Wednesday, July 6, 2011

ரொமான்ஸ் ரகசியங்கள்!

ரொமான்ஸ் ரகசியங்கள்!

பேசு மனமே...பேசு !

அகிலன் சித்தார்த்
ஓவியங்கள்: மணியம் செல்வன்



'கடிதோச்சி மெல்ல எறிக’ என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 'விமர்சனம் செய்தாலும், அதை எதிராளி மனம் புண்படாதவாறு இனிமையுடன் இடித்துரை' என்பதை இப்படி சொல்லி வைத்திருக்கிறார் திருவள்ளுவர். இனிய உறவுகளுக்கான தாரக மந்திரமாகவும் இதைச் சொல்லலாம்.

உரையாடல்... மனிதர்களிடையே உறவை வளர்ப்பதிலும், பிரிப்பதிலும் முக்கிய பங்கை வகிக்கிறது. குறிப்பாக ஆண் - பெண் காதல் உறவில் அன்பை பெருக்குவது மட்டுமல்ல... வெறுப்பை அடர்த்தியாக்குவதும் அதே பேச்சுதான்.

எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவது, குதர்க்கமாகப் பேசுவது, குத்திக்காட்டுவது, எரிச்சல் வரவழைக்கும்படி பேசுவது என்பது பல தம்பதிகளுக்கு இயல்பான குணமாக இருக்கிறது. அதுவும் ஆணாதிக்க சிந்தனை கொண்ட பல ஆண்களுக்கு, 'பெண்கள் நம் அடிமைகள்' என்கிற நினைப்பு இருப்பதால்... பெண்களிடம் கனிவுடனோ, அன்புடனோ பேசுவதே இல்லை. இத்தகையோரிடம் பெண்களுக்கு பயம் இருக்கலாமே தவிர... உன்னதமான அன்பு இருக்கவே முடியாது!

பெண்களும் இதற்கு விதி விலக்கு இல்லை. 'முதல் மரியாதை’ படத்தில் வரும் வடிவுக்கரசி கேரக்டரின் அச்சு அசல் மாறாமல் முள் குத்துவது போல் பேசும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் அன்பின் ரகசியம் அறியாதவர்கள். காதலின் மகத்துவம் தெரியாதவர்கள். இயந்திரம் போல் வாழ்க்கை நடத்தும் ஜீவன்கள் இவர்கள்.

பேச்சு என்பது எப்படி உறவுகளைச் சிதைக்கிறது என்பதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன்...

தமிழ்நாட்டு மக்களுக்கு ஓரளவுக்கு அறிமுகமான ஜோடிதான் அவர்கள். வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த இருவரும் காதலித்தார்கள். முற்போக்குவாதிகளான இருவருமே குடும்ப எதிர்ப்புகளை மீறி திருமணம் செய்து கொண்டார்கள்.

அந்தப் பெண் அழகானவர். பல திறமைகள் கொண்டவர். வாழ்க் கையில் எப்படியாவது முன்னேறி விட வேண்டும் என்கிற முனைப்பு கொண்டவர். அவர் இருக்கக் கூடிய துறை, பல ஆண்களிடம் சகஜமாகப் பழக வேண்டிய ஒரு துறை. கணவரும் பரபரப்பான வேலையில் இருப்பவர்தான். இருவரும் காலையில் வீட்டை விட்டுக் கிளம்பினால்... மீண்டும் வீடு திரும்ப இரவு பதினோரு மணி ஆகிவிடும்.

மண வாழ்க்கை மூன்று ஆண்டுகள்தான் தாக்குப் பிடித்தது. பிறகு, தினமும் சண்டை. 'என்னை விட சாதியில் தாழ்ந்தவரை காதலித்து திருமணம் செய்தேன்...’ என்று பெருமையாக எல்லோரிடமும் சொல்லிக் கொள்வது அப்பெண்ணின் வழக்கம். இது கணவனுக்கு எரிச்சலூட்டியது. ஆரம்ப காலத்தில் மனைவி பல ஆண்களுடன் பழகியது சாதாரணமாக தெரிந்தாலும் நாட்கள் செல்லச் செல்ல கணவனுக்கு எரிச்சல் அதிகமானது. இருவரும் 'விவாகரத்து’ முடிவுக்கு வந்தனர்.

வக்கீலுக்கே மலைப்பாக இருந்தது. அந்த அளவுக்கு இருவரும் ஒருவர் மேல் ஒருவர் வைத்த குற்றச்சாட்டுகள் மிகக் கடுமையானவை. 'எனக்கு என் கணவன் மீது உடல் ரீதியாக எந்தக் கவர்ச்சியும் இல்லை... காதலும் இல்லை..!’ என்றார் மனைவி அதிரடியாக.

'நாளுக்கு ஒரு ஆணுடன் படுக்கும் ஒருத்தி மீது எனக்கு மட்டும் எப்படி அன்பு பிறக்கும்? நான் காதலித்த பெண் வேறு, இப்போது இருக்கும் பெண் வேறு!’ என்று பகிரங்க பதிலடி கொடுத்தார் கணவன்.

வக்கீலுக்கு, 'முற்றிய கேஸ்’ என்று தோன்றியது. இருவரிடமும் தனித்தனியாகப் பேசிப் பார்த்தார். பல நாட்கள் நடந்த கவுன்சிலிங் பயனளிக்கவில்லை. 'உங்கள் இருவருக்கும் சேர்ந்து வாழ வேண்டும் என்கிற ஆவல் கொஞ்சம்கூட இல்லை. அதனால் நீங்கள் பிரிந்து செல்வதே நல்லது. இன்னும் பல பாதிப்புகளை அது குறைக்கும்’ என்று சொல்லி வழி அனுப்பினார் நீதிபதி. பிரிவது என்பதுகூட சில சமயங்களில் நல்ல தீர்வாக அமைவது வாழ்க்கையின் விநோதம்தான்!

இந்த இருவரின் பிரச்னையும் பேச்சுதான் என்கிறார் அந்த வக்கீல். பேச்சு என்றால், ஏடாகூடாமான பேச்சு.

''என் செல்போன் எங்கேனு பார்த்தியா?''

''ஏன்... இப்ப எவ கூட கடல போடணும்?''

''காலையில அஞ்சு மணிக்கு அலாரம் வெச்சு என்னை எழுப்பி விடறீங்களா?''

''வீட்டை விட்டு ஓடிப் போகப் போறியா? யார் கூட?''

''இன்னிக்கு சாயங்காலம்... சினிமாவுக்குப் போகலாமா?''

''மட்டமான படம். உங்க ரசனைக்குச் சரியா இருக் கும். போயிட்டு வாங்க...''

''இன்னிக்கு டாக்டரைப் பார்க்கப் போறேன்...''

''ஏன் பீரியட்ஸ் தள்ளிப் போச்சா? எவன் காரணமோ அவனைத் துணைக்குக் கூட்டிட்டுப் போ!'' இப்படியேத்தான் இருந்திருக்கின்றன அவர்களுடைய உரையாடல்கள். இவை யெல்லாம் இடைவெளியை அதிகரிக்காமல்... வேறென்ன செய்யும்? விரைவிலேயே விவாகரத்து பெற்று பிரிந்து போனார்கள்.

இதயங்கள் பேசிக் கொள்ளாமல் வெறும் உதடுகள் மட்டும் பேசிக் கொண்டால்... விளைவுகள் மோசமாகத்தானே இருக்கும்! பொதுவாகவே கணவன்-மனைவி இருவரி டையேயான உரையாடல்கள், ஆண்டுகள் செல்லச் செல்லக் குறைகின்றன என்றுதான் ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. பேச வேண்டிய எல்லாவற்றையுமே முதல் சில ஆண்டுகளிலேயே பேசி முடித்து விடுகிறார் களாம். அதற்குப் பின் பேசுவதற்கு பொதுவாக ஏதுமில்லாமல் போகிறது. குடும்பப் பொறுப்புகள், குழந்தைகள் கடமை, சொத்து வாங்குவது, உறவினர்களுடன் பழகுவது, விழாக்களில் கலந்து கொள்வது, முதலீடுகளில் ஈடுபடுவது என்று நடுத்தரப் பருவத்தில் வாழ்க்கை இயந்திர மயமாகிப் போகிறது. அதற்குப் பின் வெறும் பாதுகாப்புக்காகவே இணைந்து வாழ்வதாகச் சொல்கிறது அந்த ஆராய்ச்சி முடிவு.

வாழ்க்கை இப்படித்தான் செல்ல வேண்டுமா? கணவன் - மனைவி உறவு என்பது வெறும் கடமை போல் ஏன் குறுகி விடுகிறது? அல்லது ஒரு கட்டத்தில் ஏன் முறிந்து விடுகிறது?

பேச்சுதான் அத்தனைக் கும் காரணம். சுவாரஸ்யமான உரையாடல்கள் ஒரு ரிலேஷன்ஷிப்பை நாளுக்கு நாள் செம்மைப்படுத்துகின்றன. வீடு, குடும்பம் இவற்றைத் தவிர பிற உலக நடப்புகளிலும் ஈடுபாடு கொண்டிருந்தால் பேசுவதற்கு எத்தனையோ விஷயங்கள் கிடைக்கும். இசை, இலக்கியம், சினிமா, அரசியல், விளையாட்டு, சமூகம் என்று ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன பேசுவதற்கு.

ஆனால், அதைப் பற்றி எல்லாம் பேச நம்மில் பெரும்பாலானோருக்கு விருப்பம் இல்லை. எப்போது இன்கிரிமென்ட் வரும், எப்போது நகை வாங்கலாம் என்றே யோசித்துக் கொண்டு, அதையே பேசிக் கொண்டிருப்பவர்களுக்கு பேச்சுவார்த்தை என்பதே நாளடைவில் போரடித்துப் போகிறது.

இன்னொரு தம்பதியும் என்னால் மறக்க முடியாதவர்கள். 'லட்சியத் தம்பதி', 'ஆதர்ச கணவன்-மனைவி' அப்படியெல்லாம் சொல்ல வரவில்லை. ஆனால், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பது உண்மை. அதற்காக அவர்கள் சில ஃபார்முலாக்களை வைத்திருக் கிறார்கள்.

No comments:

Post a Comment