தீர்ப்பு அளித்த மதுரை மாவட்ட நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்தது.
இதை எதிர்த்து, 208 நாட்கள் கழித்து மதுரை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது சி.பி.ஐ. இந்தக் கால தாமதத்துக்கான காரணத்தையும் சொன்னது. ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ''இந்த அப்பீல் மனுவை மத்திய அரசின் அனுமதி பெற்று சி.பி.ஐ-யின் சிறப்பு வழக்கறிஞர்தான் தாக்கல் செய்திருக்க வேண்டும். அப்படி இல்லாமல், சி.பி.ஐ-யின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு இன்ஸ்பெக்டர் மனுவைத் தாக்கல் செய்கிறார். இது சரியானது அல்ல. எனவே, இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்!'' என்று வாதம் வைக்கப்பட்டது. இதன் மீது விவாதம் முடிந்து,  தீர்ப்பு கடந்த 29-ம் தேதி மதுரை உயர் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது. ''அப்பீல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் போதிய முகாந்திரம் இருக்கிறது...'' எனத் தீர்ப்பு தந்திருக்கிறது நீதிமன்றம்.
தேர்தல் பிரசாரத்தின்போது, 'தா.கிருட்டிணன் கொலை வழக்கு, தினகரன் பத்திரிகை அலுவலக எரிப்பு வழக்கு உள்ளிட்டவை மீண்டும் விசாரிக்கப்படும். அதற்குக் காரணமானவர்கள் பதில் சொல்லவேண்டிய காலம் வரும்!’ என்று முழங்கிய ஜெயலலிதா, முதல்வரானதுமே இது தொடர்பாக சட்டப் புள்ளிகளிடம் லீகல் ஒப்பீனியன் கேட்டு உள்ளார். தா.கி. வழக்கில் இருந்த முக்கியமான சில ஆவணங்கள் அழிக்கப்பட்டுவிட்டதைச் சுட்டிக்காட்டிய சட்டப் புள்ளிகள், ''தா.கி. வழக்கைவிடவும் தினகரன் பத்திரிகை அலுவலக எரிப்பு வழக்கில் மறு விசாரணை நடத்தினால், குற்றவாளிகளைத் தண்டிக்க வலுவான ஆதாரங்களும் முகாந்திரங்களும் இருக்கின்றன...'' என்று சொல்லி இருக்கிறார்கள். உடனே ஜெயலலிதா, ''இந்த இரண்டு வழக்குகள் சம்பந்தமான அத்தனை கோப்புகளையும் திரட்டுங்கள்...'' என்றாராம். இப்போது, எல்லாம் தயார். 
தினகரன் அலுவலக எரிப்பு வழக்கு விசாரணை எப்படிப் போகும் என்று சி.பி.ஐ. புள்ளிகள் சிலரிடம் விசாரித்தோம். ''குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட கட்சியே ஆளும் கட்சியாக மாநிலத்தில் இருந்ததால், சாட்சிகளாக இருந்த எஸ்.ஐ-க்கள் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளே பிறழ் சாட்சியம் அளித்தார்கள். சம்பவம் நடந்தபோது ஆவேசப்பட்டுப் பேசிய சம்பந்தப்பட்ட பத்திரிகையின் ஊழியர்கள்கூட, நெருக்கடிகள் காரணமாக சரியாக சாட்சியம் அளிக்கவில்லை. ஆனால், இப்போது நிலைமை வேறு. பிறழ் சாட்சியம் அளித்த போலீஸ் அதிகாரிகள், இப்போது தைரியமாக உண்மையைச் சொல்வார்கள்.
தாக்குதல் நடத்த வந்தவர்கள், தினகரன் பத்திரிகையைத் தீயிட்டுக் கொளுத்தி மறியல்தான் செய்தார்கள். 'இதெல்லாம் போதாது... இன்னும் ஏதாவது செய்யுங்கள்’ என்று அவர்களுக்கு யாரோ பிரஷர் தர... அதன் பிறகுதான் பெட்ரோல் குண்டுகளை வீசித் தாக்கி, அலுவலகத்தைக் கொளுத்தினார்கள். ஸ்பாட்டில் ஆஜரான அந்தப் பத்திரிகையாளர்கள், தாக்குதல் நபர்களின் அராஜகங்கள் அனைத்தையும் படம் பிடித்து உள்ளனர். மறைக்கப்பட்ட அனைத்தும் இனி வெளியில் வரும்... வரவைப்போம்!'' என்றனர் அந்த சி.பி.ஐ. புள்ளிகள்.
இப்போது, அப்பீலுக்காக நீதிமன்றப் படி ஏறி இருக்கும் சி.பி.ஐ., முக்கியப் புள்ளி ஒருவரை அப்ரூவர் ஆக்கும் முயற்சியிலும் இறங்கி இருக்கிறதாம். அது நடந்தால், தினகரன் பத்திரிகை எரிப்பு வழக்கில் திகில் திருப்பங்கள் அரங்கேறும்!
மதுரை நிலைமை இப்படி இருக்க... தா.கிருஷ்ணன் கொலை வழக்கின் விசாரணை நடந்த சித்தூர் நீதிமன்றத்திலும், அரசு அதிகாரிகள் போய் இறங்கி உள்ளார்கள். நீதிமன்றத்தில் இருக்கும் அத்தனை ஆவணங்களையும் கேட்டு மனுத் தாக்கல் செய்யும் வேலைகள் தொடங்கிவிட்டனவாம். இந்த வழக்கில் அழகிரி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள். இந்த வழக்கின் மேல் முறையீடு இதுவரை செய்யப்படவில்லை. அதனையும் செய்ய சட்டத் துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 'இந்த இரண்டு வழக்குகளையும் வைத்து அழகிரியை மடக்க ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்’ என்கிறது கோட்டை வட்டாரம்!
- குள.சண்முகசுந்தரம்
அட்டை மற்றும் படங்கள்: சு.குமரேசன், என்.விவேக்

No comments:

Post a Comment