Wednesday, June 22, 2011

'நீயே நில்லேன் சசி!'


ழுகார் வந்ததும், ''உமது திருச்சிப் புகைப்படக்காரர் அனுப்பி இருக்கும் புகைப்படங்களை எமக்குக் காட்டும்!'' என்று உத்தரவிட்டார். படங்களை ஒவ்வொன்றாகப் பார்த்தபடி, மனசுக்குள் சிரித்துக்கொண்டார். ''அடுத்த அரங்கேற்றத்துக்குத் தயாராகி​றாராக்கும்!'' என்று பூடகமாகச் சொல்லிவிட்டுப் பேச ஆரம்பித்தார்!
''உடன்பிறவாச் சகோதரி சசிகலா, விரைவில் வெளிச்சத்துக்கு வரப்போகிறார் என்பதே ஜெயல​லிதாவின் திருச்சி விசிட்டில் நாம் உணரவேண்டிய முக்கியமான செய்தி!'' என்றார்.
''சஸ்பென்ஸ் வைக்காமல் சொல்லும்!'' என்றோம்.
''வரிசையாக வருகிறேன்! 19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலையில், திருச்சி விமான நிலையத்தில் இறங்கிய கையோடு நேராக, அரங்கநாதரை சேவிக்க ஸ்ரீரங்கத்துக்கு வந்தார் ஜெயலலிதா. அவருடன் கூடவே சசிகலாவும். இருவரும் கோயிலுக்குள் நுழைந்தபோது, மணி 11. ஜெ-யின் ஆஸ்தான பட்டரான சுந்தர் பட்டர், மாலை மரியாதையுடன் கோயில் வாசலில் வரவேற்பு அளித்தார்.
முதல்வருக்காக சிவப்பு நிற கம்பள வரவேற்பு பிரகாரத்தில் தயாராக இருந்தது. அதை மறுத்தவர், வெயிலில் கருங்கல் தரையில் நடந்தே கோயிலுக்குள் நுழைந்தார். மினரல் வாட்டரை அவர் வரும் வழியில் போலீஸ் அதிகாரிகள் தெளிக்க... ஊழியர்கள் தரையைத் துணியால் துடைத்து வெப்பத்தைத் தணித்தனர். முதலில் கருடாழ்வார் சந்நிதியில் சுவாமி தரிசனம் செய்தவர், அடுத்து அரங்​கநாதரை சேவிக்கச் சென்றார். அதற்கு முன்பாகப் பிரகாரத்தை ஒரு முறை சுற்றினார். அரங்கனை ஆற அமரத் தரிசனம் செய்ததும், சசிகலா, கையோடு கொண்டுவந்த பையில் இருந்து  நோட்டுக் கட்டுகளை எடுத்து ஜெ-விடம் கொடுக்க... அதை வாங்கி உண்டியலில் போட்டார்.
தனது சொந்தப் பணத்தில் வாங்கிய பேட்டரி கார் ஒன்றைக் கோயிலுக்குத் தானமாக அளித்தார். அந்தக் காரில் சசிகலா சகிதம் அமர்ந்து பிரகாரத்தை ஒரு ரவுண்ட் அடிக்கவும் தவறவில்லை.''
''என்ன அடிக்கடி 'சசிகலா, சசிகலா’ என்கிறீர்?''
''அரசியல்ரீதியாக சில முக்கிய முடிவுகளை எடுக்க இருக்கிறார் ஜெயலலிதா. அதாவது, தன்னுடைய அரசியல் வாரிசு யார் என்பதுதான் அது! அந்த ஸ்தானத்தை சசிகலாவுக்குக் கொடுத்து அழகு பார்க்க நினைக்கிறாராம் ஜெயலலிதா. அமைச்சர் மரியம்பிச்சை மரணத்தைத் தொடர்ந்து காலியாக உள்ள திருச்சி மேற்குத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், அ.தி.மு.க. களம் இறக்கும் வேட்பாளர் அநேகமாக சசிகலாவாக இருக்கலாம். 'நீயே நில்லேன் சசி’ என்று ஜெயலலிதாவே சொன்னதாகச் சொல்கிறார்கள் சோர்ஸ்கள்!''
''ஒவ்வொரு தேர்தலின்போதும், இதுபோல் தகவல்கள் கிளம்புவது வழக்கம்தானே?''
''கட்சியின் பொதுக் குழு உறுப்பினராக இருக்கும் சசிகலா, எம்.எல்.ஏ-க்களைத் தேர்ந்தெடுப்பதில் தொடங்கி... யார் யாரை அமைச்சர்களாக, அதிகாரிகளாக நியமிக்கலாம் என்பது வரை ஜெயலலிதாவுக்குக் கணித்துச் சொல்லும் மனுஷியாக இருந்தவர். கடந்த 30 ஆண்டுகளில் ஜெயலலிதாவின் நிழலாக இருந்தவர் என்பதைவிட வேறு என்ன தகுதி வேண்டும்? ஜெயலலிதா ஜெயித்த ஸ்ரீரங்கம் தொகுதியும், இடைத்தேர்தல் நடக்க உள்ள திருச்சி மேற்குத் தொகுதியும் அடுத்தடுத்த தொகுதிகள். இரண்டு தொகுதிகளில் வரும் ஏரியாக்கள் மாறி மாறி வரும். உடன்பிறவாத் தோழிகளுக்கு இதைவிட என்ன பொருத்தம் வேண்டும்?''
''நன்றாகத்தான் இருக்கிறது! திருச்சி மாவட்டத்தின் அரசுப் பதவிகளில் பெரும்பாலானவற்றை பெண்களே இந்த சீஸனில் பெற்றுவிட்டனர்.  கலெக்டர், எஸ்.பி., மேயர், மாவட்டப் பஞ்சாயத்துத் தலைவி, டி.ஆர்.ஓ., ஆர்.டி.ஓ... இந்த வரிசையில் சசிகலாவும் வருவார் போலிருக்கிறதே?''
''அதெல்லாம் அப்புறம்! திருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிட ஸீட் கேட்டு அ.தி.மு.க-வினர் முட்டி மோதுகிறார்கள். அவர்களில், மறைந்த மரியம் பிச்சையின் மகன் மரியம் ஆசிக் மீரா, முதல்வர் ஜெயித்த ஸ்ரீரங்கம் தொகுதியில் தேர்தல் வேலை பார்த்த போலீஸ் பிரமுகர் ஸ்ரீதர், கடந்த சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம் கட்சிக்கு ஸீட் கொடுக்க வேண்டி வந்தபோது, தான் ஒதுங்கி வழிவிட்ட ராமநாதபுர அ.தி.மு.க. பிரமுகர் அன்வர்ராஜா, தொழில் அதிபர் சிராஜுதீன், தாஹிர் உள்ளிட்ட பலரும் வரிந்துகட்டி நின்றனர். இவர்களுக்கு வேறு வகையில் வாய்ப்புகள் கிடைக்கலாம். இப்போதைக்கு சசிகலாவை நிற்கவைக்க, கிட்டதட்ட ஜெ. முடிவு செய்துவிட்டதாகவே தெரிகிறது.''
''தோழி முதல்வராக இருக்கிறார் என்பதைத் தவிர, திருச்சி மேற்குத் தொகுதிக்கும் சசிகலாவுக்கும் என்ன தொடர்பு? இங்கு உள்ள மக்கள் எப்படி ஏற்றுக்​கொள்வார்கள்?''
''நீர் என்ன... விஷயம் புரியாதவராய் இருக்கிறீர்! சசிகலாவுக்கும், அந்தத் தொகுதிக்கும் நெருக்கமான பந்தம் உண்டு. கள்ளர் சமூகத்தவர் சுமார் 35 ஆயிரம் பேர் இங்கே வசிக்கிறார்களாம். தோழியின் அக்கா வனிதாவின் வீடு, கருமண்டபம் ஏரியாவில் இருக்கிறது. கே.கே.நகரில்தான் சசிகலாவின் உறவினர் இன்ஜினீயர் கலியபெருமாள் வீடு. நிறையச் சொந்தங்கள்  வசிப்பது இந்தத் தொகுதியில்தான். இன்னும் சொல்கிறேன்... திருச்சி எல்லையும், தஞ்சாவூர் எல்லையும் சேரும் இடத்துக்கு அருகேதான் சசிகலாவின் புகுந்த வீடு. அதாவது, விளார் கிராமம் எம்.நடராஜன் பிறந்த சொந்தக் கிராமம். அப்படிப் பார்த்தால், மண்ணுக்குச் சொந்தமானவர்தானே!
இதே தொகுதியில்தான் ரிட்டயர்டு போலீஸ் எஸ்.பி-யான கலியமூர்த்தியின் வீடும் இருக்கிறது. சசிகலாவின் நிழல்களில் ஒருவர் இவர். சில நாட்களுக்கு முன்பு போயஸ் கார்டனில் இருந்து அவருக்கு அழைப்பு வந்தது. திருச்சிக்கு ஜெ. வந்தபோதும், விமான நிலையத்திலும் இவர் தென்பட்டார். இவை எல்லாமே  ஒரு காரணமாகத்தான் என்கிறார்கள் விவரமான​வர்கள்!''
''சசிகலா நின்றால், அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் நேரு நிற்பாரா?''
''சந்தேகம்தான்! உள்ளாட்சி மன்றத் தேர்தலோடு இந்த இடைத்தேர்தலும் வந்தால், தி.மு.க. சார்பில் வேட்பாளரை நிறுத்துவார்கள். அப்படி இல்லாமல், இடைத்தேர்தல் மட்டும் தனியாக நடந்தால், அனுதாப அலையில் எதிர் நீச்சல் போட நேரு உட்பட யாரும் தயாராக இல்லையாம்!'' என்ற கழுகார், அடுத்த சப்ஜெக்ட் மாறினார்.
''கனிமொழிக்கு ஜாமீன் தர முடியாது என்று உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டது. காலை 10 மணிக்கே கோபாலபுரம் வீடு தி.மு.க. பிரமுகர்களால் நிரம்பி வழிந்தது. 'இன்னிக்கும் ஜாமீன் கிடைக்காதுய்யா’ என்று கலங்கிய கண்களுடன் சொன்னாராம் கருணாநிதி. ஜாமீன் இல்லை என்ற தகவல் வந்ததுமே, 'என் மகளைப் பார்த்தே ஒரு மாசம் ஆச்சு. இனிமே எப்பத்தான் பார்க்கப்போறேன்னு தெரியலையே’ என்றும் சொல்லிக் கலங்கினாராம். இப்படிக் கருணாநிதி சொல்லிக்கொண்டு இருக்க, ராஜாத்தி அம்மாள் டெல்லியில் இருந்து போன் செய்து கதறியதாகச் சொல்கிறார்கள். 'நாளைக்கே நான் டெல்லிக்கு வர்றேன். நீ அங்கேயும், நான் இங்கேயும் இருக்கோம். ஜெயிலில் போய் கனியைப் பார்க்கணும்போல இருக்கு’ என்று கருணாநிதி சொல்லி இருக்கிறார். அநேகமாக, அவர் இந்நேரம் டெல்லியில் இருப்பார்...''
''ராஜாத்தி அம்மாள் டெல்லியிலேயேதான் இருக்​கிறாரா?''
''பெரும்பாலும் அங்கேதான்! அவரால் தனிமையில் சி.ஐ.டி. காலனி வீட்டில் இருக்க முடியவில்லை என்கிறார்கள். கடந்த வாரத்தில் ஒரே ஒருநாள் வியாழக்கிழமை மட்டும் சென்னைக்கு வந்தார். கருணாநிதி, ஸ்டாலினைச் சந்தித்துவிட்டுத் திரும்பிவிட்டார்...''
''ஸ்டாலினைப் பார்த்ததில் ஏதாவது ஒரு விசேஷம் உண்டா?''
''ஸ்டாலினுக்கு முதுகு வலி. ஒரு சில நாட்களாக ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்தார். ராமச்சந்திரா மருத்து​வமனையில் சிகிச்சையும் நடந்தது. இரண்டு மூன்று நாட்களுக்கு மேலே தங்கினால், ஏதாவது வதந்தி கிளம்பிவிடும் என்பதால், செனடாப் சாலை வீட்டிலேயே ஓய்வு எடுத்துக்கொண்டார். கருணாநிதியே அவரைச் சென்று சந்திக்கும் அளவுக்கு முதுகு வலியால் அவஸ்தைப்பட்டார். இதைத் தெரிந்துகொண்டுதான் ராஜாத்தி பார்க்க வந்தார்.''
''என்னதான் ஆகும் டெல்லியில்?''
''உச்ச நீதிமன்றம் கை விரித்துவிட்ட நிலையில், மீண்டும் ஸ்பெஷல் கோர்ட்டுக்குத்தான் போயாக வேண்டும். கனிமொழி ஜாமீன் வழக்கை விசாரித்திருக்க வேண்டிய நீதிபதிகள் பி.சதாசிவம், ஏ.கே.பட்நாயக் ஆகிய இருவரும் விலகியது, நீதிபதிகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பி.சதாசிவம், தமிழகத்தைச் சேர்ந்தவர். 'இந்த வழக்கில் அவர் எந்த முடிவுகள் எடுத்தாலும் சர்ச்சையாகும்’ என்று சீனியர்கள் சிலர் பேசிக் கொண்டார்கள். இதுபோலவே பட்நாயக்கும் விலகினார். அதன் பிறகே, ஜி.எஸ்.சிங்வியும் பி.எஸ்.சவுகானும் விசாரிக்க வந்தார்கள்!'' என்ற கழுகார்...
''ஜூலை 2-ம் தேதி, மத்திய அமைச்சரவை மாறலாம். அடுத்த இரண்டு நாட்களில் தயாநிதிக்கு சம்மன் வரலாம் என்று சிலர் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள். டைரியில் குறித்துவையும்!'' என்றபடியே பறந்தார்.
அட்டை மற்றும் படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்
'ஜெயலலிதாவுடன் கூட்டுச் சதியா?’
பெங்களூருவில் நடக்கும் சொத்துக் குவிப்பு வழக்கு முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சுற்றிச் சுற்றி அடிக்க ஆரம்பித்துள்ளது. சில நாட்களுக்கு முன்னால் விசாரணைக்கு ஆஜரான ஜெயலலிதாவின் வக்கீலைப் பார்த்து, ''இங்கு நடப்பது எல்லாம் சம்பந்தப்பட்டவருக்குத் தெரியுமா?'' என்றே நீதிபதி மல்லிகார்ஜூனய்யா கேட்டாராம். இப்போது அடுத்த கிடுக்கிப் பிடி ஆரம்பித்துள்ளது!
''சொத்துக்  குவிப்பு வழக்கில் தமிழ்நாடு காவல் துறையின் ஊழல் தடுப்புப் பிரிவும்  ஜெயலலிதாவும்  சேர்ந்து​கொண்டு கூட்டுச் சதி செய்கிறார்கள்!'' என பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் கர்நாடக அரசின் சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா சொல்லி திகிலைக் கிளப்பி இருக்கிறார். ''தமிழ்நாடு ஊழல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி-யான ஜி.சம்பந்தம், அரசு வழக்கறிஞருக்கே தெரியாமல், நீதிபதிக்கு நேரடியாக ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். இது கடும் ஆட்சேபணைக்கு உரியது'' என்று வாதிட்டார் ஆச்சார்யா. இதைக் கேட்ட நீதிபதி மல்லிகார்ஜுனய்யா, ''சட்டத்தின் எந்தப் பிரிவின் கீழ் டி.எஸ்.பி. எனக்குக் கடிதம் அனுப்பினார் என விளக்கம் அளிக்க வேண்டும்!'' என ஊழல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி-க்கு நோட்டீஸ் அனுப்பினார். 'வழக்கை மேலும் புலனாய்வு செய்து வருவதால், நீதிமன்றத்துக்கு நேரடியாக கடிதம் அனுப்பினோம். அந்தக் கடிதத்தை சமர்ப்பித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறோம்’ என டி.எஸ்.பி. தரப்பு விளக்கம் தெரிவித்து உள்ளது. இதை ஏற்றுக்கொள்ளாத நீதிபதி, இது தொடர்பான விசாரணையை வரும் ஜூன் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்து இருக்கிறார்.
சிதம்பரத்தையும் சேருங்கள்!
ஆ.ராசாவுக்கு எதிராக இதுவரை கொம்பு சுழற்றி வந்த சுப்பிரமணியன் சுவாமி, இப்போது ப.சிதம்பரத்துக்கு எதிராக அஸ்திரம் பாய்ச்ச ஆரம்பித்து​விட்டார்!
''ஆ.ராசாவும், ப.சிதம்பரமும் கூட்டாக முடிவு செய்தே ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கினார்கள். ஆ.ராசா குற்றவாளி என்றால், ப.சிதம்பரமும் குற்றவாளி​தான். அவரையும் கைது செய்ய வேண்டும். வெளி​நாட்டு கம்பெனிகளுக்கு விற்கக் கூடாது என்ற நிபந்தனையை மீறி, ஸ்வான் தன் பங்குகளை விற்றது அனைவரும் அறிந்ததே. இது சிதம்பரத்தின் அனுமதியுடன்தான் நடந்திருக்கிறது. அவரும்ஆதாயம் அடைந்திருக்கிறார். எனவே, ஆகஸ்ட் மாதம் ப.சிதம்​​பரத்துக்கு சிக்கல் வரலாம். அதன் பிறகு, மாதம் ஒரு மத்திய அமைச்சர் உள்ளே போவார்!'' என்று சொல்ல ஆரம்பித்​​துள்ளார்.

No comments:

Post a Comment