Tuesday, July 12, 2011

பழசு இன்றும் புதுசு

திருச்சி மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு போன்... ''விக்கிரமங்கலம் போலீஸ் ஸ்டேஷன்​தானே..?'' - அந்த ஊரின் முக்கியப் பிரமுகர் பேசினார். ''சொல்லுங்க சார்...'' ''நான் சொன்ன ஆளை ரிலீஸ் பண்ணாம, கேஸ் புக் பண்ணிட்டீங்களாமே?'' ''சார்... அது...'' ''ம்... உங்களை முந்திரிக் காட்டு இன்வெஸ்டி​கேஷனுக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணச் சொல்லிடவா?'' ''ஐயோ... முந்திரிக் காடா..? சார், நான் புள்ளை​குட்டிக்காரன் சார்!'' ஜெயங்கொண்டம் பகுதியில் ஒரு வீட்டு வாசலில் குழந்தை ஒன்று சாப்பிட மறுத்து அழுது​கொண்டு இருந்தது. அதன் பாட்டி, ''அழுகையை நிப்பாட்டிட்டுச் சாப்பிடறியா, இல்லே முந்திரிக் காட்டுல கொண்டுபோய் விட்டுறவா?'' என்று சொல்ல... குழந்தை சட்டென்று அழுகையை நிறுத்திவிட்டு, மடமடவென்று சாப்பிட்டுவிட்டது! - இப்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களிலும் 'முந்திரிக் காடு... முந்திரிக் காடு’ என்ற பெயரையே முணுமுணுக்கிறார்கள். அது என்ன முந்திரிக் காடு?! திருச்சி, தென் ஆற்காடு மாவட்டங்களை இரண்டாகப் பிரிக்கிறது வெள்ளாறு. இந்த ஆற்றின் ஒரு கரையின் நெடுகிலும் பல நூறு ஏக்கர் கரும்புத் தோட்டங்கள். மறு கரையின் நெடுகிலும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களில் மண்டிக்கிடக்கிறது முந்திரிக் காடுகள். தப்பித் தவறி எவராவது அங்கு மாட்டிக்கொண்டால், லேசில் திரும்பி வர முடியாது. காரணம் - சிக்கலான பாதை அமைப்பு மட்டும் அல்ல... 'தனித் தமிழ்நாடு’ பிரிவினை கோரும் தீவிரவாத இயக்கத்தினர் ஆயுதப் புரட்சி செய்ய இதுவே சரியான இடம் என்று தேர்ந்தெடுத்து, இங்கே தங்கி இருப்பதுதான். ஒரு வருடத்துக்கு முன்பு இங்கு நடந்த தமாஷான சம்பவம்... வல்லம் கிராமத்தை ஒட்டிய முந்திரிக் காட்டில் தீவிரவாத இயக்கத் தலைவர்கள் கலந்துகொள்ளும் ரகசியக் கூட்டம், 10-ம் தேதி அதிகாலை நடக்கப்​போவதாக சி.ஐ.டி. போலீஸுக்குத் தகவல் வந்தது. அந்தக் குறிப்பிட்ட நாளுக்கு முதல் நாளன்றே இரவோடு இரவாகப் பெரிய போலீஸ் பட்டாளமே முந்திரிக் காட்டில் நுழைந்தது, அங்குலம் அங்குலமாக முன்னேறியது. ஒரு மரத்தடியில் வாழை இலைகளும், ஆட்டுக் கால்களும் கிடந்தன. அதை எண்ணிப் பார்க்கும்போது, இத்தனை பேர் ரகசியக் கூட்டத்தில் கலந்துகொண்டு விருந்து சாப்பிட்டுவிட்டுப் போய்விட்டனர் என்பதை போலீஸாரால் யூகிக்க முடிந்தது. எவரையும் பிடிக்க முடியவில்லை. காரணம் - தீவிரவாதிகளின் ரகசிய பாஷையில், 10-ம் தேதி என்றால் 1-ம் தேதி என்று அர்த்தம் (இது மாறும்!). ''முந்திரிக் காட்டுக்குள்ளே ஏடா​கூடமாகப் போகாதீங்க... ஏன்னா, தீவிரவாத இயக்கங்களோட முன்னணித் தலைவர்கள் பலரை போலீஸ் பிடிச்சுட்டதால், பயங்கரக் கடுப்புல இருக்காங்க. ஒருவேளை, உங்களையும் பணயக் கைதியாகப் பிடிச்சுவெச்சுக்கிட்டு, அவங்களை விடுவிக்கச் சொன்னாலும் சொல்லலாம்!'' என்று நாம் முந்திரிக் காடுகளில் நுழையும் முன்பு, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் நம்மை எச்சரித்தார்! தென் ஆற்காடு மாவட்ட எல்லையோர ஊரான பெண்ணாடத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவரிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டோம். அவரது குடிசைக்கு நம்மை அழைத்தார். குடிசையில் நிறையப் பொருட்​கள் இல்லை. கம்யூனிஸ புத்தகங்கள் கட்டப்பட்ட ஒரு பண்டல் இருந்தது. அது குறித்து இளைஞரிடம் கேட்டோம். ''எங்க ஊர்ல நூத்துக்கும் அதிகமான பட்டதாரிகள் வேலை இல்லாம இருக்கோம். எங்க பகுதிக்குனு பெரிய தொழிற்சாலை எதுவும் இல்லை. அதனால், கூலி வேலைகள் பார்த்துத்தான் சாப்பிட வேண்டியிருக்கு. படித்துவிட்ட ஒரே காரணத்தால், உலக விஷயங்களைப்பத்தி நிறைய படிச்சுத் தெரிஞ்சுக்க ஆர்வம் இருக்கு. அதனால், தோழர்கள்கிட்ட இருந்து புத்தகங்களை வாங்கிப் படிக்கிறோம். இப்படிப் படிக்கிறதால், எங்களை நக்ஸலைட்னு போலீஸார் முத்திரை குத்திடறாங்க. எங்க ஊர் இளைஞர்களுக்கு, பொண்ணு கொடுக்கக்கூட மத்த ஊர் ஆளுங்க தயங்கறாங்க. முந்திரிக் காடுகள்ல இருக்கிறவங்களைப்பத்தி போலீஸுக்கு உளவு வேலை செய்யணும்னு வற்புறுத்துறாங்க. தெரியாதுன்னா... மிரட்டறாங்க. இந்த நிலைமையில் நாங்க பொறியில் சிக்கிய எலியாத் தவிக்கிறோம்!'' என்றார். நமக்குக் கிடைத்த தகவலின்படி, சைக்கிளில் மட் கார்டு, பெல், பிரேக், டைனமோ இல்லாமல், எவராவது சைக்கிள் ஓட்டிச் சென்றால், அவர் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதை யூகித்துக்கொள்ளலாம் என்று ஒரு தகவல்! அப்படிப்பட்ட அடையாளத்​தோடு இரும்புலிக்குறிச்சி அருகே ஒருவரைப் பார்த்தோம். அவரிடம் பேச்சுக் கொடுத்தோம். அவர் மசியவில்லை. பிறகு கொஞ்ச நேரம் கழித்து, ''அண்டர்கிரவுண்டில் இருக்கிறவங்களை நீங்க சந்திக்க விரும்புற விஷயம் குறித்து டி.சி. (அது என்னவென்றே புரியவில்லை!) கமிட்டி கூடி, முதல்ல விவாதிக்கும். அவங்க அனுமதிச்சா, நீங்க முந்திரிக் காடுகள்ல வந்து தோழர்களை சந்திக்க முடியும். அதற்குப் பொறுமை வேண்டும். இன்னொரு முறை இங்கே வந்தா, அதற்கு ஏற்பாடு செய்வோம்!'' என்று சொல்லிவிட்டு, சைக்கிளை ஓட்டிக்கொண்டு போய்விட்டார். 'இப்படி அண்டர்​கிரவுண்டில் ஓர் இயக்கம் செயல்படுகிறதா?’ என்று நாம் ஆச்சர்யப்பட்டபோது, இன்னொரு தகவலை நம்முடன் வந்திருந்த நிருபர் சொன்னார். அதாவது போலீஸ் விசாரணை ஒன்றின்போது ஒரு தீவிரவாதியை நிருபர் சந்தித்தாராம். அப்போது, அந்தத் தீவிரவாதி சொன்ன தகவல் இது: ''தீவிரவாத இயக்கத்தில் சேர்வதற்குப் பல கட்டத் தேர்வுகள் உண்டு. ஒன்று - உயரமான தென்னை மரத்து உச்சியில் ஏற்றிக் கையில் குடுவைத் தண்ணீர் மட்டும் கொடுத்துவிட்டுப் போய்விடுவார்கள். குறைந்தபட்சம் மறு நாள் வரை அங்கேயே இருக்க வேண்டும். மற்றொன்று - சுடுகாட்டில் நடுராத்திரியில் ரகசியக் கூட்டத்துக்கு வரச் சொல்வார்கள். குடும்பப் பாசம் இருக்கிறதா என்பதைச் சோதிக்க, திடீரென்று அம்மா அப்பா யாராவது இறந்துவிட்டதாகத் தகவல் சொல்வார்கள். நம்முடைய ரியாக்ஷன்களைக் கவனிப்பார்கள். இதுபோல, குடி, பெண்கள் விஷயத்திலும் (வெளிப்படையாகச் சொல்ல முடியாத) பல டெஸ்ட்டுகள் உண்டு. இவற்றில் எல்லாம் தேற ஐந்து வருடங்கள் பிடிக்கும். அதன் பிறகுதான் முழுமை பெற்ற தீவிரவாதியாகக் கருதிப் பொறுப்பைத் தருவார்கள்!’ என்று சொன்னாராம். தனித் தமிழ்நாடு பிரிவினைவாதிகளுக்கு ஆயுத சப்ளை செய்பவர் பெயர் தினேஷ். இவர் மாஜி இலங்கைப் போராளி. இதற்கு முன்பு நடந்த வெடிகுண்டு சம்பவங்களுக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவியது இவர்தான். இவரிடம் இருந்து ஆயுதங்களை விலைக்கு வாங்கி, அதைக்கொண்டு தமிழகத்தில் ஆயுதப் புரட்சி செய்வதே பிரிவினைவாதிகளின் எதிர்காலத் திட்டம் என்று கூறப்படுகிறது. இதன் பொருட்டு, 'தனித் தமிழ்நாடு கோரும் பிரிவினைவாதிகள்’ என்று முத்திரை குத்தப்பட்டு, அந்த வகையில் விரைவில் கைது செய்யப்பட வேண்டியவர்களின் பட்டியலில் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களும் உண்டு! - ஆர்.பாலகிருஷ்ணன் தமிழரசன் இன்னும் சாகவில்லை..?! பொன்பரப்பி வங்கிக் கொள்ளை சம்பவத்தின்போது தமிழரசன் இறந்துவிட்டதாக போலீஸாரால் அறிவிக்கப்பட்டது அல்லவா? ஆனால், முந்திரிக் காடுகளில் தமிழரசன் நடமாட்டம் இருப்பதாகக் கிராமவாசிகள் மத்தியில் ஒரே பேச்சு! தென் ஆற்காடு மாவட்டத்தில் இருக்கும் மதகளிமாணிக்கம் கிராமத்தில் வசிக்கும் தமிழரசனின் தாயார் புதூசம்மாளிடம் பேசினோம்: ''அன்னிக்கு ஜெயங்கொண்டம் ஆஸ்பத்திரிக்குப் பதறி ஓடினேன். கூறு போட்ட உடம்பு ஒண்ணைக் காட்டினாங்க. உருவமே தெரியலை. கை, கால் சூம்பிப் போயிருந்துச்சு. என் பையனுக்கு அப்படி இருக்காது. அதுவும், சின்னப் புள்ளைல மஞ்சக் காமாலை வந்தப்போ, கை புஜத்தில் அறுத்து மருந்து போட்ட வடு இருக்கும்... முகத்துலயும் இன்னொரு வடு இருக்குமேனு தேடினேன். ஒண்ணுமே இல்லை. 'இது என் பிள்ளை இல்லையே!’னு சொன்னேன். போலீஸ்காரங்க என்னைத் தனியா அழைச்சுட்டுப் போய், 'இதான் என் பையன்’னு சொல்லச் சொன்னாங்க. என்னோட உறவுக்காரங்களும் 'கிழவி, உனக்கு வயசாச்சு, வாயை மூடு, இதான் நம்ம தமிழரசன்!’னாங்க. அந்தச் சூழ்நிலையில் என்னால ஒண்ணுமே சொல்ல முடியலை. ஆனா, இப்போதைக்கு என் பையன் உயிரோட இருக்கிறதா, எல்லாரும் பேசிக்கிறாங்க. எப்படி இருந்தாலும், என் பையன் திரும்பி வருவான்!'' என்றார். திருச்சி சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் நம்மிடம், ''தமிழரசன் இறந்தது நிரூபிக்கப்பட்ட ஒன்று. ஆனால், ஒரு சில தினப் பத்திரிகைகள், தமிழரசன் உயிரோடு இருப்பதாகக் கதை விட்டிருக்கின்றன. அப்படி எழுதும் நிருபர்களைப் பிடித்து, நக்ஸலைட் கேஸில் போட்டால்தான் இப்படிப்பட்ட பொய்ச் செய்திகளை எழுத மாட்டார்கள்!'' என்று எரிச்சலோடு சொன்னார்.

No comments:

Post a Comment